கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: தலைவர்கள், பிரபலங்கள் இதுவரை கூறியது என்ன?

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 213 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 55 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள இந்தக் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தி.மு.க கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆகியோர் இதுவரை சொன்னது என்ன?

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர்
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்திற்கும் திமுகவினருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,” என்றார்.
"மெத்தனால் ஆந்திர பிரதேசத்திலிருந்து வந்ததாக சொல்கின்றனர். அதனால்தான் சி.பி.ஐ விசாரணை கோருகிறோம். காவல்துறையின் கவனத்திற்கு வராமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்காது," என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், @ANNAMALAI_K TWITTER
அண்ணாமலை, தமிழக பா.ஜ.க தலைவர்
இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மே, 2023-ஆம் ஆண்டு இதேபோன்று கள்ளச்சாராயம் அருந்தியதால் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 23 பேர் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். “தி.மு.க அரசாங்கத்தின் திறனற்ற நிர்வாகத்தால்,” இத்தகைய உயிரிழப்புகள் அதிகரிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு காரணமாகவே அரசு அலுவலகங்கள் இருக்கும் மையப்பகுதியிலேயே கள்ளச்சாராய விற்பனை நடந்திருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். உள்ளூர் காவல்துறைக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், X/Anbumani
அன்புமணி ராமதாஸ், தலைவர், பா.ம.க
“கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை தான். ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்டக் கள்ளச்சாராயச் சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு தி.மு.க-வினர் கொடுத்த ஆதரவு தான்,” என அன்புமணி ராமதாஸ் ஜூன் 20 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய விற்பனையில் கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜுக்கு தி.மு.க-வுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், கடந்தாண்டு மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான மருவூர் ராஜா என்பவருக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாக தெரிவித்துள்ள அன்புமணி, இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு தி.மு.க-வுடன் தொடர்பு இருப்பதாக அ.தி.மு.க, அதிமுக மற்றும் பா.ம.க கூறியுள்ளதை, திமுக மறுத்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் திமுகவினருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் ஆகியோர் கூட்டாக மறுத்துள்ளனர்.
பிரேமலதா, பொதுச் செயலாளர், தே.மு.தி.க

பட மூலாதாரம், DMDK PARTY / FACEBOOK
பிரேமலதா ஜூன் 19-ஆம் தேதி அன்று வெளியிட்ட அறிக்கையில், “போதை இல்லாத் தமிழகத்தை உருவாக்குவதை தனது லட்சியம் என சொல்லும் தமிழக முதல்வர், கள்ளச்சாராயத்தை தடுக்க கவனம் செலுத்துவதாகவே தெரியவில்லை. கஞ்சா விற்பனை இதுவரைக்கும் இல்லாத அளவு தமிழ்நாடு மிக மோசமான நிலையில் உள்ள இந்த காலகட்டத்தில், தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் என்று இருக்கும்போது, கள்ளச்சாராயமும் அதிகரித்துள்ளது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது,” என தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக், கஞ்சா, கள்ளச்சாராயம் இதுபோன்ற போதை பொருட்களிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றி தமிழக முதல்வர் சொன்ன வாக்குறுதிப்படி போதையில்லா தமிழகத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விஜய், தலைவர், தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், AGS
இச்சம்பவம் குறித்து ஜூன் 20-ஆம் தேதி விஜய் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது,” என்றார்.
"இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், கள்ளச்சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் கூறினார்.
நடிகர் சூர்யா

பட மூலாதாரம், FACEBOOK / SURIYA
நடிகர் சூர்யா இதுகுறித்து ஜூன் 21-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம்” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த 'விஷச்சாராயத்தைக்' குடித்து 22 பலியானார்கள் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள சூர்யா, இப்போது வரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக கூறியிருக்கிறார்.
‘மதுவிலக்குக் கொள்கை’ என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்து விடுவதாக விமர்சித்துள்ள சூர்யா, குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு முன்னுதாரணத் திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே அரசு செயல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.
“சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனங்கள்,” எனவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தி.மு.க-வின் கூட்டணி கட்சிகள் என்ன சொல்கின்றன?
செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கள்ளச்சாராய விற்பனையை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒருமுறை இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தொல் திருமாவளவன், தலைவர், வி.சி.க

பட மூலாதாரம், THIRUMA OFFICIAL FACEBOOK PAGE
பாதிக்கப்பட்டவர்கள் வீடு, அரசு வேலை போன்ற கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அவற்றை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். “தீவிரமான புலன் விசாரணையை மேற்கொண்டு, மெத்தனால் ‘மாஃபியா’ கும்பலைக் கைது செய்ய வேண்டும்,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை கைது செய்யப்படுகின்றனர். மீண்டும் அவர்கள் அதே தொழிலில் ஈடுபடுகின்றனர். இது காவல் துறைக்கும் குறிப்பாக உளவுத்துறைக்கும் தெரிகிறது. பெரிய வலைப்பின்னல் இதன் பின்னால் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே, தமிழகம் தழுவிய அளவில் கள்ளச்சாராயம் தொடர்பாக, குறிப்பாக மெத்தனால் புழக்கம் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும்,” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 24-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
“மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகள் உட்பட சிலரின் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்பதை அரசின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். கள்ளச்சாராய விற்பனையை ஒழித்துக்கட்டுவதில் அரசு நிர்வாகம் திறம்பட செயல்படவில்லை,” என கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேறு பல இடங்களிலும் செயல்பட்டு வரும் கள்ளச்சாராய, சட்டவிரோத போதைக் கும்பல்களை கண்டறிந்து, அவர்களின் சமூக விரோத செயலை அடக்கிட வேண்டும் என வலியுறுத்தி, சிபிஎம் சார்பில் ஜூன் 25-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இரா.முத்தரசன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட்
செய்தியாளர்களிடம் பேசிய இரா.முத்தரசன், “கள்ளக்குறிச்சி என்று இல்லாமல் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகின்றது," என தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












