தமிழ்நாடு வீரர்களின் கடைசி ஓவர் மேஜிக்: நடராஜனின் மிரட்டலை வருண் சக்கரவர்த்தி முறியடித்தது எப்படி?

IPL: KKR vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திதான் கொல்கத்தா, ஹைதராபாத் ஐபிஎல் போட்டியின் ஹீரோ. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ‘சக்கரவர்த்தியாக’ வருண் வீசிய கடைசி ஓவர் மட்டுமல்ல, 16 மற்றும் 18-வது ஓவர்களும் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தன.

வருண் சக்கரவர்த்தி 16, 18 மற்றும் 20 ஓவர்களை வீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து வெற்றிக்கு முத்தாய்ப்பாகத் திகழ்ந்தார். இதில் 4 ரன்கள் பைஸ் மற்றும் லெக்பைஸாக வந்தவை. ஒட்டுமொத்தமாக 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்த வருண் ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக வீரரான நடராஜன், தனது அணிக்காக கடைசி ஓவரில் நிகழ்த்திய அற்புதங்களை விஞ்சுவதாக வருண் சக்கரவர்த்தியின் ஆட்டம் இருந்தது.

த்ரில்லான கடைசி ஓவர்

கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன . சர்துல் தாக்கூர் பந்துவீச அழைக்கப்பட்டாலும் தானாக முன்வந்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச வாய்ப்பு பெற்றார்.

கடைசி ஓவரில் புவனேஷ்வர், அப்துல் சமது ஆகிய இரு அதிரடி பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தபோதிலும் வருண் சக்கரவர்த்தியின் நேர்த்தியான, திணறவைக்கும் சுழற்பந்துவீச்சு ரன் சேர்க்கவிடாமல் கட்டிப்போட்டது. வருண் வீசிய முதல் பந்தில் அப்துல் சமது ஒரு ரன் எடுத்தார், 2வது பந்தில் புவனேஷ்வர் லெக்பையில் ஒரு ரன் எடுத்தார்.

3வது பந்தை அப்துல் சமது மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க அங்குல் ராய் கேட்ச் பிடிக்கவே 21 ரன்னில் விக்கெட்டை இழந்தார். கடைசி 3 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது, மயங்க் மார்க்கண்டே 4-வது பந்தில் ரன் எடுக்கவில்லை, 5வது பந்தில் மார்க்கண்டே ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை புவனேஷ்குமாரிடம் அளித்தார்.

கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் சன்ரைசர்ஸ் வெற்றி பெறும் என்ற நிலையில் புவனேஷ்வர் எதிர்கொண்டார். ஆனால் கடைசிப் பந்தை வருண் சக்கரவர்த்தி 107 கி.மீ வேகத்தில் வேகமாக வீச, அதை தவறாகக் கணித்து புவனேஷ்வர் அடிக்கத் தவறினார். இதையடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றது.

172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

IPL: KKR vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

ப்ளே ஆஃப் ரேஸ்

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தை நைட்ரைடர்ஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றிகள், 6 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி 9 ஆட்டங்களில் 3 தோல்வி, 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தை நைட்ரைடர்ஸ் அணி கட்டாய வெற்றியை நோக்கி விளையாடியது. வருண் சக்கரவர்த்தியால் கிடைத்த வெற்றி என்பது ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான ரேஸில் தன்னையும் இணைத்துக் கொள்ள கொல்கத்தாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

கொல்கத்தா அணி அடுத்து ஒரு வெற்றி பெற்றால், 10 புள்ளிகளுடன் இருக்கும் அணிகள் வரிசையில் இடம் பெற்று, ப்ளேஆஃப் கோதாவில் பங்கேற்கும். இந்த வாய்ப்பை கொல்கத்தா அணிக்கு பெற்றுத் தந்தவர்களில் முக்கியமானவர் வருண் சக்கரவர்த்தி என்பதில் மிகையில்லை.

இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் அந்தத் தோல்விக்கு நேற்று பழிதீர்த்துக் கொண்டது.

கட்டுக்கோப்பான கடைசி 5 ஓவர்கள்

கடைசி 30 பந்துகளில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 38 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால், ஆட்டத்தின் போக்கு சன்ரைசர்ஸ் அணியின் பக்கமே இருந்தது. ஆனால், கொல்கத்தா அணியின் டெத் ஓவர் பந்துவீச்சாளர்களான அரோரோ, வருண் இருவரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றி தங்கள் பக்கம் திருப்பினர்.

16-வது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

17-வது ஓவரை வீசிய அரோரா, 8 ரன்கள் கொடுத்து மார்க்ரம்(41)விக்கெட்டை வீழ்த்தினார்.

வருண் வீசிய 18-வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சன்ரைசர்ஸ் சேர்த்தது.

கடைசி 12 பந்துகளில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டநிலையில், அரோரா வீசிய 19வது ஓவரில் 12 ரன்களைச் சேர்த்த சன்ரைசர்ஸ் ஜான்சன் விக்கெட்டையும் இழந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வருண் சக்கரவர்த்தியின் நேர்த்தியான பந்துவீச்சில் 3 ரன்கள் மட்டுமே சன்ரைசர்ஸ் அணியால் எடுக்க முடிந்தது.

IPL: KKR vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

"பல் இல்லாத" பேட்டிங்

172 ரன்களை சேஸிங் செய்ய புறப்பட்ட சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் வரிசை பல் இல்லாத பேட்டிங் வரிசை போன்று, அதாவது எதிரணிக்கு எந்த விதத்திலும் சவாலாக இல்லாத வகையில்தான் பேட்ஸ்மேன்கள் அமைந்துள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா(9) ரன்னில் சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா நேற்று சிறப்பாகப் பந்தவீசினார். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலை(18) செட்டில் ஆகவிடாமல் பவுன்ஸரில் வெளியேற்றினார். இந்த சீசன் முழுவதுமே அகர்வாலுக்கு மோசமானதாக மாறிவிட்டது.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி சில பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் அடித்தநிலையில், 20ரன்னில் ரஸல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ராகுல் திரிபாதி கொல்கத்தா அணியில் ஆடியபோது இருந்த ஆட்டத்துக்கும், சன்ரைசர்ஸ் அணியில் இணைந்தபின் வெளிப்படுத்தும் பேட்டிங்கிற்கும் வேறுபாடு இருக்கிறது. ராகுல் திரிபாதி இந்த சீசன் முழுவதுமே பெரிதாக எந்த போட்டியிலும் ஸ்கோர் செய்யவில்லை, களத்துக்கு வந்து சில பவுண்டரி, சிக்ஸர் அடித்து சிறிய கேமியோ ஆடிவிட்டு மட்டுமே சென்றுள்ளார். அனைத்து பந்துகளையுமே சிக்ஸர், பவுண்டரி அடிக்கும் நோக்கில் ஆடியே திரிபாதி விக்கெட்டை இழந்துள்ளார்.

ரூ.13 கோடி வீரரின் டக் அவுட் சாதனை

பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி 53 ரன்கள் சேர்த்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரூ.13 கோடிக்கு வாங்கப்பட்ட ஹேரி ப்ரூக் இந்த முறையும் டக்அவுட்டில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். ஹேரி ப்ரூக் இந்த சீசனில் ஒரு சதம் அடித்ததைத் தவிர இதுவரை பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை, 3வது முறையாக டக்அவுட் ஆகியுள்ளார்.

இதனால் 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் திணறியது. 5-வதுவிக்கெட்டுக்கு கேப்டன் மார்க்ரம்,அனுபவ வீரர் கிளாசன் இருவரும் சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 97 ரன்கள் தேவைப்பட்டது.

IPL: KKR vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

கிளாசன், மார்க்ரம் போராட்டம்

கிளாசன் கிடைத்த வாய்ப்புகளில் சில சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசி ஆட்டத்தை தங்கள் பக்கத்தில் இருந்து விலகாமல் பார்த்துக் கொண்டார். மார்க்ரமும் வருண் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார். இதனால் ஆட்டம் மெல்ல மெல்ல சன்ரைசர்ஸ் பக்கம் சாயத் தொடங்கியது. மார்க்ரம், கிளாசன் ஆட்டத்தால் 4 ஓவர்களில் 49 ரன்களை சன்ரைசர்ஸ் சேர்த்தது.

ஷர்துல் தாக்கூர் வீசிய 15-வது ஓவரின் முதல்பந்தில் கிளாசன் டீப் மிட்விக்கெட்டில் அடிக்க முற்பட்டு ரஸலிடம் கேட்ச் கொடுத்து 36 ரன்னில் வெளியேறினார். செட்டிலான, ஆபத்தான பேட்ஸ்மேன் கிளாசனை வெளியேற்றிய மகிழ்ச்சியில், கொல்கத்தாவுக்கு புதிய உத்வேகம் பிறந்தது. கிளாசன்-மார்க்ரம் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 74ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

வாய்ப்பை தவறவிட்ட சன்ரைசர்ஸ்

அதன்பின் ஆட்டத்தை படிப்படியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கையகப்படுத்திக் கொண்டது. கடைசி 4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. வருண் சக்கரவர்த்தி, அரோராவைப் பயன்படுத்தி சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களுக்கு கொல்கத்தா அணி பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

அரோரா வீசிய 17-வது ஓவரில் மார்க்ரம்(41)ரன்னில் ஆட்டமிழந்தவுடன், சன்ரைசர்ஸ் வெற்றிக் கனவு ஏறக்குறைய தகர்ந்துவிட்டது. அடுத்து வந்த மார்க்கோ ஜான்சன், அப்துல் சமது ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றும் முடியவில்லை.

அரோரா வீசிய 19-வது ஓவரில் ஜான்ஸன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டநிலையில், அப்துல் சமது சிக்ஸர் அடிக்க முற்பட்டு 21 ரன்னில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IPL: KKR vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

சன்ரைசர்ஸ் தோல்விக்கு காரணம் என்ன?

சன்ரைசர்ஸ் அணியில் கிளாசன், மார்க்ரம் ஆகிய இருவரைத் தவிர அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் என்று எந்த வீரரையும் குறிப்பிட்டுக் கூற முடியாது. இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கிறோம் என்ற ரீதியில் கத்துக்குட்டிகளை ஏலத்தில் எடுத்து நெருக்கடியான நேரத்தில் ஆடுவதற்கு பேட்ஸ்மேன்கள் இல்லாமல் ஐதராபாத் அணி தவிக்கிறது.

இந்த சீசனில் இதுவரை சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் என்று நிரந்தரமாக எந்த வீரரையும் அந்த அணி நிர்வாகம் செட்டில் ஆகவிடவில்லை. அபிஷேக் சர்மா, ஹேரி ப்ரூக், மயங்க் அகர்வால், திரிபாதி என பலரையும் மாற்றி களமிறக்கி, வீரர்களின் நிலைத்தன்மையை குலைத்துவிட்டது.

நடுவரிசையில் கிளாசன், மார்க்ரம் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடக்கூடியர்கள். ஹேரி ப்ரூக்கை 13 கோடிக்கு வாங்கி இதுவரை ஒரு சதத்தைத் தவிர சன்ரைசர்ஸ் அணிக்கு டக் அவுட்களையே அதிகம் வழங்கியுள்ளார். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மட்டுமே ஓரளவுக்கு நம்பிக்கை தருகிறார். மற்றவகையில் திரிபாதி, அகர்வால் இருவரையும் விரைவாக ஆட்டமிழக்கவைக்கும் உத்தியை எதிரணிகள் எளிதாக தெரிந்து வைத்துள்ளன.

எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பேட்ஸ்மேன்கள் என்று விரல் சுட்டினால் சன்ரைசர்ஸ் அணியில் யாருமில்லை. இவர் களத்தில் நின்றால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் அளவுக்குக்கூட எந்த வீரரும் இல்லை என்பதுதான் நிதர்சனம், ஒட்டுமொத்தத்தில் சன்ரைசர்ஸ் அணி பல் இல்லாத பேட்டிங்கை வைத்து ப்ளே ஆஃப் செல்வது கடினமாகியுள்ளது.

IPL: KKR vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

நடராஜன் நம்பிக்கை

சன்ரைசர்ஸ் அணியில் நேற்று ஆறுதல் அளிக்கும் விஷயம் பந்துவீச்சு மட்டும்தான். தமிழக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மயங்க் மார்க்கண்டே, புவனேஷ்வர் குமார் ஆகியோரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். பந்துவீச்சாளர்கள் தங்கள் கடமையை சிறப்பாகச் செய்த நிலையில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

தோல்விக்குப்பின் சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ இந்த சீசன் முழுவதும் நல்ல கிரிக்கெட்டைத்தான் நாங்கள் ஆடுகிறோம், ஆனால், துரதிர்ஷ்டமாக இக்கட்டான நேரத்தில் தவறுகளை இழைக்கிறோம். இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. கிளாசன் சிறப்பாக பேட் செய்தார். கிளாசனுக்கும், எனக்கும் சிறிது அழுத்தம் இருந்தாலும் அதிலிருந்து நாங்கள் அணியை மீட்டோம்.ஆனால், அடுத்து நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை” எனத் தெரிவித்தார்.

IPL: KKR vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

சரிவிலிருந்து மீட்ட ராணா, ரிங்கு கூட்டணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங்கும் நேற்று எதிர்பார்த்தவாறு அமையவில்லை. கொல்கத்தா அணிக்கும் இதுவரை நல்ல தொடக்க வீரர்கள் அமையவில்லை.

ஜேஸன் ராய் வந்தபின்புதான் ஓரளவுக்கு நிலைத்தன்மை அடைந்துள்ளது. 7 பரிசோதனைகளுக்கு பின் ஜேஸன் ராய், குர்பாஸ் கூட்டணி அமைந்துள்ளனர். ஆனால், இருவருமே நேற்றைய ஆட்டத்தில் ஏமாற்றினர். ஜேஸன் ராய்(20), குர்பாஸ்(0), வெங்கடேஷ்(7) ஆகியோர் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழந்து கொல்கத்தா அணியை நெருக்கடியில் தள்ளினர். வெங்கடேஷ் பலவீனம் ஷார்ட்பால் என்பதை தெரிந்து கொண்டு அவரை தொடர்ந்து சாய்த்துவருவதால் அதை சரி செய்வது அவசியமாகும்.

ஆடுகளத்தில் பந்துகள் பேட்ஸ்மேனைநோக்கி மெதுவாக வந்ததால், ஜேஸன் ராய் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பேட்டை சுழற்றியபின்புதான் பந்து பேட்டில் விழுகிறது. இதனால் எதிர்பார்த்த ஷாட்களை அடிக்கமுடியாமல் ராய் விக்கெட்டை இழந்தார்.

கொல்கத்தா அணி சரிவில் இருந்தபோது, ரிங்கு சிங், கேப்டன் ராணா இருவரும் சேர்ந்து மீட்டனர். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 65 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ராணா அதிரடியாக பேட் செய்து 31 பந்துகளில் 42 ரன்கள்(3சிக்ஸர்,3பவுண்டரி) அடித்தநிலையில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆந்த்ரே ரஸல் (24) சிறிய கேமியோ ஆடிவிட்டு வெளியேறினார். பின்வரிசை பேட்ஸ்மேன்களான சுனில் நரேன்(1), தாக்கூர்(8) ஆகியோரும் உதவவில்லை. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை கடைசி 4ஓவர்களில் சேர்க்கும் ரன்கள்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தும் ஆனால், நேற்று கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் கடைசி 4 ஓவர்களை வீணடித்து 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தனர். கொல்கத்தா அணியிலும் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம்தான் ஸ்கோர் குறைய முக்கியக் காரணமாகும்.

IPL: KKR vs SRH

பட மூலாதாரம், BCCI/IPL

சுனில் நரேன் தேவையா

கொல்கத்தா கேப்டன் ராணா நேற்று 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி சன் ரைசர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தினார். இதில் ஹர்சித் ராணா, வருண் இருவருக்கு மட்டுமே முழுமையாக 4 ஓவர்கள் வீச வாய்ப்புக் கிடைத்தது. இளம் சுழற்பந்துவீச்சால் சூயஷுக்கு பதிலாக வந்த அங்குல் ராய் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பி வரும் சுனில் நரேனுக்கு வாய்ப்புகள் ஏன் தொடர்ந்து வழங்கப்படுவது தெரியவில்லை. இவருக்குப் பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஆல்ரவுண்டரை சேர்த்தாலும் பேட்டிங் வலுப்படும்.

‘இதயத்துடிப்பு எகிறியது’

ஆட்டநாயகன் விருது வென்ற வருண் சக்கரவர்த்தி கூறுகையில் “ கடைசி ஓவரில் மட்டும் என்னுடைய இதயத்துடிப்பு 200 அளவுக்கு சென்றிருக்கும். சவாலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கடைசி ஓவரை கேட்டு வாங்கி வீசினேன். மழை பெய்ததால் பந்து கையில் பிடிக்கமுடியவில்லை இருப்பினும் சமாளித்து பந்துவீசினேன்.

என்னுடைய முதல் ஓவரில் மார்க்ரம் அருமையான ஷாட்களை அடித்து 12 ரன்கள் சென்றதால் ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியது. ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசினேன். கடந்த சீசனில் 85கி.மீ வேகத்தில் பந்துவீசினேன், அதன்பின் பல்வேறு பயிற்சிகள், திருத்தங்கள் செய்திருக்கிறேன் அது நன்றாக உதவியுள்ளது” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: