புரூனே அரச குடும்ப திருமணம்: சாமான்யரை மணந்த இளவரசர் - 10 நாள் ஆடம்பர கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images
அழகிய தோற்றம் மற்றும் தனது இராணுவ சேவைக்காக இணையத்தில் மிகவும் விரும்பப்படுபவராக உள்ளார் புரூனே நாட்டு இளவரசர் அப்துல் மதின். இவருக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இளவரசரின் திருமணம் பத்து நாட்கள் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், அவரது மனைவி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை.
இணையத்தில் மிகவும் பிரபலமான இளவரசர் அப்துல் மதின், யாங் முலியா அனிஷா ரோஷனா என்ற பெண்ணோடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக இணையத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது, இந்தத் திருமணம் பற்றிதான் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆசியாவிலேயே மிகவும் 'தகுதியான பேச்சிலராக' அறியப்படும் இந்த இளவரசரின் நிச்சயதார்த்த அறிவிப்பு, உலக மக்கள் பலரை ஆச்சரியப்படுத்தியது.
அவரது மனைவி, புருனே தலைவர் சுல்தான் ஹசனல் போல்கியாவின் ஆலோசகரின் பேத்தி ஆவார். மேலும் அவர் ஒரு ஃபேஷன் மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளரும் கூட.

பட மூலாதாரம், Getty Images
திருமணத்திற்கு வந்த பிரபலங்கள்
திருமண விழாவில், இளவரசர் அப்துல் மதின் (32 வயது) இஸ்லாமிய திருமணங்களில் அணியும் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார். மணமகளான 29 வயது அனிஷா ரோஷனா கண்கவர் ஆடைகள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் இத்திருமண விழா நடைபெற்றது.
பிரமாண்டமாக நடைபெற்ற இத்திருமண விழாவில் 5,000 பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் சௌதி அரேபியா மற்றும் ஜோர்டன் அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இதில், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிலிப்பைன்ஸ் தலைவர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஆகியோர் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமண விழா முடிந்து முதல் முறையாக, புதுமணத் தம்பதியர் தங்களது ரோல்ஸ் ராய்ஸில் அமர்ந்து பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தலைநகர் பண்டார் சிறி பிகவானின் தெருக்களில் அவர்கள் ஊர்வலம் சென்றனர்.

பட மூலாதாரம், Getty Images
'சர்வதேச அளவில் பலரின் இதயத்தை நொறுக்கியவர்'
ஊர்வலத்தைப் பார்த்த பள்ளி ஆசிரியையான நார்லிஹா முகமது, AFP செய்தி நிறுவனத்திடம், அரச தம்பதியினரைப் பார்ப்பது ஒரு வாழ்நாள் அனுபவம் என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் இளவரசர் மதின் ஒரு ஆளுமையாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் 25 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களையும் டிக்டாக்கில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களையும் வைத்துள்ளார்.
புத்தாண்டு தினத்தன்று அவர் தனது வருங்கால மனைவியின் படங்களைப் பகிர்ந்தபோது, அவரது ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் திகழ்ந்தனர்.
இணையத்தில் அவரது பின்தொடர்பாளர் ஒருவர், "2024-ஆம் ஆண்டு இதயத்தை முறிக்கும் துயர செய்தியுடன் தொடங்கியது" என்றும் மற்றொருவர் "இன்டர்நேஷனல் ஹார்ட் பிரேக்கர்" என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்கள்.
இத்தம்பதியினர் விரைவில் திருமணம் செய்யப் போவதால், பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இளவரசர், திருமண விழாவில் பங்கேற்பதுபோல பல பதிவுகள் வெளியாகின, இதற்கு எமோஜிகளும் வாழ்த்துக்களும் குவிந்தன.
கடந்த புதன் அன்று (ஜனவரி 10), உள்ளூர் தொலைகாட்சி நிலையங்கள், திருமண விழாவின் சில பகுதிகளை ஒளிபரப்பின.
இளவரசர் மதின், புருனே சுல்தானின் பத்தாவது வாரிசு ஆவார். புருனே சுல்தான் உலகின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த மற்றும் செழிப்பான சுல்தான்களில் ஒருவர்.

பட மூலாதாரம், Getty Images
இளவரசரின் தகுதிநிலை உயர்வு
அரியணைக்கான வரிசையில் இளவரசர் பின்தங்கியிருந்தாலும் அவரது தகுதிநிலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
இளவரசரைப் அரச விழாக்களில் பங்கேற்பது, போலோ விளையாடுவது மற்றும் ராணுவ உடையில் இருப்பது போன்ற பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கிய திருமண விழா கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று உச்சத்தை எட்டியது.
இஸ்லாமிய முறைப்படி புதன்கிழமை அன்று திருமண சடங்குகள் நடந்தது. இதன் மூலம் இளவரசர் மதினின் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இளவரசர் மற்றும் அவரது தந்தை உட்பட ஆண்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமண விழா தொடர்பான காட்சிகளில், புதன்கிழமை சுல்தான் மற்றும் இளவரசர் மதின் அரச கான்வாயுடன் தலைநகரின் தங்கக் குவிமாடம் கொண்ட மசூதிக்குச் சென்றபோது, நகர மக்கள் சாலையில் வரிசையில் நிற்பது தெரிந்தது.
அதில் இளவரசர் மதீன் வெள்ளை நிறத்தில் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார். அவர் தலையில் வைரம் போன்ற அச்சு கொண்ட தலைப்பாகை இருந்தது. அவர் இமாமுடன் தனது தந்தையின் முன்பு தலை வணங்கி மரியாதை செலுத்தினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












