திருநெல்வேலி: திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப் போட்டி - களத்தில் முந்துவது யார்?

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை, பெரிதும் கவனம் ஈர்த்த தொகுதிகளில் திருநெல்வேலியும் ஒன்று. ரயிலில் பறக்கும் படையிடம் பிடிபட்ட ரூ.3.98 கோடி, அதன் தொடர்ச்சியாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை, காங்கிரஸ் வேட்பாளர் ராபர் ப்ரூசுக்கு எதிராகவே முன்னாள் காங்கிரஸ் எம்.பி வேட்பு மனு தாக்கல், அதிமுகவில் முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றம், தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு என இந்த தொகுதி பரபரப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை.
நெல்லை மக்கள் தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளரை எப்படி தேர்வு செய்ய இருக்கிறார்கள், வாக்காளர்களுக்கு எம்.பி மீதான எதிர்பார்ப்பு என்ன?

திருநெல்வேலி மாவட்டம் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் நகரம். இங்கு விவசாயம், மீன்பிடித் தொழில், சுற்றுலா தலம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் பிரதானமாக இருக்கின்றன.
கங்கை கொண்டான் சிப்காட்டில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு வேலை தேடி நகர்கின்றனர்.
இன்னமும் குடிநீர், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே வாக்க்காளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
திராவிட கட்சிகளின் கோட்டையாக மாறியது எப்படி?
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிக்கு 1952-ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பின்னர் சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என தேசிய கட்சிகளின் வசமிருந்த தொகுதி 1977-ல் நடைபெற்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக, திமுக என மாநில கட்சிகளின் வசம் சென்றது.
2004-ஆம் ஆண்டில் மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதி 2009-ஆம் ஆண்டில் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. அதன்படி திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், அம்பாசமுத்திரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
இதுவரையில் மொத்தமாக 17 தேர்தல்களை இத்தொகுதி சந்தித்து உள்ளது. அதில் ஏழு முறை அதிமுக, ஐந்து முறை காங்கிரஸ், திமுக மூன்று, கம்யூனிஸ்ட், சுதந்திரா கட்சி தலா ஒரு முறை வெற்றியடைந்துள்ளன.
கடந்த தேர்தலில் திமுகவின் சார்பில் ஞானதிரவியம் போட்டியிட்டு 5,22,993 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். அதிமுக வேட்பாளர் 3,37,273 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
அமமுக வேட்பாளர் 62,235 வாக்குகளை பெற்று மூன்றாமிடம் பிடித்தார். அதிமுகவை விட கூடுதலாகப் பெற்ற திமுக 17.99% வாக்குகளை பெற்றது.
இதுவே 2014-ஆம் ஆண்டு நான்கு கட்சிகளும் தனித்து களமிறங்கிய போது அதிமுக 13.28% வாக்குகளை கூடுதலாக வாங்கி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மூன்றாமிடத்தை பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு நான்காம் இடமே கிடைத்தது.

வேட்பாளர் தேர்வில் குழப்பம்
பாஜகவின் சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவின் மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிக்கை வெளியிடப்பட்டு பின்னர் அது மாற்றப்பட்டது. நயினார் நாகேந்திரன் அதிமுக சார்பில் எம்எல்ஏவாகி தமிழக அமைச்சராக இருந்தார். கடந்த முறை பாஜக சார்பில் நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியா கூட்டணியில் இந்த முறை தேனியை திமுக எடுத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு நெல்லையை ஒதுக்கியது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த தகவல் முதல்வர் திருநெல்வேலியில் பிரசாரம் செய்வதற்கு முன்பு வரை அறிவிக்கப்படாமல் இருந்தது.
பிரசாரக் கூட்டத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு கன்னியாகுமரியைச் சேர்ந்த வழங்கறிஞர் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார். ஆனால் முன்னாள் எம்.பி ராமசுப்புவும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் வேட்பு மனு பரிசீலனையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
அதேபோல் அதிமுகவின் சார்பில் சிம்லா முத்துசோழன் என்பவர் அறிவிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் அவருக்கு எப்படி வாய்ப்புக் கொடுக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் மாற்றப்பட்டு திசையன்விளையைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவரான ஜான்சி ராணி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் பா.சத்யா போட்டியிடுகிறார்.
திருநெல்வேலி தொகுதியில் முக்குலத்தோர், நாடார், முஸ்லீம், கிறிஸ்தவர்கள், பட்டியல் சமுகத்தினர் வசிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் வாக்குகள் வேட்பாளரின் சமூகம், மதம் சார்ந்து குறிப்பிட்ட அளவு வாக்குகள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
சோதனைகளில் சிக்கிய பணம்
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள திமுகவின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் கடந்த ஏப்ரல்-4 ஆம் தேதி இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்ட திமுகவினர் இருந்தனர்.
அங்கு கணக்கில் வராத பணம் கட்டுகட்டாக கைப்பற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அது குறித்த தகவலை திமுகவினர் மறுத்தனர்.
அதேபோல் சென்னையிலிருந்து ரயில் வழியாக நெல்லைக்கு வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் எடுத்துச் செல்லப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3.99 கோடி ரொக்கத்தையும் அதனை எடுத்துச் சென்ற மூன்று பேரையும் காவல்துறை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொளத்தூரைச் சேர்ந்த சதீஷ், அவரது சகோதரர் நவீன், மற்றும் திரு வைகுண்டத்தைச் சேர்ந்த பெருமாள் என்பது தெரிய வந்தது. இதில் சதீஷ் பாஜகவின் உறுப்பினராக உள்ளார்.
இவர்கள் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான உணவகத்தில் பணியாற்றுவதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான உணவகத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
நெல்லையில் அவரது ஆதரவாளரான கணேஷ் மணி என்பவரது வீட்டில் நடத்தப்பட்டச் சோதனையில் உரிய ஆவணமின்றி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் பணம், 100 வேஷ்டிகள், 44நைட்டிகள், 41 மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனால் நெல்லை தேர்தல் களம் பரபரப்பானது.
வேட்பாளரை தகுதி நீக்க கோரி மனுக்கள்
நெல்லை திமுக வழக்கறிஞர் அணியின் தலைவர் ஜாகிர் உசைன் சார்பில் மாவட்ட தேர்தல் பார்வையாளரான சோனாளி பென்ஷோ வயங்கரையிடம் மனு வழங்கப்பட்டது. அதில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வெற்றி பெறலாம் என நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் திமுக அலுவலகத்தில் பிடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என தெரிவிக்க வேண்டும். வழக்கு பதிவு விபரம் வேண்டும் என்று கோரியது. திமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் அது, இதனையடிப்படையாக வைத்து காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தனது 1,500 கோடி சொத்து விபரத்தை மறைத்து இருக்கிறார். அவர் மீதான வன்கொடுமை வழக்கை வேட்பு மனுவில் காண்பிக்காமல் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதனை பரிசீலனை செய்ய வேண்டுமென மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் கேட்டும் முறையாக விசாரிக்காமல் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
எனவே, வேட்பு மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதுவரை தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்”, என கேட்டிருந்தார்.
இது தேர்தல் தொடர்பான வழக்கு என்பதால் அது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரிக்க வாய்ப்புகள் உள்ளன.
நெல்லை நாடாளுமன்றத் தேர்தல் இப்படி பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு, வேட்பாளர் தகுதி நீக்க மனுக்கள், தேர்தலை நிறுத்தக் கோரி வழக்கு, என விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில் வாக்காளர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது அறிந்து கொள்ள பிபிசி தமிழ், தொகுதி முழுவதிலும் பயணித்து மக்களின் மனநிலையை கேட்டு அறிந்தது.

'புதிய வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்'
பால் வியாபாரம் செய்யும் மாரியப்பன் பிபிசி தமிழிடம் பேசிய போது,
“திருநெல்வேலி முன்பு அதிமுகவின் கோட்டையாக இருந்தது. பின்பு காலப் போக்கில் அது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக மாறியிருக்கிறது. கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பியின் செயல்பாடு பெரிய அளவில் இல்லை. இந்த முறை ஓர் பெண் வேட்பாளர் நிற்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் அவரது செயல்பாட்டு எப்படி இருக்கும் என தெரியும்.
ஆனால், பாஜகவின் சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இங்கே இருக்கிறது. ஆனால் அவருக்கு சிறுபான்மையினர் வாக்குகள் செல்லுமா என கூற முடியாது. காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது”, என்றார்.
குழப்பத்தில் நெல்லை வாக்காளர்கள்
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெர்டின் ராயன் பேசிய போது,
திருநெல்வேலி கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ கட்டமைப்பில் பின்தங்கி இருக்கிறது. நெல்லையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட எம்.பி நாடாளுமன்றத்தில் திருநெல்வேலியின் குரலாக ஒலிக்கவில்லை. அவர் மீது கனிம வளங்களை எடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் அடிதடி வழக்கும் எம்.பி மீது பதிவு செய்யப்பட்டது.
தற்போது திமுக கூட்டணி கட்சிக்கு நெல்லை தொகுதி ஒதுக்கப்பட்டு ராபர்ட் ப்ரூஸ் என்பவர் நிற்கிறார். அவரும் கன்னியாகுமரியில் இருந்து வந்தவர். பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சராக இருந்தவர்.
கங்கைகொண்டான் சிப்காட்டில் தொழிற்சாலைகளை அதிகப்படுத்தி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதை தடுக்கலாம்.
அதே போல் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பால் பாழாகி வருகிறது அதனை முழுவதுமாக தூய்மைப்படுத்த வேண்டு்ம். இதற்கு தேர்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் குரல் கொடுக்க வேண்டும்”, என்றார்
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு வயதுடைய பெண் வாக்காளர்களிடம் பேசினோம். அவர்கள் மத்திய,மாநில அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நலத்திட்டத்தின் அடிப்படையிலேயே வாக்கை செலுத்துவோம் என கூறுகின்றனர்.

"காங்கிரசில் உட்கட்சிப் பூசல் இல்லை"
நெல்லை நாடாளுமன்றத்தில் சட்டமன்றம் வாரியாக தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தனது பிரசாரத்திற்கு முன்பாக பிபிசி தமிழிடம் பேசினார்.
"திருநெல்வேலியை மையமாக வைத்து கன்னியாகுமாரி, தூத்துக்குடி,தென்காசி ஆகியவற்றை நெல்லை ரயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும். நாங்குநேரியில் தொழில் பூங்கா அமைத்திட வேண்டும். தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றைப் பெற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று வாக்களர்களிடம் கூறி வாக்கினை சேகரித்து வருகிறேன்.
இது தவிர செல்லும் இடங்களில் மக்கள் சாலை, குடிநீர்,பேருந்து வசதி போன்றவற்றை கேட்டு வருகின்றனர். அதனையும் குறித்து வைக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ராம்சுப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்று கூறுவது தவறு. ஆரம்பத்தில் அவர் தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதனால் எதிராக வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் கட்சித் தலைமை பேசிய பின்னர் ஆதரவாக இருக்கிறார். நானும் அவரை நேரில் பார்த்து ஆதரவளிக்க கேட்டேன். திமுக, காங்கிரஸ் கட்சியினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கடந்த முறை அதிமுக, பாஜக சேர்ந்து நின்றே 1.85 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றனர். இந்த முறை தனித்தனியாக நிற்கின்றனர். இதனால் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகளை பெறுவேன். அதிமுக,பாஜக இரண்டாம் இடத்திற்குதான் போட்டியிடுகின்றனர்", என்றார்.
'சீட் கொடுக்காததால் வேட்பு மனு தாக்கல்'
முன்னாள் காங்கிரஸ் எம்.பி ராமசுப்பு பிபிசி தமிழிடம் பேசியது
“திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பியாக இருந்த போது சிறப்பாக பணியாற்றினேன். இந்த முறை வேட்பாளரில் தேர்வில் நான் தான் நம்பர் ஒன்னாக இருந்தேன். ஆனால் கட்சி எனக்கு சீட் கொடுக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதாலேயே எதிர்த்து மனு தாக்கலை செய்தேன்.
பின்னர் கட்சித் தலைமை என்னை கன்னியாகுமரி பொறுப்பாளராக நியமனம் செய்த பின்னர் நான் கன்னியாகுமரியில் தேர்தல் பணியை செய்து வருகிறேன். நெல்லையில் காங்கிரஸ் கட்சிக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது", என்றார்.

‘சிறுபான்மையினர் வாக்குகள் எனக்கு கிடைக்கும்’
நாங்குநேரி தொகுதியில் கிராமம் கிராமமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த பாஜக வேட்பாளர் நாகேந்திரன் பிபிசி தமிழிடம் பிரச்சாரத்திற்கிடையே பேசினார்.
"திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், பாஜக என நான்கு முனை போட்டி இருக்கிறது. நான் அமைச்சராக இருந்ததால் நெல்லை மாவட்டம் முழுவதிலும் இருக்கக்கூடிய கிராமப் பகுதிகள் எனக்கு நன்றாகத் தெரியும்.
பாஜகவிற்கு திருநெல்வேலி நாடாளுமன்றத்தின் சில இடங்களில் பூத் கமிட்டியினர் இல்லை என்பது உண்மைதான். அதனை பாஜக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மற்றும் ஓபிஎஸ் அணியை கொண்டு சரி செய்து வருகிறது.
எனது வெற்றியை தடுப்பதற்காகவே மாநில அரசு எனக்கு சொந்தமான இடத்திலும் எனது உறவினர்கள் இடத்திலும் சோதனை நடத்தி வருகிறது. எனது சொத்துகளை வேட்பு மனுவில் தாக்கல் செய்து இருக்கிறேன் மற்றவர்களுடய சொத்தை நான் எப்படி சேர்க்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை சமூகம் சார்ந்து வாக்குகள் செல்லும் என்று கூற முடியாது. இங்கு பெருவாரியாக இருக்கக்கூடிய நாடார், முக்குலத்தோர் வாக்குகள் எனக்கு கிடைக்கும் அதே போல சிறுபான்மையினர் வாக்கின் ஒரு பகுதி நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
திருநெல்வேலியில் மென்பொருள் நிறுவனம் இல்லை. அதனை கொண்டு வந்தால் இங்கு இருக்கக் கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதே போல அடிப்படை பிரச்சனைகளை இங்கிருக்க கூடிய மக்கள் முன்வைக்கின்றனர். அதற்கான தீர்வையும் தருவோம் என்று உறுதி கூறி வாக்கு சேகரிக்கிறேன்", என கூறினார்

அதிமுக வேட்பாளர் தேர்தல் வியூகம் என்ன?
அதிமுக சார்பில் போட்டியிடும் ஜான்சி ராணி அந்ததந்த தொகுதி சார்ந்த பிரச்னைகள், திமுக எம்.பி, பாஜக வேட்பாளர் மீதான அதிருப்தியை தன்வசம்படுத்திக் கொள்வதற்காக மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
"தாமரை சின்னத்தில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு 2001 வாய்ப்பு கொடுத்தது அதிமுக தான். தற்போது தாமரையில் போட்டியிடுகிறார். அவர் நாளை வேறு கட்சிக்கும் செல்லவும் வாய்ப்புயிருக்கிறது.
நயினார் அமைச்சராக இருந்த போதும், எம்எல்ஏவாக தற்போது இருக்கும் பொழுதும் தொகுதிக்கு எijயும் செய்யவில்லை. அதே வேளையில் காங்கிரஸ் சார்பில் களமிறகும் வேட்பாளர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மாவட்டத்தின் பிரச்னைகள் ஏதும் சரிவர தெரியாது.
திமுக அரசு அதிமுக கொண்டு வந்த முக்கிய திட்டங்களை நிறுத்தி வைத்து இருக்கிறது. நெல்லையின் முக்கிய பிரச்னையான தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்வது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது போன்றவற்றை செய்து தருவேன்" என்று ஜான்சி ராணி தனது தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளிக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












