சூடானில் புதைந்து கிடக்கும் தங்கம், வரமாக இருப்பதற்குப் பதில் சாபமாக மாறியது ஏன்?

சூடான் உள்நாட்டு பிரச்சனை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிபிசி முண்டோ
    • பதவி, பிபிசி

கிழக்கு ஆப்ரிக்காவில் பரந்து விரிந்து கிடக்கும் நாடான சூடான், கடந்த வார இறுதியில் கடுமையான சூழலை எதிர்கொண்டது. அங்கு வன்முறை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த வார இறுதியில் நிகழ்ந்த மோதலில் 180க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், 1800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சூடான் ராணுவத்துக்கு துணை ராணுவத்துக்கும் (RSF) இடையேயான மோதலே இந்த இறப்புகளுக்கு காரணம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2019 ஏப்ரலில் உமர் அல் பஷீரின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தொடங்கிய அரசியல் போராட்டங்கள், பதற்றங்கள் மற்றும் நெருக்கடிகள் போன்றவை இன்று தீவிரமடைந்து மோதல்களாக மாறியுள்ளன.

ஜெனரல்கள் சபையால் ஆளப்படும் சூடானில் இரு ராணுவத் தலைவர்களுக்கு இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாததும் நெருக்கடிக்கு ஒரு காரணம்.

அவர்களில் ஒருவர் சூடானின் தற்போதைய அதிபர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல் புர்ஹான். இரண்டாவது நபர் அனைவராலும் ஹெமெட்டி என்று அழைக்கப்படும் முகமது ஹம்தான் டகாலோ. ஹெமெட்டி தற்போது துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸின் தலைவராக தொடர்கிறார்.

சூடானில் இந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னால் உள்ள அனைத்து காரணங்களிலும், ஒரு காரணி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் அதிக அளவில் தங்கம் இருப்பு உள்ள பகுதிகளில் சூடானும் ஒன்று.

2022 ஆம் ஆண்டில் மட்டும் சூடான் அரசு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 20,511 கோடி) மதிப்புள்ள 41.8 டன் தங்கத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்று அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சூடான் உள்நாட்டு பிரச்சனை

பட மூலாதாரம், Getty Images

ஆர்எஸ்ஃப் கைகளில் தங்கச் சுரங்கங்கள்

சூடானில் அதிகளவு தங்கம் எடுக்கப்படும் சுரங்கங்கள் பலவும் துணை ராணுவத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ளன. சூடான் மட்டுமல்லாது அதன் அண்டை நாடுகளிலும் தங்கம் வெட்டி எடுக்கப்படுவது, விற்பனை ஆகியவற்றில் ஆர்எஸ்எஃப் முக்கிய பங்கு வகிக்கிறது.

“பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டுவரும் சூடானின் முக்கிய வருமான ஆதாரமாக தங்கச் சுரங்கங்கள் மாறியுள்ளன.” என்று பிபிசியிடம் கூறுகிறார் சூடான் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவரான ஷெவிட் வோல்டெமிக்கேல்

“ ஆர்.எஸ்.எஃப்-ன் வருமானத்தில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுதான் இங்கு மிக முக்கியமான விஷயம். ராணுவத்திற்கு இந்த விஷயத்தில் பல சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

மறுபுறம், அதிகளவு சுரங்கங்கள் காரணமாக, சுற்றியுள்ள பகுதிகளில் அழிவுகரமான விளைவுகள் நடைபெறுகின்றன. இங்கு சுரங்க மேற்கூரைகள் இடிந்து விழுந்து பலர் இறக்கின்றனர். மறுபுறம், பாதரசம் , ஆர்சனிக் உலோகங்கள் போன்றவற்றால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

சாபமாக மாறிய வரம்

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து சூடான் 1956ல் சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர், நாட்டின் பிராந்தியங்களின் எல்லைகளை சரிசெய்வதில் சர்ச்சைகள் வெடித்தன.

அந்த நேரத்தில், சூடானின் முக்கிய வருமானம் எண்ணெய் எடுப்பதன் மூலம் கிடைத்து வந்தது. இருப்பினும், 1980 களில், தென் பிராந்தியங்களில் சுதந்திரத்திற்கான இயக்கம் தொடங்கியது. இது வேகமாக அதிகரித்தது. இதன் விளைவாக 2011 இல் தெற்கு சூடான் குடியரசு என்ற புதிய நாடு உருவானது.

தெற்கு சூடான் உருவான பின்னர் சூடான் தனது எண்ணெய் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கை இழந்தது. வருமானம் குறைந்ததால், சூடானின் பல்வேறு இனக்குழுக்கள், போராளிகள் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கு இடையே பதற்றங்கள் தொடங்கின.

2012 ஆம் ஆண்டில், வடக்கு சூடானில் உள்ள ஜெபல் அமீர் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் தங்கம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது நாட்டின் நிதி நெருக்கடிகளை சமாளிக்க உதவுக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சூடான் உள்நாட்டு பிரச்சனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது ஹம்தான் டகாலோ

“கடவுள் சூடானுக்கு வழங்கிய பரிசாக இந்த தங்க வளம் பார்க்கப்பட்டது. ஏனென்றால், தெற்கு சூடான் உருவானதன் மூலம் சூடான் அவர்களின் நிறைய வருமானத்தை இழந்தனர் ” என்று டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் சூடான் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவரான அலெக்ஸ் டி வால் பிபிசியிடம் கூறினார்.

ஆனால், அந்த வரம் சில காலங்களில் சாபமாக மாறியது. “ஏனென்றால், இந்த தங்க வளம் கொண்ட சுரங்கங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பல்வேறு அமைப்புகளும் போராளிகளும் மோதிக்கொள்ள தொடங்கினர்”என்று டி வால் கூறினார்.

சுரங்கங்களில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, லட்சக்கணக்கான இளைஞர்கள் அப்பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக உள்ளூர் பதிவுகள் காட்டுகின்றன என்று டி வால் கூறினார்.

“அப்படிச் சென்றவர்களில் சிலர் தங்கத்தால் பணக்காரர்களாக ஆனார்கள், மற்றவர்கள் சுரங்க கூரைகள் இடிந்து இறந்தனர். மேலும் சிலர்பாதரசம், ஆர்சனிக் மாசுபாட்டால் இறந்தனர்” என்று அவர் கூறினார்.

2021 ஆம் ஆண்டில், மேற்கு கோர்டோஃபான் மாகாணத்தில் தங்கச் சுரங்கத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 31 பேர் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி மற்றொரு சுரங்க கூரை இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

சுற்றுச்சூழல் மாசுபாடு

2020 ஆம் ஆண்டில், சூடான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தங்கச் சுரங்கங்களுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளின் நீர் மாதிரிகளை பரிசோதனை செய்தது. இதில், பாதரசம் 2004 பிபிஎம் மற்றும் ஆர்சனிக் 14.23 பிபிஎம் என்ற அளவுகளில் இருப்பது தெரியவந்தது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, பாதரசம் 1 ppm ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது , இதேபோல் ஆர்சனிக் 10 ppm ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.

சூடான் உள்நாட்டு பிரச்சனை

பட மூலாதாரம், Getty Images

கார்ட்டூமில் உள்ள பஹ்ரி பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சட்டப் பேராசிரியர் எல் ஜைலி ஹமுதா சலே கூறுகையில், “இந்த உலோகங்கள் தண்ணீரில் உள்ளதான் காரணமாக பிரச்சனை ஒரு சுகாதார பேரழிவாக மாறியுள்ளது” என்றார்.

"சூடானில் 40,000 க்கும் மேற்பட்ட தங்கச் சுரங்கங்கள் உள்ளன. இங்கு சுமார் 60 தங்க சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. தெற்கு கோர்டோஃபனில் 15 நிறுவனங்கள் செயல்படுகின்றன. எனினும், இங்கு யாரும் சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை," என்று அவர் கூறினார்.

மறுபுறம் இங்கு இனவாத மோதல்களும் இடம்பெற்றன. அல் பஷீருக்கு விசுவாசமாக இருப்பதாக கூறிக்கொள்ளும் பழங்குடியின தலைவர் மூசா ஹலீல் தலைமையில் இங்கு வெடித்த மோதல்களில் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்த மோதல்களுக்குப் பிறகு, ஹலீல் சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அங்கு தங்கம் தோண்டத் தொடங்கினார். இந்த தங்கத்தை அவர் கார்ட்டூமில் உள்ள அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வந்தார்.

2017 இல், ஹலீல் மீது படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் சூடான் அரசாங்கத்தால் சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது ஹலீலை ஆதரித்த ஹெமெட்டி, அந்த தங்கச் சுரங்கங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

அப்போது, நாட்டின் மொத்த ஏற்றுமதியில், தங்கத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும், 40 சதவீதம் வரை இருந்தது.

"தங்கம் ஹமெட்டியை நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவராக்கியது. மறுபுறம், சாட் மற்றும் லிபியாவின் எல்லைகளிலும் அவர் கட்டுப்பாட்டைப் பெற்றார்," என்று தேவால் கூறினார்.

சூடான் உள்நாட்டு பிரச்சனை

பட மூலாதாரம், Getty Images

ஜனநாயகம் எப்போது மீண்டும் திரும்பும்?

எனினும், 2019இல் உமர் அல்- பஷிர் அரசாங்கம் ராணுவ புரட்சி மூலம் கலைக்கப்பட்டது. நாட்டின் இரு ராணுவப் படைகளையையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹெமெட்டி மற்றும் அல் புர்ஹான் ஆகியோரின் கைகளுக்குள் நாடு சென்றது.

“ஆர்எஸ்எஃப் தங்கச் சுரங்கங்களைக் கட்டுப்படுத்தும் நிலைக்குச் சென்றது, 70,000 ஜவான்கள் மற்றும் 10,000 டிரக்குகளுடன் நாட்டை இயக்கியது. கார்டூம் மற்றும் பிற நகரங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம்ஆர்எஸ்எஃப்க்கு மட்டுமே இருந்தது ” என்று டி வால் கூறினார்.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாக இரு தலைவர்களும் அறிவித்தனர்.

“ இந்த கூட்டு ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, தங்கள் வசமுள்ள தங்கச் சுரங்கங்களின் கட்டுப்பாட்டை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க இரு தலைவர்களும் முடிவு செய்தனர் ”

“கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தங்கச் சுரங்கங்களின் கட்டுப்பாட்டை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் ஒப்படைக்க இரு தலைவர்களும் முடிவு செய்தனர். ஆனால், ஹமெட்டியின் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அல் புர்ஹான் வட்டாரங்களில் ஆர்எஸ்எஃப் மீதான சந்தேகம் அதிகரித்துள்ளது,” என்று வோல்டெமிக்கேல் தெரிவிக்கிறார்.

இதற்கிடையே, வடக்கு சூடானில் உள்ள தங்கச் சுரங்கங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பலர் முயற்சிக்கின்றனர்.

"இதைக் கொண்டு, அல் புர்ஹான் தலைமையிலான ராணுவம், RSF தன் வசம் வைத்துள்ள அமைதி மற்றும் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் பொறுப்புகளை ஒப்படைக்க விரும்புகிறது. ஆனால், ஹமெட்டி இதற்கு உடன்படவில்லை" என்று வோல்டெமிக்கேல் கூறுகிறார். இருப்பினும், சமீபத்திய வன்முறை மோதல்களுக்குப் பின்னால் வேறு காரணங்கள் உள்ளன.

"இங்கு யார் ஜெயிப்பார்கள் என்று தெரியவில்லை. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பக்கூடும். இதன் மூலம் இரு கோஷ்டிகளும் பேச்சு வார்த்தைக்கு வர வாய்ப்பு உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.