போலிச் செய்திகளால் இந்த உலகம் நிரம்பிவிடுமா - மக்களை தவறாக வழிநடத்தும் இதற்கு என்னதான் தீர்வு?

வினேஷ் போகாட்

பட மூலாதாரம், Twitter

    • எழுதியவர், வினீத் கரே & ஸ்ருதி மேனன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்கள்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வந்த மல்யுத்த வீரர்களைக் கடந்த 28ஆம் தேதி டெல்லி காவல்துறை கைது செய்தபோது வினேஷ் போகாட்டின் இரண்டு விதமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

அந்தப் புகைப்படங்களில் வினேஷ் மற்றும் சங்கீதா போகாட் காவல்துறை வாகனத்தில் இருக்கின்றனர். அவர்களோடு மூன்று காவல்துறை அதிகாரிகளும் மற்ற நான்கு பேரும் இருக்கின்றனர்.

மதியம் 12.30 மணி அளவில் செய்தியாளர் மன்தீப் புனியா பதிவிட்ட புகைப்படத்தில் வினேஷும் சங்கீதாவும் இறுக்கமான முகத்துடன் இருந்தனர்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு ரியல் பாபா பனாரஸ் என்ற பெயர் கொண்ட ஒருவரது ட்விட்டர் பதிவில் இருவரும் சிரித்துக்கொண்டு இருப்பதையும், இருவரின் கன்னத்தில் குழி இருப்பதையும் பார்க்க முடிந்தது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

சில ட்விட்டர் பயனர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராகப் போராடும் மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

ஒரு ட்விட்டர் பயனர், இவர்கள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான டூல்கிட்டின் ஒரு பகுதியாகிவிட்டார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

பின்னர் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இந்தப் புகைப்படம் போலியானது என்றும் ஐடி விங்கை சேர்ந்தவர்கள் போலியான இந்தப் புகைப்படத்தை பரப்புவதாகவும் ட்விட்டரில் விளக்கமளித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

யார் இந்த வேலையைச் செய்தது?

இந்தப் புகைப்படத்தை யார் எடிட் செய்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

உண்மையான புகைப்படத்தில் சிரிப்பு சேர்க்கப்பட்டதாக உண்மை சரிபார்க்கும் இணையதளமான பூம் லைவ் தெரிவித்தது.

ஒருவரின் முகபாவனையை மாற்றும் ஃபேஸ்ஆப் செயலி மூலம் இவர்களின் உண்மையான படத்தை நாம் எடிட் செய்தபோது கிடைத்த புகைப்படம், இணையத்தில் வைரலான புகைப்படம் போலவே இருந்தது.

இதுகுறித்து கருத்து பெற வினேஷ் போகாட், சங்கீதா போகாட், பஜ்ரங் புனியாவை தொடர்புகொள்ள நாம் தொடர்ச்சியாக முயன்றும் முடியவில்லை. ஆனால், சங்கீதா போகாட் பிபிசிக்கு அனுப்பிய செய்தியில் மல்யுத்த வீரர்களிடயே காணப்பட்ட பயம் மற்றும் நிச்சயமற்றதன்மை காரணமாக காவல்துறை வாகனத்தில் வைத்து செல்ஃபி எடுத்ததாகக் கூறியிருந்தார்.

’’வினேஷ் மற்றும் சங்கீதா போகாட்டின் உண்மையான புகைப்படம் வெளியாகாமல் இருந்திருந்தால் போலியான படத்தை மக்கள் நம்பியிருப்பார்கள்,’’ என்கிறார் உண்மை சரிபார்ப்பவரான பங்கஜ் ஜெயின்.

'’இது போலிச் செய்தி உலகின் தொடக்கம். இதற்கு முன் சாதாரண மனிதர்களே போலியான படத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், தற்போது அது கடினமாக இருக்கும்,’’ என்றும் அவர் கூறுகிறார்.

Information Resilience மையத்தைச் சேர்ந்த புலனாய்வாளர் பெஞ்சமின் ஸ்ட்ரிக், இந்தியாவில் நீண்ட காலமாக போலிச் செய்திகளின் அச்சுறுத்தலைக் கண்காணித்து வருகிறார். மல்யுத்த வீரர்களின் போராட்டத்தைக் கவனித்து வரும் இவர், இந்த இரண்டு புகைப்படங்களையும் பார்த்தார்.

வைரலான புகைப்படத்தில் இருவரின் முகத்திலும் அனைத்து பற்களும் தெரியும் வண்ணம் ஒரே மாதிரியாக சிரிப்பு இருந்தது. இந்தப் புகைப்படத்தைப் போலி எனக் காட்டியதாகக் கூறுகிறார் பெஞ்சமின் ஸ்ட்ரிக்.

வினேஷ் மற்றும் சங்கீதாவின் பழைய புகைப்படங்களையும் நாம் பார்த்தோம். அதில் எதிலுமே அவர்கள் கன்னத்தில் குழி இல்லை.

இந்தச் சிறிய விஷயம் எது உண்மையான படம், எது போலி என அடையாளம் காட்டினாலும் சந்தையில் வந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் இதை மேலும் கடினமாக்கலாம்.

பிரிட்டனின் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்து ஆய்வு செய்துவரும் உதவிப் பேராசிரியர் சோஃபி நைட்டிங்கேல், சிக்கலான வகையில் எடிட்டிங் செய்யப்பட்டால் எது உண்மை, எது போலி என உறுதியாகக் கூற முடியாது என்கிறார்.

அச்சம்

மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் தரவுகள் மிக மலிவாகக் கிடைக்கின்றன. எனவே மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் போலிச் செய்திகள் சவாலாக மாறியுள்ளன.

இது மாதிரியான சூழல்களில் போலிச் செய்திகள், வீடியோக்களின் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன.

ஒருவர் கூறாத விஷயத்தைக் கூறியது போல உருவாக்க டீப்ஃபேக் (Deepfake) என்ற நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அது மாதிரியான வீடியோக்களை உருவாக்குவதற்கான மென்பொருள் இலவசமாகவும் மலிவாகவும் கிடைப்பது கவலைக்குரியது.

பல மென்பொருட்கள் இலவசமாக அல்லது மாதம் 5 அல்லது 8 அமெரிக்க டாலர்களுக்கு கிடைக்கின்றன என்று கூறும் பெஞ்சமின் ஸ்ட்ரிக், வருடத்திற்கு 50 அமெரிக்க டாலர் மதிப்பில் கிடைக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்தி நேர்த்தியான வீடியோக்களையும் புகைப்படங்களையும் உருவாக்க முடியும் என்கிறார்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் போலியான காணொளிகளைப் பரப்புவது எளிது. போலிச் செய்திகளைப் பரப்புபவர்களைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களையும் அதற்கு பொறுப்பாக்க வேண்டும் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்க அரசு சட்டம் கொண்டு வர உள்ளதாகவும், அதற்கான முதல் வரைவு மசோதா ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது முதல்முறை அல்ல

உலகில் மருத்துவத் துறை போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் வேளையில், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றிய விவாதமும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

"மனிதர்களைக் கட்டுப்படுத்த இயந்திரங்கள் வேண்டாம். அது பேரழிவை ஏற்படுத்தும்," என்கிறார் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் சங்கர் பால்.

செயற்கை நுண்ணறிவு மனித இருப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ஈலோன் மஸ்க்கும் கூறினார்.

போலிச்செய்திகளைப் பரப்ப வல்ல அபாயகரமான ஒன்றாக செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் கருதப்படுகிறது.

பாஜக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக 2020ஆம் ஆண்டில் டெல்லியில் நிறைய விவாதங்கள் நடந்தன.

குஜராத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராக டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் செய்திகளும் வந்தன.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்

பட மூலாதாரம், Twitter

இது தவிர, முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்பட்டதாக சில போலியான புகைப்படங்கள் அமெரிக்காவில் வெளியாகின.

செயற்கை நுண்ணறிவின் நன்மை மற்றும் தீமைகள் குறித்து மேற்கத்திய நாடுகளில் அதிகம் பேசப்படும் நிலையில், இந்தியாவிலும் அத்தகைய விழிப்புணர்வு உள்ளதா?

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை என்கிறார் பெஞ்சமின் ஸ்ட்ரிக்.

"சமூகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளைப் புரிந்துகொள்ள உதவுவது, எந்தச் செய்தியை நம்ப வேண்டும், எதை நம்பக்கூடாது என்பது குறித்து மக்கள் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் முக்கியமான படி" என்கிறார் உதவிப் பேராசிரியர் சோஃபி நைட்டிங்கேல்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: