கற்கால மனிதர்கள் பிறருடன் பேச பயன்படுத்திய 'வழி' இதுதான்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மார்க் பேஜெல்
- பதவி, தி கான்வர்சேஷன்
கற்காலத்தில் மனிதர்கள் எப்படி பேசினார்கள்? - இது லண்டனைச் சேர்ந்த எட்டு வயது சுபமேயின் கேள்வி.

'க்யூரியஸ் கிட்ஸ்' (Curious Kids) என்பது 'தி கான்வர்சேஷன்' பகுதியில் உலகம் முழுவதும் இருந்து குழந்தைகள் எழுப்பும் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கும் தொடர்

கற்காலம் என்பது மிக மிக பழமையான காலத்தைக் குறிக்கிறது. கிட்டத்தட்ட 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வரை நீடித்தது கற்காலம்.
இந்த கற்காலத்தில் வாழ்ந்த மூதாதையர்கள் தங்களுக்கு தேவையான கருவிகளை கற்களை பயன்படுத்தி உருவாக்கியதால் இது கற்காலம் என அழைக்கப்படுகிறது. கற்காலம் தொடங்கிய பின்னர் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மைப் போன்ற ஹோமோ சேப்பியன்ஸ் என அழைக்கப்படும் மனிதர்கள் தோன்றினர்.


சில குரங்கினங்கள் பெரிய பாறைகளிலிருந்து கூர்மையான கற்களை செதுக்கி எளிமையான கருவிகளை உருவாக்க தொடங்கியபோது கற்காலம் ஆரம்பித்தது.
இந்தக் குரங்குகள் ஓரளவு நிமிர்ந்து நடக்கக் கூடியவை என்பதால், அவற்றின் கைகள் சுதந்திரமாக மற்ற வேலைகளை செய்வதற்கு ஏற்றதாக இருந்திருக்கும். இவை சிறிய மூளையை கொண்டிருந்தன. இவை மனிதக் குரங்கின் மூளையுடன் பெருத்த வித்தியாசங்களை கொண்டிருக்காது, மேலும் அவற்றால் பேச முடியாது.
முற்றிலும் நிமிர்ந்து நடக்கும் குரங்கினங்கள் கற்காலத்தின் பிற்பகுதியில் தோன்றின. இவற்றுக்கு ஹோமோ ஹேபிலிஸ் (சிறு வேலைகள் செய்யக்கூடிய மனிதர்கள்) அல்லது ஹோமோ எரெக்டஸ் (நிமிர்ந்த மனிதர்கள்) உள்ளிட்ட பெயர்கள் உள்ளன.
நம்மை போன்ற மனிதர்கள் தோன்றுவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பு, சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃப்ரிக்காவில் இந்த இனங்கள் வாழ்ந்தன. ஓரளவு நிமிர்ந்து நடக்கக்கூடிய, முன்பு குறிப்பிடப்பட்ட குரங்கினங்களைவிட பெரிய மூளைகளை இவை கொண்டிருந்தன, ஆனால் நம்மைவிட சிறிய மூளைகளையே கொண்டிருந்தன. நம்மைப் போன்று அவை அறிவில் சிறந்தவை அல்ல, மேலும் அவற்றால் ஒலி எழுப்ப முடிந்தாலும் பேச முடியாது.
சுமார் 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அதே சமயத்தில் வாழ்ந்த முதலாவதாக தோன்றிய நிமிர்ந்த குரங்கினத்தை விட, பெரிய மூளையை கொண்டிருந்த மூன்று இனங்கள் தோன்றின. இவை நியாண்டர்தால், டெனிசோவன்கள், மற்றும் ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தின் முந்தைய வடிவமான நமது மூதாதையர்கள் ஆகிய மூன்று இனங்களாகும்.

பட மூலாதாரம், Getty Images
நியாண்டர்தால் மற்றும் டெனிசோவன்கள் ஆஃப்ரிக்காவுக்கு வெளியே, ஐரோப்பா அடங்கிய யூரேஷியா என அழைக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்தன. டெனிசோவன்கள் இனம் குறித்து சிறிதளவே தகவல்கள் உள்ளன. ஆனால், ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால்களிடம் கற்களால் செய்யப்பட்ட கருவிகள் மட்டுமின்றி மர ஈட்டிகள் மற்றும் மான் போன்ற விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட சிறிய கருவிகள் சிலவும் இருந்தன.
பெரிய மூளைகளை கொண்டிருந்ததாலும் கற்களை தவிர்த்து மற்ற பொருட்களிலிருந்தும் கருவிகள் செய்யும் திறன் உடையது என்பதாலும் நியாண்டர்தால் மனித இனத்தால் பேச முடியும் என சிலர் கருதுகின்றனர். ஆனால், இது வெறும் யூகம் மட்டுமே. 40,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் மனித இனம் அழிந்து போனது.
நம்மைப் போன்ற மனிதர்கள்
ஆரம்பகால மனிதர்கள் ஆஃப்ரிக்காவில் வாழ்ந்தனர். சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதிகால ஹோமோ சேப்பியன் இனம், தற்போது நாம் அழைக்கும் நவீன மனிதர்களாக பரிணமித்தனர். நாம் இப்போது இருப்பது போன்றே நவீன மனிதர்கள் புத்திசாலியாகவும் நம்மை போன்றே மொழியை பயன்படுத்தி பேசும் திறன் வாய்ந்தவர்களாகவும் இருந்தனர். "ஹோமோ சேப்பியன்கள்" என்பதற்கு "விவேகமான மனிதர்கள்" என அர்த்தம்.
கற்காலத்தின் பிற்பகுதியில் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி உலகின் பிற பகுதிகளுக்கு பரவினர்.

ஆரம்பத்தில் 'ஹோமோசேப்பியன்' மூதாதையர்களும் கற்களை பயன்படுத்தியே கருவிகளை உருவாக்கினர். ஆனால், பேசும் திறன் கொண்ட அவர்கள் ஒருவருக்கொருவர் கற்பிக்க தங்கள் மொழியை பயன்படுத்தியிருக்கக்கூடும்.
காலங்கள் செல்லச் செல்ல அவர்கள் கற்கள், மரக்கட்டைகள், எலும்புகள், தோல் உள்ளிட்டவற்றின் மூலம் பலவித கருவிகளை செய்வதற்கு கற்றுக்கொண்டனர். ஆடைகள், காலணிகளை கொண்டிருந்த அவர்கள், தங்களுக்கென தங்கும் இடங்களையும் உருவாக்கினர். மற்றவர்களுடன் இணைந்து வேட்டையாடி உணவை உருவாக்கிக் கொண்டனர். 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கும் முன்பிருந்து நவீன மனிதர்கள் குகைகளின் சுவர்களில் ஓவியம் வரைய ஆரம்பித்தனர்.


இப்போது இருப்பதை விட மிகச்சில மொழிகளே கற்காலத்தில் இருந்திருக்கும். ஆனால், அப்போது இருந்த மொழிகள் நம்முடைய நவீன மொழிகளை போன்றதாகவே இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஜப்பானிய வார்த்தைகள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு வார்த்தைகளுடன் வேறுபட்டதைப் போன்று, அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் வித்தியாசமானதாக இருந்தாலும், பெயர்ச்சொல் மற்றும் வினைச் சொற்களுடன் கூடிய வாக்கியங்களை அவர்கள் பேசியிருப்பர்.
வேறுபட்ட மொழிகள்
வெவ்வேறு பழங்குடிகள் இடையே வெவ்வேறு மொழிகள் இருந்திருக்கும். நாம் எப்படி விடுமுறைக்கு வேறு நாடுக்கு செல்லும்போது அவர்களின் மொழியை புரிந்து கொள்வதில் நமக்கு கடினமாக இருக்கிறதோ, அதேபோன்று வேறு பழங்குடியிடம் பேசுவதற்கு கடினம் ஏற்பட்டிருக்கலாம்.
இப்போது இருப்பதை போல் அல்லாமல் அந்த மொழிகளில் சில வார்த்தைகளே இருந்திருக்கும். ஏனெனில், அவர்களுக்கு தொலைக்காட்சிகள், கார்கள் அல்லது கணினிகள் போன்ற வார்த்தைகளுக்கான தேவை இல்லை. ஆனால், நம்மைப் போன்று இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நவீன மனிதர்கள் எண்ணும் பழக்கத்தைக் கொண்டிருக்கலாம். "தாய்", "தந்தை", "சகோதரி", "சகோதரன்" போன்ற உறவுமுறைகளுக்கு வார்த்தைகள் இருந்திருக்கும்.
விலங்குகள், தாவரங்களுக்கு பெயர்கள் இருந்திருக்கும். திட்டங்களை வகுப்பதற்கும் உதவி கோரும் வார்த்தைகள், நன்றி செலுத்தும் வார்த்தைகள் இருந்திருக்கும். மேலும், ஒவ்வொருவருக்கும் பெயர் இருந்திருக்கும்.

பட மூலாதாரம், SPL
நாம் பேசும் பல விஷயங்களை ஆரம்பகால நவீன மனிதர்கள் பேசியிருக்கக்கூடும். அதாவது என்ன சாப்பிடுவது, அவர்களுடைய நண்பர்கள் குறித்து பேசியிருப்பர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் குறித்து பேசியிருக்கலாம். குழந்தைகள் ஒருவருக்கொருவர் இணைந்து விளையாடியிருப்பர். இன்று குழந்தைகள் செய்வதுபோன்று எப்போதும் பேசிக்கொண்டே இருந்திருக்கலாம். ஒருவொருக்கொருவர் அவர்கள் பாடல்களை பாடியிருக்கலாம்.
அவர்கள் கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்களாக இருக்கலாம், ஆனால், பேச்சுத்திறனை பொறுத்தவரையில் அவர்கள் நவீனமானவர்கள்.
பிரிட்டனில் உள்ள ரீடிங் பல்கலைக்கழகத்தில் பரிணாம உயிரியல் பிரிவு பேராசிரியராக உள்ளார்.
'தி கான்வர்சேஷனில் வெளியான இக்கட்டுரை, கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்துடன் இங்கே மறுதயாரிப்பு செய்யப்பட்டுள்ளது. அசல் கட்டுரையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













