விண்வெளிப் படங்கள்: இனி எப்போதும் புவியில் இருந்து பார்க்க முடியாத வால் நட்சத்திர படத்துக்கு விருது

இந்த ஆண்டின் வானவியல் புகைப்படத்தின் விருது பெற்ற புகைப்படம்

பட மூலாதாரம், GERALD RHEMANN

படக்குறிப்பு, இந்த ஆண்டின் வானவியல் புகைப்படத்தின் விருது பெற்ற புகைப்படம்
    • எழுதியவர், ஜார்ஜினியா ரான்னார்ட்
    • பதவி, பிபிசி நியூஸ் காலநிலை & அறிவியல்

நம் பூமியில் இருந்து இனி என்றும் பார்க்கமுடியாத வால் நட்சத்திரத்தின் அரிய புகைப்படத்திற்கு மிகவும் உயரிய புகைப்பட விருது கிடைத்துள்ளது.

வால் நட்சத்திரம் லியோனர்ட்டின் வாலின் ஒரு பகுதி அதிலிருந்து பிரிந்து வருவதையும், அது சூரிய காற்றால் கொண்டு செல்லப்படுவதையும் இந்த படம் காட்டுகிறது.

2021 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வால் நட்சத்திரத்தை, பிறகு பூமியில் இருந்து சிறிது காலம் பார்க்கமுடிந்தது. ஆனால், இப்போது அது சூரிய குடும்பத்தில் இருந்து வெளியேறிவிட்டது.

லண்டனில் உள்ள 'தி ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச்' இந்த ஆண்டின் வானவியல் புகைப்படம் எடுக்கும் போட்டியை நடத்துகிறது. இந்த படத்தை வியக்கத்தக்க படம் என்று அழைத்தது.

இதற்காக சீனாவின் சிச்சுவானில் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு, இந்த ஆண்டின் சிறந்த இளம் வானியல் புகைப்படக் கலைஞருக்கான பரிசு வழங்கப்பட்டது.

இந்த புகைப்படங்கள் லண்டனில் உள்ள தேசிய கடல்சார் அருங்காட்சியகத்தில் செப்டெம்பர் 17ம் தேதி முதல் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

"ஒவ்வொரு ஒரு மணிநேரத்திற்கும் இந்த வால் நட்சத்திரம் வித்தியாசமாக காட்சியளிக்கும். இவை மிகவும் ஆச்சரியமூட்டும் விஷயங்கள்." என்று ஆஸ்திரியாவின் வியன்னாவைச் சேர்ந்த வெற்றி பெற்ற புகைப்பட கலைஞர் ஜெரால்ட் ரெமன் கூறுகிறார்.

இந்த புகைப்படம் 2021ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நமீபியாவில் உள்ள ஓர் ஆய்வகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

வால் நட்சத்திரத்தின் வால் துண்டிக்கப்படும் என்றும், அது வான்வெளியில் பிரகாசமான ஒளியை விட்டு செல்லும் என்பது அவருக்கு தெரியாது என்றார்,.

"இந்த படத்தை எடுத்தற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது எனது புகைப்பட எடுக்கும் பயணத்தில் சிறந்த படமாகும்," என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார்.

இந்த போட்டியின் நடுவர்களில் ஒருவரான வானியலாளர் டாக்டர் எட் ப்ளூமர், இந்த படம் வரலாற்றில் சிறந்த வால் நட்சத்திரத்தின் புகைப்படங்களில் ஒன்றாகும் என்றார்.

"ஒரு சரியான வானியல் புகைப்படம் என்பது அறிவியலையும் கலையையும் ஒன்றிணைத்த வகையில் இருக்கக்கூடியது. இது தொழில்நுட்ப ரீதியாக அதி நவீனமாகவும், அண்டத்தைப் பற்றிய பார்வையை அளிக்கக்கூடியதாக மட்டும் அல்லாமல், பார்வையாளர்களை பிரமிக்க வைக்கக்கூடியதாகவும் உணர்வுப்பூர்வமாக இணைப்பதாகவும் இருக்கிறது," என்று ராயல் மியூசியம்ஸ் கிரீன்விச்சின் உதவிக் கண்காணிப்பாளர் டாக்டர் ஹன்னா லியோன்ஸ் பிபிசி நியூஸிடம் கூறினார்.

உலகம் முழுவதிலுமிருந்து வந்த 3,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை நடுவர்கள் பார்வையிட்டனர்,

இது ஆண்ட்ரோமெடா கேலக்ஸி (Andromeda Galaxy). இந்த ஆண்டின் சிறந்த இளம் வானியல் புகைப்படக் கலைஞருக்கான விருதை வென்ற புகைப்படம்.

பட மூலாதாரம், YANG HANWEN, ZHOU ZEZHEN

படக்குறிப்பு, இது ஆண்ட்ரோமெடா கேலக்ஸி (Andromeda Galaxy). இந்த ஆண்டின் சிறந்த இளம் வானியல் புகைப்படக் கலைஞருக்கான விருதை வென்ற புகைப்படம்.

14 வயதான யாங் ஹன்வென் மற்றும் சோவ் ஜெஜென் இருவரும் இணைந்து, நமது பால்வழி மண்டலத்துக்கு பக்கத்தில் உள்ள ஆண்ட்ரோமெடா கேலக்ஸியைப் (Andromeda Galaxy) புகைப்படம் எடுத்தனர்.

இந்த படம் நமது விண்மீன் மண்டலத்திற்கு அருகில் உள்ள ஓர் விண்மீன் குழுவை ஆச்சரியமூட்டும் வண்ணங்களைக் காட்டுகிறது. "நமது விண்மீன் மண்டலத்திற்கு அருகில் உள்ள விண்மீன் குழுவை இந்த புகைப்படம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்," என்று யாங் ஹான்வென் கூறினார்.

இந்த ஆண்டின் இளம் வானியல் புகைப்படக் கலைஞர் என்ற பிரிவு,16 வயதுக்குட்பட்டவர்களுக்கானது.

இளம் புகைப்படக் கலைஞர்களின் மிகச்சிறந்த புகைப்படங்களை எடுக்கும் திறமையைக் கண்டு வியந்துபோனதாக டாக்டர் லியோன்ஸ் கூறுகிறார்.

மேலும் புகைப்படங்களைப் பார்க்க:

இந்த விருதில், அரோரே (Aurorae) பிரிவில் வெற்றிப் பெற்ற புகைப்படம்

பட மூலாதாரம், FILIP HREBENDA

படக்குறிப்பு, இந்த விருதில், அரோரே (Aurorae) பிரிவில் வெற்றிப் பெற்ற புகைப்படம்

ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஃபிலிப் ஹ்ரெபெண்டாவின் இந்தப் படம், ஐஸ்ட்ராஹார்ன் (Eystrahorn) மலைக்கு மேலே உள்ள உறைபனியான ஐஸ்லாந்தின் ஏரியில் பிரதிபலித்த வடமுனைச் சுடரொளியை (Northern Lights) காட்டுகிறது.

இந்த ஆண்டின் இளம் வானியல் புகைப்படக் கலைஞர் பிரிவில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற புகைப்புடம்

பட மூலாதாரம், PETER SZABO

படக்குறிப்பு, இந்த ஆண்டின் இளம் வானியல் புகைப்படக் கலைஞர் பிரிவில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற புகைப்புடம்

ஹங்கேரியின் டெப்ரெசன் என்ற பகுதியில் எடுக்கப்பட்ட இந்த நிலவின் புகைப்படத்திற்காக, இந்த ஆண்டின் சிறந்த இளம் வானியல் புகைப்படக் கலைஞராக பீட்டர் சாபோ பாராட்டுகளைப் பெற்றார்.

இந்த படம் நிலவின் மேற்பரப்பை தெளிவாக காட்ட உயர்தர செயலாக்கத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது பெரும்பாலான மக்கள் அறிந்த ஒன்றாக இருந்தாலும், மிகவும் அசாதாரணமாக காட்டப்பட்டுள்ளது.

நெபுலாவின் மையப்பகுதி - இந்த ஆண்டு விருதுகளில், நட்சத்திரங்கள் மற்றும் நெபுலா பிரிவில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற புகைப்படம்

பட மூலாதாரம், PÉTER FELTÓTI

படக்குறிப்பு, நெபுலாவின் மையப்பகுதி - இந்த ஆண்டு விருதுகளில், நட்சத்திரங்கள் மற்றும் நெபுலா பிரிவில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற புகைப்படம்

இந்த படத்தை ஹங்கேரியில் இருந்து பீட்டர் ஃபெல்டோட்டி எடுத்தார். IC 1805 என்பது பெரிய அளவிலான மின்னூட்டம் பெற்ற வாயு மற்றும் விண்மீன் தூசியின் ஒரு பகுதி. ஒரு வலுவான விண்மீன் வளிமப்பாய்வு (stellar wind) சுற்றியுள்ள பொருட்களை வெளிப்புறமாக வீசுகிறது. இது ஒரு வாயு மேகத்தில் குகை போன்ற வெற்று வடிவத்தை உருவாக்குகிறது.

"இருண்ட நெபுலாவை எந்த விதமான தெளிவாக படம் பிடிப்பது கடினம்," என்று டாக்டர் எட் ப்ளூமர் விளக்கினார்.

வானியல் புகைப்படங்கள் முக்கியமானவை. ஏனெனில் இது இரவு வானத்தை மனிதக் கண்ணால் பார்ப்பதன் மூலம் பார்க்க முடியாத அண்டத்தின் அம்சங்களை வெளிப்படுத்தியது என்றார்.

நட்சத்திரங்கள் & நெபுலா பிரிவில் வெற்றிப் பெற்ற படம்

பட மூலாதாரம், WEITANG LIANG

படக்குறிப்பு, நட்சத்திரங்கள் & நெபுலா பிரிவில் வெற்றிப் பெற்ற படம்

ஹெலிக்ஸ் நெபுலாவின் இந்தப் புகைப்படத்தை, சிலி நாட்டின் ரியோ ஹர்டாடோவில் உள்ள சிலிஸ்கோப் கண்காணிப்பகத்தில் வீடாங் லியாங் எடுத்துள்ளார்.

"முன்னோர்கள் எப்படி வானத்தில் நட்சத்திரங்களைப் பார்த்தார்கள் என்பதை சிந்திப்பதும், மேலும் பிரபஞ்சம் நம்மைத் திரும்பிப் பார்ப்பதாகக் கற்பனை செய்வதும் இதன் மூலம் எளிதாகிறது," என்று நடுவர் இமாத் அகமது கூறினார்.

சோலார் ட்ரீ - டிஜிட்டல் இன்னோவேஷன் பிரிவில் அன்னி மவுண்டர் பரிசு வென்ற படம்.

டிஜிட்டல் இன்னோவேஷன் பிரிவில் அன்னி மவுண்டர் பரிசு வென்ற புகைப்படம்

பட மூலாதாரம், PAULINE WOOLLEY

படக்குறிப்பு, டிஜிட்டல் இன்னோவேஷன் பிரிவில் அன்னி மவுண்டர் பரிசு வென்ற புகைப்படம்

பெரிய தொலைநோக்கிகள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைத்து, பாலின் வூலி எடுத்த இந்தப் புகைப்படம், இன்னோவேஷன் பிரிவில் பரிசை வென்றது.

ட்ரீ-ரிங் டேட்டிங் ( tree-ring dating) என்ற அடிப்படையைப் பயன்படுத்தி காலப்போக்கில் சூரியன் எவ்வாறு மாறுகிறது என்பதை இது காட்டுகிறது.

சிறந்த புதுமுகப் பிரிவினருக்கான சர் பேட்ரிக் மூர் பரிசை வென்ற புகைப்படம்

பட மூலாதாரம், LUN DENG

படக்குறிப்பு, சிறந்த புதுமுகப் பிரிவினருக்கான சர் பேட்ரிக் மூர் பரிசை வென்ற புகைப்படம்

ஒரு சாதாரண கேமராவைப் பயன்படுத்தி, சீனாவின் சிச்சுவானில் மிக உயர்ந்த சிகரமான மின்யா கொன்கா மலையின் மேலே இருந்து பால்வழி மண்டலம் தெரியும் வகையில் புகைப்படம் எடுத்தார் லுன் டெங்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: