மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் சேப்பாக்க வரலாறு - மாற்றியமைக்குமா சிஎஸ்கே?

தோனி சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்த ஐ.பி.எல். சீசனில் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இரு தோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று பிற்பகலில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடக்கும் ஆட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா இல்லை 3வது தோல்வியைச் சந்திக்குமா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

கடந்த கால வரலாறு, புள்ளிவிவரங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே சாதகமாக இருப்பதால், சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே, மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு புதிய உத்வேகம் பிறந்துவிடுகிறது.

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வி, பஞ்சாப் கிங்ஸிடம் கடைசிப் பந்தில் வெற்றியை இழந்தது ஆகிய இரு தோல்விகளை மறக்கவும், சென்னை ரசிகர்களுக்கு வெற்றியைப் பரிசளிக்கவும் சிஎஸ்கே வீரர்கள் கடந்த சில நாட்களாக சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

மஞ்சள் அலை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடுகிறது என்றாலே “யெல்லோ ஆர்மி” அணி வகுக்கும், அரங்கு நிறைய மஞ்சள் நிறைந்திருக்கும். கூடுதலாக ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸுக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளமும் வருவதால், இன்றைய போட்டியில் ஸ்வாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

வரலாறு முக்கியம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை இதுவரை 2008ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் 8 முறை மோதியுள்ளன. இதில் 6 முறை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது, 2 முறை மட்டுமே சிஎஸ்கே அணி வென்றுள்ளது.

அதிலும் கடந்த 2011ம் ஆண்டுக்குப்பின் சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில்கூட சிஎஸ்கே அணி வென்றதில்லை என்ற வரலாறு இருக்கிறது. ஆதலால், மும்பை அணிக்கு இன்று வரலாறு சாதகமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுவரை சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐபிஎல் தொடரில் 35 ஆட்டங்களில் மோதியுள்ளனர். இதில் சிஎஸ்கே அணி 15 வெற்றிகளையும், மும்பை இந்தியன்ஸ் அணி 20வெற்றிகளையும் பெற்று ஆதிக்கம் செய்து வருகிறது.

சிங்கத்தை கோட்டையில் வீழ்த்திய ரோஹித் படை

மும்பை இந்தியன்ஸ், ரோஹித்

பட மூலாதாரம், Getty Images

சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே அணிக்கு கோட்டையாகும். ஆனால், சிங்கத்தை குகையில் சந்தித்து வீழ்த்துவது என்பது சாதாரணமல்ல. அந்த சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2011ம் ஆண்டுமுதல் தக்கவைத்து வருகிறது. சேப்பாக்கத்தில் மும்பை அணியுடனான ஆட்டம் என்றாலே தோனி படை பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி 60 போட்டிகளில் விளையாடி 43 ஆட்டங்களில் வென்றுள்ளது, 17 போட்டிகளில் தோற்றுள்ளது. இந்த 17ஆட்டங்களில் 5 ஆட்டங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஐபிஎல் சீசனில்கூட இதுவரை சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் 2 ஆட்டங்களில் ஆடி இரண்டிலுமே தோல்வி அடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆதலால் இந்த ஆட்டத்திலாவது சிஎஸ்கே வெல்லுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அசுர ஃபார்ம்

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை சமீபத்தில் அனைத்து பேட்ஸ்மேன்களுமே அசுரத்தனமான ஃபார்மில் உள்ளனர். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மட்டுமே வேதனையளிக்கிறது, இதுவரை ஐபிஎல் தொடரில் மட்டும் 15 டக்அவுட்களை சந்தித்துவிட்டார். ஆதலால்,ரோஹித் சர்மாவும் இந்த ஆட்டத்தில் வெடித்து விளையாடினால், சிஎஸ்கே நிலை அதோகதிதான்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் குறிப்பாக கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா ஆகியோர் அசுரத்தனமாக பேட்செய்து வருகிறார்கள். எந்த அணியாக இருந்தாலும் கடந்த 5 போட்டிகளிலும் புரட்டி எடுத்துவிட்டனர். அதிலும் டிம் டேவிட் இந்த சீசனில் 16 முத்ல 20 ஓவர்களில் ஸ்ட்ரைக் ரேட்டை 199 வரை வைத்துள்ளது மிரட்டலாதாக இருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றிலேயே தொடர்ந்து 2 முறை 200 ரன்களுக்குமேல் சேஸிங் செய்து மும்பை இந்தியன்ஸ் தங்களின் பேட்டிங் வலிமையை நிரூபித்துள்ளது. கடந்த 7 போட்டிகளில் வரிசையாக 5 வெற்றிகளை மும்பை அணி பெற்று பெரிய நம்பிக்கையுடன் இருக்கிறது.

சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சு வரிசையும் வலுவாக இருப்பதால், சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேவுக்கு கடும் சவாலாக சுழற்பந்துவீச்சில் இருக்கும். இன்றைய ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயராக மும்பை அணியில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் குமார் கார்த்திகேயா இடம் பெறலாம். ஏற்கெனவே பியூஷ் சாவ்லா கலக்கி வரும் நிலையில் அவருக்கு துணையாக கார்த்திகேயா செயல்படலாம்.

பல் இல்லாத வேகப்பந்துவீச்சு

மற்ற வகையில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சு பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. இதுவரை நடந்த ஆட்டங்களில் டெத் ஓவர்களிலும், தொடக்க ஓவர்களிலும் ரன்களை வழங்காமல் கட்டுக்கோப்பாக வீச வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. ஜோப்ரா ஆர்ச்சர் இருந்தாலும் அவரின் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை இதுவரை வழங்கவில்லை. டெத் ஓவர்களில் மும்பை பந்துவீச்சு எக்கானமி ரேட்13 ஆக இருக்கிறது, இது சிஎஸ்கே அணியிடம் 10ரன்களாக இருக்கிறது.

ஆதலால், மும்பை அணி வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கும். ஆஃப் ஸ்பின்னர் ஹிர்திக் சோகீன் அணிக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

சாவ்லா என்றாலே கிலியாகும் ராயுடு

ராயுடு

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே அணி என்றாலே பியூஷ்சாவ்லா சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். அதிலும் ராயுடுவுக்கு எதிராக இதுவரை 13 முறை பந்துவீசி 7 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஆதலால், ராயுடுவுக்கு சிம்மசொப்னமாக சாவ்லா இருப்பார்.

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், வேகம் குறைவாக பந்துவீசுவோருக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் நன்கு ஒத்துழைக்கும் என்பதால், மும்பை அணியில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர் வரலாம்.

ஃபார்ம் இல்லாத பேட்ஸ்மேன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இதுவரை நடந்த ஆட்டங்களில் அம்பதி ராயுடு, ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் தங்களின் முழு பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி விளையாடவில்லை.

துஷார் தேஷ்பாண்டே டெத் ஓவர்களிலும், தொடக்கத்திலும் ரன்களை வாரிக் கொடுத்துவிடுகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக தேஷ் பாண்டேவின் ஒருஓவரில் லிவிங்ஸ்டன் அடித்த அடிதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஆதலால், தேஷ்பாண்டேவின் டெத்ஓவர் பந்துவீச்சு கவலைக்குரியதாக இருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ் வருகிறாரா

பென் ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டார் என்று தகவல்கள் கூறினாலும், இதுவரை அதிகாரபூர்வமாக சிஎஸ்கே தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. கடந்த வாரம் முழுவதும் பென் ஸ்டோக்ஸ் வலைப்பயிற்சியில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார், அதேபோல சிசான்டா மகளாவும் பேட்டிங், பந்துவீச்சில் ஈடுபட்டுள்ளார், ஆனால், இருவர் குறித்த எந்த தகவலும் சிஎஸ்கே தரப்பில் இருந்து இல்லை.

மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு பந்துவீசுகிறார் என்று கூறினாலும் அவரின் பழைய ஃபார்மில் பந்துவீசாதது அணிக்கு பின்னடைவாகும்.

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றால், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் வென்றால், 10 புள்ளிகள் பெற்ற அணிகளின் “டிராஃபிக் ஜாமிலிருந்து” தப்பித்து ம் 6-வது இடத்திலிருந்து 2வது இடத்துக்கு தாவிவிடும்.

சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி

சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம், Getty Images

சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவாகப் பந்துவீசுவோருக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் ஏற்றது. அதேநேரம் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் அளவுக்கு பந்து பவுன்ஸ்ஆகும். ஆதலால் முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 180 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்க்க முடியும். இதுவரை சேப்பாக்கத்தில் நடந்த 4 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணியும், 2 ஆட்டங்களில் சேஸிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. கடைசியாக 201 ரன்களை பஞ்சாப் அணி வெற்றிகரமாக சேஸிங் செய்ததால், பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும்.

இம்பாக்ட் ப்ளேயர் விதி

இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை ஐபிஎல் போட்டியிலும், அணிகளின் செயல்பாட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் “ இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை எதிரணியின் வெற்றியை கடினமாக்கியுள்ளது. கடந்த இரு போட்டிகளிலும் இம்பாக்ட் ப்ளேயராக வந்த ராஜஸ்தான் ராயல்ஸின் ஆடம் ஸம்பா, பஞ்சாப் கிங்ஸின் பிரப்சிம்ரன் சிங் சிஎஸ்கே வெற்றிக்கு சவாலாக இருந்தார்கள். சிஎஸ்கே அணியின் திட்டங்களைச் சிதைத்து தோல்விக்கு காரணமாகினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆதலால் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வரலாற்றைத் தக்கவைக்குமா அல்லது சிஎஸ்கே சொந்தமண்ணில் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: