50,000 ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம்

பட மூலாதாரம், DAN BARTLETT VIA NASA
- எழுதியவர், ஜான்வி மூலே
- பதவி, பிபிசி மராத்தி
வானில் ஒரு புதிய விருந்தாளி பூமியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பச்சை நிற வால் நட்சத்திரம் என அழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரம், உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏனெனில், இந்த வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்குகிறது.
இதற்கு முன்பு இந்த வால் நட்சத்திரம் வருவதற்கு முன் நியாண்டர்தால் மனிதர்கள் பூமியில் வாழ்ந்தனர். மேலும் பூமியை ஒருமுறை சுற்றி முடிக்கும் வரை நவீன மனிதர்கள் பரிணாம வளர்ச்சியடைந்தனர்.
அதனால்தான் இந்த வால்நட்சத்திரம் தனித்துவமானது என பெரும்பாலானோர் கருதுகின்றனர். வால் நட்சத்திரம் என்பது என்ன?
சூரிய குடும்பத்தின் எச்சங்களில் இருந்து உருவானவை வால் நட்சத்திரங்கள் என்று அமெரிக்க விண்வெளி முகமையான நாசா கூறுகிறது.
எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், விண்ணில் உள்ள பாறைகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் ஆன கோள வடிவிலானதுதான், வால் நட்சத்திரம்.
வால் நட்சத்திரங்கள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனை நெருங்கும்போது அவற்றுக்கு வால் போன்ற பகுதி தோன்றுகிறது. இது, வால் நட்சத்திரத்தில் உள்ள ஐஸ் கட்டி, சூரியனின் வெப்பத்தால் உருகுவதால் தோன்றுகிறது.
2020ஆம் ஆண்டில் வடக்கு அரைக்கோளத்தின் பல பகுதிகளில் காணப்பட்ட நியோவைஸ் வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்க முடிந்தது.
சில வால் நட்சத்திரங்கள் சூரியனை ஒருமுறை சுற்றிவர குறுகிய காலத்தை எடுத்துக்கொள்ளும். சில நட்சத்திரங்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாகும். நீண்டகால வரம்புடைய வால் நட்சத்திரங்கள் என இவை அழைக்கப்படுகின்றன.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பெரும்பாலான 'நீண்ட கால வால் நட்சத்திரங்கள்' சூரியனில் இருந்து 306 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனி மேகத்தில் உருவாகின்றன.

பட மூலாதாரம், Getty Images
பனிக்கட்டி துண்டுகளால் ஆன இத்தகைய பனி மேகம் (Oort Cloud), சூரியனைச் சுற்றி வரும் ஒரு போர்வை அல்லது மேல் ஓடு எனலாம்.
C/2022 E3 (ZTF) எனும் இந்த பச்சை நிற வால் நட்சத்திரமும் பனி மேகத்தில் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகளின் கூறுகின்றனர். இந்த வால் நட்சத்திரத்தை எங்கு காண்பது? எப்படி காண்பது?
பச்சை நிற வால் நட்சத்திரத்தை எங்கு காணலாம்?
இந்த வால் நட்சத்திரம் மார்ச் 2022ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. அதாவது, இது வியாழன் கோளுக்கு அருகில் செல்லும் வரை இந்த வால் நட்சத்திரம் மனிதர்களால் கண்டறியப்படவில்லை.
C/2022 E3 (ZTF) என்பது இந்த வால் நட்சத்திரத்தின் அறிவியல் பெயர். ஆனால், இது பச்சை நிறத்தைக் கொண்டிருப்பதால் பெரும்பாலானோர் இதை பச்சை வால் நட்சத்திரம் என்கின்றனர்.
இந்த வால் நட்சத்திரத்திற்கு பச்சை நிறம் எப்படி வந்தது? இந்த வால் நட்சத்திரம் அதிக டயட்டோமிக் கார்பனை (இரண்டு கார்பன் அணுக்களின் ஜோடி) கொண்டுள்ளது. இதனால் சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களால் இந்த வால் நட்சத்திரம் பச்சை நிறத்தில் ஒளிர்கிறது.
இன்னும் சில தினங்களில் சூரியனை நெருங்கும் இந்த வால் நட்சத்திரத்தின் புகைப்படத்தை இந்திய வான் இயற்பியல் மையம் வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
லடாக்கில் உள்ள ஹன்லே கிராமத்திலிருந்து இந்தப் புகைப்படங்களை இமாலயா சந்திரா தொலைநோக்கி படம்பிடித்துள்ளது.
வரும் பிப்ரவரி 2ஆம் தேதியன்று இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிப்ரவர் 10-12க்கு இடையில் செவ்வாய் கோளை அடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, இந்த வால் நட்சத்திரம் வடக்கு அரைக்கோளப் பகுதிகளில் தெரியும்.
”இந்த வால் நட்சத்திரம் சுமார் 4.2 கோடி கிமீ தொலைவில் வரும், இந்தத் தொலைவு, சூரியனிலிருந்து புதன் கிரகத்தின் தொலைவுக்கு ஒத்ததாகும்," என மும்பை நேரு கோளரங்கத்தின் இயக்குநர் அர்விந்த் பராஞ்ச்பே கூறுகிறார்.
வால் நட்சத்திரத்தை எப்போது காணலாம்?
வடக்கு கீழ்வானத்தில் இரவு 10 மணிக்கு இந்த வால் நட்சத்திரம் எழும்.
பிப்ரவரி 2 அன்று பூமிக்கு அருகே வரும்.
பிப். 10-12க்கு இடையில் புதன் கோளுக்கு அருகே செல்லும்.
தொலைநோக்கி மூலம் இதைக் காணலாம், ஆனாலும் தொலைவில் இருந்து இருட்டான பகுதியிலிருந்து வெறும் கண்களாலும் காண முடியும்.
”தற்போது இந்த வால் நட்சத்திரம் வடக்கு கீழ் வானத்தில் இரவு 10 மணிக்கு எழுகிறது,” என்று அர்விந்த் பரஞ்ச்பே கூறுகிறார்.
அவர், “காலை 11 மணி வரை இதைப் பார்க்க முடியும். இதை தொலைநோக்கிகள் வாயிலாகக் காணலாம்,” என்கிறார்.
தற்போதைக்கு ஒரு சிலர் மட்டுமே இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்த்துள்ளனர். ஏனெனில், இந்த வால் நட்சத்திரம் எதிர்பார்த்ததைவிட பிரகாசமாக இல்லை என்று பரஞ்ச்பே கூறுகிறார்.
“வால் நட்சத்திர விஞ்ஞானிகள் அவற்றை அடிக்கடி பூனைகளுடன் ஒப்பிடுகின்றனர். அவை எப்படி செயல்படும் என்பதே உங்களுக்குத் தெரியாது,” என்கிறார் அவர்.
எனினும், இருட்டான பகுதிகளிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தைக் காண நீங்கள் முயற்சி செய்யலாம்.
வால் நட்சத்திரங்கள் ஏன் முக்கியமானவை?
நமது சூரிய குடும்பத்தின் முதன்மையான அங்கமாக விளங்குபவை வால் நட்சத்திரங்கள்.
அதாவது, வால் நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வு சூரிய குடும்பத்தின் உருவாக்கம் பற்றிய தகவல்களை வழங்க முடியும். இது பிரபஞ்சத்தைப் பற்றிய பல ரகசியங்களை வெளிப்படுத்தும்.
வால் நட்சத்திரங்கள் குறித்த ஆய்வு அவசியம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், NASA/BILL DUNFORD
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவின் சிக்சுலுப் பகுதியில் ஒரு பெரிய எரிமலை சரிந்து, இன்றும் இருக்கும் ஒரு பெரிய பள்ளத்தை விட்டுச் சென்றது.
ஒரு கோட்பாட்டின் படி, இந்த வெடிப்பு டைனோசர்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது. சில விஞ்ஞானிகள் பூமியில் விழுந்த பெரிய பாறை ஒரு சிறுகோள் அல்லது வால் நட்சத்திரம் என்று நம்புகிறார்கள்.
வால் நட்சத்திரங்கள் பூமிக்கு தண்ணீரைக் கொண்டு வந்ததாகவும் அதிலிருந்து உயிர்கள் உருவானதாகவும் சிலர் நம்புகிறார்கள்.
சில அறியப்பட்ட வால் நட்சத்திரங்கள்
ஹாலி வால் நட்சத்திரம்: 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் இந்த வால் நட்சத்திரம் பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக உள்ளது. அதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். வெவ்வேறு கலாசாரங்கள் வெவ்வேறு காலங்களில் அதைப் பதிவு செய்ததாகத் தெரிகிறது.
ஷூமேக்கர்-லெவி: இந்த வால் நட்சத்திரம் வியாழனுடன் மோதி ஜூலை 1994இல் அழிந்தது.
ஹெல்-பாப் வால் நட்சத்திரம்: 1997ஆம் ஆண்டில் இந்த வால் நட்சத்திரம்தான் அன்றைய சூடான விவாதப்பொருள்.
டெம்பிள் டர்ட்டிள் வால் நட்சத்திரம்: 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் இந்த வால் நட்சத்திரம் விட்டுச் செல்லும் குப்பைகள் பூமியில் விண்கல் பொழிவை ஏற்படுத்துகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












