கத்தார் 2022: சூப்பர் ஹீரோ போல முகமூடி அணிந்து களமிறங்கிய தென்கொரியா கேப்டன் - என்ன காரணம்?

 தென் கொரிய அணியின் கேப்டன் சன் ஹியுங்-மின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் கொரிய அணியின் கேப்டன் சன் ஹியுங்-மின்

இது சினிமாவில் நாம் பார்க்கும் அசாத்திய திறன்கள் கொண்ட சூப்பர் ஹீரோக்கள் அணிந்துவரும் முகமூடி போல உள்ளதா? கத்தாரில் நடைபெற்றும் வரும் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் தென் கொரிய அணியின் கேப்டன் சன் ஹியுங்-மின் கடந்த வியாழன்று நடந்த போட்டியில் இந்த முகமூடியை அணிந்து விளையாடினார். என்ன காரணம்?

கடந்த வியாழன்று நடந்த போட்டியில் குரூப் எச் பிரிவில் உள்ள தென்கொரியா மற்றும் உருகுவே அணிகள் மோதின. இது இந்தத் தொடரில் இரு அணிகளுக்குமே முதல் போட்டியாகும். இந்தப் போட்டியில் தென்கொரிய அணியின் கேப்டன் சன் ஹியுங்-மின் தன்னுடைய முகத்தின் மேற்பகுதியை மறைக்கும் முகமூடியை அணிந்து களமிறங்கினார்.

இந்தப் போட்டி கோல் ஏதுமின்றி ட்ராவில் முடிந்தது.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி யூரோப்பியன் சாம்பியன் லீக் தொடரில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக அவர் விளையாடியபோது, எதிரணி வீரர் சான்சல் எம்பெம்பா மீது எதிர்பாராத விதமாக மோதினர். அதில், இடது கண் குழி அருகே அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து, 30 வயதான சன் ஹியுங்-மின்னுக்கு நவம்பர் 4ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. உலகக் கோப்பை தொடர் தொடங்க மூன்று வாரங்கள் மட்டுமே இருந்ததால் சன் ஹியுங்-மின் பங்கேற்பது குறித்து பலரும் சந்தேகித்த நிலையில், இந்தத் தொடரில் நிச்சயம் பங்கேற்பேன் என அவர் தெரிவித்திருந்தார்.

சன் ஹியுங்-மின்

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பை தொடரில் என்னுடைய அழகான தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்த என்னால் காத்திருக்க முடியவில்லை என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

“தங்கள் நாட்டிற்காக உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பது பல வளரும் குழந்தைகளின் கனவு. எனக்கு அப்படித்தான்” என்றும் அப்பதிவில் சன் ஹியுங்-மின் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு பிரீமியர் லீக் தொடரில் அதிக கோல் அடித்ததற்கான தங்க காலணியை அவர் கூட்டாக வென்றார். ஆனால், இந்த ஆண்டு தொடரில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக 19 போட்டிகளில் 5 கோல்கள் மட்டுமே அடித்துள்ள சன் ஹியுங்-மின், தன்னுடைய இழந்த ஃபார்மை மீட்டெடுக்க போராடி வருகிறார்.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் சன் ஹியுங்-மின் மட்டுமல்ல, பெல்ஜியம் அணியைச் சேர்ந்த தாமஸ் மியூனியரும் கனடாவுக்கு எதிரான போட்டியில் இதே போல முகமூடி அணிந்து விளையாடினார்.

ஜெர்மன் லீக் தொடரில் பொருசியா டார்ட்மண்ட் அணிக்காக விளையாடிய போது, கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அவருக்கு கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாகவே, தாமஸ் மியூனியரும் தற்காப்பு முகமூடி அணிந்து களமிறங்கினார்.

காணொளிக் குறிப்பு, அடுத்தடுத்த தோல்விகளால் வெளியேறுகிறது கத்தார் அணி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: