கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன?

பட மூலாதாரம், SPORTZPICS
வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்.
38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம்.
ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது.
மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது.
டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது.
ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள்
சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார்.
இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.

பட மூலாதாரம், SPORTZPICS
சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன?
சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார்
ஆர்சிபி கொடுத்த பதிலடி
ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர்.
இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம்.
சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன.
ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.
ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின.
டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை.
சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

பட மூலாதாரம், SPORTZPICS
ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட்
ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது.
முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார்.
பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர்.
கிளாசன் சிக்ஸர் மழை
2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கடைசி வரை போராடியது பெருமை
ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்
ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார்.
லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












