ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட 27 பேர் ருமேனியாவில் கைது

சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயற்சி

பட மூலாதாரம், Getty Images

இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், எரித்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சிலர், ருமேனியா போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துணிகள் மற்றும் உலோகப் பொருட்களை ஏற்றிய இரண்டு லாரிகளில், மிகவும் சூட்சமமாக மறைந்து ஹங்கேரிக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ருமேனியா எல்லைப் பகுதியில் வைத்து, அராட் போலீஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனியா நாட்டு பிரஜை ஒருவர் ஓட்டிச் சென்ற கனரக லாரி ஒன்று அந்த நாட்டு போலீஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ருமேனியா நாட்டு எல்லையைக் கடக்க முயன்ற சந்தர்ப்பத்திலேயே, இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த லாரியில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற சிலர் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த லாரியின் பின்புறத்தில், மிகவும் சூட்சமமாக தயாரிக்கப்பட்டிருந்த அறையொன்றைப் போன்ற பகுதியில், 17 வெளிநாட்டு பிரஜைகள் மறைந்திருப்பதை அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பில் ருமேனியா போலீஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரசாயன பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றிலிருந்து கடந்த மாதம் 26 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்வதற்கு ருமேனியாவை அண்மைக் காலமாக பிரதான போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தி வருவது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயலும் சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கைது செய்வதற்கு ருமேனியா பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்கள், அராட் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பங்களாதேஷ், எரித்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 முதல் 67 வயதானோரே, சட்டவிரோதமாக நாட்டின் எல்லையைக் கடக்க முயன்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ருமேனியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு இடையில் துணிகளைக் கொண்டு செல்லும் வகையிலேயே, இந்த ஆட்கடத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ருமேனிய பிரஜை ஒருவரால் செலுத்தப்பட்ட உலோகங்கள் கொண்டு செல்லும் மற்றுமொரு லாரியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த லாரியில் 11 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த லாரியில் சட்டவிரோதமாக பயணித்தவர்களில், இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: