ஹெச்1பி விசா: டிரம்ப் உத்தரவால் அமெரிக்காவில் இந்திய மருத்துவர்கள் கவலை ஏன்?

ஹெச்1பி விசா, அமெரிக்கா, இந்தியா, மருத்துவர்கள், டிரம்ப்

பட மூலாதாரம், Mahesh Anantha

படக்குறிப்பு, மருத்துவர் மஹேஷ் ஆனந்தா பேட்ஸ்வில் பகுதியில் ஆற்றிக்கொண்டிருக்கும் மருத்துவ பங்களிப்பு அசாத்தியமானது
    • எழுதியவர், சவிதா பட்டேல்
    • பதவி, பிபிசி செய்திகள், கலிபோர்னியா

அமெரிக்காவின் ஆர்கன்ஸா (Arkansas) மாகாணத்தில் பேட்ஸ்வில் கிராமப்புறத்தைச் சுற்றியிருக்கும் வெகுசில இதய நிபுணர்களில் (Interventional Cardiologists) ஒருவர் மருத்துவர் மஹேஷ் ஆனந்தா.

விவசாய நிலங்கள், சிறு தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகளால் சூழப்பட்டிருக்கும் இந்த நகரத்தில் மொத்தம் 11,000 மக்கள் வாழ்கிறார்கள். சுற்றியிருக்கும் கிராமங்களுக்கும் பெருநகரங்களுக்கும் இந்த ஊர் மையமாக விளங்குவதால் மருத்துவர் ஆனந்தாவின் பணி இன்றியமையாததாகிறது.

"இங்கிருந்து ஒன்று அல்லது இரண்டு மணி நேர தூரத்துக்கு எந்த மருத்துவ வசதிகளும் இல்லை. அதனால் அனைத்துக்கும் மக்கள் எங்களையே நம்பியிருக்கவேண்டியுள்ளது" என்கிறார் அவர்.

அமெரிக்காவின் சிறிய மற்றும் தொலைதூர நகரங்களில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் மருத்துவர்களில் ஒருவரான ஆனந்தா, தமிழ்நாட்டின் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

அமெரிக்காவில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களில் நான்கில் ஒருவர் வெளிநாட்டில் பயிற்சி பெற்றவர். அதில் பெரும்பாலானவர்கள், அமெரிக்க மருத்துவர்கள் பணியாற்ற தயக்கம் காட்டும் கிராமப்புறங்களில் வேலை செய்பவர்கள். அதில் பெரும்பாலானவர்கள் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களே. அதிலும் சிலர் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஹெச்1பி விசாவில்தான் கழிக்கிறார்கள். கிரீன் கார்டுக்காக காத்திருப்பதால் எந்த நேரமும் வேலையை இழக்கலாம் என்ற உறுதியற்ற தன்மை அவர்களுக்கு இருந்துகொண்டேதான் இருக்கிறது.

அப்படியிக்கையில் ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை, இந்தியாவில் பயின்று அமெரிக்காவில் பணியாற்றிவரும் சுமார் 50,000 மருத்துவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியான பின் இது மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கையில் என்ன தாக்கம் ஏற்படுத்தப்போகிறது என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது. பல ஆண்டுகளாக அங்கே தங்களின் வாழ்க்கையை, தங்களுக்கென ஒரு சமூகத்தைக் கட்டமைத்தவர்களின் எதிர்காலத்தின் மீது இது கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இதுவொரு பெரும் சீற்றமாக மாற, வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஒருவர் செப்டம்பர் 22 அன்று புளூம்பெர்க் நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம்"அந்த அறிக்கையில் மருத்துவர்கள் போன்ற சிலருக்கு விலக்கு இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார்: . ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மற்றும் தற்போது செல்லுபடியாகக்கூடிய ஹெச்1பி விசாக்களுக்கு இந்த புதிய கட்டணம் பொருந்தாது என்று அமெரிக்க அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

ஹெச்1பி விசா மூலம் ஏற்கெனவே அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு இதுவொரு தெளிவைக் கொடுத்திருக்கிறது. இருந்தாலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் இதேபோல் தொடருமே என்ற கேள்வியையும் இது எழுப்பியிருக்கிறது.

விசா பற்றி ஏற்கெனவே வந்த அறிவிப்பின்போது, 'ஹோம்லேண்ட் செக்யூரிட்டி' அமைப்பின் செயலாளர் தேசிய நலன் கருதி சிலருக்கு இந்த அதீத கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் எந்தத் துறை சார்ந்த பணியாளர்களுக்கும் விலக்கு கொடுக்கப்படுவது பற்றி எந்த அறிகுறியும் இல்லை என்று மருத்துவத் துறையும் சில குழுக்களும் குறிப்பிட்டுள்ளனர்.

ஹெச்1பி விசா, அமெரிக்கா, இந்தியா, மருத்துவர்கள், டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹெச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அதிக கட்டணத்தினால், வெளிநாட்டு மருத்துவர்களை பணியமர்த்த கிராமப்புற மருத்துவமனைகள் யோசிக்கத் தொடங்கலாம் என்று வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள்

மருத்துவர்களையும் மற்ற ஊழியர்களையும் பணியமர்த்த மருத்துவமனைகளுக்கு அதிக செலவு ஏற்படும்போது, அது பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்று பலரும் கூறுகிறார்கள். அதனால், அமெரிக்க மருத்துவ சங்கம் (ஏஎம்ஏ) தலைமையில் 50 குழுக்கள், ஹோம்லேண்ட் செக்யூரிட்டியின் செயலாளரான கிறிஸ்டி நோயமுக்கு ஒரு விண்ணப்பம் எழுதியிருக்கிறார்கள். அதில், 'ஹெச்1பி விசாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அதிக கட்டணத்தால், மருத்துவர்களை பணியமர்த்த மருத்துவமனைகள் யோசிக்கத் தொடங்கலாம். அது எதிர்காலத்தில் இங்கு வரும் மருத்துவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அதிகம் மருத்துவ வசதிகள் தேவைப்படும் இடங்களில் நோயாளிகளுக்கு ஏற்ற போதுமான மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது.

"இந்தக் கட்டணம் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என்று சுகாதார அமைப்புகளிடம் இருந்து கேள்விப்படுகிறோம்" என்று கூறினார் ஏஎம்ஏ அமைப்பின் தலைவரான டாக்டர் பாபி முக்காமலா. இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவரான டாக்டர் முக்காமலா தான் ஏஎம்ஏ அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் முதல் இந்திய வம்சாவளி நபர்.

அமெரிக்காவில் இருக்கும் புலம்பெயர் மருத்துவர்களுள் ஐந்தில் ஒருவர் இந்தியர் என்று ஓர் ஆராய்ச்சி சொல்கிறது.

அமெரிக்காவிலுள்ள வேலைகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டுமெனில், இப்படியான கடினமான புலம்பெயர் விதிகள் அவசியம் வேண்டும் என்கிறார்கள் இந்த விசா கட்டண உயர்வை ஆதரிப்பவர்கள்.

அதேசமயம் கலிஃபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் (யுசிஎஸ்டி) உலகளாவிய கொள்கை மற்றும் உத்தி துறை நடத்திய ஆய்வு, தளர்த்தப்பட்ட விசா வரம்புகளின் மூலம் அமெரிக்க மருத்துவ பட்டதாரிகளின் வேலைகளில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறுகிறது. அதுமட்டுல்லாமல் கிராமப்புறத்திலும் குறைந்த ஊதியம் தரும் இடங்களிலும் வெளிநாட்டில் பயின்ற மருத்துவர்கள் பணியாற்ற அது வழிவகை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'சர்வதேச மருத்துவ பட்டதாரிகள் அமெரிக்க மருத்துவர்களின் வேலைகளை எடுத்துக்கொள்வதில்லை' என்பதை வலியுறுத்தும் ஏஎம்ஏ, அவர்கள் அமெரிக்க சுகாதார துறையில் இருக்கும் முக்கிய இடைவெளிகளை நிரப்புகிறார்கள் என்றும் சொல்கிறது.

மற்ற மேற்கத்திய நாடுகளைப் போல் அமெரிக்காவும் நெடுங்காலம் மருத்துவர்கள் பற்றாக்குறையை சந்தித்திருக்கிறது. இந்நிலையில், 2034ம் ஆண்டு சுமார் 1,24,000 மருத்துவர்கள் அமெரிக்காவில் பற்றாக்குறையாக இருப்பார்கள் என்று யுசிஎஸ்டி நடத்திய அந்த ஆய்வு சொல்கிறது.

"இதன் தாக்கம் அமெரிக்காவின் கிராமப்புறங்களில் தான் அதிகம் தெரியும். ஏனெனில், பெரும்பாலான அமெரிக்க மருத்துவ பட்டாதாரிகள் நல்ல வசதிகள் கொண்ட பெருநகரங்களையே தேர்வு செய்கிறார்கள்" என்று சொல்கிறார் இந்திய வம்சாவளியைச் சார்ந்த அமெரிக்க மருத்துவர் சங்கத்தின் தலைவரான (2024-25) டாக்டர் சதீஷ் கதுலா.

ஹெச்1பி விசா, அமெரிக்கா, இந்தியா, மருத்துவர்கள், டிரம்ப்

பட மூலாதாரம், Rakesh Kanipakam

படக்குறிப்பு, நூற்றுக்கணக்கான மைல்கள் பயணித்து அங்கே இருக்கும் சிறுநீர் செயலிழந்த நோயாளிகளுக்கு மருத்துவம் செய்துகொண்டிருக்கிறார் டாக்டர் ராகேஷ் கனிபாகம்

பணக்கார நகர்ப்புற மருத்துவ அமைப்புகள் நல்ல சம்பளத்தை வழங்கி, தடுமாறிக் கொண்டிருக்கும் கிராமப்புறங்களை எளிதாக விஞ்சிவிடுகின்றன என்கிறார் புளோரிடாவில் கிராமப்புற பின்னணியில் வளர்க்கப்பட்ட ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ மாணவி கீதா மினோச்சா.

வெளிநாட்டு மருத்துவர்களை அழைத்துவர அதிக கட்டணம் விதிக்கும்போது, அது ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் கிராமப்புற மருத்துவமனைகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த பாதிப்பு கிராமப்புறங்களுக்கு மட்டும் இருக்கப்போவதில்லை. அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டன், மிச்சிகன், நியூ ஜெர்ஸி, ஃப்ளோரிடா, நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற மாகாணங்களும் புலம்பெயர்ந்த மருத்துவர்களை நம்பியே இருக்கின்றன. இங்கிருக்கும் மருத்துவர்களில் 30% மேலானவர்கள் புலம்பெயர் மருத்துவர்கள் தான்.

புலம்பெயர் மருத்துவர்கள்: மாபெரும் அமெரிக்கக் கனவுக்கான தேடல் (Immigrant Doctors: Chasing the Big American Dream) என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் கதுலா, அமெரிக்காவில் தங்கள் சொந்த செலவில் பல நற்பணிகளைச் செய்த புலம்பெயர் மருத்துவர்கள் பலரின் கதைகளை அதில் கூறியிருக்கிறார்.

"1980கள் முதல் 90கள் வரையிலான எச்ஐவி தொற்று, சமீபத்திய கோவிட்-19 தொற்று காலகட்டங்களில் ஆய்வக ஊழியர்கள் ரத்தம் எடுக்கக்கூட யோசித்தபோது பல மருத்துவர்கள் நம் நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். பெருந்தொற்றின்போது தங்கள் பெற்றோர்களின் இறுதிச் சடங்குக்குக் கூட செல்லாமல் இங்கு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த பல மருத்துவர்களை எனக்குத் தெரியும்" என்கிறார் அவர்.

1960களில் மருத்துவர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க, அமெரிக்கா தன் கதவுகளைத் திறந்த போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அங்கு புலம்பெயர்ந்தனர்.

அவர்களில் பெரும்பாலோர் மருத்துவ பயிற்சிக்காக ஜே-1 விசாவில் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள்.

அவர்கள் தங்கள் பயிற்சியை முடித்தபின் ஏதேனும் மருத்துவமனைகள் அவர்களுக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தால் ஹெச்1பி விசாவுக்கு மாறினார்கள். இல்லையேல் ஜே-1 விசா முடிந்ததும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினார்கள். (ஜே-1 விசா முடிந்துவிட்டால் அவர்கள் நாடு திரும்பிவிடவேண்டும். 2 ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் விண்ணப்பிக்க முடியும்)

1990களில் ஏற்பட்ட தீவிர மருத்துவர் பற்றாக்குறையைப் போக்க அமெரிக்க அரசு ஒரு விலக்கு ஏற்படுத்தியது. மருத்துவ பணியாளர்கள் குறைவாக உள்ள பகுதிகளில் (Health Professional Shortage Areas - எச்பிஎஸ்ஏ) பணியாற்ற விரும்புவர்களுக்கு அந்த 2 ஆண்டு இடைவெளிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கான்ராட் வெய்வர் (Conrad waiver) என்றழைக்கப்பட்ட இந்த விலக்கின் மூலம், மருத்துவ பயிற்சி முடித்த ஜே-1 விசா பயனாளர்கள் ஹெச்1பி விசா பெற்று எச்பிஎஸ்ஏ பகுதிகளில் தொடர்ந்து பணியாற்ற வழிவகை செய்யப்பட்டது.

தெற்கு அலபாமாவில் அப்படியிருக்கும் ஒரு எச்பிஎஸ்ஏ பகுதிக்குத் தான் வாராவாரம் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணித்து அங்கே இருக்கும் சிறுநீர் செயலிழந்த நோயாளிகளுக்கு மருத்துவம் செய்துகொண்டிருக்கிறார் டாக்டர் ராகேஷ் கனிபாகம். இவர் ஆந்திராவில் மருத்துவம் பயின்றவர்.

"நாங்கள் 100 மைல் சுற்றுவட்டாரத்திலுள்ள மூன்று பெருநகர மற்றும் 5 கிராமப்புற கிளினிக்குகளில், 100 டயாலிசிஸ் (dialysis) மையங்களிலும் பணியாற்றுகிறோம் என்கிறார் அவர். "இந்த ஒட்டுமொத்த இடத்திலும் இருந்தது ஒரேயொரு சிறுநீரக மருத்துவர் தான். இப்போது அவரும் ஓய்வு பெறுகிறார்" என்றும் அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு மருத்துவ பணியாளர்கள் அமெரிக்க பொருளாதாரத்துக்கும் நூற்றுக்கணக்கான டாலர்கள் பங்களிக்கிறார்கள்.

பேட்ஸ்வில்லில், மருத்துவர் ஆனந்தாவின் சக ஊழியர்கள், தங்கள் மருத்துவமனையை சிறப்பான மையமாக மாற்றியதற்காக அவரைப் பாராட்டுகிறார்கள்.

மருத்துவர் ஆனந்தாவின் கிரீன் கார்டு விண்ணப்பத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட கடிதத்தில், மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி, அந்த மையத்தின் பொருளாதாரத்தை ஆண்டுதோறும் $40 மில்லியனுக்கும் மேலாக ஆனந்தா உயர்த்தியதாகவும், அவர்களுக்கு சுகாதாரத் துறையில் பல விருதுகளை வாங்கிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்க நிர்வாகம் விலக்கு அளிக்கும் விஷயத்தில் வெளிப்படையாக இருப்பது ஊக்கமளிப்பதாக சொல்கிறது ஏஎம்ஏ.

ஆனால், "சர்வதேச மருத்துவப் பட்டதாரிகள் தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இப்போது நிர்ணயித்துக் கொண்டிருப்பதால், இந்த கட்டண உயர்வின் சாத்தியக்கூறுகள் அமெரிக்காவில் பணிபுரியும் தகுதி வாய்ந்த மருத்துவர்களைத் தடுக்கும் என்பதால், இதற்கான நடவடிக்கை விரைவாக நடக்க வேண்டும்" என்று டாக்டர் முக்காமலா எச்சரிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு