புதுவை அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய தமிழிசை உத்தரவு: தனிநபர் உரிமையில் தலையிடும் செயலா?

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியில் மாதத்தில் முதல் வேலை நாள் அன்று அனைத்து அரசு ஊழியர்களும் கதர், கைத்தறி பாரம்பரிய ஆடைகள் அணிந்து வர வேண்டும் என இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
ஆளுநர் சார்பில் அரசு சார்பு செயலாளர் எம்.வி.ஹிரண் இது தொடர்பான உத்தரவை வெளியிட்டார்.
ஒருபுறம் இது கதர், கைத்தறித் துறையை ஊக்குவிக்கும் என்ற வாதம் வைக்கப்படுகிறது. மறுபுறம், இது உத்தரவாகப் பிறப்பிக்கப்பட்டிருப்பது அரசு ஊழியர்களின் தனிநபர் ஆடை உரிமையில் தலையிடும் செயல் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த காலத்தில் புதுச்சேரியில் கதர், கைத்தறித் தொழில் செழித்திருந்தது. ஆயிரக் கணக்கானோர் இந்த தொழில்களில் ஈடுபட்டனர். அவர்களுக்கு மானியம் வழங்கி அரசு ஊக்குவித்தது.
மக்களும் கதர், கைத்தறி ஆடைகளை வாங்கி உடுத்தினர். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கதர், கைத்தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய துணை நிலை ஆளுநரின் இந்த உத்தரவு, நசிந்து வரும் கதர், கைத்தறித் தொழிலுக்குப் பயன்படுமா? அல்லது ‘பாரம்பரிய ஆடை’ என்ற சொல்லுக்குள் ஒளிந்திருப்பது, வேட்டி, சேலை அணிந்து வரவேண்டும் என்ற ஆடைக் கட்டுப்பாட்டு உத்தரவு மட்டும்தானா?
அடிப்படையில் காந்தியவாதியும், தானே கதர் அணிபவருமான அரசு ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலர் பி.லட்சுமணசாமியிடம் இந்த இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்துக் கேட்டோம்.
"கதர், கைத்தறி உடைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். கதர், கைத்தறி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் அதை கட்டாயமாக அணியவேண்டும் என்று உத்தரவிடுவது கூடாது.
மாறாக கதர், கைத்தறி உடைகளை பயன்படுத்துங்கள். இதனால் அவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், இதுபோன்ற முயற்சிகளால் அவர்களுக்கு உதவ வழிவகை செய்ய அரசு ஊழியர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கலாம்," என்றார் லட்சுமணசாமி.
கதர் பொருட்களை எல்லோரும் வாங்க வேண்டும் என்ற நோக்கம் சரியானது என்று கூறும் லட்சுமணசாமி, ஆனால் து.நி. ஆளுநர் கையாண்டுள்ள வழிமுறை சரியல்ல என்கிறார்.
ஆனால், நல்ல நோக்கத்துடன்தான் இதை முன்னெடுத்திருப்பதாக கூறுகிறார் தமிழிசை.

‘கதர் வாரியத்துக்கு தர வேண்டிய ரூ.2 கோடியை கொடுங்கள்’
"கைத்தறி தொழிலாளர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. நகரமயமாதலின் எதிரொலியாக அவர்களது நிலப்பரப்பு குறைந்துவிட்டது. இதனால் அதனை சார்ந்து அவர்கள் செய்து வந்த தொழில்களும் குன்றிவிட்டன. இப்படி அவர்களுடைய வேலைவாய்ப்பு சுருங்கும் போது வீட்டிலேயே கதர், கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கவேண்டும். இப்படி ஊக்குவிக்காமல் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் தேங்கிய காரணத்தினால்தான் புதுச்சேரியில் கதர், கைத்தறி தொழில் அழிந்துவிட்டது.
எனவே அரசு அவர்களுக்கு மானியம் கொடுத்து உதவி செய்யலாம். காதி கிராம வாரியத்திற்கு அரசு ரூபாய் 2 கோடிக்கு மேல் தரவேண்டியுள்ளது.
அதைக் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். மக்களுக்கு தள்ளுபடி விலையில் கதர், கைத்தறியை விற்பனை செய்துவிட்டு, அதற்கான மானியம் அரசாங்கத்திடம் இருந்து வராத நிலையில், அந்த தொழிலாளர்கள், அந்த தொழிலைச் செய்வதற்கு இப்போது முன்வரவில்லை," என லட்சுமணசாமி தெரிவித்தார்.
"கதர் தொழிலை அதிகப்படுத்துவது அரசின் நோக்கமாக இருந்தால் கிராம மக்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். கதர், கைத்தறி உற்பத்தியில் அதிகம் பெண்கள்தான் ஈடுபடுகின்றனர். அதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு செயல்பாடுகள் இருந்தால் அதை வரவேற்கலாம்.
இப்படி ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல், வெறுமனே காதி உடை அணிந்து வர வேண்டும் என்று திணிக்கக்கூடாது. உத்தரவாக வரும்போது, மேல் நிலை அதிகாரிகள் அதனை எளிதாகப் பின்பற்றிவிடுவார்கள். ஆனால், உடலுழைப்பு ஊழியர்களுக்கு கதர் அணிந்து தங்கள் வேலைகளை செய்வது கடினமாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, மின்சாரம், பிளம்பிங் தொடர்பான வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இந்த காதி உடை அணிவது எளிது அல்ல. அத்தகையவர்களுக்கு அரசாங்கமே கதர் உதவித் தொகை என்று தலா ரூ.2 ஆயிரம் கொடுத்தால் அவர்கள் கதர், கைத்தறி வாங்கி ஓரிருமுறை அணிந்து வருவார்கள்,”
என்று லட்சுமணசாமி தெரிவித்துள்ளார்.
15 ஆயிரம் நெசவாளர்கள் குடும்பங்கள் அவதி

புதுச்சேரி கைத்தறி தொழிலாளர் சங்க செயலாளர் ராஜாங்கம் இது பற்றி பிபிசி தமிழிடம் பேசும்போது, “துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு ஒரு விளம்பரமாக இருக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஏதும் அதில் இல்லை.
புதுச்சேரியில் 15 ஆயிரம் பேர் அரசாங்கத்திற்கு தரமான சேலை, கைலி வகைகளை நெய்து கொடுத்துவந்தனர். அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு எதுவும் செய்யாமல், அவர்களை வாழ வைக்காமல் பாரம்பரிய கைத்தறி தொழிலை அழித்துவிட்டு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவது நம் பாரம்பரியத்தின் மீது இவர்களுக்கு அக்கறை இருப்பது போன்று ஒரு தோற்றத்தைத்தான் ஏற்படுத்தும்.
உண்மையாகவே இந்த முயற்சியை மேற்கொண்டால், முதலில் கைத்தறியைப் பாதுகாக்க வேண்டும். அந்த நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்," என்றார் அவர்.
‘கைத்தறி தொழிலுக்கு எதிரான அரசின் செயல்பாடு’

"கடந்த காலங்களில் புதுவையில் கைத்தறி கைலிகள், சேலைகளை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்தனர்.
தற்போது அதற்குப் பதிலாக ரூ.500 பணம் தருகிறார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு தனியார் கடைகளில் வேறு பொருளை வாங்கிக்கொள்கிறார்கள். கைத்தறி தொழிலாளிக்கு சென்ற பணம் தற்போது வேறு யாருக்கோ செல்கிறது. இப்படி செய்துவிட்டு எப்படி பாரம்பரியத்தை, கதரை பாதுகாக்க முடியும்?
புதுச்சேரியில் 14 கைத்தறி நெசவாளர் சங்கங்கள் உள்ளன. அவற்றை சார்ந்து 15 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் இருந்தன. இந்த சங்கங்களை செயல்பட வையுங்கள்
அதற்கான நிதியை ஒதுக்குங்கள். அவ்வாறு செய்தால் எல்லாருமே அவர்கள் உற்பத்தி செய்யும் கைத்தறி ஆடைகளை வாங்கலாம்,” என்று தெரிவித்தார் ராஜாங்கம்.
மேலும் அவர் கூறுகையில்,
“புதுச்சேரி முழுவதும் நெசவாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை அரசின் ஆதரவு இருந்தது. ஒவ்வொரு நிதியாண்டிலும் அவர்களுக்கென நிதி ஒதுக்கீடு செய்து, அவர்களுக்குத் தேவையான நூல், பாவு உள்ளிட்ட மூலப் பொருட்கள் கிடைக்க அரசு உதவி புரிந்தது. மேலும் அவர்கள் உற்பத்தி செய்யும் ஆடைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன.
தள்ளுபடி தொகையை நெசவாளர்களுக்கு அரசு வழங்கியது. இதனால் கைத்தறி ஆடைகள் பரவலாக விற்பனை ஆயின. தற்போது முழுமையாக இது போன்ற உதவிகளை நிறுத்திவிட்டனர். அதனால் கைத்தறி செயலற்று போய்விட்டது," என்றார்.
‘நெசவு வேலை செய்தவர்கள் துப்புரவு பணி செய்யும் அவலம்’

"தற்போது புதுச்சேரியில் அதிகபட்சமாகக் கைத்தறி நெசவு தொழில் செய்பவர்கள் 200 பேர் கூட இல்லை. 15 ஆயிரம் பேர் கைத்தறித் தொழிலில் இருந்த புதுச்சேரியில், அதிலும் 70 சதவீத பெண்கள் கைத்தறி வேலையில் ஈடுபட்டிருந்த புதுவையில் தற்போது நிலைமை நிலைமை வேறு. தற்போது அவர்கள் எல்லாம் சாலையை சுத்தம் செய்யும் வேலை, அரசு அலுவலகங்களில் பெருக்கும் வேலை என்று செய்கிறார்கள். இல்லாவிட்டால் வீட்டில் வருமானம் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறார்கள். இதுதான் தற்போதிருக்கும் நெசவாளர்கள் வாழ்வியல் சூழல்.
அதனால் தமிழிசை சௌந்தரராஜன் மாதம் ஒரு முறை கைத்தறி மற்றும் கதர் ஆடைகள் உடுத்தவேண்டும் என்ற அறிவிப்பு, கைத்தறி சங்கங்களை மீண்டும் செயல்படுத்த வைக்கும் ஏற்பாடுகளோடு வந்திருக்கவேண்டும். இந்த அறிவிப்பு வெறும் உடை அணிவதுடன் நின்று விடாமல் அதைச் சார்ந்திருக்கக் கூடிய தொழிலாளிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் வகையில் செயல் திட்டமாக இருக்க வேண்டும்," என்று ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.
‘இதுவொரு விழிப்புணர்வாக அமையும்’

சட்டப்பேரவை செயலகத்தில் எழுத்தராகப் பணிபுரியும் முருகன், ஆளுநரின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக பிபிசி தமிழிடம் கூறினார்.
"நமது முன்னோர்கள் இந்த பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தனர். அது நமது அடையாளமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக மேற்கத்தியக் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறையினர் முழுக்க முழுக்க நமது பாரம்பரிய உடைகளை மற்றும் கலாச்சாரத்தை மறந்து வேறு திசையை நோக்கிச் சென்றுள்ளனர்.
தற்போது இதுபோன்ற அறிவிப்புகளால் நமது பிள்ளைகளுக்கு வழிகாட்டுதலாக நாம் பாரம்பரிய உடை அணியும்போது அவர்களும் இதைப் பின்பற்ற முன்வருவார்கள். இதுவொரு விழிப்புணர்வு, இதன் மூலமாக கைத்தறி, கதர் நெசவாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும். ஆனால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதனால் அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும், தொய்வடைந்த அவர்களது தொழில் மேம்படும். இதை திணிப்பு என்று பார்க்கவில்லை. ஏனென்றால் இது நமது பாரம்பரியத்தில் ஒன்றாக இருப்பதால் இதை அனைவரும் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் விருப்பம் உள்ளவர்கள் இதைப் பின்பற்றலாம்," என்று முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை என்ன சொல்கிறார்?

அரசு ஊழியர்கள் மாதத்தின் முதல் வேலை நாளில் பாரம்பரிய கதர், கைத்தறி ஆடை அணியவேண்டும் என்ற துணை நிலை ஆளுநரின் உத்தரவு தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் இருந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து அவரது பதில்களைக் கேட்டது பிபிசி தமிழ்.
"புதுச்சேரியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இருக்கவேண்டும் என்று நல்ல நோக்கத்தில்தான் இதனைத் தெரிவித்தேன்," என்று கூறி அவர் முடித்துக்கொண்டார்.
இந்த உத்தரவை ஏற்று பாரம்பரிய கதர், கைத்தறி ஆடையை குறிப்பிட்ட நாளில் அணியாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை இருக்குமா என்று கேட்டபோது, அவசரமாக தெலங்கானா திரும்ப வேண்டியிருப்பதால் விரிவாக பதில் கூற முடியாத நிலை இருப்பதை தெரிவித்துவிட்டு அவர் கிளம்பினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












