டெஸ்லாவை சரிவிலிருந்து காக்க ஈலோன் மஸ்க் ட்விட்டர் தலைமை பதவியை கைவிட வேண்டுமா?

பங்கு வீழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோனிகா மில்லர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சீனாவில் ஏற்பட்டுள்ள உற்பத்தி தாமதம் குறித்த கவலைகள் காரணமாக ஆப்பிள் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. 

2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியை ஆப்பிள் பங்குகள் கண்டுள்ளன. இதேபோல், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய உச்சத்தில் இருந்த டெஸ்லாவின் பங்குகள், அதனுடன் ஒப்பிடும்போது 73% வீழ்ச்சியை தற்போது சந்தித்துள்ளன. 

கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வாரக்கணக்கான ஊரடங்கு காரணமாக சீனாவில் உற்பத்தியைத் தொடர நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. தற்போது, பல ஆண்டுகளாக அமலில் இருந்த கட்டுப்பாடுகளை சீனா விலக்கிக்கொண்ட நிலையில், தொழிலாளர்கள் நெருக்கடியை நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. 

2023ஆம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் பயணிகளுக்கான கடுமையான தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதாக சீனா அறிவித்துள்ளதை, 2023ஆம் ஆண்டில் விநியோகச் சங்கிலி இயக்கம் எளிதாக இருக்கும் என்பதற்கான சாத்தியக் கூறாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். 

அதேவேளையில், கூடுதல் வட்டி விகிதம் உயர்வு, சர்வதேச பெருளாதார மந்தம், யுக்ரேனில் தொடரும் போர் ஆகியவை குறித்தும் சர்வதேச முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர். 

தற்போது, முக்கிய உற்பத்தி மையங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி மீண்டும் அதிகரிக்க நேரம் எடுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"உற்பத்தி ஆலைகள் அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா அலை ஏற்பட்டுள்ளதால் 4 முதல் 6 வாரங்கள் வரை பணியாளர்கள் பற்றாக்குறையை தொழிற்சாலைகள் எதிர்கொள்ளப் போகின்றன. சீன புத்தாண்டிற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஜனவரி இறுதியில் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பி விடுவார்கள்" என்று தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் சைமன் பாப்டிஸ்ட் கூறுகிறார்.

பிப்ரவரி இறுதிவரை உற்பத்தி மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பக் கூடிய சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். 

"ஐபோன் சிட்டி" என்று அழைக்கப்படும் ஜாங்ஜோ ஆலையில் ஏற்பட்ட உற்பத்தி தாமதங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கானை பாதித்தது. 2021ஆம் ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பரில் அதன் வருவாய் 11% குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்கு வீழ்ச்சி

பட மூலாதாரம், Getty Images

இந்த வாரம், சீனாவில் கோவிட் நோய்ப்பரவல் அதிகரித்ததால் டெஸ்லாவின் ஷாங்காய் உற்பத்தி ஆலை உற்பத்தியைக் குறைத்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

ஆனால், சீனா மற்றும் வட அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கியதில், நிறுவனத்தின் மந்தமான விற்பனை தெளிவாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் டெஸ்லா தலைமை நிர்வாகி ஈலோன் மஸ்க் குறித்தும் முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதத்தில் ட்விட்டரை ஈலோன் மஸ்க் தன்வசப்படுத்தினார்.

அதன் பின்னர், சமூக ஊடக தளத்தை நடத்துவதற்கே தனது நேரத்தில் பெரும்பகுதியை அவர் செலவிடுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட கவனச் சிதறலே டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி அடைந்ததற்கான மற்றொரு காரணம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். 

ட்விட்டரின் தலைவராக தானே தொடரலாமா என்று கடந்த வாரம் பயனாளர்களிடம் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியிருந்தார். அதில், பெரும்பாலானோர் வேண்டாம் என்பதைத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, தகுந்த மாற்று நபர் கிடைத்தால் தான் பதவி விலகுவேன் என்று ஈலோன் மஸ்க் அறிவித்தார். 

தற்போது அவர் முதலீட்டாளர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்களின் நம்பிக்கையை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: