பாகிஸ்தான் வெற்றியால் இந்தியாவுக்கு அழுத்தம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம் மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டதால், இந்திய அணிக்கு அரையிறுதியில் வெல்ல வேண்டிய கூடுதல் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவும் இங்கிலாந்தும் மோதும் அரையிறுதிப் போட்டி அடிலெய்டு மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்றதுமே இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோத வேண்டும் என்று என்று சமூக ஊடகங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவும் - பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் ஆடுவதை தான் விரும்பவில்லை என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியிருக்கிறார்.
“இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் ஆடுவதைத் தடுக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் செய்வோம்” என்று செய்தியாளர் சந்திப்பில் ஜோஸ் பட்லர் கூறியிருக்கிறார்.
கிரிக்கெட்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மாத்திரமல்ல, இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் கூட அப்படியொரு பகை உண்டு. 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் அடித்த ஆறு சிக்சர்களும் இங்கிலாந்துக்கு ஆறாக் காயமாக இருக்கிறது.
1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் கோப்பை கனவைத் தகர்த்து வெளியேற்றியது இந்தியாதான். அதற்கு அடுத்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை சொந்த மண்ணிலேயே அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்து இங்கிலாந்து பழிதீர்த்துக் கொண்டது. இப்போது இன்னொரு முறை உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன.
இந்தியாவின் பலம் என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றிருக்கும் மற்ற எல்லா அணிகளையும்விட சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் 4 போட்டிகளில் வெற்றிபெற்ற ஒரே அணி இந்தியா மட்டும்தான்.
விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்தியாவின் வலிமையாக உள்ளது. விராட் கோலியும் சூர்ய குமாரும் 5 ஆட்டங்களில் தலா 3 அரை சதங்கள் அடித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான கோலியின் 82 ரன்களும், ஜிம்பாப்வேக்கு எதிரான சூர்யகுமாரின் 61 ரன்களும் அவர்களுடைய தற்போதைய திறனை விளக்குவதற்குப் போதுமானவை.

பட மூலாதாரம், Getty Images
193-க்கும் அதிகமாக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் சூர்யகுமார் யாதவை கட்டுப்படுத்துவதை இங்கிலாந்துக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும்.
இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கும் ஜோஸ் பட்லர், “சூர்யகுமார் அனைத்து வகையான ஷாட்களையும் ஆடுகிறார். ஆனால் எல்லா வீரர்களும் விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பைத் தருவார்கள். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வோம்” என்றார்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், புவனேஸ்வர் குமார் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி தருவதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்துகிறார்கள்.
இந்தியாவின் பலவீனம் என்ன?
இந்தியாவுக்கு முக்கியமான பலவீனமாக இருப்பது இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களின் நீடித்து ஆடாத ஃபார்ம்தான். கேப்டன் ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் இணையாக சொற்பமான ரன்களையே எடுத்திருக்கின்றனர்.
ஜிம்பாப்வே போட்டிக்கு முன்பாக அந்த இணையின் சராசரி 13 ரன்களாகவே இருந்தது. 50 ரன்களைக் கடந்தது ஜிம்பாப்வே போட்டியில்தான். இது இந்திய அணிக்கு முக்கியமான சிக்கலாக இருக்கிறது. இவர்களில் ரோஹித் சர்மாவின் தற்போதைய ஃபார்ம் கவலை தரக்கூடியதாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் - அணியில் இடம்பெறப்போவது யார்?
இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யாரைக் களமிறக்குவது என்பதில் குழப்பம் நீடித்திருக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் ஃபினிஷர் என்ற பெயர் தினேஷ் கார்த்திக்கிற்கு இருக்கிறது. முந்தையத் தொடர்களில் அவரது குறுகிய அதிரடி ஆட்டங்கள் அந்தப் பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தன. அதனால் உலகக் கோப்பை டி20 தொடரில் அவருக்கு எளிதாக இடம் கிடைத்தது. ஆனால் இந்தத் தொடரில் அவர் சிறப்பாக ஆடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆட்டமிழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது.
மற்றொரு நட்சத்திர வீரரான ரிஷப் பண்டுக்கு இந்தத் தொடரில் ஜிம்பாப்வே போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதில் 3 ரன்களை மட்டும் எடுத்திருக்கிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பாத்திரத்தில் இருவருமே சிறப்பாக ஆடாததால் அரையிறுதியில் யாரை களமிறக்குவது என்பது அணிக்கு பெருங் குழப்பமாகவே இருக்கிறது.
அஷ்வின், அக்சர் படேல், சாஹல் - அந்த இருவர் யார்?
இந்தியாவின் நம்பர் -1 சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் அணியில் இருக்கும் அஸ்வின், சூப்பர் 12 ஆட்டத்தில் ஆடிய 5 போட்டிகளிலும் சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 17 ஓவர்களை வீசியிருக்கும் அவர் 128 ரன்களைக் கொடுத்து ஓரளவு சிறப்பான ரன் விகிதத்தையும் பராமரித்திருக்கிறார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 22 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அவரது சிறப்பான பந்துவீச்சில் அடங்கும். இந்தியா தோல்வியடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் 43 ரன்களைக் கொடுத்தார். அது ஒன்றுதான் இந்தத் தொடரில் அவரின் மோசமான பந்துவீச்சு.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழலில் பந்தை அடிக்காமல் விட்டு வைட் மூலம் ஒரு ரன்னையும் கூடுதல் பந்தையும் பெற்ற அஷ்வினின் நிதானமும், அடுத்த பந்தில் ஃபீல்டருக்கு மேல் தூக்கி அடித்து ரன்னை எடுத்த விதமும் பாராட்டப்பட்டது.
இதுவரை இந்தியா ஆடிய ஆட்டங்கள் எதிலும் இந்தியாவின் முக்கிய சுழற்பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போதிருக்கும் சூழலில் அரையிறுதிப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புக் குறைவாகவே காணப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும் அக்சர் படேலுக்கு பதிலாக சாஹலுக்கு இடமளிப்பதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.
அரையிறுதியில் அஷ்வினுக்குப் பதிலாக சாஹல் சேர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், "அது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தது. அஷ்வின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தால், அது நல்லது. அவர் தொடர் முழுவதும் விளையாடி இருக்கிறார் அதனால் தேவைக்கேற்ப ஆடுவார். ஆனால் எதிரணிக்கு அதிர்ச்சியளிக்க வேண்டும் என்றால் சாஹலுக்கு வாய்ப்பளிக்கலாம். நிர்வாகத்தின் நம்பிக்கையை யார் பெறுகிறாரோ, அவர் ஆடுவார்" என்று கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து அணி எப்படி?
இங்கிலாந்து அணியின் முக்கிய ஆட்டக்காரரான டேவிட் மலான் காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. ஆயினும் இந்தத் தொடரில் அவர் சிறப்பாக ஆடவில்லை. இதேபோல வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டும் காயம்பட்டிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












