இரான் சிறைபிடித்த கப்பலில் உள்ள 4 தமிழர்கள் யார்? தற்போதைய நிலை என்ன?

எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம், MSC

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

இரான் சிறைபிடித்த கப்பலில் இருக்கும் இந்தியர்களை விரைவில் மீட்க வேண்டும் என்று அவர்களின் குடும்பங்கள் கோருகின்றனர். இந்திய வெளியுறவுத் துறையின் கோரிக்கைக்கு இணங்க கப்பலில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு ஒரு மணி நேரம் செல்போன் அனுமதி திங்கள்கிழமை மாலை வழங்கப்பட்டது.

இந்தியா நோக்கி வந்துக் கொண்டிருந்த சரக்கு கப்பலை நடுக்கடலில் இரான் கடந்த 13ம் தேதி சிறைபிடித்தது. அந்தக் கப்பலில் சிக்கியுள்ள 25 மாலுமிகளில் 17 பேர் இந்தியர்கள், அதில் நான்கு பேர் தமிழர்கள். இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையில் மோதல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலிய தொழிலதிபருடன் தொடர்புடைய இந்த கப்பலை இரான் சிறைப்பிடித்துள்ளது. போர் சூழலில் சிறைபிடிக்கபட்டிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர வேண்டும் என்று அவர்களின் குடும்பங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கப்பலில் உள்ள தமிழர்களின் நிலை என்ன?

கப்பலில் சிக்கியுள்ள தமிழர் ஒருவரின் சகோதரர் மைக்கேல், பிபிசி தமிழிடம் பேசும் போது, “நேற்று ஒரு மணி நேரம் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. எனது சகோதரனுடன் பேசினோம். துன்புறுத்தல்கள் எதுவும் இல்லை. கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, வழக்கமாக என்ன நடவடிக்கைகள் இருக்குமோ அவை நடைபெற்று வருகின்றன. உணவுப் பொருட்கள் போதிய அளவு உள்ளன. கப்பல் முழுவதும் இரானின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. யாரிடமும் செல்போன், லேப்டாப் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை.

இராக்கிலிருந்து இந்தியாவில் மும்பை அருகே ஜவஹர்லால் நேரு துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த கப்பல், அபுதாபியை தாண்டிய பிறகு இரானால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இரானுக்கு நல்ல உறவுகள் இருப்பதால் தான் அவர்களுடன் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது. போர் அல்லாத சூழலில் இப்படி நடந்திருப்பதால் அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை இல்லை. ஆனால் இப்போது நிலைமைகள் அப்படி இல்லை. 17 பேரையும் விடுவிப்பது குறித்து அரசு உறுதியளிக்க வேண்டும், எப்படி திருப்பி கூட்டி வரப் போகிறார்கள் என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் ” என்று கூறுகிறார்.

எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம், STRAIT OF HORMUZ

படக்குறிப்பு, ஹெலிகாப்டரில் இருந்து எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பல் மீது துருப்புகள் தாக்குதல் நடத்தும் காட்சிகள்

28 வயதான அவரது சகோதரர் மெக்கானிக்கல் பொறியியல், பின்பு கடல்சார் பொறியியல் படித்துள்ளார். ஐந்து வருடங்களாக கப்பலில் பணிபுரிந்து வருகிறார். ஜனவரி மாதம் இறுதியில் தமிழ்நாடு வந்திருந்த அவர், பிப்ரவரியில் இந்த கப்பல் பயணத்தை தொடங்கினார்.

தூத்துக்குடி ஆலந்தலை கிராமத்தை சேர்ந்தவரும், புன்னக்காயல் கிராமத்தை சேர்ந்தவரும் இந்த கப்பலில் உள்ளனர். மேலும் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவரும், கடலூரை சேர்ந்த மற்றொருவரும் என நான்கு தமிழர்கள் உள்ளனர். இவர்களை மீட்க வேண்டும் என்று தூத்துக்குடி மாலுமிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தது.

மாலுமிகளின் குடும்பங்கள் தமிழக அரசை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர்.

வெளிநாடுவாழ் தமிழர்கள் நல ஆணைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், “கப்பலில் உள்ள தமிழர்களில் இரண்டு பேர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள், ஒருவர் கடலூர், மற்றொருவர் மன்னார்குடியை சேர்ந்தவர். இதில் கடலூரை சேர்ந்தவருடன் குடும்பத்தினரால் இன்னும் தொடர்புக் கொள்ள இயலவில்லை. இந்த விவகாரம் குறித்து வெளியுறவுத்துறையின் இந்தியன் மிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். நேற்று ஒரு மணி நேரம் செல்போன் மூலம் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

கேரளாவை சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேரும் இந்த கப்பலில் சிக்கியுள்ளனர்.

எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம், MSC

படக்குறிப்பு, போர்த்துகீசிய கொடியுடன் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பல், இஸ்ரேலிய பணக்காரர் இயால் ஓஃபருடன் தொடர்புடையது.

கப்பல் எங்கு கைப்பற்றப்பட்டது?

அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் இருந்து 50 மைல் (80 கி.மீ.) தொலைவில் எம்.எஸ்.சி ஏரிஸ் (MSCAries) என்ற கப்பலை இரானிய சிறப்புப் படையினர் கைப்பற்றினர். இந்த தகவல் அந்த கப்பல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்த்துக்கீசிய கொடியுடன் மும்பை அருகே ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த கப்பல், இஸ்ரேலிய பணக்காரர் இயால் ஓஃபருடன் தொடர்புடையது. இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு இந்த கப்பலை இரான் கைப்பற்றியுள்ளது.

கடைசியாக உள்ள கண்காணிப்பு தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரக கடற்கரையில் எம்.எஸ்.சி. ஏரிஸ் கப்பல், 18 மணிநேரத்திற்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி சென்றதைக் காட்டியது. அதன்பின் அதன் கண்காணிப்புத் தரவு முடங்கியதாகத் தெரிகிறது. இப்பகுதியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களில் இத்தகைய முடக்கம் வழக்கமானது.

தற்போது இந்த கப்பல், இரானின் பந்தர் அப்பாஸ் கரைக்கு அருகில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பலை இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) கடற்படைக் கிளை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

கப்பலை சிறைபிடித்தது யார்?

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) கடற்படைக் கிளை எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பலைக் சிறைபிடித்துள்ளதாக, அந்நாட்டின் அரசு செய்தி ஊடகமான இர்னா தெரிவித்துள்ளது. அக்கப்பல், “இஸ்ரேலுடன் தொடர்புடையது" என்றும் அது தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "இரானிய புரட்சிகர காவலர் படையை உடனடியாக பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, இரானுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இதுதொடர்பாக, X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், அந்த சரக்குக் கப்பல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினருக்குச் சொந்தமானது எனத் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டிலிருந்து அப்பிரதேசத்தில் பல கப்பல்களை இரானிய படைகள் சிறைபிடித்துள்ளன.

எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம், Dr. S. Jaishankar / X

படக்குறிப்பு, இந்த விவகாரம் குறித்து இந்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் - அப்துல்லா ஹியனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறையின் நடவடிக்கைகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் - அப்துல்லா ஹியனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த உரையாடலுக்கு பின் இரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கப்பலில் உள்ள 17 இந்தியர்களின் நிலைமை குறித்து ஜெய்சங்கர் கவலை தெரிவித்ததாகவும், உதவி கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. "சிறைப்பிடிக்கப்பட்டுள்ள கப்பலின் விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம், விரைவில் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், விரைவில் சிக்கியுள்ள குழுவினரை சந்திக்கக் கூடும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது X பக்கத்தில், “எம் எஸ் சி ஏரிஸ் கப்பலின் இந்திய குழுவினர் 17 பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்து இரானிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசினேன். பிராந்தியத்தில் நிலவும் நிலைமைகள் குறித்து பேசினேன். நிலைமைகளை தீவிரப்படுத்தாமல், கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன். ” என்று பதிவிட்டார்.

அதே போன்று, இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சருடனும் இந்த விவகாரம் குறித்து பேசியதாக அவர் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்திய தூதரக அதிகாரிகள் கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திக்க வேண்டும் என்று இரானிடம் கோரியிருந்தனர். ‘விரைவில்’ அனுமதி அளிக்கப்படும் என்று இரான் கூறியிருந்தது. கப்பலில் சிக்கியவர்கள் தங்கள் குடும்பங்களுடன் திங்கள்கிழமை பேசினர்.

எம்.எஸ்.சி ஏரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எம்.எஸ்.சி ஏரிஸ் கப்பல் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்க வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை அறிக்கை

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன் கூறுகையில், இந்தக் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் எஸ்டோனியா குடிமக்கள் உள்ளனர்."கப்பலையும் அதிலுள்ள சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க இரானுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்" என்று ஏட்ரியன் வாட்சன் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

"ஆத்திரமூட்டும் நடவடிக்கை இல்லாமல் ஒரு கப்பலைக் கைப்பற்றுவது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய புரட்சிகர காவலர்களால் நடத்தப்பட்ட கடற்கொள்ளை” என அவர் தெரிவித்துள்ளார்.

"இது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். மேலும் இரானை இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க வைக்க எங்கள் கூட்டாளர்களுடன் நாங்கள் பணியாற்றுவோம்" என அவர் கூறியுள்ளார்.

இரான் - இஸ்ரேல் இடையே மோதல் ஏன்?

ஏப்ரல் 1ஆம் தேதியன்று டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக கட்டடத்தில் நடைபெற்ற தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் மூத்தத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலை இரான் குற்றம்சாட்டி வருகிறது.

டமாஸ்கஸ்-ல் உள்ள இரானிய தூதரகத்தை தாக்கிய சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தனது இரான் நேரடி தாக்குதல் நடத்தியது. சனிக்கிழமை இரவு முதல் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி இரான் தாக்குதல் தொடுத்துள்ளது. இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சிக்கலான உறவுகளின் சமீபத்திய அத்தியாயம் இது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)