நியூஸிலாந்தை வீழ்த்தி வரலாற்றை புதுப்பித்த பாகிஸ்தான்

நியூஸிலாந்து

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது பாகிஸ்தான். இந்தியாவும் இங்கிலாந்து ஆடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெல்லும் அணியுடன் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் ஆடும்.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் அணியை நியூஸிலாந்து அணி வென்றதில்லை என்ற வரலாற்றை கேன் வில்லியம்ஸனால் இன்றும் மாற்றி எழுத முடியவில்லை. 1992 உலகக் கோப்பை முதல் பாகிஸ்தான் அணியைப் பழிதீர்ப்பதற்காக மேற்கொண்ட முயற்சியும் பலிக்கவில்லை.

யூஸ்டு பிட்ச் என்று கூறப்படும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட களத்தில் ஆடுவது இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்குச் சாதகமாக அமையும் என்று கூறப்படும் நிலையில், பாகிஸ்தானின் பேட்டிங்கில் அப்படியொரு சிரமத்தையும் காண முடியவில்லை.

ஏனென்றால் அதன் பிறகு பாபர் ஆஸமும் ரிஸ்வானும் சேர்ந்து பந்துவீச்சாளர்களைத் திணறவைத்தார்கள். அடிக்கடி பந்துகள் பவுண்டரிகளைத் தாண்டிக் கொண்டிருந்தன. இந்தத் தொடரில் முதல் முறையாக நீடித்து நின்று ஆடியது இந்த இணை. பாபர் ஆஸம் தனது முதலாவது அரைச் சதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்தார்.

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணியிலும், பாகிஸ்தான் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடைசிப் போட்டியில் ஆடியே அணிகளே இதிலும் களமிறங்கின.

முதல் ஓவரிலேயே ஷாஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரரான ஃபின் ஆலன் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து அந்த அணியைச் சோதனைக்கு உள்ளாக்கினார். அந்தத் தருணத்திலேயே பாகிஸ்தான் ரசிகர்களின் ஆராவாரம் சிட்னி மைதானம் முழுவதும் கேட்டது.

ஹாரிஸ் ராஃப் வீசிய பவர் பிளேயின் கடைசிப் பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 21.

இந்தத் தடுமாற்றங்களுக்கு மத்தியிலும் நியூஸிலாந்து அணிக்கு ஆறுதலாக இருந்தது கேப்டன் வில்லியம்சனும் அவருடன் இணை சேர்ந்த மிட்சலும்தான். இவர்கள்தான் அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார்கள். 17 ஆவது ஓவரில் கேன் வில்லியம்ஸன் 46 ரன்களை எடுத்திருந்தபோது சாஹீன் ஷா அப்ரிடி பந்தை ஸ்வீப் செய்ய முயன்று போல்டானார்.

20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. டேரில் மிட்சல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 ரன்களை எடுத்திருந்தார். 

இந்தப் போட்டியில் ஷாஹின் ஷா அப்ரிடியின் பந்துகள் விக்கெட்டுகளை நோக்கி அம்புகள் போலப் பாய்ந்து கொண்டிருந்தன. நான்கு ஓவர்களை வீசிய அவர் 24 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூஸிலாந்தின் அடித்தளத்தை நொறுக்கியவர் அவரே.

 152 ரன்கள் இலக்கை எட்டும் பணியே சலனமே இல்லாமல் செய்து முடித்தது பாகிஸ்தான் அணி. பாபரும் ரிஸ்வானும் சேர்ந்து 105 ரன்கள் என்ற பெருங் கோட்டையைக் கட்டிக் கொடுத்துவிட்டார்கள். ரிஸ்வான் 57 ரன்களும், பாபர் ஆஸம் 53 ரன்களும் எடுத்தார்கள். அதன் பிறகு வந்தவர்கள் படிப்படியாக ரன் சேகரிக்க, கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: