மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருக காலநிலை மாற்றம் காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
உலகளவில் காடுகள் அதிகமுள்ள 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில், ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோவில் நடந்த ஐ.நாவின் 26வது காலநிலை மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பூமியின் காடுகளைப் பாதுகாக்க உறுதிபூண்டனர்.
ஆனால், கிளாஸ்கோ பிரகடனத்தில் காடுகள் பாதுகாப்புடன் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளை இணைக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு ஈடுபாடு இல்லாததால், அதில் இந்தியா உடன்படவில்லை.
இந்த முடிவு மேற்குத்தொடர்ச்சி மலையைப் போன்ற பல்லுயிரிய வளம் மிக்க பகுதிகளுக்கு மேலும் அபாயத்தைக் கூட்டலாம் என்று விமர்சிக்கப்பட்டது.
இப்போது 27வது காலநிலை மாநாடு எகிப்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அதேவேளையில், இன்றளவும் மேற்கு மலைத்தொடரைப் போன்ற காட்டுப் பகுதிகளுக்கான அபாயங்களும் நீடிக்கவே செய்கின்றன. இந்த முறை இந்தியா காடுகள் பாதுகாப்பில் என்ன மாதிரியான அணுகுமுறையைக் கையாளும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலையின் நிலப்பரப்பில் உள்ள மாநிலங்கள் திடீர் வெள்ளம், நிலச்சரிவு என்று ஏற்கெனவே பல்வேறு பேரிடர்களை ஒவ்வோர் ஆண்டும் எதிர்கொண்டு வருகின்றன.
அப்படியிருக்க, கடந்த ஆகஸ்ட் மாதம் ஜேஜிஆர் அட்மோஸ்ஃபியர்ஸ் (Journal of Geophysical Research: Atmospheres) வெளியிட்ட ஓர் ஆய்வு, இந்த நூற்றாண்டின் இறுதி வரை இந்தப் பிரச்னைகளின் விகிதம் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஆண்டுவாரியாக அதிகரித்த வண்ணம் இருக்கும் என்று எச்சரித்தது.
காடழிப்பு, கட்டுமானங்களின் பெருக்கம், தீவிர வானிலை நிகழ்வுகள் என்று பல்வேறு பிரச்னைகளை மேற்கு மலைத்தொடர் சந்தித்து வருகின்றது. அவற்றோடு ஆக்கிரமிப்பு தாவரங்களின் பெருக்கமும் மனிதர்களால் பெரியளவில் விரிவுபடுத்தப்படும் தோட்டப்பயிரிடுதல்களும் மலைத்தொடர் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் கணிசமான பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
வேதிமத்தை வெளியிடும் ஆக்கிரமிப்புத் தாவரங்கள்
“ஆக்கிரமிப்பு தாவரங்கள் மேற்கு மலைத்தொடரில் அதிகமாகப் பரவியுள்ளன. இந்தத் தாவரங்களால், வாழ்விட ஆக்கிரமிப்பு நிகழ்கிறது. அது உள்ளூர் தாவரங்களின் பரவலைத் தடுத்து, அவற்றின் பெருக்கத்தைப் பாதிக்கிறது,” என்கிறார் தாவரவியல் ஆய்வாளர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி.
பூக்கள் மற்றும் காட்டுயிர்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்துவன் மூலம் மட்டுமே ஒரு சூழலியல் அமைப்பின் சமநிலையைப் பராமரிக்க முடியும். ஆனால், பெரும்பாலும் சோலைக் காடுகள், பசுமைமாறாக் காடுகள், புல்வெளிகள், சமவெளிக் காடுகள், சதுப்புநிலம் என்று அனைத்து நிலப்பகுதிகளிலும் அயல் தாவரங்கள் காணப்படுகின்றன.
மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைகளில் கடந்த காலங்களில் புல்வெளிக் காடுகள், சோலைக் காடுகளை அழித்து யூகலிப்டஸ், வாட்டல் போன்ற மரங்களுக்கான பரந்த தோட்டப் பயிரிடுதல்கள் நிகழ்ந்தன.
சமீபத்தில் 2020ஆம் ஆண்டு காட்டுயிர் பாதுகாப்பிற்கான சர்வதேச ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு உட்பட பல்வேறு ஆய்வுகள், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடங்கள் குறைவதற்கான காரணங்களில் ஆக்கிரமிப்புத் தாவரங்களின் பெருக்கமும் ஒன்று எனக் கூறுகின்றன.
சமீப காலங்களில் காட்டெருதுகள் கொடைக்கானல் நகரப்புற பகுதிகளுக்குள் அடிக்கடி வருகின்றன. அதற்கும், காடுகளில் ஆக்கிரமிப்பு தாவரங்களின் பெருக்கத்தால் உணவு கிடைக்காதது ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த மண்ணோடு தொடர்பற்று இங்கு வந்து பரவிய அயல் தாவரங்கள் அனைத்தையுமே ஆக்கிரமிப்பு தாவரங்கள் எனக் கருதிவிட முடியாது என்று கூறும் கிருஷ்ணமூர்த்தி, “உள்ளூர் தாவரங்களின் பெருக்கம் மற்றும் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவற்றையே ஆக்கிரமிப்பு தாவரங்கள் எனக் குறிப்பிட வேண்டும். அத்தகைய தாவரங்களுக்கும் உள்ளூர் தாவரங்களுக்கும் இடையே வாழ்விடப் போட்டி நடக்கிறது.
அதில், இடம் மட்டுமின்றி மண் வளம் போன்ற அனைத்தையுமே உள்ளூர் தாவரங்களிடம் இருந்து அவை எடுத்துக் கொள்கின்றன,” என்கிறார்.
அவற்றுக்கு இனப்பெருக்கத் திறனும் அதிகம். பெரும்பான்மையான ஆக்கிரமிப்பு தாவரங்கள் விரைவாகவும் அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்கின்றன. அதிக இடத்தை ஆக்கிரமிக்கின்றன.
மற்ற தாவரங்களுக்கான சத்துகளையும் சேர்த்து அதிகமாக எடுத்துக் கொள்கின்றன. இப்படி அனைத்திலும் உள்ளூர் தாவரங்கள் அவற்றோடு போட்டியிட வேண்டியுள்ளது.
“இப்படி உள்ளூர் தாவரங்களுக்கு போட்டி அதிகமாகும்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்து, ஆக்கிரமிப்பு தாவரங்கள் பெருகுகின்றன. உள்ளூர் தாவர வகைகள் குறையும்போது, அது அந்தப் பகுதியின் பருவநிலை தாங்குதிறனையும் பாதிக்கக்கூடும்,” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
“பல்லாண்டுகள் காலகட்டத்தில், தாவரங்கள், மண், பருவநிலை ஆகியவற்றுக்கு இடையே ஓர் ஒத்திசைவு ஏற்பட்டிருந்தது. குறிப்பிட்ட காலத்தில் பூப்பது, காய்ப்பது, செழித்து வளர்வது என்று அனைத்துமே அதைச் சார்ந்தது தான். இந்த உறவு பாதிக்கப்படும்போது, தாவரங்களின் வாழ்வியல் சுழற்சி பாதிக்கப்படுவது போன்ற பல்வேறு தடைகள் ஏற்படும்,” என்றும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அதுமட்டுமின்றி, “ஆக்கிரமிப்பு தாவரங்களின் வேர்ப்பகுதி வெளியிடும் அல்லிலோ வேதிமங்கள் என்ற ஒருவகையான வேதிமங்கள், உள்ளூர் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். தாவரத்தைச் சுற்றியிருக்கும் வேர் மண்டலத்தில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் இதனால் பாதிக்கப்படும்,” என்கிறார்.
வேர்களில் இருக்கும் நுண்ணுயிரிகள், பூஞ்சைகள் ஆகியவை தாவரத்தோடு ஒரு கூட்டு வாழ்க்கையை வாழ்கின்றன. அவை மீது ஏற்படும் தாக்கம், தாவரத்தின் வளர்ச்சி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படியான பாதிப்புகள் மலைப்பகுதியில் தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கங்களுக்கான தாங்குதிறன் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார்.
“ஆக்கிரமிப்பு தாவரங்களைப் பொறுத்தவரை செடிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளைவிட, தோட்டப் பயிரிடுதல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். அவை மண்ணை இறுகப் பிடிக்காது. அதனால் நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன,” எனக் கூறுகிறார் தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன்.
அதேவேளையில், “தோட்டப் பயிரிடுதல்கள் அதிகமாகியுள்ளன. ஆனால், அது மனிதர்களால் நடப்பட்டவை தான். அவை தாமாகப் பரவவில்லை. அதுபோக, லன்டானா போன்றவை அதிகமாகியுள்ளன. இப்போது அதுகுறித்த விழிப்புணர்வு அதிகமாகியுள்ளதால் நாம் அதைப் பற்றிச் சிந்திக்கிறோம்.
ஆனால், பொதுவாக ஆக்கிரமிப்பு தாவரங்கள் அதிகமாகிவிட்டதாகச் சொல்வதே ஓர் அனுமானத்தில் தான் சொல்லப்படுகிறது. சமதளத்தில் பரவியுள்ள ஆக்கிரமிப்புத் தாவரங்கள் அளவுக்கு இன்னும் மலைத்தொடரில் அதிகமாகப் பரவவில்லை,” என்கிறார் பேராசிரியர் நரசிம்மன்.

பட மூலாதாரம், Getty Images
“தேயிலை, காபிக்கான தோட்டப் பயிரிடுதல்களைத் தொடங்கியது முதலே, மூணாரின் உள்ளூர் தாவரங்களின் பரவலில் மாற்றங்கள் நிகழத் தொடங்கிவிட்டன,” என்கிறார் இயற்கையியலாளர் ரெ.பாபு.
கேரள சுற்றுலா துறையின் கேரளா டூரிசம் அண்ட் டிராவல் கல்வி நிறுவனத்தில் சுற்றுலாத் துறை உதவி பேராசிரியராக இருக்கும் பாபு, மூணார் பகுதியில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பெருகியதால் ஏற்பட்டும் மாற்றங்களைச் சிறு வயது முதல் அவதானித்து வருபவர். அவர் தற்போது அந்தப் பகுதியில் அயல் தாவரங்கள் ஆக்கிரமிப்பு தாவரங்களாக ஏற்படுவதில் இருக்கும் பாதிப்புகளை ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்.
மேற்குத்தொடர்ச்சி மலை எதிர்கொள்ளும் அபாயங்கள்
2011ஆம் ஆண்டு மாதவ் காட்கில் தலைமையிலான ஆய்வுக்குழுவின் அறிக்கையில், இந்த மலைத்தொடர் காலநிலை நெருக்கடிக்கு மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டது. காலநிலை மாறி வருவதன் காரணமாக, பருவநிலையிலும் மழைப்பொழிவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மலைத்தொடர் முழுவதும் ஏற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இது ஒருபுறம் இருக்க, மேற்கு மலைத்தொடரில் காணப்படும் ப்ளாக் அண்ட் ஆரஞ்ச் ஈபிடிப்பான், நீலகிரி ஈபிடிப்பான் ஆகிய இரண்டு வகையான பறவைகள், பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதால் அவற்றின் வாழ்விடப் பரவலில் 31 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை இழக்கக்கூடும் என்று கரன்ட் சயின்ஸ் என்ற ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரை கடந்த ஆண்டு குறிப்பிட்டது.

பட மூலாதாரம், Getty Images
பறவைகள் காலநிலை மாற்றத்தால் மட்டுமே பாதிக்கப்படவில்லை, ஆக்கிரமிப்புத் தாவரங்களின் பெருக்கத்தாலும் அவை பாதிக்கப்படுகின்றன என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட திரிச்சூரில் இருக்கும் காடியல் கல்லூரியின் காட்டுயிர் அறிவியல் துறை பேராசிரியர் முனைவர்.பி.ஒ.நமீர்.
“இந்த ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பரவியுள்ள நிலப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவி வெகுவாகப் பரவுகின்றன. இதனால், இவை பரவும் நிலத்திலுள்ள தாவரங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆக்கிரமிப்புத் தாவரங்களில் பலவும் வறண்ட பகுதிகளில் வேகமாகப் பரவுகின்றன. வெப்பநிலை உயர்வால் பசுமை மற்றும் ஈரம் நிறைந்த பகுதிகள் வறண்டு வருவது, அந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரிவான ஆய்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு,” என்கிறார் நமீர்.
தென்னிந்தியாவின் காலநிலை நெகிழ்வுத்தன்மையைப் பேணிக்காப்பதில் மேற்கு மலைத்தொடருக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு. சுமார் 1600 கி.மீட்டருக்கு நீண்டிருக்கும் இந்த மலைத்தொடர் தான் தென்மேற்குப் பருவமழையை முதலில் சந்திக்கிறது. ஆனால், கடந்த நூற்றாண்டில் மழைப்பொழிவின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாக ஒரு பகுப்பாய்வு கூறுகிறது.
பூனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல ஆய்வு நிறுவனத்தின் காலநிலை மாற்ற ஆய்வுக்கான மையத்தைச் சேர்ந்த ஹம்சா வரிகொடென் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், 1901 முதல் 2015 வரையிலான மழைப்பொழிவு தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
அப்போது, 1931 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான 85 ஆண்டுகளில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் மழைப்பொழிவு பத்தாண்டுகளுக்கு 3 சதவீதம் என்ற விகிதத்தில் குறைந்து வந்தது தெரிய வந்தது. அதேநேரத்தில், நாட்டின் வடக்குப் பகுதியில் பத்தாண்டுகளுக்கு 2 சதவீதம் என்ற விகிதத்தில் மழை பொழியும் அளவு அதிகரித்துள்ளது.
மாறி வரும் வாழ்விட சூழல்

பட மூலாதாரம், Getty Images
“மூணாறு பகுதிகளில், புளிச்சான் கீரை எனச் சொல்லப்படும் தாவர வகை இப்போது அதிகமாகக் காணப்படுவதில்லை. முன்னர், புளிக்குப் பதிலாக இந்தக் கீரை வகையைத் தான் அதிகம் பயன்படுத்தினோம். தேயிலை தோட்டங்களில் வேதிமங்களைப் பயன்படுத்தியதில் இதுபோன்ற பல கீரை வகைகள் இப்போது காணாமல் போய்விட்டன,” ரெ.பாபு.
மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்வேறு உயிரினங்கள் பெயர் போனவை. அந்த மலைத்தொடருக்கு மக்கள் ஈர்க்கப்படுவதற்கான காரணங்களில் பட்டாம்பூச்சிகளுக்கும் ஒரு பங்குண்டு. ஆனால், கடந்த ஆண்டுகளில் பட்டாம்பூச்சிகளுக்கான வாழ்விடங்கள் மலைத்தொடரில் குறைந்து வருவதாக பாபு கூறுகிறார்.
“மேற்குத்தொடர்ச்சி மலையில் பட்டாம்பூச்சிகள் சார்ந்து வாழக்கூடிய தாவர வகைகள், ஆக்கிரமிப்புத் தாவரங்களின் பரவலால் குறைந்துவிட்டன. ஒவ்வோர் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களும் கடைசி இரண்டு மாதங்களும் பட்டாம்பூச்சிகள் சீசனாகவே இருந்தது.
மூணார் பகுதியைப் பொறுத்தவரை, நவம்பர், டிசம்பரில் தென்பகுதியில் இருந்து வட பகுதிக்கு கூட்டமாக இடம் பெயரும் பட்டாம்பூச்சிகள், ஜனவரி, பிப்ரவரியில் வடபகுதியில் இருந்து தென்பகுதிக்கு இடம்பெயரும். இப்போது அத்தகைய இடப் பெயர்வைக் காண முடிவதில்லை,” என்கிறார் பாபு.

பட மூலாதாரம், Getty Images
மேலும், இதுகுறித்து ஆய்வு செய்தபோது “இவை சார்ந்து வாழக்கூடிய தாவர வகைகளின் பெருக்கம் குறைந்ததும் ஒரு காரணமாக இருப்பது தெரிய வந்தது. அந்தத் தாவரங்கள் குறைந்ததற்கு ஒரு முக்கியக் காரணம், அவற்றின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்புத் தாவரங்கள் கைப்பற்றிக் கொண்டன” என்கிறார்.
ஓர் ஆய்வாளராகத் தனக்கு அனைத்து தாவரங்களும் ஒன்று தான் எனக் கூறும் கிருஷ்ணமூர்த்தி, “இங்கிருந்தும் பல தாவரங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளன.
உள்ளூர் தாவரங்களுக்கு அபாயத்தை விளைவிக்கக்கூடிய பல தாவரங்கள், மக்களுடைய வாழ்வியலுக்கு உதவுகின்றன. சீமைக் கருவேல மரத்திற்கும் இது பொருந்தும். சீமைக் கருவேலம் இல்லையென்றால் கிராமங்களில் பெரும்பாலான வீடுகளுக்கு விறகு கிடைக்காது.
இப்படியாக, ஆக்கிரமிப்புத் தாவரங்களாக உள்ளூர் தாவரங்களுக்கு அபாயமாக விளங்கும் அயல் தாவர வகைகளை, பயன்பாட்டு ரீதியில் திசை திருப்புவது அவற்றைக் கட்டுப்படுத்துவதில் நல்ல பயன் தரலாம்.
கர்நாடகாவிலும் கூட லேன்டானா கேமராவில் இருந்து நாற்காலிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். அதேபோல், பார்த்தீனியம் செடியில் இருந்து நார் எடுக்கலாம். அனைத்து தாவரங்களுக்குமே ஏதேனும் பயன்பாட்டுரீதியிலான பண்பு இருக்கும். அதைத் தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கினால் கட்டுப்படுத்தவும் முடியும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













