இஸ்ரேல் மீதான இரான் தாக்குதல் யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி? ஓர் அலசல்

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மஹ்மூத் எல்நாகர்
    • பதவி, பிபிசி நியூஸ் அரபிக்

இஸ்ரேல் மீதான இரானின் முதல் தாக்குதலை சில ஆய்வாளர்கள் "இரானுக்கு ஆதரவான ஒரு நகர்வு " என்று விவரிக்கின்றனர்.

இஸ்ரேலிய இராணுவத் தகவல்களின்படி, சனிக்கிழமை இரவு தெஹ்ரான் இஸ்ரேலை நோக்கி 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது.

டமாஸ்கஸில் தனது தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பதில் தாக்குதல் இது எனவும், இதில் தங்களது இலக்கை அடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது இரான்.

ஏப்ரல் 1 ம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதன் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்தியாக கூறப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது இரான்.

அந்த தூதரகத்தின் மீது இஸ்ரேல்தான் தாக்குதல் நடத்தியது என்று அது கூறவில்லை என்றாலும், அதுவே இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், Atef Safadi / EPA

படக்குறிப்பு, இரண் 300 டரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் ஏவியுள்ளது.

பெற்றதும் இழந்ததும்

இஸ்ரேல் மீதான தாக்குதல் வெற்றி பெற்றுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது.

ஆனால் இரானிய ஆய்வாளரும், லண்டனை தளமாகக் கொண்ட அரபு-இரானிய ஆய்வு மையத்தின் இயக்குநருமான அலி நூரி ஜடேவின் கூற்றுப்படி, இந்த தாக்குதல் இரானுக்கு எந்த முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை. மாறாக, இரானிய ஆட்சியின் பலவீனத்தை காட்டியுள்ளது. காரணம், இஸ்ரேலுக்குள் எந்த இலக்குகளையும் தாக்கவில்லை” என்று கூறுகிறார் அவர்.

இது இரானில் உள்ள சில மக்களிடையே ஏளன மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.

இரான் "உளவியல் போர்" என்று அழைக்கும் அந்த தாக்குதலை தொடர்ந்திருந்தால், இன்னும் நிறைய சாதித்திருக்கும் என்று நம்புகிறார் ஜடேஹ்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், The rubble of a destroyed building lies next to Iran's consulate in Damascus on 1 April 2024

படக்குறிப்பு, ஏப்ரல் 1 அன்று டமாஸ்கஸில் இரான் தூதரகம் மீது நடந்த தாக்குதல்

டெல் அவிவ் பல்கலைக் கழகத்தில் உள்ள மோஷே தயான் மையத்தின் மத்திய கிழக்கு ஆய்வு ஆராய்ச்சியாளரான டாக்டர் எரிக் ருண்ட்ஸ்கி, இஸ்ரேல் தீவிரமான எச்சரிக்கை நிலையை அறிவித்ததன் மூலம் தோல்வியடைந்துள்ளதாக கூறுகிறார். இது இஸ்ரேலியர்கள் மத்தியில் பதற்றத்தை தூண்டிவிட்டதாகவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நிகழும் என்று இஸ்ரேலியர்கள் பலர் அஞ்சுவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது அதிக சக்தி வாய்ந்தவராக தன்னை உணர்கிறார் என்று ஜடேஹ் கூறுகிறார்.

சனிக்கிழமைக்கு முன்னர் பல தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை பெற்றுக்கொண்டிருந்த இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவுகளை மீண்டும் நிறுவிக்கொள்ள இந்தத் தாக்குதல் உதவியுள்ளது.

இந்த தாக்குதலால் இஸ்ரேலியர்களுக்கு சில ஆதாயங்கள் இருந்தாலும், வேறு வழிகளில் அவர்கள் சிலவற்றை இழந்ததாக இஸ்ரேலிய ஆய்வாளர் கூறுகிறார்.

இந்த தாக்குதல், மத்திய கிழக்கின் அதிகார இயக்கத்தை இஸ்ரேல் அங்கீகரிக்கத் தவறியதையும், இரான் அதன் எல்லைக்குள் தாக்குவதைத் தடுக்க முடியாத இயலாமையையும் நிரூபித்து விட்டதாக அவர் நம்புகிறார்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மீண்டும் நட்பு நாடுகளின் ஆதரவு

இஸ்ரேலிய ஆராய்ச்சியாளர் எரிக் ருண்ட்ஸ்கியும் இரானின் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதாயம் இருப்பதாக நம்புகிறார். பல மாத முரண்பாடுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது இஸ்ரேல் மேற்குலகத்தின் ஆதரவை பெற்று வருவதால், இது அரசியல் ரீதியாக ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும் என்று அவர் கூறுகிறார்.

திடீரென்று இந்த நாடுகளுடன் ஏற்பட்ட பதற்ற சூழலுக்கு பிறகு, மீண்டும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார் அவர்.

இதற்கு நேர்மாறாக, இரானிய ஆய்வாளர் அலி நூரி ஜடேஹ், தெஹ்ரான் அரசியல் ரீதியாக உள்நாட்டிலும் சரி, வெளியிலும் தோற்றுவிட்டதாக நம்புகிறார்.

அது அண்டை நாடுகளின் ஆதரவை இழந்துவிட்டதாகவும், எந்த நாடும் இரானோடு இல்லை என்றும் கூறுகிறார் அவர். அமெரிக்காவுடனான நேரடிப் போருக்கு இரானை இழுக்க சில தரப்பிலிருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இரண்டு ஆய்வாளர்களும் இரு நாடுகளிலும் நிலவிவரும் உள்நாட்டு அழுத்தங்களை ஒப்புக்கொள்கின்றனர்.

இஸ்ரேலுக்குள் பெரும் கவலை நிலவுவதாக ருண்ட்ஸ்கி சுட்டிக்காட்டுகிறார். காஸாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதில் சமீபத்திய முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில், உள்நாட்டு அரசியலிலும் பிரச்னைகள் நிலவி வருவதால் நாட்டிற்குள் கோபம் அதிகரித்து வருவதாக அவர் கூறுகிறார்.

மேலும், இரானிய உச்சபட்ச தலைவரான அலி காமேனியும் மக்களிடம் இருந்து மட்டுமின்றி, தனது ஆட்சியின் கீழ் உள்ள முக்கிய நபர்களிடமிருந்தும் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறார் என்றும் ஜடேஹ் நம்புகிறார்.

"அல்-குட்ஸ் படைப்பிரிவின் ஏழு தலைவர்களை இஸ்ரேல் கொன்ற பிறகு இரானிய புரட்சிகர ஆயுதப்படை காவல் படையிடம் இருந்து அழுத்தம் உள்ளது. அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர்."

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்களது தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் இஸ்ரேல் மீதான தாக்குதல் என்று இரான் கூறியுள்ளது.

இரானின் தீவிர எச்சரிக்கை

பிபிசி அரபிக் சேவையிடம் பேசிய இராணுவ மற்றும் மூலோபாய நிபுணரும், பெய்ரூட்டில் உள்ள மூலோபாய ஆய்வுகளுக்கான மத்திய கிழக்கு மையத்தின் இயக்குநருமான லெபனானின் ஓய்வுபெற்ற ஜெனரல் ஹிஷாம் ஜாபர், ‘இந்த தாக்குதல் குறித்து ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்பதே” என்று கூறியுள்ளார்.

இரண்டு வாரமாக நீடித்து வந்த "உளவியல் போர்" இஸ்ரேல் "அச்ச நிலையில்" இருந்த சமயத்தில் வான்வழித் தாக்குதலுக்கு வழிவகுத்தது என்று கூறுகிறார் அவர்.

இது உளவியல் மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.

இரானின் இந்த நடவடிக்கை, இஸ்ரேலுக்குள் எந்தளவு ஆழத்தை அடைய முடியும் என்பதை பார்க்கவும், இஸ்ரேலிய வான் பாதுகாப்பின் தயார் நிலையை சோதிக்கவும் அதன் திறனை நிரூபிக்கும் வகையில் இரான் அனுப்பிய "நெருப்புடன் கூடிய செய்தி" என்று விவரிக்கிறார் ஜாபர்.

சமீப காலமாக "மூலோபாய பொறுமை கொள்கை" என்று அழைக்கக் கூடிய கொள்கையை பின்பற்றி வருவதை தொடர்ந்து, இந்த தாக்குதல் இரான் அரசியல் ரீதியாக இழந்த கௌரவத்தை மீண்டும் பெற வழிவகுத்து கொடுத்துள்ளதாகவும் அவர் நம்புகிறார்.

இஸ்ரேலிய வான் பாதுகாப்பைக் குழப்புவதற்காக இரான் பெரிய எண்ணிக்கையிலான ட்ரோன்களை ஏவியது என்றும் லெபனான் இராணுவ நிபுணர் நம்புகிறார்.

இஸ்ரேலின் அயர்ன் டோமால் மட்டும் அனைத்து ஏவுகணைகளையும் தடுக்க முடியாது என்றும், மத்திய கிழக்கில் உள்ள தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளும் அதற்கு உதவ வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இஸ்ரேல் ராணுவ ரீதியாக பதிலடி தாக்குதல் நடத்த நினைத்தால், அதனுடைய ஏவுகணையை கொண்டு இரானின் முக்கிய நகரத்திற்குள் தாக்குதல் நடத்த முடியும். ஆனால், அதற்கு இரான் கொடுக்கும் பதில் தாக்குதலின் காரணமாக அதனால் அதற்கு மேல் முன்னேற முடியாது என்கிறார் ஜாபர்.

மேலும், "இஸ்ரேலிய விமானங்களால் இரான் மீது துல்லியமாக குண்டு வீச முடியும். ஆனால் அவை இரான் எச்சரிக்கை விடுத்துள்ள அரபு நாடுகளின் மீது பறக்க வேண்டும் அல்லது அமெரிக்கா அனுமதிக்க மறுக்கக் கூடிய அதன் இராணுவ தளங்களில் இருந்து புறப்பட வேண்டும்" என்கிறார் அவர்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், ABEDIN TAHERKENAREH / EPA

படக்குறிப்பு, சிரியாவில் உள்ள இரானிய தூதரகத்தில் நடந்த தாக்குதலுக்கு பிறகு தெஹ்ரானில் நடைபெற்ற போராட்டம்

போக்கை மாற்றுதல் மற்றும் நம்பிக்கையை மீட்டெடுத்தல்

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ், இரானுடன் ஒப்பிடும்போது இந்த தாக்குதல்களினால் இஸ்ரேலே அதிக லாபம் ஈட்டியுள்ளது என்று வாதிடுகிறார்.

இரானின் தாக்குதல்கள் இஸ்ரேலில் குறிப்பிடத்தக்க சேதத்தையோ அல்லது உயிரிழப்புகளையோ ஏற்படுத்தவில்லை என்றும், தற்போது முழு மேற்கு நாடுகளும் இஸ்ரேலை ஆதரிக்கின்றன என்றும் அவர் விளக்குகிறார்.

ஆயுதங்கள், உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவி ஆகியவற்றின் அடிப்படையில் இஸ்ரேலுக்காக மேற்கத்திய ஆதரவைத் திரட்ட அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

இஸ்ரேலுக்காக ஆதரவைத் திரட்டுவதற்கு G7 நாடுகளின் அவசர உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததன் மூலம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டை பாதிக்கப்பட்ட நாடாக சித்தரிக்கிறார் என்று கெர்ஜஸ் கூறுகிறார்.

மேலும், "இதன் மூலம் காஸாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு மற்றும் கொடூரமான நிகழ்வுகளில் இருந்து தற்காலிகமாக கவனத்தை திசைதிருப்பிய பிறகு நெதன்யாகு அரசியல் ரீதியாக ஆதாயம் பெறுவார்" என்று கூறுகிறார் அவர்.

ஒரு காலகட்டத்தில் இந்நாடுகள் இஸ்ரேல் காஸாவில் 'அட்டூழியம்' செய்துள்ளது என்று விமர்சித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கம், மீண்டும் அவர்களுடனான உறவை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்று குறிப்பிடுகிறார்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம், Amir Cohen / Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலுக்குள் இரானிய ஏவுகணைகள் நுழையாமல் தடுத்த இஸ்ரேல் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம்

'இஸ்ரேலுக்கு மூலோபாய இழப்பு'

ஆனால் கெர்ஜஸ் இஸ்ரேலுக்கு ஏற்படும் மூலோபாய இழப்பு குறித்தும் பேசுகிறார். அது நாட்டின் பாதிப்பை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

இஸ்ரேலை எதிர்ப்பதற்கான தனது விருப்பத்தை அதன் மக்கள், நட்பு நாடுகள் மற்றும் எதிரிகளுக்கு நேரடியாக காட்டுவதன் மூலம் இரான் அரசியல் ரீதியாக ஆதாயம் அடைகிறது என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இரானின் பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதன் மூலம், இஸ்ரேல் தனது மேற்குலக நட்பு நாடுகளின் உதவி இல்லாமல் தன்னைத் தானே தனியாளாக பாதுகாத்து கொள்ள முடியாது என்பது நிரூபணம் ஆகியிருப்பதாக நம்புகிறார் கெர்ஜஸ்.

சமீபத்தில் இரானுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களில் இஸ்ரேலின் முக்கிய குறிக்கோளே, இரான் பலவீனமாக இருப்பதாகவும், மோதலை எதிர்கொள்ளத் துணியவில்லை என்றும் காட்டுவதே ஆகும். ஆனால், அவரை பொறுத்தவரை களத்தில் நடந்த தாக்குதல்கள் இந்த கருத்தை சிதைத்துவிட்டன என்று கூறுகிறார்.

இரு நாடுகளும் அடுத்தடுத்த நடவடிக்கைக்கு தீவிரமாக தயார் நிலையில் உள்ளதால், இந்த பகுதியே புயலுக்கான அறிகுறியுடன் காத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார் அவர்.

மேலும் இப்பகுதி அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாக விளிம்பில் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)