சென்னையில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் பற்றி அதிகாரிகள் கூறுவது என்ன?

திமுக,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு வரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் தலைமையில் இயங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், சென்னையில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்த அதிகாரிகள், அதற்கு சீல் வைத்துள்ளனர்.
ஜாபர் சாதிக் எங்கே? டெல்லியில் கைதான 3 பேருக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் கூறுவது எனன? திமுகவில் அவர் என்ன பொறுப்பு வகித்து வந்தார்?
டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல்
டெல்லியில் ஒரு குடோன் வைத்து இயங்கிக்கொண்டிருந்த கும்பலை சமீபத்தில் டெல்லி சிறப்பு போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இந்தக்கடத்தல் கும்பல், சர்வதேச அளவில், பல ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்தப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து பிபிசியிடம் பேசிய ஒரு அதிகாரி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளே தங்களுக்கு தகவல் கொடுத்ததாகக் கூறினார்.
“நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள், இந்தியாவில் இருந்து சூடோபெட்ரைன்(pseudoephedrine) என்ற போதைப்பொருள் கிலோக்கணக்கில் அவர்களின் நாட்டிற்கு அனுப்பப்படுவதாகக் கூறினர். அதுவும் சத்து மாவு, தேங்காய் பொடி உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து இந்த போதைப்பொருளை அவர்களின் நாட்டிற்கு இந்தியாவின் டெல்லியில் இருந்து அனுப்புவதாகத் தகவல் கொடுத்தனர்,”என்றார் அந்த அதிகாரி.
தகவலின் பேரில், சுமார் 30 நாட்களுக்கும் மேலாக, விமான நிலையத்திற்கு வந்து செல்வோர், பொருட்களை ஏற்றுமதி செய்வோர், மற்றும் அவர்களின் சந்தேகிக்கும் வகையில் இருப்பவர்களை கண்காணித்து வந்ததாகக் கூறினார் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் உள்ள அந்த அதிகாரி.

பட மூலாதாரம், HANDOUT
அப்படி கண்காணித்து வந்தபோது, மேற்கு டெல்லியில் உள்ள ஒரு குடோனில் இருந்து போதைப்பொருள்கள் கலவை தயார் செய்யப்பட்டு, உணவுப்பொருள்கள், சத்துமாவு உள்ளிட்டவையுடன் கலந்து ஏற்றுமதி செய்வது தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.
“சுமார் ஒரு மாதம் கண்காணித்ததில், உறுதியான தகவலின் அடிப்படையில், அந்த குடோனை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சோதனை செய்தோம். சோதனையின்போது, போதைப்பொருளை பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்,”என்றார் அந்த அதிகாரி
கைது செய்யப்பட்டவர்களில் முகேஷ் மற்றும் முஜ்பீர் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், அசோக் குமார், விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் சுமார் 50 கிலோ சூடோபெட்ரைன் கைப்பற்றப்பட்டுள்ளது. சூடோபெட்ரைன் என்ற இரசாயனம், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படக் கூடியது.
உலகளவில், மெத்தாம்பெட்டமைன் என்கிற போதைபொருளுக்கு சந்தை மதிப்பு மிகவும் அதிகம். போலீசாரின் கூற்றுப்படி, இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், ஒரு கிலோ சுமார் ரூ 1.5 கோடியில் இருந்து ரூ 2 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டாரா ஜாபர் சாதிக்?

பட மூலாதாரம், arjaffersadiq/X
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், திமுக சென்னை மேற்கு மண்டல அயலக அணியின் முன்னாள் அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் உத்தரவின் பேரில் அவர்கள் செயல்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், “கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை அவர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தியிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் அவருக்கு துணையாக இருந்ததும் தெரியவந்துள்ளது,”என்றார்.
இதுதொடர்பாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக்கிற்கு டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்? அவர் எங்கே?

ஜாபர் சாதிக் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பிறகு, அந்த வீட்டை சீல் வைத்துவிட்டு அதிகாரிகள் வெளியேறினர்.
தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை போதைப்பொருள கடத்தல் தடுப்புப் பிரிவும், காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.
ஜாபர் சாதிக்கை திமுக நீக்க என்ன காரணம்?
ஜாபர் சாதிக் நீக்கம் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்க வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அவர் கட்சிக்கு என்ன அவப்பெயர் ஏற்படுத்தினார் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, திமுக,வைப் பொறுத்தவரையில், எப்போதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்போது, முதலில் தற்காலிகமாக நீக்கிவிட்டு, உரிய கால அவகாசத்திற்கு பிறகு, நிரந்தரமாக நீக்கப்படுவர். அரிதாகவே, இவ்வாறு முழுமையாக கட்சியில் இருந்து நீக்குவார்கள்.
“அவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்ததாலேயே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது இப்போதுதான் தெரியவந்தது. தெரியவந்ததும், அவரை நீக்கினோம்,” என பிபிசியிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ். பாரதி கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்க, பிபிசி சார்பில் ஜாபர் சாதிக்கை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
திரைத்துறையில் ஜாபர் சாதிக்

பட மூலாதாரம், arjaffersadiq/X
ஐஎம்டிபி அளிக்கும் தகவலின்படி, ஜாபர் சாதிக், வெற்றிமாறன் எழுதி, அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதைத் தவிர, இந்திரா, மங்கை மற்றும் மாயவலை ஆகிய படங்களையும் அவர் தயாரித்துள்ளார். இதில், மங்கை படத்தின் முதல் பாடலை இயக்குனர் கிருத்திகா உதயநிதி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
தமிழ்த் திரையுலகில் ஜாபர் சாதிக் தயாரித்து வந்த படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












