மக்களவை இடைக்கால சபாநாயகர் நியமனம் - சபாநாயகர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்? - முழு விபரம்

மக்களவை சபாநாயகர்

பட மூலாதாரம், Sansad TV

படக்குறிப்பு, பா.ஜ.க எம்.பி. பர்த்ருஹரி மஹ்தாப் இடைக்காலச் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்
    • எழுதியவர், அம்ருதா துர்வே
    • பதவி, பிபிசி மராத்தி

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று, (ஜூன் 24ம் தேதி, திங்கட்கிழமை) தொடங்கியது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில், புதிய எம்.பி-க்கள் பதவியேற்ற பிறகு மக்களவை சபாநாயகரை நியமிப்பது மிக முக்கியமான பணியாகும்.

மக்களவை சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? இந்தப் பதவி ஏன் முக்கியமானது?

17-வது மக்களவையின் சபாநாயகராக பாஜக எம்.பி. ஓம் பிர்லா இருந்தார். ஆனால், முந்தைய மக்களவை சபாநாயகரின் பதவிக்காலம் புதிய மக்களவையின் முதல் அமர்வு வரை மட்டுமே இருக்கும்.

எனவே, 18-வது மக்களவையின் நடவடிக்கைகள் துவங்கியதும், முதலில் செய்ய வேண்டியது, இடைக்காலச் சபாநாயகரை தேர்ந்தெடுப்பது.

இடைக்காலச் சபாநாயகர் (பொறுப்பு) எம்.பி-க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதோடு, முழு நேர சபாநாயகர் நியமிக்கப்படும் வரை சபையை நடத்துகிறார். சபையின் மூத்த உறுப்பினர் இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்படுகிறார்.

இதன்படி, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் கேரள மாநிலத்தின் மாவேலிக்கரை தொகுதியின் எம்.பி.யுமான கொடிக்குனில் சுரேஷ் வலுவான தேர்வாக இருந்திருக்க வேண்டும்.

எட்டாவது தடவையாக எம்.பி-யாக உள்ள கொடிக்குனில் சுரேஷ் நான்காவது தடவையாக மாவேலிக்கரை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல வருட அனுபவத்தின் அடிப்படையில் சபையில் மிகவும் மூத்தவர் ஆவார்.

ஆனால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பா.ஜ.க எம்.பி. பர்த்ருஹரி மஹ்தாப்-ஐ இடைக்காலச் சபாநாயகராக நியமித்துள்ளார். அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குக் குடியரசு தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பர்த்ருஹரி மஹ்தாப் ஏழு முறை எம்.பி-யாக இருந்துள்ளார். இருப்பினும் காங்கிரஸும் அவரது நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. புதிய எம்.பி-க்களுக்கு மஹ்தப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

மக்களவை சபாநாயகர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்? அவரை பதவியிலிருந்து நீக்க முடியுமா?

பட மூலாதாரம், ANI

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், NARENDRAMODI/YT

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி

பிரதமர் மோதி என்ன பேசினார்?

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் நரேந்திர மோதி செய்தியாளர்களிடம் பேசினார்.

"இன்று பெருமைக்குரிய நாள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக நமது புதிய நாடாளுமன்றத்தில் இந்த பதவிப்பிரமாண விழா நடைபெறுகிறது. இதற்கு முன்பு வரை, பழைய அவையில் இந்த செயல்முறை நடந்து வந்தது,” என்றார்.

புதிய எம்.பி-க்களை பிரதமர் வரவேற்றார்.

அவர் கூறுகையில், “மூன்றாவது முறையாக அரசு அமைக்க அங்கீகாரம் வழங்கியதற்கு, நாட்டு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியை நடத்துவதற்குப் பெரும்பான்மை தேவை. ஆனால் நாட்டை நடத்த சம்மதம் மிக முக்கியம். அனைவரின் சம்மதத்துடன் பாரத அன்னைக்கு சேவை செய்வதே எங்கள் முயற்சியாக இருக்கும்,” என்றார்.

பிரதமர் மோதி தனது உரையில், 1975-ஆம் ஆண்டு, ஜூன் 25-ஆம் தேதி அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டார்.

“நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக ஆட்சி நடத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். இதனால், நமது பொறுப்பும் மூன்று மடங்கு அதிகரிக்கிறது,” என்றார் மோதி.

“இரண்டு முறை அரசாங்கத்தை நடத்திய அனுபவம் எங்களிடம் உள்ளது. இந்த ஆட்சியில் முன்பை விட மூன்று மடங்கு அதிகமாக உழைப்போம். இந்த புதிய தீர்மானத்துடன் நாங்கள் முன்னேறி வருகிறோம்,” என்றார்.

''எம்.பி.,க்களிடம் நாடு நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமாறு எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.”

“அவையில் விவாதம் நடக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கொந்தளிப்பை மக்கள் எதிர்பார்க்கவில்லை, மக்கள் கோஷங்களை விரும்பவில்லை. நாட்டிற்கு பொறுப்பான எதிர்க்கட்சி தேவை,” என்றார் மோதி.

ஓம் பிர்லா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்களவையின் சிறப்பு அமர்வில் உரையாற்றும் ஓம் பிர்லா.

மக்களவை சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

மக்களவையின் சபாநாயகர் அரசியலமைப்பின் 93-வது பிரிவின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். எம்.பி.க்கள் தங்களுக்குள் இருந்து இரண்டு எம்.பி-க்களை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கின்றனர்.

மக்களவை சபாநாயகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோட்டீஸ்களை உறுப்பினர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் நாளில், மக்களவை சபாநாயகர் தனிப்பெரும்பான்மையால் தேர்ந்தெடுக்கப்படுவார். அதாவது, அன்றைய தினம் மக்களவையில் இருக்கும் எம்.பி-க்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் யாருக்காக வாக்களிக்கிறார்களோ அவர் மக்களவையின் சபாநாயகராகிறார்.

இதைத் தவிர, மக்களவை சபாநாயகர் பதவியில் நீடிக்க, வேறு எந்த நிபந்தனையையும், தகுதியையும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஆனால் சபாநாயகராக இருப்பவருக்கு அவையின் செயல்பாடுகள், அதன் விதிகள், அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டங்கள் பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

அலுவல் சுமூகமாக நடைபெறுவதற்கு மக்களவை சபாநாயகர் பொறுப்பு. எனவே, இந்தப் பதவி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மக்களவை சபாநாயகர், நாடாளுமன்ற கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலையும் முடிவு செய்கிறார் மற்றும் சபையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால், விதிகளின்படி சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார்.

சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். அதனால்தான் மக்களவை சபாநாயகர் நடுநிலை வகித்து அலுவல்களை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை சபாநாயகர் எந்த ஒரு பிரச்னையிலும் தனது கருத்தை வெளிப்படுத்துவதில்லை.

நாடாளுமன்றத்தில் நடக்கும் எந்தவொரு வாக்கெடுப்பிலும் சபாநாயகர் பங்கேற்க மாட்டார். ஆனால் முன்மொழிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சம எண்ணிக்கையிலான வாக்குகள் இருந்தால், சபாநாயகர் வாக்களிக்க முடியும்.

மக்களவை சபாநாயகர் பல்வேறு குழுக்களை அமைப்பார். அவரது அறிவுறுத்தல்களின்படி இந்த குழுக்களின் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், யாரேனும் ஒரு உறுப்பினர் சபையில் தவறாக நடந்து கொண்டால், அவரை சபாநாயகர் இடைநீக்கம் செய்யலாம்.

2023-ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், மக்களவையில் பாதுகாப்பு மீறல் தொடர்பான விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோரியபோது, ​​தவறாக நடந்து கொண்டதாக மொத்தம் 141 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதில் 95 பேர் மக்களவையில் இருந்தும், 46 பேர் மாநிலங்களவையில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். “இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்,” என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

மக்களவை சபாநாயகர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்? அவரை பதவியிலிருந்து நீக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

துணை சபாநாயகர் பதவி

பொதுவாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் மக்களவை சபாநாயகராக நியமிக்கப்படுவார்கள். அதேசமயம் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும்.

இதுவரை மக்களவை சபாநாயகர் ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்படுவார், சுதந்திர இந்திய வரலாற்றில் இப்பதவிக்கு தேர்தல் நடந்ததில்லை.

இந்த முறை பா.ஜ.க-வுக்கு முழுப் பெரும்பான்மை கிடைக்காததால் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உதவியுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தது. அதனால், மக்களவை சபாநாயகர் பதவியை, பா.ஜ.க தன்னிடம் வைத்திருக்குமா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு வழங்குமா என்ற விவாதம் நடந்து வருகிறது.

16-வது மற்றும் 17-வது மக்களவையில் பா.ஜ.க-வுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தது. 16-வது மக்களவையின் சபாநாயகராக இருந்தவர் சுமித்ரா மகாஜன். இந்த மக்களவை துணை சபாநாயகராக அ.தி.மு.க அவைத் தலைவர் மு.தம்பிதுரை இருந்தார்.

17-வது மக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க-வின் ஓம் பிர்லா இருந்தார். ஆனால் அதன்பின் மக்களவையில் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறாததால் இந்தப் பதவி முழு காலத்திற்கும் காலியாகவே இருந்தது.

இந்த மக்களவையில் துணை சபாநாயகர் பதவியைப் பெறுவதற்கு ‘இந்தியா’ கூட்டணி தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

சுமித்ரா மகாஜன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுமித்ரா மகாஜனுடன் பிரதமர் மோதி

சபாநாயகராக இருந்த ஆளுங்கட்சியைச் சேராத தலைவர்கள்

மக்களவையில் முன்பு ஆளுங்கட்சியில் இல்லாத எம்.பி.க்களுக்கும் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

12-வது மக்களவையின் சபாநாயகராக தெலுங்கு தேசம் கட்சியின் ஜி.எம்.சி பாலயோகி இருந்தார், அப்போது பா.ஜ.க-வின் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.

பாலயோகி 13-வது மக்களவையின் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இப்பதவியில் இருக்கும்போதே ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார்.

அவருக்குப் பிறகு, 13-வது மக்களவையின் சபாநாயகராக சிவசேனா எம்.பி.மனோகர் ஜோஷி இருந்தார்.

இதுவரை வரலாற்றில் எம்.கே ஐயங்கார், ஜி. எஸ். தில்லான், பல்ராம் ஜாகர் மற்றும் ஜிஎம்சி பாலயோகி ஆகியோர் தொடர்ந்து இரண்டு மக்களவைகளின் சபாநாயகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஏழாவது மற்றும் எட்டாவது மக்களவையின் சபாநாயகராக பல்ராம் ஜாக்கர் மட்டுமே தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தார்.

காங்கிரஸ் தலைவர் நீலம் சஞ்சீவா ரெட்டி, சபாநாயகரின் நடுநிலை கொள்கையை பின்பற்றி, நான்காவது மக்களவையின் சபாநாயகராக நியமிக்கப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

மன்மோகன் சிங்கின் முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவை வழங்கிய நிலையில், மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி மக்களவையின் சபாநாயகரானார்.

பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்காவுடனான இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்த சர்ச்சை காரணமாக, அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதையடுத்து, மக்களவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யும்படி சாட்டர்ஜியை அக்கட்சி கேட்டுக் கொண்டது.

ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

2009 முதல் 2014 வரை 15-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த மீரா குமார், மக்களவையின் சபாநாயகராக பதவி வகித்த முதல் பெண்மணி ஆவார். அவருக்குப் பிறகு பா.ஜ.க-வின் சுமித்ரா மகாஜன் 16-வது மக்களவையின் சபாநாயகரானார்.

மக்களவை சபாநாயகர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்? அவரை பதவியிலிருந்து நீக்க முடியுமா?

பட மூலாதாரம், ANI

மக்களவை சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க முடியுமா?

மக்களவை சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கும் உரிமையை அரசமைப்புச் சட்டத்தின் 94-வது பிரிவு வழங்குகிறது.

50 சதவீதத்துக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலம் 14 நாட்களுக்கு முன்னறிவிப்பு கொடுத்து சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க முடியும்.

இதில், பெரும்பான்மை என்பது மக்களவையில் அன்றைய தினம் 50%-க்கும் அதிகமான எம்.பி-க்களைக் குறிக்கிறது.

இது தவிர, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 7 மற்றும் 8-இன் படி மக்களவை சபாநாயகரையும் நீக்க முடியும்.

சபாநாயகரே பதவி விலக விரும்பினால், அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)