'மேண்டோஸ்’ புயல் - எங்கு, எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா?

பட மூலாதாரம், IMD
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு மேண்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.
நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பும்படியும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் தண்டையார் பேட்டை, திருவொற்றியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் லேசான சாரலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல, வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாடு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு பேரிடர் மீட்புப் படை குழு அனுப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேண்டோஸ் புயலின் தாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மேண்டோஸ் புயலின் விளைவாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று தெரிவித்தார்.
''வரும் 10ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் இன்று 40கிமீ முதல் 50 கி மீவரை இருக்கும். ஒரு சில சமயம் காற்றின் வேகம் 60கிமீ வரை இருக்கும். சென்னை நகரத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன,'' என்றார் பாலச்சந்திரன்.
சென்னையில் மழை சாரலுடன் தொடங்கியிருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்கிறார். வடக்கு திசையில் இருந்து காற்று வீசுவதால், சென்னை நகரத்தில் குளிர் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தற்போதுவரை பதிவாகியுள்ள வானிலை தரவுகளை கொண்டு பார்க்கையில், மேண்டோஸ் புயல், புயலாக மட்டுமே கரையைக் கடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாளை நள்ளிரவு நேரத்தில், புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். மேலும் இன்று இரவு 11 மணிக்கு புயல் கரையை கடப்பது குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எப்போது கரையை கடக்கும்?
மேண்டோஸ் புயல் வியாழக்கிழமை கரையை கடக்கும் நிலையில், பொதுமக்கள் புயலின் தாக்கத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக செல்பி எடுப்பதை தவிர்க்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொது மக்கள் தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால், காய்கறி போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
''பலத்த காற்று வீசும்போது மரங்களுக்கு கீழ் நிற்பதை தவிர்க்கவேண்டும். நீர்நிலைகளுக்கு அருகில் காற்றுவீசும்போது படம் எடுப்பதை(செல்பி) தவிர்க்கவேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு வந்தால் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்லவேண்டும். உலர்ந்த உணவுகள், மருந்துகள், டார்ச் லைட், முதலுதவி பெட்டிகளை அவரச பெட்டியை தயாராக வைத்திருக்கவேண்டும். அரசின் அதிகாரபூர்வ அறிக்கையை தொடர்ந்து கவனிக்கவேண்டும்,'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், IMD
புயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது?
ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டப்படும் வழக்கம் உண்டு. அந்த வகையில் இந்த முறை உருவாகியிருக்கும் புயலுக்கு மேண்டோஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சூட்டியுள்ளது. இதற்கு அரபு மொழியில் புதையல் பெட்டி என்று பொருள்.
புயலுக்கு யார் பெயர் வைக்கிறார்கள் என்ற பின்ணணி சுவாரஸ்யமானது. உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதலின்படி, இயற்கை சீற்றங்களின் தகவல்களை பெறுவதில் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக புயலுக்கும் பெயரிடும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. உலகம் முழுவதும், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் மற்றும் ஐந்து பிராந்திய வெப்பமண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் இதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கும், பெயரிடுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்றாகும். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியா மற்றும் 12 நாடுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. அவை வங்கதேசம், இரான், மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகள் ஆகும்.

பட மூலாதாரம், Getty Images
அதன்படி, ஏப்ரல் 2020ல் இந்திய வானிலை ஆய்வு மையம் புயலுக்கு பயன்படுத்தக்கூடிய 169 பெயர்களை அறிவித்துள்ளது. இந்தியா உள்பட 13 நாடுகள் தலா 13 பெயர்களை வழங்குகின்றன. மொத்தம் 169 பெயர்கள் கொண்ட அந்தப் பட்டியலின்படி இயற்கை சீற்றங்களுக்கு பெயர் சூட்டப்படுகிறது.
பெயர் பட்டியல் தரும் நாடுகளின் பெயர்கள் அகரவரிசையில் வகைப்படுத்தப்படும். அந்த பட்டியலில் உள்ளபடி அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு பசிஃபிக் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வைக்கப்படுகின்றன.
கடைசியாக கடந்த அக்டோபரில் உருவான புயலுக்கு சிட்ராங் எனப் பெயரிடப்பட்ட நிலையில், அந்த வரிசையில் அடுத்ததாக உள்ள மேண்டோஸ் என்ற பெயர் தற்போது சூட்டப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













