அலட்சியமாகக் களமிறங்கிய சாம்பியனுக்கு கசப்பு மருந்து கொடுத்த துனிசியா

எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம். மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

அழுகையும் ஆனந்தமும் விளையாட்டுப் போட்டிகளில் எப்போதாவதுதான் ஒன்று சேரும். அப்படியொரு தருணம் வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவுக்கு கத்தாரில் அமைந்துவிட்டது.

உலகச் சாம்பியனை வீழ்த்தி வரலாறு படைத்த ஆனந்தத்தில் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதா இல்லை அடுத்த சுற்றுக்குப் போக முடியாமல் போன நிலையை நினைத்து வருந்துவதா என்ற குழப்பத்தில் இருந்தார்கள் துனிசிய ரசிகர்கள்.

டி பிரிவின் கடைசி ஆட்டத்தில் இதுவரை எந்தப் போட்டியிலும் வெற்றி பெறாத துனிசியாவும் இரு போட்டிகளிலும் வென்ற உலகச் சாம்பியனான பிரான்ஸும் மோதின. இந்தப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியா வென்றது. 

போட்டிக்குப் பிறகு துனிசிய ரசிகர்கள் பலர் துக்கமும் அழுகையுமாகக் காணப்பட்டார்கள். போட்டி நடந்து கொண்டிருந்தபோதே மைதானத்தைப் பார்ப்பதை விட்டு, தங்களது செல்போன்களில் ஆஸ்திரேலியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையேயான போட்டியின் முடிவு என்ன என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

டி பிரிவின் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் புள்ளிகள் அடிப்படையில் துனிசியாவுக்கு நாக் அவுட் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. பிரான்ஸும், ஆஸ்திரேலியாவும் இந்தப் பிரிவில் அடுத்த சுற்றுக்குச் செல்கின்றன.

துனிசியா - பிரான்ஸ் போட்டியின் முடிவு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா - டென்மார்க் போட்டியின் முடிவு வந்துவிட்டதால், அப்போதே துனிசிய ரசிகர்களும் பெஞ்சில் இருந்த வீரர்களும் சோர்வடைந்து விட்டதைக் காண முடிந்தது

துனிசியா

பட மூலாதாரம், Getty Images

உலகச் சாம்பியனுக்கு அதிர்ச்சியளித்தது எப்படி?

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 92 ஆண்டுகால வரலாற்றில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. கத்தார் உலகக் கோப்பை போட்டியிலேயே அர்ஜென்டினா அணியை சௌதி அரேபியா அணி வீழ்த்தியதை அந்த வகையில் சேர்க்கலாம். பிரான்ஸை துனிசிய அணி வீழ்த்தியதும் கண்டிப்பாக அதில் இடம்பிடிக்கும்.

பிரான்ஸ் அணி முன்னணி வீரர்களை பெஞ்சில் அமரவைத்துவிட்டு கடந்த இரு போட்டிகளிலும் களமிறங்காத வீரர்களைக் கொண்டே இந்தப் போட்டியைத் தொடங்கியது. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை போட்டியின் முடிவில் அந்த அணி உணர்ந்திருக்கும்.

உலகச் சாம்பியனை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் துனிசிய அணி களமிறங்கியது. 

முதல் பாதியில் கோல் எதுவும் விழாத நிலையில், 58-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி பாக்ஸுக்குள் பந்தைக் கொண்டு வந்து பிரான்ஸின் தடுப்பரண் வீரர்களைத் தாண்டி மிக மெதுவாகவே கோலை நோக்கித் தட்டிவிட்டார் துனிசியாவின் வஹபி காஸ்ரி. அது கோல் கீப்பரைக் கடந்து தரையில் சில நொடிகள் ஓடி கோலுக்குள் புகுந்தது.

துனிசியா

பட மூலாதாரம், Getty Images

இதன் பிறகு பிரான்ஸ் அணி சில நிமிடங்களில் எம்பாப்பே உள்ளிட்ட தனது முன்னணி வீரர்களை களத்துக்குள் இறக்கியது. எம்பாப்பேக்கு கணுக்காலில் வலி இருப்பதால் அவர் மாற்று ஆட்டக்காரராக இருப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துனிசிய ஆட்டத்தின் போக்கைப் பார்த்துவிட்டு அவரை களமிறக்குவதற்கு அணி முடிவு செய்தது.

பிரான்ஸின் முன்னணி வீரர்கள் களமிறங்கியதும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினார்கள் அதுவும் கடைசி இருபது நிமிடங்கள் கோலை நோக்கிய ஷாட்கள் அடுத்தடுத்து அடிக்கப்பட்டன.

பல கார்னர் வாய்ப்புகள் பிரான்ஸுக்கு கிடைத்தன. துனிசியாவின் கோல் பகுதியை தாண்டி பந்து வெளியே வருவதே அரிதானது என்பது போல அதைச் சுற்றியே பந்து பெரும்பாலும் இருந்தது. ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுவிட்டதால், துனிசிய வீரர்கள் 11 பேருமே கோலை பாதுகாக்கும் பணியிலேயே ஈடுபட்டார்கள். பந்து கிடைத்தாலும் அதை பிரான்ஸின் கோலை நோக்கி கொண்டு செல்லும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவில்லை.

90 நிமிடங்கள் முடிந்து, இழப்பீடாக வழங்கப்பட்ட கூடுதல் நேரமும் முடிவதற்கு பத்துப் பதினைந்து நொடிகளே இருந்தன. அந்த நேரத்தில் பிரான்ஸ் அணியின் கிறிஸ்மன் துனிசியாவின் கோலுக்குள் பந்தை அடித்தார். அப்போது துனிசிய வீரர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 

பிரான்ஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் அடுத்த சில நிமிடங்களில், அந்த கோலை அடிப்பதற்கு முன்னதாக கிறிஸ்மன் ஆப்சைடில் நின்று கொண்டிருப்பதை காணொளி நடுவர் மூலம் கண்டறிந்து, அது கோல் இல்லை என கள நடுவர் அறிவித்தார். அத்துடன் போட்டி முடிந்து போனது. துனிசிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

துனிசிய அணிக்காக கோல் அடித்த காஸ்ரி பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். போட்டியின் முடிவு கசப்பும் இனிப்பும் கலந்த உணர்வை அளிப்பதாக போட்டிக்குப் பிறகு அவர் கூறினார்.

மரியாதையுடனும் பெருமையுடன் போட்டியை விட்டு வெளியேறுவதாக அந்த அணியின் பயிற்சியாளர் காத்ரி தெரிவித்தார். 

அரங்கில் இருந்த துனிசிய ரசிகர்கள் பலர் கண்ணீர் வடித்து அழுததை தொலைக்காட்சித் திரைகளில் காண முடிந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: