டி20 உலகக் கோப்பை - பாகிஸ்தான்: 'நியூஸிலாந்துடன் இதுவரை தோற்றதில்லை, கோப்பை எங்களுக்குத்தான்'

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம் மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

1992 உலகக் கோப்பை தொடரை நினைவிருக்கிறதா ? இல்லையென்றால் இல்லையென்றால் சமூக ஊடகங்களில் சற்று உலவிப் பாருங்கள். பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அந்தக் காலத்தை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.

எங்கோ காணாமல் இருந்த, வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட ஒரு அணி இன்சமாமின் அதிரடியாலும், வாசிம் அக்ரமின் யாக்கர்களாலும் கோப்பையைத் தட்டிச் சென்றதை இன்றும் நினைத்து பாகிஸ்தான் ரசிகர்கள் சிலிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் தோற்கும், பிறகு வெற்றி பெறும், மீண்டும் தோற்கும், தட்டுத்தடுமாறி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பிறகு நான்கு கால் பாய்ச்சலில் கோப்பையை வென்றுவிடும். இந்த உலகக் கோப்பையிலும் பாகிஸ்தான் ரசிகர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள்.

இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வென்று பழைய வரலாற்றை மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.

1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றில் இங்கிலாந்து அணியுடன் வெறும் 74 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி சுருண்டபோது, அந்த அணி தொடரின் கடைசி நிலை நிலை அணிகளாகக் கருதப்பட்ட ஜிம்பாப்வே மற்றும் இலங்கையுடன் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆட்டம் மழையில் தடைபட்டு தோல்வியில் தப்பிய பாகிஸ்தான் அணி வீழ்த்த முடியாது என்று கருதப்பட்ட அணிகளையெல்லாம் தோற்கடித்தது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருடன் இப்போது நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரை ஒப்பிட முடியுமா என்று கேட்டால், ஏராளமான நிகழ்வுகளை பாகிஸ்தான் ரசிகர்கள் அள்ளி வீசுகிறார்கள். புள்ளி விவரங்களும் பாகிஸ்தானுக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றன.

"1992 உலகக் கோப்பை போட்டியிலும் கடைசி நிலையில் இருந்து பாகிஸ்தான் மேலே வந்தது" என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

இதுவரை மூன்று முறை உலகக் கோப்பை உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் மோதிக் கொண்டிருக்கின்றன. ஒருமுறைகூட நியூஸிலாந்து வென்றதில்லை. 1992-ஆம் ஆண்டு, 50 ஓவர் உலகக் கோப்பை, 1999-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை ஆகிய மூன்று தொடர்களிலும் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தியிருக்கிறது. அதுவும் அரையிறுதிப் போட்டிகளில்.

1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் என்ன நடந்தது?

1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடிய முதல் 5 போட்டிகளை எடுத்துப் பார்த்தால் மூன்று வெற்றிகளும் ஒரு தோல்வியும், மழையால் ரத்து செய்யப்பட்ட ஓர் ஆட்டமும்தான் இருக்கும். அடுத்ததாக பலமான ஆஸ்திரேலியாவையும், நியூலாந்தையும் எதிர்கொள்ள வேண்டும். இலங்கையுடனான மற்றொரு போட்டியும் இருந்தது.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

அந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது பற்றி யாருமே கணித்திருக்க மாட்டார்கள். ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆஸ்திரேலியாவை வென்ற பாகிஸ்தான் அடுத்ததாக இலங்கையையும் வீழ்த்தியது.

அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் மோதியது. மொத்தமாக 8 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அதுவரை ஒரு போட்டியில் கூட நியூஸிலாந்து தோற்கவில்லை. அப்படிப்பட்ட அணியை 166 ரன்களுக்குச் சுருட்டியது பாகிஸ்தான். அரைச் சதமும், சதமும் அடித்துக் கொண்டிருந்த கேப்டன் மார்ட்டின் க்ரோவ் அந்தப் போட்டியில் 20 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களை எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காக பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்து விட்டுக் கொடுத்ததாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ஏனென்றால் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்துவது எளிது என நியூஸிலாந்து அணி கணித்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் ஆக்லாந்து மைதானத்தில் நடந்த அரையிறுதியில் நியூஸிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது வேறு முகங்களைக் காட்டினார்கள். கேப்டன் இம்ரான் கான், மியான் தத், ரமீஸ் ராஜா, இன்சமாம் உல் ஹக் என அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். 37 பந்துகளில் 60 ரன்களைக் குவித்த இன்சமாம் தனது அதிரடியை உலகுக்கு நிரூபித்த தருணங்களுள் முக்கியமானது அது.

அந்தப் போட்டியில் வென்ற பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் இங்கிலாந்தையும் வீழ்த்தியது. ஒன்றை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். லீக் போட்டியில் வெறும் 74 ரன்களுக்குச் சுருண்ட அதே பாகிஸ்தான் அணிதான் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெறுங்கையுடன் வெளியேற்றியது.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

இந்த விஸ்வரூப மாற்றத்தைத்தான் பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். நியூஸிலாந்துடனான போட்டியில் அதுவே நடந்திருக்கிறது.

1999-உலகக் கோப்பை அரையிறுதி

1999-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடந்தது. அதிலும் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை பாகிஸ்தான் எதிர்கொண்டது. 1992-ஆம் ஆண்டு தோல்விக்குப் பழிதீர்க்க வேண்டும் என்ற கருத்துகளுக்கு மத்தில் நடந்த இந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் அணியே வென்றது.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

சயீத் அன்வர் 113 ரன்களை எடுத்து பாகிஸ்தான் வெல்வதற்கு உதவினார். எனினும் இந்தத் தொடரில் பாகிஸ்தானால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மிக மோசமாகத் தோற்றுப் போனது.

2007 டி20 உலகக் கோப்பை அரையிறுதி

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடந்த அரையிறுதிப் போட்டியில் மீண்டும் ஒருமுறை நியூஸிலாந்தும் பாகிஸ்தானும் மோதின. ஆனால் நியூஸிலாந்து அணியால் 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 19-ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டி பாகிஸ்தான் வென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

1992 உலகக் கோப்பையுடன் ஒப்பிடுவதற்கான காரணங்கள்

1992 உலகக் கோப்பையைப் போலவே இருப்பதால் இந்த உலகக் கோப்பையும் பாகிஸ்தானுக்குத்தான் என்பதற்கு சில காரணங்களை பாகிஸ்தான் ரசிகர்கள் அடுக்குகிறார்கள். அவை

  • முந்தைய உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. (அப்போது 1987, இப்போது 2021)
  • முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி
  • லீக் சுற்றில் இந்தியாவுடன் தோல்வி
  • கடைசி மூன்று போட்டிகளிலும் தொடர் வெற்றி
  • கடைசி நாள்வரை ஒரு புள்ளிக்காக காத்திருந்து அரையிறுதிக்குத் தகுதி

1992 உலகக் கோப்பையா? 2011 உலகக் கோப்பையா?

பாகிஸ்தான் ரசிகர்கள் 1992 உலகக் கோப்பையில் நடந்தது போன்று இப்போதும் நடக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், இந்திய ரசிகர்கள் 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, அல்லது 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் நடந்தது போன்று நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

காணொளிக் குறிப்பு, விராட் கோலியின் 'போலி ஃபீல்டிங்' வங்கதேச ரசிகர்களைக் கடுப்பாக்கியது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: