மகாராஷ்டிர குகையில் கிடைத்த தனித்துவமான கற்கால சிற்பங்கள், கருவிகள்: சிறப்பு என்ன?

அகழ்வாராய்ச்சியின் போது பல சிறிய பெரிய கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன

பட மூலாதாரம், PARTH CHAUHAN/BBC

படக்குறிப்பு, அகழ்வாராய்ச்சியின் போது பல சிறிய பெரிய கல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன

மகாராஷ்டிராவில் இதுவரை அறியப்படாத நாகரீகத்தை சேர்ந்த பாறைச் சிற்பங்கள் சில ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு குகை இந்த வரலாற்றுக்கு முந்தைய கலைப்படைப்புகளை உருவாக்கியவர்கள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை குறித்தும் சில புரிதலைகளை நமக்கு அளிக்கிறது. இதுகுறித்து பிபிசி மராத்தியின் மயூரேஷ் கொன்னூர் செய்தி அளிக்கிறார்.

மேற்கு மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள கொலோஷி கிராமத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த குகையை, கடந்த ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய குகையில் பல கற் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது குறித்து மகாராஷ்டிராவின் தொல்லியல் துறைத் தலைவரான டாக்டர் தேஜாஸ் கார்கே கூறுகையில், "உலகில் எங்கும் இதுபோன்ற கலை வேலைப்பாடுகள் கொண்ட பாறைகளை நாம் காண முடியாது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த கலைப்பொருட்கள் நமது முன்னோர்கள் வாழ்ந்த விதம் பற்றி மேலும் அறிய உதவும் என்று நம்புகின்றனர்," என்றார்.

இந்த குகையில் அகழ்வாராய்ச்சி இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டன.

பட மூலாதாரம், SHARAD BADHE / BBC

படக்குறிப்பு, இந்த குகையில் அகழ்வாராய்ச்சி இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டன.

சிந்துதுர்க்கின் ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த குகை, அருகிலுள்ள பகுதிகளில் பாறை கலை வேலைப்பாடுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்வாராய்ச்சி பணிகள் இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டன. இதன் போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குகைக்குள் இரண்டு அகழிகளை தோண்டினர்.

நடு கற்காலத்தைச் சேர்ந்த பல பெரிய, சிறிய கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

"நுண் கற் கருவிகள் சுமார் 10,000 ஆண்டுகள் பழமையானவை. அதேசமயம் பெரிய கருவிகள் சுமார் 20,000 ஆண்டுகள் பழமையானவை," என்று கொங்கன் பெட்ரோகிளிஃப்களை ஆராய்ச்சி செய்து, அகழ்வாராய்ச்சி குழுவில் இருந்த ருதிவிஜ் ஆப்தே கூறுகிறார்.

தொல்பொருள்களின் விளிம்புகளில் இருக்கும் எச்சங்களை ஆய்வு செய்ய ரசாயன செயல்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் பார்த் சௌஹான் கூறுகிறார். இந்த கருவிகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதை தீர்மானிக்கவும் இது உதவும்.

"இந்தக் கற்காலக் கருவிகள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிய இரண்டு மாதங்கள் ஆகும். ஆனால், இந்தக் கலைப்பொருட்கள் 10,000 முதல் 48,000 ஆண்டுகள் பழமையானவை என்று இப்போது கூறலாம்," என்கிறார் அவர்.

குகையில் கண்டறியப்பட்ட நுண் கற்கருவிகள்.

பட மூலாதாரம், RUTVIJ APTE / BBC

படக்குறிப்பு, குகையில் கண்டறியப்பட்ட நுண் கற்கருவிகள்.

இந்த குகை கண்டுபிடிக்கப்பட்ட மகாராஷ்டிராவின் லேட்டரைட் (laterite) நிறைந்த கொங்கன் பீடபூமியும் வரலாற்றுக்கு முந்தைய கலையின் பொக்கிஷமாகும்.

இதற்கு முன்னர், ஆய்வாளர்கள் இங்குள்ள பல கிராமங்களில் மண்ணின் அடுக்குகளுக்கு அடியில் மறைந்து கிடந்த விலங்குகள், பறவைகள், மனித உருவங்கள் மற்றும் வடிவியல் உருவங்களாக இருந்த பாறைச் சிற்பங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

Presentational grey line
Presentational grey line

இதுவரை, சிந்து துர்க் மற்றும் அருகிலுள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள 76 கிராமங்களில் 132 இடங்களில் 1700 கல்வெட்டுகள் அல்லது பாறைச் சிற்பவேலைப்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

புனேவைச் சேர்ந்த கலை வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான சைலி பலாண்டே தாதர், இந்த வேலைப்பாடுகள் வரலாற்றுக்கு முந்தைய மனிதனின் வாழ்க்கை மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றிய சிறந்த நுண்ணறிவுகளை வழங்குகின்றன என்கிறார்.

ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பர்சு கிராமத்திற்கு அருகில் காணப்படும் மனித உருவத்தின் சின்னமான பாறை வேலைப்பாடுகளை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் பல கல்வெட்டுகள் (பாறை சிற்பவேலைப்பாடுகள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

பட மூலாதாரம், SHARAD BADHE / BBC

படக்குறிப்பு, மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் பல கல்வெட்டுகள் (பாறை சிற்பவேலைப்பாடுகள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

ஒரு பாறையில் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அது ஆண் உருவம் போல் தெரிகிறது. அது தன் இரு கைகளிலும் புலிகளையும், பிற வனவிலங்குகளையும் பற்றிக் கொண்டிருக்கிறது.

"இந்த சிற்பவேலைபாட்டில் ஓர் அற்புதமான சமச்சீர்மை (symmetry) உள்ளது. இது திறமையின் உச்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த படம் மனிதன் விலங்குகளுடன் பகிர்ந்து கொள்ளும் உறவையும் சித்தரிக்கிறது," என தாதர் கூறுகிறார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் செழித்து வளர்ந்த ஹரப்பா நாகரிகமும் மனிதன் விலங்குகளுடன் பகிர்ந்துகொண்ட நெருங்கிய உறவை சித்தரிக்கிறது என்று அவர் கூறுகிறார்.

"இந்த முத்திரைகளில் புலிகள், எருமைகள் போன்ற பெரிய விலங்குகள் மற்றும் விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களின் உருவங்கள் உள்ளன," என்று அவர் கூறுகிறார்.

இந்த வரலாற்றுக்கு முந்தைய பாறைச் சிற்பங்களை சுற்றியுள்ள மர்மங்கள் இன்னும் தீரவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் யுனெஸ்கோ இதனை உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்தால் இதை பல தலைமுறைகளுக்குப் பாதுகாக்க முடியும்.

கொங்கன் பகுதியில் உள்ள எட்டு பாறை சிற்பத் தலங்கள் ஏற்கனவே யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தலங்களுக்கான தற்காலிக பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த எந்த இடத்தையும் உலகப் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிப்பதற்கான முதல் படி இது.

காணொளிக் குறிப்பு, வேகமாக உருகப் போகும் 'அழிவுநாள்' பனிப்பாறை: கடல் மட்டம் எவ்வளவு உயரும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: