தரையோடு தரையாக மெஸ்ஸி அடித்த ‘நிம்மதி’ கோல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
தொடர்ந்து 36 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் இருந்த ஓர் அணி பலம் குறைந்த அணியுடன் அதிர்ச்சித் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட பதற்றத்தை அர்ஜென்டினாவும் அதன் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியும் தணித்திருக்கிறார்கள்.
வாழ்வா சாவா போட்டியில், மெக்சிகோ அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுவிட்டது. அதில் மிக முக்கியமான முதல் கோலை அடித்து, தான் அணியில் முதன்மையான ஆட்டக்காரராக இருக்கிறேன் என்பதை தனது ரசிகர்களுக்கு நிரூபித்தார் மெஸ்ஸி.
ஆட்டத்தின் 64-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி பகுதிக்கு வெளியே இருந்தபடியே மெக்சிகோ அணியின் வலுவான காப்பரணைத் தாண்டி கோலுக்குள் பந்தை அடித்தார் மெஸ்ஸி.
இந்த கோல் மூலம் 21 உலகக் கோப்பை போட்டிகளில் ஆடி 8 கோல்களை அடித்த மாரடோனாவின் சாதனையை சமன் செய்தார் மெஸ்ஸி.
இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது அர்ஜென்டினா அணி. வரும் புதன்கிழமை போலாந்து அணியுடன் மோதும் கடைசி போட்டி அர்ஜென்டினா அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.
மெஸ்ஸி எங்கே?
மெக்சிகோ அணியுடான போட்டியின் முதல் பாதி வரை நட்சத்திர வீரர் மெஸ்ஸி எங்கே என்று கேட்கும் அளவுக்குத்தான் அவரிடம் பந்து இருந்தது. ஆனால் பிற்பகுதியில் உண்மையிலேயே வாழ்வா சாவா என்ற கட்டத்தை அர்ஜென்டினா அணி எட்டிவிட்டது.
முதல் பாதியில் பல முறை அர்ஜென்டினாவின் கோலுக்கு அருகே மெக்சிகோ வீரர்கள் பந்தைக் கடத்திக் கொண்டு சென்றார்கள். அப்போதெல்லாம் அரங்கில் இருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் பதற்றத்தில் தவித்ததை அவர்கள் எழுப்பிய சத்தத்திலேயே உணர முடிந்தது.
அதுவும் 45-ஆவது நிமிடத்தில் மெக்சிகோ அடித்த ஒரு ப்ரீ கிக் நேராக கோலை நோக்கிச் சென்றபோது பலருக்கு இதயமே நின்று போயிருக்கக்கூடும். ஆனால் அர்ஜென்டினா கோல்கீப்பர் அதை துல்லியமாகக் கைகளால் பிடித்து அர்ஜென்டினா ரசிகர்களுக்கு நிம்மதி தந்தார்.

பட மூலாதாரம், Getty Images
64-ஆவது நிமிடத்தில் டி மரியா கடத்தித் தந்த பந்தை சுமார் 20 மீட்டர் தொலைவில் இருந்து தரையை ஒட்டி, பல மெக்சிகோ வீரர்களின் கால்களை ஒட்டியபடி பந்தை கோலுக்குள் அடித்தார் மெஸ்ஸி.
அது கோல் அடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லாத ஒரு தருணம் என்றுதான் கருதப்பட்டது. பல மெக்சிகோ வீரர்கள் சுற்றியிருந்தார்கள். கோலுக்கான தூரமும் அதிகமாக இருந்தது. ஆனால் மரியா கொடுத்த பந்தை அமைதியாக வாங்கிய மெஸ்ஸி, 4 மெக்சிகோ வீரர்களை போக்குக் காட்டி கோல் கீப்பருக்கு இடது புறமாக தரையோடு தரையாக பந்தை அடித்துக் கோலாக்கினார்.
அந்த நேரத்திலேயே ட்விட்டரில் அந்த கோலைப் பற்றிய விவாதம் ட்ரெண்டானது. பிரேசில் வீரர் ரிச்சார்லிசன் அடித்த கோலைப் போல மெஸ்ஸியின் கோலையும் வியந்து பேசினர்.
மெஸ்ஸி கோல் அடித்ததும் சுமார் 90 ஆயிரம் பேர் இருந்த அரங்கில் அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாடினர். களத்துக்குள்ளும் அரங்கிலும் எழுந்த ஆராவாரம் அடங்குவதற்கு சில நிமிடங்கள் ஆகின.
கடைசி நிமிடங்களில் மாற்று வீரராகக் களமிறங்கிய என்ஸோ ஃபெர்னான்டெஸ் கடைசி நேரத்தில் அடித்த மற்றொரு கோல் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தது.
அதன் பிறகு மெக்சிகோவால் பதில் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
‘நிம்மதி அளித்த வெற்றி’
மெக்சிகோவுடனான போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்ஸி, ‘'எங்களது தோளில் பெரும் சுமை இருந்தது. இப்போது மன நிம்மதி கிடைத்தது. இப்போது ஆட்டம் எங்கள் கைக்கு வந்திருக்கிறது'’ என்றார்.
“முதல் பாதியில் எங்களுக்கு கோல் அடிப்பதற்கான இடமே கிடைக்கவில்லை. குறுகிய இடைவெளியில் இடத்தைத் தேடத் தொடங்கினோம். முதல் கோல் ஆட்டத்தை மாற்றிவிட்டது. இனி போலாந்துடனான போட்டியில் வேறொரு முறையில் அணுக முடியும்” என்றார் மெஸ்ஸி.

பட மூலாதாரம், Getty Images
அர்ஜென்டினாவுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?
உலகக் கோப்பை சி பிரிவில் அர்ஜென்டினா, சௌதி அரேபியா, போலாந்து ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருக்கின்றன. போலாந்து அணி மெக்சிகோ அணியுடன் சமன் செய்ததன் மூலமாக கூடுதலாக ஒரு புள்ளியைப் பெற்றிருக்கிறது.
அந்த வகையில் போலாந்து 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அர்ஜென்டினா 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் சௌதி அரேபியா 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், மெக்சிகோ அணி 1 புள்ளியுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றன. அடுத்து வரும் போட்டிகளில் மெக்சிகோ அணி சௌதி அரேபியாவுடனும், அர்ஜென்டினா அணி போலாந்துடனும் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் சௌதி அரேபியா, அர்ஜென்டினா, போலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றால் அவை அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். சமன் செய்யப்பட்டால் கோல்கள் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகள் தீர்மானிக்கப்படும் நிலை ஏற்படும்.
கத்தார் கால்பந்து போட்டியில் இதுவரை நடந்தவை
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் செலவில் மைதானங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள், சாலைகள் உள்ளிட்ட வசதிகளுடன் ஏற்பாடுகள் பிரமாண்டமான செய்யப்பட்டிருக்கின்றன.
மாற்றுத்திறனாளி இளைஞர் குரான் வாசிக்க, ஹாலிவுட் நடிகர் மார்கன் ப்ரீமன் அவருடன் உரையாட உற்சாகமாகப்போட்டிகள் தொடங்கின.
- முதல் போட்டியில் கத்தார் அணி எக்வடோர் அணியைத் தோற்கடித்து உள்ளூர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பி பிரிவில் இரான் அணியை இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
- இந்தத் தொடரில் அதிர்ச்சியளிக்கும் அம்சமாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சௌதி அரேபிய அணி வீழ்த்தியது.
- இ- பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் அணி கோஸ்டா ரிகா அணியை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்தப் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக கோல்களை அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
- இ-பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. போர்ச்சுகல், பெல்ஜியம், பிரேசில் ஆகிய முன்னணி அணிகள் தங்களது முதலாவது போட்டிகளில் வென்றிருக்கின்றன.
- 5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருக்கிறார்.
- இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த கத்தார் அணி போட்டியில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறுகிறது.
- அர்ஜென்டினாவுடன் வெற்றிபெற்ற சௌதி அரேபிய அணி போலாந்துடன் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
- சௌதி அரேபியாவுடனான போட்டியில் போலாந்து வீரர் லெவான்டோஸ்கி தனது முதலாவது உலகக் கோப்பை கோலை அடித்திருக்கிறார்.
- நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி அடுத்தடுத்து இரு போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழையும் முதல் அணியாகி இருக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












