மின் வேலியில் சிக்கி பலியான குட்டி யானையை புதைத்த விவசாயி கைது - என்ன நடந்தது?

    • எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

எச்சரிக்கை: இந்த செய்தியில் உங்கள் மனதுக்கு சங்கடத்தை தரும் படங்கள், தகவல்கள் இருக்கலாம்.

குட்டியானை
படக்குறிப்பு, குழிக்குள் புதைக்கப்பட்ட யானையின் சடலத்தை கிரேன் மூலம் மீட்கும் ஊழியர்கள்

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை அருகே விவசாயி ஒருவர் அமைத்திருந்த மின்வெளியில் சிக்கி குட்டியானை ஒன்று இறந்துள்ளது. அதை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக குழி தோண்டி புதைத்த தந்தை மற்றும் இரண்டு மகன்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது?

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள அக்குபாய் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயியான எல்லப்பன். இவருடைய நிலத்திற்கு அடிக்கடி காட்டு பன்றிகள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இந்நிலையில் தமது நிலத்தில் பயிரிடப்பட்ட நெல்லை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் நிலத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்தார் எல்லப்பன்.

இதற்கிடையே, ராயக்கோட்டை அருகே ஊடே துர்க்கம் என்ற காப்புக்காட்டுப் பகுதியில் நடமாடிய யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை, எல்லப்பனின் நிலப்பகுதியில் நுழைய முற்பட்டபோது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.

குழி தோண்டி புதைப்பு

இதைத்தொடர்ந்து, நள்ளிரவில் யானைகள் பிளிரும் சத்தத்தை கேட்டு வெளியே வந்து பார்த்த எல்லப்பன், குட்டி யானை இறந்துபோனதை மறைக்க தமது நிலத்திலேயே குழியைத் தோண்டி அதை புதைத்ததாகக் கூறப்படுகிறது.

இருந்தபோதும், குட்டி யானை இறந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரியவரவே அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து திங்கட்கிழமை நடந்த விசாரணையில் எல்லப்பனும் நடந்த சம்பவத்தை விவரிக்கவே அவர் காட்டிய இடத்தில் குழியைத் தோண்ட நடவடிக்கை எடுத்தனர்.

நடந்த சம்பவம் தொடர்பாக வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி, ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் கொடுத்ததும் அவரும் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த யானையை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் இரவு நேரமாகி விட்டதால் யானையை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை மீண்டும் யானையின் உடலை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது.

கிரேன் மூலம் எடுக்கப்பட்டது

குட்டி யானை பலி

இதேபோல கோவையில் இருந்து சிறப்பு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினரும் யானையை உடற்கூரய்வுக்காக வந்தனர்.

அனைவரது முன்னிலையில் பொக்லைன் மூலம் குழி தோண்டப்பட்டது.

பிறகு கிரேன் மூலம் யானையின் உடல் கட்டப்பட்டு வெளியே தூக்கப்பட்டது. திறந்தவெளியிலேயே யானையின் பிரேத பரிசோதனை செய்தனர்.

அதன் முடிவில் யானை மின்வேலியில் சிக்கி இறந்தது தெரிய வந்தது.

பிறகு யானையின் உடல் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

விவசாயி மீது நடவடிக்கை

இதைத் தொடர்ந்து, யானை உயிரிழப்புக்கு காரணமான மின் வேலியை சட்ட விதிகளை மீறி அமைத்ததற்காகவும் யானையின் உடலை புதைத்து தடயத்தை அழித்த முயன்றதாகவும் குற்றம்சாட்டி விவசாயி எல்லப்பன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மகன்கள் முனிராஜ், சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

நடந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குட்டி யானை இறந்து கிடப்பதை பார்த்தவுடன் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உடனடியாக அதை பள்ளம் தோண்டி எல்லப்பன் புதைத்துள்ளார். யானை தந்தத்திற்காகவோ வேறு எதற்காகவோ அதை அவர்கள் கொல்லவில்லை என தெரிய வந்துள்ளது என்று கூறினார்.

தும்பிக்கையில் காயம்

குட்டி யானை பலி
படக்குறிப்பு, குட்டி யானை இறந்த சம்பவத்தில் வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட எல்லப்பன் மற்றும் அவரது இரண்டு மகன்கள்.

இறந்த யானைக்கு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அது ஒரு ஆண் யானை. அதன் வயது சுமார் நான்கிலிருந்து ஐந்து வயது வரை இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"இந்த விவகாரத்தில் தனி நபராகஎல்லப்பன் ஈடுபட்டிருக்க முடியாது என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவருடைய மகன்கள் சுப்பிரமணியமும் முனி ராஜு யானையை இழுத்துச் சென்று பள்ளத்தில் போட்டு மூடியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று கார்த்திகேயனி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: