மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு வெறும் ரூ. 12.35 கோடி: பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு?

மதுரை எய்ம்ஸ்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மதுரையில் 2019ல் இந்திய பிரதமரால் கட்டுமானப் பணிகள் துவக்கி வைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை வெறும் 12.35 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்திருக்கிறது. இதற்குப் பல்வேறு காரணங்களை பா.ஜ.க. கூறினாலும், தமிழ்நாட்டின் மீதான அலட்சியமே காரணம் என்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரதான் மந்த்ரி சுவஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் (PMSSY) திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் மத்திய சுகாதார அமைச்சரவையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பிப்ரவரி 20ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதன்படி, 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு பிஎம்எஸ்எஸ்ஒய் திட்டத்தின் கீழ் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ரே பரேலி மற்றும் கோரக்பூர், ஆந்திரப் பிரதேசத்தில் மங்களகிரி, மகாராஷ்டிராவில் நாக்பூர், மேற்கு வங்கத்தில் கல்யாணி, பஞ்சாபில் பதிண்டா, இமாச்சலப் பிரதேசத்தில் பிலாஸ்பூர், அசாமில் கௌஹாத்தி, ஜம்முவில் விஜயபூர், காஷ்மீரில் அவந்திபோரா, ஜார்க்கண்டில் தேவ்கர், குஜராத்தில் ராஜ்கோட், தெலங்கானாவில் பிபி நகர், பிஹாரில் தார்பங்கா, ஹரினாவில் மனேதி, தமிழ்நாட்டில் மதுரை ஆகிய 16 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ரே பரேலி மற்றும் கோரக்பூர், மங்களகிரி, நாக்பூர், கல்யாணி, பதிண்டா, பிலாஸ்பூர் ஆகிய ஏழு இடங்களில் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. தார்பங்காவிலும் மனேதியிலும் மாநில அரசு இன்னும் நிலம் ஒதுக்கீடு செய்யாததால், அங்கு பணிகள் துவங்கப்படவில்லை. மீதமுள்ள இடங்களில் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவக்க விழாவில் அளித்த வாக்குறுதி

நரேந்திர மோதி

குவாஹத்தி, விஜய்பூர், தேவ்கர், ராஜ்கோட் ஆகிய இடங்களில் இந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் முடிவடையும் என்றும் பிபி நகரில் 2024ல் பணிகள் முடிவடையும் என்றும் அவந்திபோராவில் 2025ல் பணிகள் முடிவடையும் என்றும் மதுரையில் 2026ல்தான் பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தவிர்த்த அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட நிலையில், மதுரை எய்ம்ஸிற்கு வெறும் 12.35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

டெல்லியில் இருப்பது போல அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவமனை ஒன்றை மதுரையில் அமைக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. இந்த நிலையில், 2015 பிப்ரவரியில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

ஆனால், இந்த மருத்துவமனையை மதுரையில் அமைப்பதா, தஞ்சாவூரில் அமைப்பதா என மாநில அரசு யோசித்ததால் நிலம் ஒதுக்கீடு செய்யவே மூன்றரை ஆண்டுகள் ஆனது. பிறகு ஒரு வழியாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதுரைக்கு அருகில் உள்ள தோப்பூரில் சுமார் 222 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது மாநில அரசு.

கடந்த 2019ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக ஜனவரி 27ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்தார். இந்த விழாவில் அப்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் முடிவடைந்து, மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும் என அப்போது அறிவிக்கப்பட்டது.

இரண்டு வருடங்களுக்கு பிறகே ஒப்பந்தம்

இந்த மருத்துவமனையை ஜப்பானைச் சேர்ந்த ஜெய்கா (ஜப்பான் இன்டர்நேஷனல் கோ-ஆபரேஷன் ஏஜென்சி) அமைப்பின் நிதி உதவியுடன் கட்ட முடிவெடுக்கப்பட்டது. மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் துவங்கிய ஒன்றரை ஆண்டுகள் கழித்து, அதாவது 2021 மார்ச்சில்தான் ஜெய்காவுடன் கடன் ஒப்பந்தமே செய்யப்பட்டது.

இதற்கிடையில், இந்த மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு மாற்றியமைக்கப்பட்டது. புதிய திட்ட மதிப்பீட்டில் மருத்துவமனைக்கான செலவு ரூ. 1977.8 கோடியாக உயர்ந்தது. புதிதாக ஒரு துறையும் சேர்க்கப்பட்டது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

இதற்குப் பிறகும் தோப்பூரில் மருத்துவமனை தொடர்பான பணிகள் மிக மெதுவாகவே நடைபெற்றன. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மதுரைக்கு வந்த பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் பிரதமர் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அந்தத் தருணத்தில் அந்த மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி ஒரு சுற்றுச்சுவரும், ஒரு சாலையும் ஒரே ஒரு கட்டடமும் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளன்று மதுரை எய்ம்ஸ் பணிகள் முடங்கிக் கிடப்பது குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது, மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா கடுமையாக பதிலளித்தார்.

"சிலர் எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார்கள். ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு, நோயாளிகள் இல்லாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்ததால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இப்படி செய்கிறார்கள். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கான எதிர்வினைதான் இது. இத்தகைய சட்ட விரோத செயல்களை மோதி அரசு அனுமதிக்காது. தவறிழைக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

சர்ச்சையாகிய ஜே.பி. நட்டாவின் அறிவிப்பு

மதுரை எய்ம்ஸ்
படக்குறிப்பு, ஜே.பி. நட்டா, தேசிய தலைவர் - பாரதிய ஜனதா கட்சி

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சர் இப்படிப் பதிலளித்ததற்கு அந்தத் தருணத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர்.

இந்த நிலையில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மதுரை எய்ம்ஸிற்கு மிக்க குறைவான தொகையே ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, "கோவிட் காரணமாக ஜப்பானிய வங்கியிலிருந்து வர வேண்டிய நிதி வரவில்லை. விரைவில் அந்த நிதி வந்துவிடும். பணிகளும் துவங்கிவிடும். தமிழ்நாட்டில் நிலம் ஒதுக்கீடு செய்ததே மிகத் தாமதமாகத்தான் செய்தார்கள்" என்று தெரிவித்தார்.

பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பணிகள் முடிவடைந்திருப்பது குறித்து கேட்டபோது, "தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அது கண்ணுக்குத் தெரியவில்லையா? இதன் மூலம் புதிதாக 3550 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதெல்லாம் தெரியவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு தொடர்ச்சியாக பாரபட்சமான மனப்பான்மையுடன் அணுகிவருவதாக குற்றம்சாட்டுகிறார் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரான சு. வெங்கடேசன்.

"எப்போது பார்த்தாலும் ஜப்பானிய வங்கி பணம் தரவில்லை என்கிறார்கள். இந்த மொத்தச் செலவிலும் மத்திய அரசின் பணம் என்பது வெறும் 350 கோடிதான். அதனை முழுமையாக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்தால், பணிகள் நடந்திருக்குமே? அதை ஏன் செய்யவில்லை?

முதலில் அறிவிக்கப்பட்ட திட்ட மதிப்பீட்டை விட தற்போது 600 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், கட்டுமானப் பணிகளைத் துவக்குவதில் ஏற்பட்ட தாமதம்தான். கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் இந்தத் தாமதத்தால் அதிகரித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினால், மிரட்டுவது போல பதிலளிக்கிறார் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

ஆனால், இப்போது இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் உண்மையிலேயே எவ்வளவு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்பது வெளியில் வந்துவிட்டது.

மத்திய அரசுக்கு மதுரை எய்ம்ஸ் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனது பங்கை முதலில் ஒதுக்கீடு செய்து பணிகளைத் துவக்க வேண்டும்" என்கிறார் சு. வெங்கடேசன்.

இதற்கிடையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதில் 50 மாணவர்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: