பார்வை இல்லாவிட்டால் என்ன? செல்போன் திருடிய நபரை மடக்கிப் பிடித்த பிபிசி செய்தியாளர்

- எழுதியவர், கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்
- பதவி, பிபிசி செய்திகள்
லண்டனில் பார்வை மாற்றுத்திறனாளியான பிபிசி செய்தியாளர் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு தனது செல்போனை திருடிய நபரை மடக்கிப் பிடித்துள்ளார்.
லண்டனின் நியூ பிராட்காஸ்டிங் இல்லத்தில் செவ்வாய்க்கிழமையன்று இரவுப் பணியில் இருந்த ஷான் டில்லி என்ற பிபிசி செய்தியாளர்தான் திருடனால் குறி வைக்கப்பட்டுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வந்த நபர், ஷான் டில்லியின் செல்போனை பறித்துள்ளார். ஆனால், எளிதில் விட்டுக் கொடுக்காத ஷான் டில்லி, விநாடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்துக் கொண்டு திருடனை பிடிக்க முயன்றார்.
தனக்கு பார்வை இல்லை என்பதாலேயே குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் பின்னர் கூறினார்.
பொது இடத்தில் மோசமான குற்றச்செயல் நடப்பதாக சந்தேகம் எழும் பட்சத்தில், சந்தேக நபரை காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைக்கலாம்.
தன்னை தாக்கி, செல்போனை பறித்த நபர் அருகிலேயே இருப்பதை உணர்ந்த பிபிசி செய்தியாளர், அந்த திசையில் தாவிக் குதித்து அந்த நபரை பிடித்து தரையில் சாய்த்தார். அவனிடம் இருந்து தனது செல்போனையும் அவர் மீட்டார்.
இந்த சம்பவத்தால், செய்தியாளர் ஷான் டில்லிக்கு கை மூட்டில் பல காயங்கள் ஏற்பட்டன. தனது பாதுகாப்பு குறித்து கவலைப்பட்ட அதே நேரத்தில், திருடனுக்கும் எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாக அவர் கூறினார்.
அவரது செல்போனில் உள்ள குரல் உதவியாளர் வசதி வாயிலாக அவர் காவல்துறையினரை உதவிக்கு அழைத்தார். காவலர்களின் வருகைக்காக அவர் காத்திருந்த வேளையில், பொதுமக்களில் ஒருவர் உதவி செய்ய முன்வந்தார்.
சிறிது நேரத்தில் காவல் அதிகாரிகள் 3 பேர் அங்கு விரைந்தனர். துரிதமாக விரைந்து வந்து, நட்புணர்வுடன் உதவி செய்த காவல் அதிகாரிகளுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பதாக ஷான் டில்லி கூறினார். 3 காவலர்களும் ஷான் டில்லியை பிபிசி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
தனது துணிச்சலான செயல்பாடு திருடர்களை எதிர்காலத்தில் யோசிக்க வைக்கும் என்கிறார் ஷான் டில்லி.
"என்னைப் போன்ற ஒருவரிடம் செல்போனைப் பறிக்க முயன்ற திருடனுக்கு அது மோசமான நேரம்," என்று அவர் கூறினார்.
தன்னுடைய செயல்பாடு முட்டாள்தனமானது என்று கூறும் ஷான் டில்லி, இதுபோன்ற தருணங்களால் யாரும் என்னைப் போல செயல்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். உயிரை விட வேறெதுவும் பெரிதில்லை என்பதால் காவல்துறையினரை உதவிக்கு அழைப்பதே நல்லது என்பது அவரது கருத்து.
செல்போன் மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சியில்லை என்பது போல் தன்னால் நடிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வை, கொள்ளை முயற்சியாக விசாரணை செய்து வரும் காவல்துறையினர், மத்திய லண்டனில் போல்சோவர் வீதியில் நடந்தேறிய இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருககிறார்களா என்று கேட்டுள்ளனர்.
ஷான் டில்லிக்கு உதவ முன்வந்த சாட்சி ஒருவர், கிரீன்வெல் வீதியை நோக்கி ஒருவர் ஓடியதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால், 101 என்ற எண்ணுக்கு அழைத்து, CAD 1115/27Dec. 101 என்று மேற்கொள் காட்டி தெரிவிக்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












