மெஸ்ஸியை பெரும்பழியில் இருந்து காப்பாற்றிய அர்ஜென்டினா அணி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
வழக்கமாக அர்ஜென்டினா அணியை சரிவில் இருந்து மெஸ்ஸி மீட்பார். பெரும்பாலான போட்டிகளில் இப்படித்தான் நடந்திருக்கிறது. ஆனால் போலாந்துடனான போட்டியில் மெஸ்ஸியை பெரும்பழியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது அர்ஜென்டினா அணி.
இதை இப்படிச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டு முறை பெனால்டி மூலம் கோல் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டவர் என்ற மோசமான பெருமை இந்தப் போட்டியில் அவருக்குக் கிடைத்துவிட்டது.
ஆயினும் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுவதற்கு வழிவகுத்துவிட்டார் என்ற பெரும்பழியில் இருந்து அவரை அர்ஜென்டினா அணி வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மெஸ்ஸி, “பெனால்டியை தவற விட்டதால் எரிச்சலாகிவிட்டது. ஆயினும் எனது தவறுக்குப் பிறகு என் சகாக்கள் வலிமையான ஆட்டத்தைக் காட்டினார்கள்” என்றார்.
“ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்த பிறகு, இந்த உலகக் கோப்பையில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று சௌதி அரேபியாவுடனான தோல்வியைக் குறிப்பிட்டு அவர் பேசினார்.
ஒரு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியுமாக மொத்தம் 3 புள்ளிகளை மட்டுமே வைத்திருந்த அர்ஜென்டினா அணிக்கு போலாந்துடனான போட்டியில் வெற்றி என்பது மிகவும் அவசியமானதாக இருந்தது.
மெஸ்ஸி செய்த தவறுக்குப் பிறகும் அலெக்சிஸ் ஆலிஸ்டர், ஜூலியன் அல்வாரெஸ் ஆகியோரின் கோல்களால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 16 அணிகளைக் கொண்ட நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜென்டினா முன்னேறியிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
மெஸ்ஸி தவற விட்ட கணம்
உலகக் கோப்பை சி பிரிவில் ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருந்தது. எனினும் அர்ஜென்டினா அணிக்கு வெற்றியைத் தவிர வேறெதுவும் அடுத்த சுற்றுக்கு அழைத்துச் செல்லாது என்ற நிலைமை.
போட்டியின் தொடக்கத்தில் இருந்து அர்ஜென்டினா அணி வீரர்கள் போலாந்து அணியின் கோலை நோக்கி சரமாரியான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். மெஸ்ஸி உள்பட முன்கள வீரர்கள் கோல்களை நோக்கி அடித்த பந்துகள் பலவற்றை போலாந்து கோல்கீப்பர் தடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்.
37-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தலையால் கோல் அடிக்க முயன்றபோது போலாந்து கோல் கீப்பரின் கை மெஸ்யின் தலையில் பட்டதால் காணொளி நடுவரின் தலையீட்டில் அர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வழங்கப்பட்டது.
பெனால்ட்டியை கோலாக்குவதில் வல்லவரான மெஸ்ஸியே அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். வலுவாகவும் துல்லியமாகவும் மெஸ்ஸி பந்தை அடித்தார். ஆனால் போலாந்து கோல்கீப்பர் செசஸ்னி அதைப் பாய்ந்து சென்று ஒரு கையால் தடுத்துவிட்டார். அந்த நேரத்தில் மெஸ்ஸி உள்பட அர்ஜென்டினா வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
சமூக வலைத்தளங்களில் மெஸ்ஸியை கேலி செய்யும் பெஸ்ஸி என்று ஒரு ஹேஷ்டேக் வேகமாகப் பரவியது. மெஸ்ஸியின் தவறு பற்றி ஏராளமானோர் விமர்சித்தார்கள்.

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டவர் என்ற மோசமான சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
மெஸ்ஸி இதுவரை சர்வதேசப் போட்டிகளில் 4 முறை பெனால்ட்டி வாய்ப்புகளைத் தவற விட்ட்டிருக்கிறார். கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி அடித்த பெனால்ட்டியை அந்நாட்டு கோல்கீப்பர் ஹேல்டோர்சன் கோல் ஆகாமல் தடுத்துவிட்டார்.
அதே நேரத்தில் உலகக் கோப்பை போட்டிகளில் இரு பெனால்ட்டிகளை தடுத்த மூன்றாவது கோல்கீப்பர் என்ற பெருமையை செசஸ்னி பெற்றிருக்கிறார்.
மெஸ்ஸி தவறு செய்திருந்தாலும், 1986-ஆம் ஆண்டு மாரடோனாவே தனது அணியின் மூன்றாவது ஆட்டத்தில் பெனால்ட்டியை தவற விட்டிருக்கிறார் என்ற புள்ளிவிவரத்தைக் கொண்டு வந்து அவரது ரசிகர்கள் காட்டுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
மெஸ்ஸியை மீட்ட அர்ஜென்டினா
போலாந்துடனான போட்டியில் அர்ஜென்டினா அணி தோற்றுப் போயிருந்தாலோ, கோல் எதுவும் அடிக்க முடியாமல் சமன் செய்திருந்தாலோ அந்தப் பழி நிச்சயமாக பெனால்ட்டியை தவற விட்ட மெஸ்ஸி மீதே வந்து சேர்ந்திருக்கும்.
ஆனால் பெனால்ட்டியை தவறவிட்ட பிறகு மெஸ்ஸியும் அவரது சகாக்களும் அசுர ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஆலிஸ்டர் முதல் கோலை அடித்தார். பெனால்ட்டியை தடுத்த செசஸ்னியின் கைகளுக்கு அப்பால் வலதுபுறமாகச் சென்று கோலுக்குள் புகுந்தது அலிஸ்டர் அடித்த பந்து. கார்னருக்கு அருகேயிருந்து பந்தை ஆலிஸ்டருக்கு தந்து உதவியவர் மொலினா. அந்தக் கணத்தில்தான் அர்ஜென்டினா அணிக்கும் மெஸ்ஸிக்கும் நிம்மதி பிறந்திருக்கும்.
அடுத்ததாக ஜூலியன் ஆல்வரெஸ் 67-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் இரண்டாவது கோலை அடித்தபோது வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. ஃபெர்னாண்டஸ் இந்த கோலுக்கு உதவினார்.
அதன் பிறகும் அர்ஜென்டினாவின் கோல் போஸ்டை சுற்றி அர்ஜென்டினா வீரர்கள் தொடர்ந்து தாக்குதலைத் தீவிரமாக நடத்தினார்கள். ஆனால் போலாந்து வீரர்களும் கோல்கீப்பரும் அவற்றை கோலாக்க விடாமல் தடுத்தார்கள். இறுதியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
அர்ஜென்டினாவின் மிகச் சிறந்த போட்டிகளுள் ஒன்று
சர்வதேச அளவில் அர்ஜென்டினா அணி ஆடிய மிகச் சிறந்த போட்டிகளுள் ஒன்றாக இது இருக்கும் என்று கால்பந்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தப் போட்டியின் புள்ளி விவரங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அர்ஜென்டினா அணி இந்தப் போட்டியில் பந்தை வசமாக்கியிருந்த விகிதம் 74%. மொத்த பாஸ்கள் 868. அவற்றின் துல்லியம் 92%. கோலை நோக்கி அர்ஜென்டினா அடித்த ஷாட்கள் 23. இவற்றில் துல்லியமானவை மட்டும் 12. போலந்து அணியால் 4 ஷாட்களைத்தான் அடிக்க முடிந்தது. அவற்றில் துல்லியமானவை எதுவுமில்லை.
போட்டி முழுவதுமே அர்ஜென்டினா அணியின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கால்பந்து நிபுணர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












