பந்துவீச்சு பற்றிய பாகிஸ்தான் வீரர்களின் குற்றச்சாட்டுக்கு ஷமி கூறிய பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறிவிட்டது. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டி உட்பட இந்த உலகக்கோப்பையில் ஆடிய முதல் 10 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி இந்த வெற்றிகளைப் பெற்றதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன என மறைமுகமாகக் கூறும்படி பல சர்ச்சைகளும் அவ்வபோது எழுந்தன.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் செய்யும் விதம், இந்திய வீரர்கள் பந்துவீச்சு, பிட்ச் உள்ளிட்ட பல சர்ச்சைகள் எழுந்தன.
பந்துகள் தொடர்பான சர்ச்சைக்கு முகமது ஷமி விரிவாகப் பதில் கொடுத்திருக்கிறார்.
பந்துகள் மாற்றப்பட்டதாக எழுந்த சர்ச்சை
இந்திய அணி பயன்படுத்தும் பந்துகள் குறித்தும் சர்ச்சை எழுந்திருந்தது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசன் ராசா, “சிராஜும் ஷமியும் பந்தை வீசிய விதத்தைப் பார்த்தால், ஐசிசி மற்றும் பிசிசிஐ அவர்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் வேறு பந்துகளைக் கொடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. பந்து குறித்து ஒரு விசாரணை நடத்த வேண்டியுள்ளது. பந்து நன்றாக ஸ்விங் ஆக கூடுதலாக ஒரு அடுக்கு பூசப்பட்டிருக்கலாம்,” என்று கூறியிருந்தார்.
இதற்கும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பதிலளித்திருந்தனர். இந்த நிலையில் இந்தியா சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமியும் இந்தச் சர்ச்சை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஷமி கூறிய பதில் என்ன?
இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசியிருக்கும் ஷமி, "அவர்கள் முன்னேற வேண்டும், மற்றவர்களின் வெற்றியில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
“எனக்கு யார் மீதும் பொறாமை இல்லை. இது போல் இன்னும் பத்து பேர் வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நான் ஒருபோதும் பொறாமைப்படுவதில்லை. மற்றவர்களின் வெற்றியில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொண்டால், வாழ்க்கையில் சிறந்த இடத்திற்கு செல்வீர்கள்." என்று கூறினார்.
“முதலில் நான் விளையாடவில்லை, பின்னர் எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது முதலில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினேன், பின்னர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினேன். சில பாகிஸ்தான் வீரர்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை. அதனால் சர்ச்சையை உருவாக்கி வருகிறீர்கள்."
“வேறு நிறத்தில் உள்ள பந்தை, வேறு நிறுவனத்திடம் இருந்து வழங்கப்படுகிறது என்றும், ஐசிசி வித்தியாசமான பந்தைத் தருகிறது என்றும் பேசப்படுகிறது. உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.வாசிம் பாய் (வாசிம் அக்ரம்) ஒரு நிகழ்ச்சியில் பந்து எப்படி வருகிறது, எப்படி தேர்வு செய்யப்படுகிறு என்று விளக்கினார். அதன் பிறகும் இப்படித்தான் பேசுகிறார்கள். ஆனால் பேசுபவர்களுக்கு கிரிக்கெட் பற்றி நன்றாகத் தெரியும். நீங்கள் ஒரு முன்னாள் வீரர், உங்களுக்கும் எல்லாம் தெரியும். ஆனாலும் தொடர்ந்து சொல்கிறீர்கள்." என்று ஷமி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
'மற்ற கேப்டன்கள் பார்க்க முடியாத படி டாஸ் செய்கிறார்'
போட்டி தொடங்கும் முன் எந்த அணி பேட்டிங் செய்ய வேண்டும், எந்த அணி பவுலிங் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க டாஸ் போடப்படுகிறது. விளையாடும் இரு அணிகளின் கேப்டன்களில் ஒருவர் பொதுவாக டாஸ் செய்வார்.
அதை மற்றொரு அணியின் தலைவர் பார்த்து என்ன விழுந்திருக்கிறது என்பதைக் கூறுவார். டாஸ் வெல்லும் அணி பேட்டிங் செய்யப் போகிறதா, பவுலிங் செய்யப் போகிறதா எனத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் போடும்போது நாணயத்தை வெகு தொலைவில் சுண்டி விடுகிறார் என்றும் இதனால் எதிரணியின் கேப்டன் அதைப் பார்க்க முடிவதில்லை என்றும் விமர்சனம் எழுந்தது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர், சிக்கந்தர் பக்த் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பினார்.
“ரோஹித் சர்மா டாஸ் செய்யும்போது, எதிரணியின் கேப்டன் பார்க்க முடியாதபடி, தூரத்தில் வீசுகிறார். எனவே எதிரணி கேப்டன், பக்கத்தில் சென்று சரி பார்க்க முடிவதில்லை,” என்று அவர் கூறியிருந்தார்.
எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் ரோஹித் சர்மா பல்வேறு போட்டிகளில் டாஸ் செய்த வீடியோவையும் பகிர்ந்து அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் பாகிஸ்தானின் மற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்தக் குற்றச்சாட்டைப் புறந்தள்ளியுள்ளனர். வாசிம் அக்ரம், மொய்ன் கான், ஷோயப் மாலிக் உள்ளிட்டோர் இது விவாதத்துக்கு உகந்த விஷயம் அல்ல என்று கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ரோகித்துக்கு ஆதரவாக பிற பாகிஸ்தான் வீரர்கள்
“நாணயம் எங்கு விழ வேண்டும் என்று யார் முடிவு செய்வார்கள்? எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது,” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார்.
மேலும், “எனக்கு அந்த விஷயம் குறித்து கருத்து தெரிவிக்கவே விருப்பமில்லை,” என்று அவர் கூறினார்.
“அவரைத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். வெறுமனே ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். ஒவ்வொரு கேப்டனுக்கும் டாஸ் செய்ய ஒரு வழிமுறை இருக்கும்,” என்று மொயின் கான் கூறியிருந்தார்.
“இந்த விஷயம் விவாதிக்கக்கூட தகுதி இல்லாதது,” என்று ஷோயப் அக்தர் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
மைதானம் மாற்றப்பட்டதாக எழுந்த சர்ச்சை
இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், போட்டிக்கான மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக மாற்றப்பட்டது என்ற சர்ச்சையும் எழுந்தது.
இதற்கு ஐசிசி விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது. அரையிறுதிப் போட்டி குறித்து செய்தி சேகரித்த பிபிசி நிருபர் நிதின் ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "இவ்வளவு நீண்ட நிகழ்வின் கடைசிக் கட்டத்தில் மைதான சுழற்சித் திட்டத்தை மாற்றுவது பொதுவானது.
அதோடு இது ஏற்கெனவே சில முறை நடந்துள்ளது. இந்த மாற்றங்கள் மைதானத்தின் கியூரேட்டரால் செய்யப்பட்டன. போட்டி நடத்துபவரின் ஆலோசனை மற்றும் ஒப்புதலுடனே நடக்கிறது," என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "ஐசிசி-யின் சுயாதீனமான மைதான ஆலோசகர் இதை அறிந்திருந்தார். இந்த மைதானத்தில் ஒரு ஆரோக்கியமான போட்டி நடைபெறாது என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை," என்றார்.
இந்த விவகாரத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர் மிகக் காட்டமாக பதிலளித்திருந்தார்.
“மைதானம் மாற்றப்பட்டுள்ளது குறித்துப் பேசும் அனைத்து முட்டாள்களும், வாயை மூடிக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். மைதானம் மாற்றப்பட்டது குறித்துப் பேசுவதை நிறுத்துங்கள். அது இரு அணிகளுக்குமானது,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












