மார்க். கம்யூ. கட்சிக்கு உயர் சாதி அல்லாத முதல் பொதுச் செயலாளர் - எம்.ஏ.பேபி முன் காத்திருக்கும் சவால்கள்

பட மூலாதாரம், CPI(M)/X
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக, கேரளாவின் முன்னாள் கல்வி அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எம்.ஏ. பேபி எனப்படும் மரியம் அலெக்ஸாண்டர் பேபி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு, மதுரையில் ஏப்ரல் 2ஆம் தேதி துவங்கியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பிரகாஷ் காரத், மாணிக் சர்க்கார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமையன்று கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வுசெய்யப்பட்டார்.
கட்சியின் மத்தியக் குழுவில் 85 இடங்களில் 84 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களில் 54 பேர் ஏற்கனவே மத்தியக் குழுவில் இருந்தவர்கள். 30 பேர் புதியவர்கள். புதிதாக தேர்வுசெய்யப்பட்ட மத்தியக் குழு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கூடியது. கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபியின் பெயரை முகமது சலீம் முன்மொழிய, அசோக் தாவ்லே வழிமொழிந்தார். இதற்குப் பிறகு ஒரு மனதாக எம்.ஏ. பேபி புதிய பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநாடு

பட மூலாதாரம், CPI(M)/X
அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாக எம்.ஏ. பேபி உட்பட 18 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். இந்த பதினெட்டுப் பேரில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான உ. வாசுகி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோர் வயது வரம்பு காரணமாக மத்தியக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இப்படி விடுவிக்கப்பட்டவர்களில் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாணிக் சர்க்கார், சுபாஷினி அலி, எஸ். ராமச்சந்திரன் பிள்ளை, சுமன் பாசு, ஹன்னன் முல்லா ஆகியோர் மத்தியக் குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மத்தியக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, பி. சம்பத், பெ. சண்முகம், என். குணசேகரன், கே. பாலபாரதி ஆகிய ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டார்.

பட மூலாதாரம், CPI(M)/X
புதிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி யார்?
கட்சியின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள எம்.ஏ. பேபி, 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி கேரளாவின் கொல்லத்தில் பிறந்தார். பள்ளி நாட்களில் இருந்தே அரசியலில் ஆர்வம் கொண்டவராக இருந்த பேபி, இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக 1978, 1981ல் தேர்வுசெய்யப்பட்டு, செயல்பட்டார்.
இதற்குப் பிறகு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தீவிரமாக இயங்கியவர், 2012ஆம் ஆண்டிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக செயல்பட்டுவந்தார். 1986லிருந்து 1998வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பேபி, 2006லிருந்து 2016வரை குண்டற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 2006 முதல் 2011வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சராகவும் செயல்பட்டார் பேபி.
2015 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். இதற்குப் பிறகு, முன்னாள் பொதுச் செயலாளரான பிரகாஷ் காரத், கட்சியின் தற்காலிக ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். இந்த நிலையில்தான் மதுரை மாநாட்டில் புதிய பொதுச் செயலாளராக பேபி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், CPI(M)/X
கட்சியின் கீழ் நிலையிலிருந்து, உயர்நிலைக்கு வந்திருக்கும் பேபியின் முன் காத்திருக்கும் சவால்கள் எளிமையானவையல்ல. கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பின்னடைவுகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்திய அரசியலில் பொதுவாகவே இடதுசாரிகளின் இடம் சுருங்கிவரும் நிலையில், பிரதான இடதுசாரிக் கட்சி என்ற வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தப் போக்கு மிகக்கடுமையாக பாதித்திருக்கிறது.
இந்தி பேசும் மாநிலங்களில் கட்சி தனது செல்வாக்கைப் பெருக்க நினைத்தாலும் அது இப்போதுவரை வெற்றிகரமாக நடக்கவில்லை. மேலும், ஒரு காலத்தில் கட்சியின் செல்வாக்கு மிக்க மாநிலங்களாக விளங்கிய மேற்கு வங்கம், திரிபுரா ஆகியவற்றில் கட்சி பெரும் தோல்விகளைச் சந்தித்து, மீண்டு வர போராடிக் கொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், CPI(M)/X
தொடர் பின்னடைவுகளைச் சந்தித்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கேரளாவில் மட்டும், சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்த கட்சி 2021ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது. ஆனால், பா.ஜ.கவை மத்தியில் ஆட்சியிலிருந்து நீக்க விரும்பும் எதிர்க்கட்சிகளின் முயற்சியில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டுமானால், ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருப்பது மட்டும் போதுமானதாக இருக்காது.
குறிப்பாக, மேற்கு வங்கமும் திரிபுராவும் கையில் இல்லாவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்ற செல்வாக்கை அக்கட்சி மீண்டும் பெறுவது இயலாத காரியமாகவே இருக்கும்.
1999ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 33 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இதற்கு அடுத்த 2004ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தைப் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முந்தைய தேர்தலைவிட 10 இடங்கள் அதிகமாக வெற்றிபெற்றது, 43 இடங்களைப் பிடித்தது. இந்தத் தேர்தலில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் வரலாற்றிலேயே அதிக இடங்களைக் கைப்பற்றியது. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் 26 இடங்கள் கிடைத்தன.

பட மூலாதாரம், CPI(M)/X
ஆனால், இதற்குப் பிறகு தொடர்ந்து சரிவைத்தான் அக்கட்சி சந்தித்துவருகிறது. 2009ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் மொத்தமே 16 இடங்களைத்தான் அக்கட்சியால் கைப்பற்ற முடிந்தது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் பலத்த அடி விழுந்திருந்தது. அங்கே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய இரு பெரிய கூட்டணிகளுக்கும் மாற்றாகப் போட்டியிட்ட இடதுசாரி முன்னணி, மேற்கு வங்கத்தில் வெறும் 15 இடங்களையே கைப்பற்றியிருந்தது. இதில் 9 இடங்கள் மட்டுமே சி.பி.எம்முக்குக் கிடைத்தன.
2014ஆம் ஆண்டு தேர்தலில் 9 இடங்களைப் பெற்ற கட்சி, 2019ஆம் ஆண்டுத் தேர்தலில் மூன்று இடங்களுக்குச் சுருங்கியது. அதில் இரண்டு இடங்கள் தமிழ்நாட்டில் இருந்து கிடைத்தவையாக இருந்தன. 2024ல் சற்றே மீண்டு, 4 இடங்களை அக்கட்சி பெற்றிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அரசியலில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்திக்க முக்கியக் காரணம், மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கட்சி அடைந்த தோல்விகள்தான். 1978லிருந்து 1988வரை, 1998லிருந்து 2018வரை என திரிபுராவில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2018ல் பா.ஜ.கவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. 2023லும் பா.ஜ.கவே ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநில சட்டப்பேரவையிலும் சி.பி.எம்மின் இடங்கள் 16லிருந்து 11ஆக குறைந்துவிட்டன.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, 2006ல் 176 இடங்களைப் பிடித்த அக்கட்சி, 2011ல் 40 இடங்களையே கைப்பற்றி ஆட்சியை திரிணாமுல் காங்கிரசிடம் பறிகொடுத்தது. 2016ஆம் ஆண்டு தேர்தலில், 26 இடங்களை மட்டுமே பிடித்தது. 44 இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியானது. 2021ஆம் ஆண்டுத் தேர்தலில் சி.பி.எம்மால் அம்மாநிலத்தில் ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியவில்லை. அதன் வாக்கு சதவீதமும் 4.71%ஆகக் குறைந்து போனது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மேற்கு வங்கத்தில் கட்சி மீள்வதற்கான வாய்ப்பு என்ன?
"மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, அங்கே இரு துருவ அரசியல்தான் இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், அதன் பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்திருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதால் திரிணாமுல் காங்கிரசும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால், பா.ஜ.கவும் நல்ல நிதி மற்றும் ஆள் பலத்துடன் இருக்கின்றனர். இந்தச் சூழலில் சி.பி.எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை.
நிதி ரீதியான பலத்தை இழந்திருப்பது ஒரு பிரச்னை என்றால், மற்றொரு பக்கம், தனது பெரும் பகுதி வாக்காளர்களை அக்கட்சி பா.ஜ.கவிடம் இழந்துவிட்டது. இதற்கு முக்கியக் காரணம், திரிணாமுல் காங்கரசின் முக்கிய எதிர்க்கட்சியாக பா.ஜ.கவைத்தான் மக்கள் பார்க்கின்றனர்.
சி.பி.எம்மும் திரிணாமுல் காங்கிரசைக் கடுமையாக எதிர்க்கிறது என்றாலும்கூட, பா.ஜ.கவின் வலிமை அக்கட்சியிடம் இல்லை. ஆகவே திரிணாமுல் காங்கிரசை கடுமையாக எதிர்க்க நினைப்பவர்கள் பா.ஜ.க. பக்கம்தான் சாய்வார்கள்.
தற்போது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களான மீனாட்சி முகர்ஜி போன்றவர்கள் மத்தியக் கமிட்டிக்கு வந்திருக்கிறார்கள். இந்த இளைஞர் குழு, பா.ஜ.கவுக்கும் திரிணாமுல் காங்கரசிற்கும் எதிரான ஒரு வலுவான முனையாக சி.பி.எம்மை நிறுத்த வேண்டும்" என்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பங்களா போக்கோ அமைப்பின் பொதுச் செயலாளரான கார்கா சாட்டர்ஜி.
திரிபுராவிலும் நிலைமை அக்கட்சிக்கு மோசமாகவே இருப்பதாகச் சொல்கிறார் அவர். "திரிபுராவில் ஆட்சியை இழந்த பிறகு மிகக் கடுமையான வன்முறையை அந்தக் கட்சி எதிர்கொண்டுவருகிறது. அந்த வன்முறையை எதிர்கொள்ளத் தேவையான தொண்டர் படையை சி.பி.எம். அங்கே இழந்துவிட்டது.
தவிர, எதிர்க்கட்சியாக இருந்து, ஆட்சியை பிடிப்பதற்கான ஜனநாயகச் சூழலும் அங்கே இல்லை. சி.பி.எம். மீது மிகக் கடுமையான பொய்ப் பிரசாரமும் அங்கே அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இளைஞர்களிடம் அது எடுபடவும் செய்கிறது. இதையெல்லாம் சி.பி.எம். எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அக்கட்சிக்கு அங்கே மிகக் கடுமையான காலம்தான்" என்கிறார் கார்கா சாட்டர்ஜி.
"எம்.ஏ. பேபியின் தேர்வு ஒரு வரலாற்றுத் திருப்பம்"

பட மூலாதாரம், CPI(M)/X
எம்.ஏ. பேபியின் தேர்வு கட்சி கடந்துவந்த பாதையிலிருந்து ஒரு சிறிய மாற்றத்தைக் குறிக்கிறது என்றாலும், தேசிய அளவில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்ற சந்தேகம் இருக்கிறது என்கிறார் கேரளாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான எம்.ஜி. ராதாகிருஷ்ணன்.
"இந்திய இடதுசாரிகள் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கக்கூடியவர்கள். ஆனால், இந்த இடதுசாரி இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்ஜாதி இந்துக்கள்தான் என்ற குற்றச்சாட்டு உண்டு.
சி.பி.எம்மில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தை விட்டுவிட்டால், பொதுச் செயலாளர்கள் எல்லோருமே உயர் ஜாதி இந்துக்கள்தான் என்பது ஒரு வினோதமான நிலை. சி.பி.ஐ. ஏற்கனவே, டி. ராஜாவைத் தேர்வுசெய்ததன் மூலம் அந்தப் பாதையிலிருந்து விலகியது.
இப்போது சி.பி.எம். முதல் முறையாக தனது பொதுச் செயலாளராக மீனவ சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவரைத் தேர்வுசெய்திருக்கிறது. இது வரலாற்று முடிவு. ஆனால், எம்.ஏ. பேபி, முழுக்க முழுக்க கேரள அரசியலில்தான் தீவிரமாகச் செயல்பட்டவர். அவரால், யெச்சூரியைப் போல இந்தி பேசும் மாநிலங்களில் செயல்பட முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.
அதேபோல, மேற்கு வங்கம், திரிபுரா கேள்விகளுக்கு அவரிடம் பதில் இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், யெச்சூரியும் பிரகாஷ் காரட்டும்கூட அம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களில்லைதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் எம்.ஜி. ராதாகிருஷ்ணன்.
எம்.ஏ. பேபியைப் பொறுத்தவரை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்கிறார் கார்கா சாட்டர்ஜி. "இந்த விவகாரம் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கே அச்சுறுத்தலான விவகாரம். அவர் இந்த விவகாரத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பார் என நம்புகிறேன். அப்படிச் செய்தால், இந்தியா முழுவதும் சிபிஎம் மீது ஒரு கவனம் ஏற்படும்" என்கிறார் அவர்.
ஆனால், எந்த தனிமனிதராலும் சரிசெய்ய முடியாத பிரச்னை சி.பி.எம். எதிர்கொண்டிருக்கிறது என்கிறார் எம்.ஜி. ராதாகிருஷ்ணன். "தற்போது பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள எம்.ஏ. பேபிக்கு முன்பாக உள்ள பிரச்னைகள் சாதாரணமானவையல்ல. இந்தியா முழுவதுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாது, இடதுசாரி இயக்கங்களே மிகத் தீவிரமான, ஆழமான, பரந்துபட்ட சவால்களை எதிர்கொண்டுவருகின்றன. இந்தப் பிரச்னைகளை ஒரு தனி மனிதரால் 'அவர் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும்' சரிசெய்ய முடியாது.
எம்.ஏ. பேபி சில ஆண்டுகள் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், பிரகாஷ் காரத்தைப் போலவோ, சீதாராம் யெச்சூரியைப் போலவோ வட இந்தியத் தலைவர்களுடன் வலுவான தொடர்புகளை உடையவர் அல்ல. ஒரு தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் செயல்படப் போகிறார் என்ற நிலையில், இது ஒரு பலவீனம்தான்" என்கிறார் அவர்.
இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைவார்களா?

பட மூலாதாரம், CPI(M)/X
ஆனால், கார்கா சாட்டர்ஜி போன்றவர்கள் இந்திய அரசியலில் இடதுசாரிகளுக்கான இடம் காலியாக இருப்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, அதனை நிரப்ப சி.பி.எம். சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
"இந்தியாவில் மிகப் பெரிய இடதுசாரி கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சி.பி.எம்.எல். (லிபரேஷன்)னிடமிருந்து அக்கட்சி சில விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். அவர்கள் இடதுசாரிகளுக்கு என பிஹாரில் ஒரு இடத்தை உருவாக்கியுள்ளனர். பிஹார் தவிர்த்த இந்தி பேசும் மாநிலங்களில் இடதுசாரிகளுக்கான இடம் காலியாகவே இருக்கிறது.
அடுத்ததாக இப்போதைய தேவை, இடதுசாரிகளிடையேயான ஒற்றுமை. பனிப் போர் காலத்தில் இருந்த பிரிவினைகளை இப்போதும் விவாதிப்பதில் பிரயோஜனமில்லை. இதுபோன்ற வரலாற்றுக் காரணங்களுக்காக மட்டுமே இடதுசாரிகள் பல சிறு சிறு கட்சிகளாக பிளவுண்டு கிடக்கிறார்கள்.
அது தேவையில்லாதது. இடதுசாரிகளில் சி.பி.எம்தான் மிகப் பெரிய கட்சி என்பதால், எல்லா இடதுசாரிக் கட்சிகளையும் ஒரே கட்சியாக இணைக்கும் முயற்சியை அவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும். ஒரே முன்னணியாக இருக்கிறார்கள். ஒரே கட்சியாக இணைய வேண்டும்." என்கிறார் கார்கா.
எம்.ஏ. பேபியை இளவயதிலிருந்து நன்றாக அறிந்த ஒரு மூத்த பத்திரிகையாளர், அவரை "மிகவும் பண்பாடுமிக்க, சிறந்த குணங்களையுடைய, நன்றாகப் படித்த, பரந்த புரிதல் உள்ள ஒரு மனிதர்" எனக் குறிப்பிடுகிறார். தற்போதைய இந்திய அரசியலில் இத்தகைய மனிதர்களுக்கான இடம், எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வருங்காலத் தேர்தல்கள் சுட்டிக்காட்டக்கூடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலமும் அந்தத் தேர்தல் முடிவுகளில்தான் இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












