மேக்ஸ்வெல், வார்னர் மிகவும் ஆபத்தானவர்கள்: இந்திய ரசிகர்கள் கூறுவது என்ன?

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் இன்று நடைபெறுகிறது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நரேந்திர மோதி விளைடாட்டரங்கம் எனப் பெயர் மாற்றப்பட்ட மோடெரா விளையாட்டரங்கத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இந்தியா இந்த உலகக்கோப்பை போட்டியில் இதுவரை ஆடிய பத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா இரண்டு தோல்விகளைச் சந்தித்துள்ளது.

IND Vs AUS

பட மூலாதாரம், Pavan Jaishwal

1983ஆம் ஆண்டு, மற்றும் 2011ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதேபோன்று இந்த ஆண்டும் வெல்ல வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றன.

இறுதிப்போட்டி நடைபெறும் அரங்குக்கு வெளியே மோடெரா ஸ்டிடேயம் சாலை முழுவதும் சிறு பிள்ளைகள் முதல் வயதானவர்கள் வரை நீல நிற ஜெர்ஸி அணிந்து இந்திய அணியை உற்சாகப்படுத்த வந்திருக்கின்றனர்.

குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை குறிக்கும் வகையில் 18 மற்றும் 45 ஆகிய எண்களை கொண்ட ஜெர்ஸிகளை அணிந்து ரசிகர்கள் வலம் வருகின்றனர்.

ரோஹித் சர்மா, விராட் கோலி படங்களை ஒன்றாக பிடித்து ROKO என்று எழுதியும் கோஷமிட்டு வந்தனர்.

IND Vs AUS

பட மூலாதாரம், ANI

2003ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உலகக்கோப்பை இறுதிப் போட்டி பங்குபெறும் இரு நாட்டிலும் அல்லாமல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. ஆனால் இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது.

எனவே நரேந்திர மோதி அரங்கின் உள்ளேயும் வெளியேயும் உள்ள சூழல் இந்திய அணிக்கு தார்மீக ஆதரவு அளிக்கும் வகையிலேயே உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கான ரசிகர்களை இந்தப் பகுதியில் காண்பது மிக மிக அரிதாகவே உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கமான நரேந்திர மோதி அரங்கில் இன்று 1.34 லட்சம் பேர் இந்த போட்டியை நேரில் காண வந்துள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரசிகர்கள் நேரில் வந்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் போட்டியை காண இந்தியர்கள் வந்துள்ளனர்.

இந்திய ரசிகர்கள் அனைவரும் இந்தியா வெல்லும் என்ற ஆசையும் நம்பிக்கையும் கொண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய அணியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்கின்றனர்.

போட்டியை நேரில் காண ஆமதாபாத் வந்திருந்த ரசிகர் ஒருவர், “மேக்ஸ்வெல் பயங்கரமான வீரர்-எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். காலில் வலி இருந்தும்கூட 200 ரன்கள் எடுக்கிறார். நாம் அலட்சியமாக இருக்க முடியாது. எனினும் பும்ராவும், ஷமியும் அவரை பார்த்துக் கொள்வார்கள்” என்றார்.

IND Vs AUS

மற்றொரு ரசிகர், “மேக்ஸ்வெல் மற்றும் வார்னர் இந்திய அணியை அழிக்க முடியும். கடந்த பத்து ஆட்டங்களிலும் இந்திய பயன்படுத்திய உத்தி நமக்கு கை கொடுத்திருக்கிறது. அதையே பயன்படுத்த வேண்டும். இந்தியா கண்டிப்பாக வெல்லும்,” என்றார்.

ஆமதாபாத் வந்துள்ள புனேவில் உள்ள ஸ்ரீராம், “இந்தியா வெல்ல வேண்டும். ஆனால் நாங்கள் ஒரு திரில்லிங்கான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம். தொலைக்காட்சியில் இந்த ஆட்டத்தைப் பார்ப்பதை விட, அரங்கில் இத்தனை பேருடன் சேர்ந்த் பார்ப்பது தனி அனுபவம்.

2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியைப் பார்த்து பல நாட்கள் சோகமாக இருந்திருக்கிறோம். இந்தியா அப்போது அதற்குப் பதிலடி கொடுக்கும் என நினைக்கிறேன். இந்திய அணி தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் திறமையாக உள்ளது. எனவே வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்றார்.

IND Vs AUS

பிரிட்டனிலிருந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியைப் பார்க்க வந்துள்ள ரசிகர் ஒருவர், “நான் ஒரு கிரிக்கெட் வெறியன் என்றே சொல்லலாம். சிறு வயதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல போட்டிகளைக் கண்டுள்ளேன்.

தற்போது, நடைபெறுவது மிக முக்கியமான போட்டி என்பதால் பிரிட்டனிலிருந்து போட்டியைக் காணவே வந்துள்ளேன். அரையிறுதி போட்டியையும் நேரில் பார்த்தேன். தற்போது இறுதிப் போட்டியையும் காணப் போகிறேன்” என்றார்.

IND Vs AUS

சென்னையைச் சேர்ந்த ஷோனக், “நான் சென்னையிலிருந்து வந்துள்ளேன். இந்தியா இதுவரை மிக சிறப்பாக ஆடியுள்ளது. அரையிறுதி போட்டியில்கூட நியூசிலாந்து ஜெயித்து விடுமோ என்று பயந்த நேரத்தில் திறமையான பந்துவீச்சு காரணமாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். நான் முதல்முறை ஆமதாபாத் வந்துள்ளேன். கச் பகுதிக்குச் சென்றோம். குஜராத்தி தாலி சாப்பிட்டோம். இந்தியா வெற்றி பெற்றால் இந்தப் பயணம் நினைவுகூரத்தக்க பயணமாக இருக்கும்,” என்றார்.

இறுதிப் போட்டிக்கு முன்பாக அரசியல் தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பல்வேறு நபர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். போட்டியைக் காண நேரில் வந்த சச்சின் டெண்டுல்கர், இந்த நாளுக்காகத்தான் அனைவரும் காத்திருந்தோம், இந்திய அணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

முகமது ஷமியின் தாய் அஞ்சும் அரா, "அவன் நாட்டை பெருமைக் கொள்ள வைக்கிறான். உலகக்கோப்பையைப் பெற்று வர கடவுள் அவனுடன் இருப்பார்," என்றார்.

IND Vs AUS

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியினர் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக, விளையாட்டு அரங்கை வந்தடைந்தனர். மதியம் 2 மணிக்குத் தொடங்கவுள்ள போட்டிக்கு 1.30 மணிக்கு டாஸ் போடப்படும்.

அதற்கு முன்பாக 12.30 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. இந்திய விமானப் படையினரின் வான் சாகசங்கள் 15 நிமிடங்களுக்கு நிகழும்.

இதற்கு முன்பு உலகக்கோப்பையை வென்ற கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. மேலும், குஜராத்தி பாடகர் ஆதித்யா காத்வியின் நிகழ்ச்சி போட்டி இடைவேளையில் நடைபெறவுள்ளது.

பிரீதம் சக்ரபர்தி, ஜோனிடா காந்தி, நகாஷ் அசிஸ், அமித் மிஷ்ரா, அகாஸா சிங், துஷார் ஜோஷி ஆகியோரின் நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)