அமெரிக்கா - சீனா போட்டாபோட்டியில் புதிய தைவான் அதிபர் யார் பக்கம்?

தைவான் - அமெரிக்கா vs சீனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டெஸ்ஸா வாங்
    • பதவி, பிபிசி நியூஸ், தைபே

தைவானில் நடந்து முடிந்துள்ள ஒரு வரலாற்றுத் தேர்தலில் வில்லியம் லாய் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது சீனாவிடம் இருந்து தைவான் தள்ளி நிற்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

தைவான் தேர்தல் முடிவால் சீனா கோபமடையக் கூடும். சுதந்திரம் குறித்த கருத்துகளுக்காக லாயை ஒரு "தொந்தரவு தரும் நபர்" என்று சீனா அழைக்கிறது.

தைவானை தனக்கானது என்று சீனா தொடர்ச்சியாக உரிமை கொண்டாடுகிறது. சீனா "அமைதியான மறு ஒருங்கிணைப்புக்கு" அழைப்பு விடுத்தாலும், அது ராணுவ பலத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புகளையும் நிராகரிக்கவில்லை.

தைவான் தேர்தலை "போருக்கும் அமைதிக்கும்" இடையேயான போட்டியாக சீனா சித்தரித்தது.

சீனாவை ஆளும் கம்யூனிச அரசு, எட்டு ஆண்டுகளாக தைவானில் ஆட்சி செய்த லாயின் இறையாண்மைக்கு ஆதரவான ஜனநாயக முற்போக்குக் கட்சியை (DPP) எதிர்க்கிறது. தீவைச் சுற்றிலும் சீனா தனது இராணுவ நடமாட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது, இது இரு நாடுகளுக்கு இடையிலான சாத்தியமான மோதலின் அச்சத்தை அதிகரிக்கிறது.

வரலாறு படைத்த லாய்

தனது கட்சிக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அதிபர் பதவியை வென்றதன் மூலம் லாய் புதிய வரலாறு படைத்துள்ளார். எதிர்க்கட்சியினரே ஒப்புக்கொண்ட பிறகு அவர் தனது முதல் கருத்துகளில், இது ஒரு மீளமுடியாத பாதை என்று அடையாளம் காட்டினார்.

"நாடு சரியான பாதையில் முன்னோக்கி செல்லும். நாங்கள் பின்னோக்கிப் பார்க்க மாட்டோம்" என்று உலக ஊடகங்கள் முன் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

பின்னர் தைபே நகர தெருக்களில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களிடம் உரையாற்றிய லாய், தனது வெற்றியை ஜனநாயகத்தின் வெற்றியாகக் குறிப்பிட்டார்.

"நாங்கள் சரியானதை செய்துள்ளோம். வெளிப்புற சக்திகள் எங்கள் தேர்தலில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கவில்லை. எங்கள் அதிபரை நாங்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று நாங்கள் முடிவு செய்ததால் தான் இது சாத்தியமானது," என்று அவர் கூறினார். வாக்கெடுப்புக்கு முன்னதாக, தைவான், "சீனா இந்த செயல்முறையில் தலையிட முயற்சிக்கிறது" என்று குற்றம் சாட்டியது.

தைவான் - அமெரிக்கா vs சீனா

பட மூலாதாரம், Getty Images

லாய் சீனாவுக்கு கூறிய சேதி என்ன?

அதேநேரத்தில், "தற்போதைய நிலையை அப்படியே பேணுவார்" என்று எதிர்பார்க்கப்படுகிறது. "சுதந்திரம் அல்லது சீனாவுடன் ஐக்கியத்தை நாடுவதில்லை" என்ற அவர் "சீனாவின் அச்சுறுத்தல்களிலிருந்து தைவானைப் பாதுகாப்பதாக" உறுதியளித்தார்.

சீனாவை ஆத்திரமூட்டும் வகையில் தைவான் சுதந்திரத்தை ஆதரிப்பதாக கடந்த மாதங்களில் கூறிய லாய், ஆனாலும், கூட அதிபரானால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாட்டேன் என்று சமீபத்திய மாதங்களில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தைவான் சுதத்திரத்தை ஆதரித்தமைக்காக லாயை ஒரு 'பிரிவினைவாதி' என்றும் 'பிரச்னையை உருவாக்குபவர்' என்றும் சீனா வர்ணித்திருந்தது.

ஆனால் லாய், சீனாவிற்கும் ஒரு செய்தியைக் கூறினார்.

அவர் செய்தியாளர்களிடம், தற்போதுள்ள தடைகள் மற்றும் மோதல்கள் தொடர்பாக அதிகப்படியான உரையாடல்களை விரும்புவதாக கூறினார், சீனாவுடன் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுத்தார்.

தைவான் தேர்தல் முடிவு என்ன?

லாய் 40% வாக்குகளை பெற்றதால், பிரதான எதிர்க்கட்சியான கோமிண்டாங் (KMT) கட்சியைச் சேர்ந்த ஹூ யூ இ (Hou Yu-ih) ஐ விட நல்ல முன்னிலை பெற்றார். 2000ஆம் ஆண்டு முதல், தைவான் ஜனநாயக முற்போக்கு கட்சி (DPP) மற்றும் கோமிண்டாங் கட்சி (KMT) ஆகிய கட்சிகளுக்கே மாறிமாறி வாக்களித்துள்ளனர்.

தைவான் மக்கள் கட்சியைச் சேர்ந்த கோ வென்-ஜே, இளம் வாக்காளர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். அவர் நான்கில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றார்.

சனிக்கிழமையும் வாக்காளர்கள் புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்தனர். தைவான் ஊடக அறிக்கைகளின்படி, நாடாளுமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதன் மூலம் ஜனநாயக முற்போக்கு கட்சி அதன் பெரும்பான்மையை இழந்துள்ளது.

ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த அதிபர், எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்தும் நாடாளுமன்றம் ஆகியவற்றால் தைவானில் வரும் காலம் மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தைவான் - அமெரிக்கா vs சீனா

பட மூலாதாரம், Getty Images

சீனா-தைவான் உறவுகளில் என்ன மாற்றம் வரும்?

தற்போதைய துணைத் தலைவரும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளருமான வில்லியம் லாய் தைவானின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக, தைவானின் தற்போதைய அதிபரான சாய் இங்-வென்னை சீனா கடுமையாக விமர்சித்து வருகிறது.

அவரது ஆதரவாளர்கள் இதற்கு நேர்மாறாக வாதிடுகின்றனர். கேஎம்டி கட்சியைச் சேர்ந்தவர் அதிபர் பதவிக்கு வருவது தான் உண்மையான ஆபத்து என்று அவர்கள் கூறுகிறார்கள். சீனாவின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சூடான உறவுகளுக்கு தீர்வு காண மாட்டார்கள் என்றும் தைவானை ஒருங்கிணைக்கும் நிலையை உருவாக்குவார்கள் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

தைவான் பல காரணங்களுக்காக உலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான உறுதிப்பாட்டை நிரூபிக்கும் ஜனநாயகம் அங்கு உள்ளது.

மேலும், தைவானின் செமிகண்டக்டர் தொழிலுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது இடையூறுகள் ஏற்பட்டாலோ, நமது கணினிகள், தொலைபேசிகள், கார்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு வழங்கும் சிலிக்கான் சிப்கள் கிடைக்காது.

அமெரிக்க-சீனா உறவின் மையப் புள்ளிகளில் ஒன்றாக தைவான் விளங்குகிறது.

தைவான் - அமெரிக்கா vs சீனா

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா மற்றும் சீனா சவால் என்ன?

தைவான் தீவு தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து 161 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

1949 ஆம் ஆண்டில், உள்நாட்டுப் போரின் போது சீனாவில் உள்ள தேசியவாதக் கட்சியான கோமிண்டாங் (KMT) சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வியடைந்தபோது, அது தைவான் தீவுக்குப் பின்வாங்கி புதிய அரசாங்கத்தை அமைத்தது. அப்போதிருந்து, இந்த தீவு தனியாக ஆளப்பட்டது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, தைவான் சர்வாதிகாரத்திலிருந்து விலகி புதிய அரசியலமைப்புடன் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டது.

இங்குள்ள மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்த தீவை சீன நிலப்பரப்பில் இருந்து தனியாக இருப்பதாக கருதுகின்றனர்.

ஆனால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோ தைவான் மீதான கட்டுப்பாட்டை தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாகக் கருதுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் "ஒருங்கிணைத்தல்" நடக்கும் என்று பலமுறை கூறியும், அதை அடைய ராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை.

அத்தகைய இராணுவ நடவடிக்கையை தடுத்து நிறுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

ஜப்பான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகளை உள்ளடக்கிய தீவு நாடுகளின் சங்கிலியில் தைவான் முதல் தீவு ஆகும், அதனால்தான் இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமானது.

சீனா தைவானைக் கைப்பற்றினால், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமாக தனது அதிகாரத்தைச் செலுத்தி, குவாம் மற்றும் ஹவாய் போன்ற தொலைதூர அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று சில மேற்கத்திய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் சீனா தனது நோக்கம் முற்றிலும் அமைதிக்கானது என்று கூறுகிறது.

சீனா தொடர்ந்து அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, அது கிட்டத்தட்ட தினசரி தைவானுக்கு போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்பியது.

தைவானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் தனது கொள்கைகளை முடிவு செய்யும் போது சீனாவையும் அமெரிக்காவையும் மனதில் வைத்துக் கொள்வார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)