அர்ஜென்டினாவை வீழ்த்திய சௌதி அரேபியா போலாந்துடன் செய்த இருபெரும் தவறுகள்

சௌதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம். மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஒரு பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதுடன், எளிமையாக ஒரு கோல் அடிக்கும் வாய்ப்பையும் எதிரணிக்கு வழங்கியதால் சௌதி அரேபியாவுக்கு அடுத்து சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கடினமாகி இருக்கிறது.

கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெரும் பலம் கொண்ட அர்ஜென்டினா அணியை வீழ்த்திய அணி என்பதால் போலாந்து அணியுடனான போட்டியில் வென்று அடுத்த சுற்றுக்குச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறைந்தபட்சம் போட்டியைச் சமன் செய்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டிருக்க முடியும்.

ஆனால் போலாந்து அணியின் வலிமையான பாதுகாப்பு அரணும், தாக்குதலும், கூடவே அரேபியாவின் இருபெரும் தவறுகளும் அந்த அணிக்கான அடுத்த சுற்றி வாய்ப்புக்காக அடுத்தபோட்டி வரை காத்திருக்க வைத்துவிட்டது.

போலாந்து அணியின் நட்சத்திர வீரரான லெவான்டோஸ்கி உலகக் கோப்பையில் முதல் கோலை அடித்து தனது நெடுங்காலக் கனவை இந்தப் போட்டியில் நனவாக்கிக் கொண்டார். 

போலாந்து நாட்டுக்காக அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையைக் கொண்ட லெவான்டோஸ்கியால் இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடிக்க முடியவில்லை என்ற குறை இருந்தது. அவர் கோல் அடித்ததும் அணியே உணர்ச்சிப் பெருக்கில் சற்று அதிகமாகக் கொண்டாடியது.

மெக்சிகோ அணியுடனான முந்தைய போட்டியில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை லெவான்டோஸ்கி தவறவிட்டார். அதனால் அவருக்கு தனிப்பட்ட முறையில் சௌதி அரேபியாவுடனான கோல் கூடுதல் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.

இந்தப் போட்டியில் சௌதி அரேபிய அணி தோல்வியடைந்திருந்தாலும் அடுத்த சுற்றுக்குப் போவதற்கான வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிடவில்லை. 

சௌதி

பட மூலாதாரம், Getty Images

சௌதி - போலாந்து போட்டியில் என்ன நடந்தது?

அர்ஜென்டினா அணியுடன் கோல் எண்ணிக்கையை தவிர மற்ற அனைத்து அம்சங்களிலும் பின்தங்கியிருந்தது சௌதி அரேபியா. ஆனால் போலாந்து அணியுடனான போட்டியி்ல் புள்ளி விவரங்கள் அனைத்தும் அப்படியே தலைகீழாக இருந்தன. 

கோலை நோக்கி அடித்த ஷாட்கள், பந்தை வசமாக்கி வைத்திருந்த விகிதம், கடத்திய எண்ணிக்கை, கடத்தும் துல்லியம் என அனைத்திலுமே சௌதி அரேபியா முன்னிலை வகித்தது. ஆனால் கோல் எண்ணிக்கையில் மட்டுமே போலாந்து அணி கூடுதலாக இருந்தது. 

தொடக்கத்தில் போட்டியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சௌதி அரேபியாவுக்கு 39-ஆவது நிமிடத்தில் முதலாவது அதிர்ச்சி காத்திருந்தது. லெவான்டோஸ்கி அடித்த பந்தை சௌதி கோல்கீப்பர் தடுக்க, வெளியே சென்ற பந்தை மீண்டும் கோல் வலைக்கு அருகே லெவான்டோஸ்கி அடித்தார். அதை ஸினிலின்ஸ்கி கோலுக்குள் தள்ளினார்.

இந்த கோலை சமன் செய்யும் வாய்ப்பு சில நிமிடங்களில் சௌதி அரேபியாவுக்குக் கிடைத்தது. பெனால்ட்டி பகுதியில் சௌதி வீரர் அல்-சேஹ்ரியை போலாந்து வீரர் பிலிக் காலால் தட்டியதால் சௌதி அரேபியாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பு தரப்பட்டது.

சௌதி

பட மூலாதாரம், Getty Images

அர்ஜென்டினா அணியுடன் வெற்றிக்கான கோலை அடித்த அல் தவ்சாரி பெனால்ட்டியை பயன்படுத்தினார். 12 கஜம் தொலைவில் இருந்து கோல் கீப்பரை மட்டும் தாண்டி வலைக்குள் பந்தை அடிக்க வேண்டும். ஆனால் அல்-தாவ்சாரி அடித்த பந்தை போலாந்து கோல்கீப்பர் செசஸ்னி அற்புதமாகப் பாய்ந்து தடுத்தார். 

கையிலிருந்து தப்பி மீண்டு வந்த பந்தை மற்றொரு முறை கோலுக்குள் அடிக்க சௌதி வீரர் முயன்றபோது அதையும் தடுத்துவிட்டார். இந்த வாய்ப்பை இழந்தது சௌதி அரேபியாவுக்கு பின்னடைவாகப் போய்விட்டது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோல் அடிப்பதற்காக சௌதி வீரர்கள் தீவிரமாக முயன்றபோது, காப்பரணில் குறைபாடு ஏற்பட்டது. அதைத் துல்லியமாகப் பயன்படுத்திக் கொண்ட போலாந்து முன்கள வீரர்கள் கோலை நோக்கி ஷாட்களை அடித்தார்கள். இருமுறை பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியது. 

82-ஆவது நிமிடத்தில் சௌதி அரேபியாவுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. சௌதி அரேபியாவின் காப்பரண் வீரரான அல்-மாலிகி கோலுக்கு மிக அருகே காலிலிருந்த பந்தை சற்று நழுவ விட்டதால் பின்புறமிருந்து வந்த லெவான்டோஸ்கி அதை அற்புதமாகக் கடத்தி கோலுக்குள் திணித்தார். அதுவே உலகக் கோப்பை போட்டியில் அவர் அடித்த முதல் கோலானது. 

போலாந்து

பட மூலாதாரம், Getty Images

கடைசி சில நிமிடங்களிலும் அவருக்கு மற்றொரு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அதை சௌதி கோல்கீப்பர் அல்-ஓவைஸ் தனது கையால் அற்புதமாகத் தடுத்துவிட்டார்.

அதன் பிறகு சௌதி அரேபியாவால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 2-0 என்ற கோல் கணக்கில் போலாந்து வெற்றி பெற்றது. இருப்பினும் அந்த அணிக்கு இன்னொரு போட்டி இருப்பதால் அடுத்த சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

சௌதி அரேபிய அணி 1994-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக பங்கேற்றது. அந்தப் போட்டியிலேயே நாக்-அவுட் சுற்றுக்கும் முன்னேறியது. அதன் பிறகு பங்கேற்ற எந்த உலகக் கோப்பை போட்டியிலும் நாக்-அவுட் சுற்றுக்குச் சென்றதில்லை. 

வளைகுடா பிராந்தியத்தில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியில் அடுத்த சுற்றுக்குச் செல்லும் சாதனையை சௌதி அரேபியா நிகழ்த்துவதற்கான வாய்ப்பு அடுத்துவரும் போட்டிகளுக்குப் பிறகே உறுதியாகும்.

சௌதி

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பை போட்டியில் இதுவரை நடந்தவை

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் செலவில் மைதானங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள், சாலைகள் உள்ளிட்ட வசதிகளுடன் ஏற்பாடுகள் பிரமாண்டமான செய்யப்பட்டிருக்கின்றன.

மாற்றுத்திறனாளி இளைஞர் குரான் வாசிக்க, ஹாலிவுட் நடிகர் மார்கன் ப்ரீமன் அவருடன் உரையாட உற்சாகமாகப்போட்டிகள் தொடங்கின.

முதல் போட்டியில் கத்தார் அணி எக்வடோர் அணியைத் தோற்கடித்து உள்ளூர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பி பிரிவில் இரான் அணியை இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தத் தொடரில் அதிர்ச்சியளிக்கும் அம்சமாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபிய அணி வீழ்த்தியது. 

இ- பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் அணி கோஸ்டா ரிகா அணியை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்தப் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக கோல்களை அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

இ-பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. போர்ச்சுகல், பெல்ஜியம், பிரேசில் ஆகிய முன்னணி அணிகள் தங்களது முதலாவது போட்டிகளில் வென்றிருக்கின்றன. 

5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை போர்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருக்கிறார்.

இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த கத்தார் அணி போட்டியில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறுகிறது.

அர்ஜென்டினாவுடன் வெற்றிபெற்ற சௌதி அரேபிய அணி போலாந்துடன் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

சௌதி அரேபியாவுடனான போட்டியில் போலாந்து வீரர் லெவான்டோஸ்கி தனது முதலாவது உலகக் கோப்பை கோலை அடித்திருக்கிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: