மணிப்பூர் வன்முறையின் விளைவுகளை அனுபவிக்கும் சாமானிய மக்கள்- கள நிலவரம்

- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர், மணிப்பூர்
மணிப்பூரின் சமீபத்திய வன்முறையின் விளைவு இது.
சொந்த வீட்டை இழப்பதன் வலி என்ன என்பது பசந்தா சிங்கின் கண்களில் தெளிவாகத் தெரிகிறது.
பசந்தா தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மணிப்பூரின் சைகுல் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அங்கு அவர் மளிகை கடை நடத்தி வந்தார்.
மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை வெடித்தபோது தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்ற அவர் தன் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
தலைநகர் இம்ஃபாலின் பங்கேய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிவாரண முகாமின் ஒரு மூலை மட்டுமே கடந்த பல நாட்களாக, அவர்களின் வசிப்பிடமாக மாறியுள்ளது.
வீட்டை விட்டு ஓடும்போது உடலில் அணிந்திருந்த ஆடைகளும் சில நகைகளும் மட்டுமே இந்தக் குடும்பத்தின் எஞ்சிய சேமிப்பு.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கை திடீரென அழிந்து போனதன் வலி, அவர்கள் முகத்தில் தெளிவாகத் தெரிகிறது.
“நாங்கள் சைகுலில் வாழ்ந்தபோது, எங்கள் பிள்ளைகளிடம் எல்லாம் இருந்தது. அவர்களிடம் சைக்கிள், பொம்மைகள், புத்தகங்கள் இருந்தன. இங்கு வந்ததில் இருந்து என் மகன், ’அப்பா, நான் கால்பந்து விளையாடப்போக வேண்டும், என் ஷூ எங்கே என்று கேட்கிறான். என் சிறிய பொம்மை கார் எங்கே என்று கேட்கிறான். திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறான். என் இதயம் வலிக்கிறது,” என்று பசந்தா சிங் கூறுகிறார்.
'இது உள்நாட்டுப் போர்'

பசந்தா மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர், அவர் வாழ்ந்த சைகுல் பகுதியில் குகி பழங்குடியினர் அதிகம் உள்ளனர்.
வன்முறை தொடங்கிய உடனேயே தனது குகி நண்பர்கள் சிலர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக அவர் கூறுகிறார்.
"நாங்கள் ஓடத்தானே வேண்டும், உள்நாட்டுப் போர் நிகழ்கிறது. எங்களால் சாமான்கள் எதுவும் கொண்டு வர முடியவில்லை. என் மகனின் செருப்புகளை கூட என்னால் கொண்டு வர முடியவில்லை. எந்த ஆடை அணிந்திருந்தோமோ அவற்றுடன் வந்து விட்டோம்.” என்று அவர் குறிப்பிட்டார்.
பசந்தா சிங் சோகத்தாலும் கவலையாலும் சூழப்பட்டுள்ளார்.
“இரண்டு குழந்தைகளுக்கு நான் எப்படி கல்வி அளிப்பேன். சம்பாதிக்க எந்த ஆதாரமும் இல்லை. பணமும் இல்லை. ஒரு வீடு கூட இல்லை. எவ்வளவு காலம் இங்கே இருப்போம்? இங்கே தங்கவில்லை என்றால் எங்கே போவது? நாள் முழுவதும் இதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர்.
வன்முறை தொடங்கியபோது தனது கடையை பூட்டியதாகவும், ஆனால் கோபமடைந்த கும்பல் பூட்டை உடைத்து தனது கடையை சூறையாடியதாகவும் பசந்தா கூறுகிறார்.
பசந்தா சிங் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ள நிவாரண முகாமில் சுமார் 200 பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
இவர்களுக்கு போர்வைகள், விரிப்புகள், பாய்கள், உடைகள் மட்டுமின்றி உணவுப் பொருட்களும், மருந்துகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
“துப்பாக்கிச் சண்டை எங்களுக்கு வேண்டாம். எங்கள் வாழ்வில் நிறைய இழப்புகள் நடக்கின்றன. மிகவும் கஷ்டப்படுகிறோம்,” என்று பசந்தா சிங் கூறினார்.
'எங்கள் கிராமம் எரிக்கப்பட்டது'

பசந்தா உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய அதே சைகுல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் பி.கின்லால் தனது குடும்பத்தினருடன் தஞ்சம் அடைந்துள்ளார்.
கின்லால் இந்திய ராணுவத்தில் இருபது வருடங்கள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.
தனது கிராமம் எரிக்கப்பட்டதாகவும் அதனால் நிவாரண முகாமில் தங்க நேர்ந்ததாகவும் அவர் கூறுகிறார்.
“நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியவுடன், அந்த மக்கள் இருபது நிமிடங்களில் உள்ளே நுழைந்தனர். அதன் பிறகு கிராமத்தை எரிக்க ஆரம்பித்தனர்,” என்று பி கின்லால் கூறுகிறார்.
கிராமத்திலிருந்து தப்பிய கின்லால் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு நாள் காட்டில் ஒளிந்து கொண்டனர்.
“வீடு எரிக்கப்பட்ட பிறகு எங்களுக்கு வேறு எந்த ஆதரவும் இல்லை. பின்னர் ராணுவம் எங்களை இங்கு அழைத்து வந்தது,” என்றார் அவர்.
பசந்தா சிங்கின் குடும்பத்தைப் போலவே, பி கின்லாலின் குடும்ப உறுப்பினர்களும் வீட்டை விட்டு ஓடியபோது எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை.
"நாங்கள் அணிந்திருந்த உடைகளுடன் காட்டுக்குள் ஓடிவிட்டோம்,” என்று அவர் கூறினார்.
“இங்கே தூங்குவது சிரமமாக உள்ளது. சாப்பாட்டு பிரச்சனை உள்ளது. குழந்தைகள் அழுகிறார்கள். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அவருக்குக்கொடுக்க மருந்து இல்லை. தாயின் உயிர் பறிபோகுமோ அல்லது குழந்தையின் உயிர் போய்விடுமோ என்று தெரியவில்லை. அரசு என்ன பார்த்துக் கொண்டிருக்கிறது? நாங்கள் வெளிநாட்டவர்களா?,” என்று கின்லால் வினவினார்.
குகி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் கின்லால். மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தன் வீட்டை எரித்ததாக அவர் கூறுகிறார்.
“அரசு எங்கள் பெற்றோர். இதில் யாருடைய தவறு, என்ன காரணத்திற்காக இந்த சண்டை நடந்தது என்பதை அரசு பார்க்க வேண்டும். எதற்காக வீடு எரிந்தது, எதற்காக கிராமம் எரிக்கப்பட்டது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமானியர்கள் கஷ்டப்பட்டிருக்கக் கூடாது.” என்றார் அவர்.
அரசு தனது மக்களைக் கவனிக்காமல், மக்களை சாவதற்கு விட்டுவிட்டால், பிறகு எப்படி அமைதி ஏற்படும் என்று கின்லால் வினவினார்.
“மக்களின் இதயங்களில் பழிவாங்கும் உணர்வு ஏற்படும்,” என்கிறார் அவர்.
வன்முறை வெடித்தது ஏன்?

மணிப்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்துள்ளனர்.
மாநிலத்தின் செல்வாக்கு மிக்க மெய்தேயி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையே இந்த வன்முறைக்கு முக்கியக் காரணம் என்று நம்பப்படுகிறது.
மணிப்பூரில் உள்ள மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், மெய்தேயி சமூகத்திற்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் குகி பழங்குடி மக்கள்.
மெய்தேயி சமூகம் ஏற்கனவே வளமும், செல்வாக்கும் கொண்டதாக உள்ளது என்றும், அவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கினால், பழங்குடியினருக்கு கிடைக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் குறைவது மட்டுமல்லாமல், பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலமும் படிப்படியாகக் ஆக்கிரமிக்கப்படும் என்றும் பழங்குடியினர் கூறுகின்றனர்.
மே 3ஆம் தேதி சுராசந்த்பூரில் மெய்தேயி சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த தகராறு, வன்முறை மோதலாக மாறியது.
மணிப்பூரின் மலைப் பகுதிகளில், குகி பழங்குடியின மக்கள் அதிகமாகவும், மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கின்றனர். இதேபோல், இம்ஃபால் பள்ளத்தாக்கில், குகி சமூக மக்களை விட மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.
குகி மற்றும் மெய்தேயி சமூகங்களின் கிராமங்கள் ஒன்றுக்கொன்று சிறிது தொலைவில் அமைந்துள்ள பல பகுதிகளும் உள்ளன.
வன்முறை தொடங்கியவுடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், எந்த சமூகம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அந்த சமூகம் குறைந்த எண்ணிக்கையிலான சமூகத்தைக் குறிவைத்தது.
இதன் விளைவாக, மெய்தேயி மற்றும் குகி ஆகிய இரு சமூகத்தினரின் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாயின.
வன்முறை அதிகரித்ததால், மெய்தேயி ஆதிக்க பகுதிகளைச் சேர்ந்த குகி பழங்குடியினரும், குகி ஆதிக்க பகுதிகளைச் சேர்ந்த மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
நிலைமை மோசமடைந்து வருவதைக் கண்டு, மாநிலத்தில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டபோது, அவர்கள் இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.
இப்போது இந்த ஆயிரக்கணக்கான மக்களை அவர்களது வீடுகளுக்கு திரும்ப அழைத்துச் செல்வது நிர்வாகத்தின் முன் பெரும் சவாலாக உள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் வாகனங்களில் அடைக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும் காட்சிகளை மாநிலத்தின் பல பகுதிகளில் பார்க்க முடிகிறது.
சுராசந்த்பூரில் கள நிலவரம்

இந்த வன்முறை தொடங்கிய சுராசந்த்பூரில் இன்னும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இருபத்தி ஆறு வயதான சின்லியன்மோய்க்கு சுராசந்த்பூரில் நடந்த வன்முறையின்போது காலில் தோட்டா பாய்ந்தது.
“என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மணிப்பூரில் நிலைமை நன்றாக இல்லை. இங்கே நாங்கள் பிரவாசி(வெளியாள்) என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் நாங்கள் பிரவாசி அல்ல. எங்கள் முன்னோர்கள் இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். பழங்குடிகளுக்கு எதிரான பாகுபாடு எப்போதும் இருந்து வருகிறது. ஆனால் இப்போது அது அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
சுராசந்த்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் நாற்பது பேருக்கு குண்டு காயங்கள் இருந்ததாக இங்குள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் புல்லட் காயங்களால் இறந்தனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரான நியாங்கோய்சிங் மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல முயன்றபோது ஏற்பட்ட குண்டு காயங்களால் உயிரிழந்தார்.
அவரது சகோதரரான போமிங்தாங், தனது சகோதரியை இழந்த துக்கத்தில் உள்ளார்.
“மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருக்கிறது, மத்தியிலும் பாஜக ஆட்சி இருக்கிறது. இந்த வன்முறையை ஆரம்பத்திலேயே நிறுத்தியிருக்கலாம். இந்தப் படுகொலைகளை ஒரே நாளில் தடுத்து நிறுத்தியிருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சுராசந்த்பூரில் பெரும்பாலும் குகி பழங்குடியினர் வாழ்கின்றனர். இந்த வன்முறைக்கு மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மறுபுறம், மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குகி பழங்குடியினருக்கு எதிராக அதே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் உண்மை எங்கோ மறைந்துவிட்டது. பழங்குடி சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத சமூகங்களுக்கு இடையே பல தசாப்தங்களாக இருந்த அவநம்பிக்கையின் இடைவெளி இந்த வன்முறையால் ஆழமடைந்துள்ளது என்பது நிதர்சனம்.
ஆயுதங்களுடன் இரவு முழுவதும் ரோந்து

இம்ஃபால் நகரத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள புகாவோ பகுதியில் இந்த அவநம்பிக்கையின் ஒரு காட்சி காணக்கிடைத்தது.
இங்கு இரவு வந்தவுடன் மெய்தேயி சமூகத்தினர் ஆயுதங்களுடன் ஒன்று கூடுகிறார்கள்.
இங்குதான் தௌனோஜாம் ரபியை சந்தித்தோம்.
“குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரவில் எங்களைத் தாக்குவார்கள் என்று நாங்கள் பயப்படுகிறோம். அதனால்தான் எங்கள் வீடுகள் எரியாமல் காப்பாற்ற இங்கு வந்துள்ளோம். எங்களுக்கு அதிக பாதுகாப்பு இல்லை. ஆனால் எங்கள் வீடுகளை காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இந்த நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் மேலும் பல உயிர்கள் பலியாகும்,” என்று அவர் கூறினார்.
மணிப்பூரில் வன்முறை உச்சத்தில் இருந்த நேரத்தில் பல இடங்களில் காவல் நிலையங்களில் இருந்த அரசு ஆயுதங்களை மக்கள் கொள்ளையடித்ததாக சில செய்திகள் வந்தன.
புகாவோ பகுதியில் இரவு முழுவதும் தங்கள் கிராமத்தை காத்துக்கொண்டிருந்த மெய்தேயி மக்கள், காவல் நிலையங்களில் இருந்து ஆயுதங்களை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.
“எங்கள் கிராமங்கள் தாக்கப்பட்டபோது, எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நிர்வாகத்திடம் கெஞ்சினோம். ஆனால் யாரும் வரவில்லை. எனவே ஆயுதம் ஏந்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நீங்கள் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் அல்லது உங்கள் ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள் என்று நாங்கள் போலீஸாரிடம் சொன்னோம்,” என்று பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஒருவர் தெரிவித்தார்.
தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே ஆயுதங்களை கொள்ளையடித்துள்ளதாகவும், அரசு தங்கள் பாதுகாப்பை உறுதி செய்தால் இந்த ஆயுதங்களை திருப்பித்தர தயார் என்றும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
“எங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இருக்கவில்லை. எங்கள் அருகில் காவல் நிலையம் உள்ளது. போலீஸ் இங்கு வரவில்லை. சண்டையை போலீஸ் நிறுத்தியிருக்கலாம். போலீசார் அதை செய்யவில்லை,” என்று புகாவோவில் வசிக்கும் டபிள்யூ ஓபன் சிங் கூறுகிறார்.
அச்சம் நிறைந்த சூழல்

மாநிலத்தின் பல பகுதிகளில் அச்சச் சூழல் நிலவுகிறது. மக்கள் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள், பரஸ்பர நம்பிக்கையின்மை தெளிவாகத் தெரிகிறது.
இம்ஃபாலின் லாங்கோல் பகுதியில் பல சமூகங்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இன்று அங்கு பதற்றத்துடன் கூடிய அமைதி நிலவுகிறது. இந்தப் பகுதியில் பாடசாலை ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், சில வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன.
தங்கள் பகுதியில் ஏன் வன்முறை ஏற்பட்டது என்பதை இந்த மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்த நேரத்திலும் தங்கள் வீடுகள் குறிவைத்து தாக்கப்படலாம் என இவர்கள் அஞ்சுகின்றனர்.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் சாதி அல்லது சமூகத்தின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி வீட்டு வாசல் கதவுகளில் ஒட்டியுள்ளனர்.
இப்படி சாதியை அறிவிப்பதன் மூலம் ஒருவேளை தங்கள் வீடுகளைக் காப்பாற்ற முடியும் என்றும், கும்பல் தாக்குதல் நடத்தினால் சாதியின் பெயரைப் படித்தபிறகு வீட்டை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடக்கூடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
'குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்'

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து உண்மையைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் அரசு கூறியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு இழப்பீடும் அறிவித்துள்ளது.
“யாரும் சண்டையையோ மோதலையோ விரும்பவில்லை. நாங்கள் தேவைக்கு அதிகமாகவே அனுபவித்துவிட்டோம். இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மக்களுக்கும் சொந்தமான ஏராளமான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன,” என்று சுராசந்த்பூரில் உள்ள குகி மாணவர்கள் அமைப்பின் தலைவர் சன்சாங் வைஃபாய் தெரிவித்தார்.
அதே நேரத்தில், சமீபத்திய நிகழ்வுகளால் பழங்குடி சமூகங்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது.
“முக்கிய பிரச்சனை நிலம். இது தவிர மணிப்பூரில் பழங்குடியினரிடம் பாகுபாடு காட்டப்படும் விஷயமும் முக்கியமானது. ஆதிக்கம் செலுத்தும் மெய்தேயி சமூகத்தில் இருந்து முற்றிலும் பிரிந்து செல்ல வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் எங்களுக்கு தனி நிர்வாகம் கிடைக்கும்,” என்று ‘தி ரிஸர்ச் அண்ட் ப்ரிசெர்வேஷன் ஆஃப் ஸோ ஐடெண்டிடீஸ்’ அமைப்பின் தலைவர் கின்ஸா வோல்சோங் தெரிவித்தார்.
இத்தனைக்கும் மத்தியில், பசந்தா சிங், பி கின்லால் போன்ற ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு ஏன் இப்படி நேர்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
“எங்கள் தவறு என்ன. நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. இந்த சண்டையை சீக்கிரம் முடியுங்கள். எங்களைப் போன்றவர்கள் அவர்கள் தரப்பிலும் இருப்பார்கள்,” என்று பசந்தா சிங் கூறுகிறார்.
மறுபுறம், "இரு தரப்பிலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று பிகின்லால் கேட்டுக்கொண்டார்.
நிச்சயமற்றதன்மை நிறைந்த எதிர்காலம் மற்றும் நீதி கிடைக்குமா? ஆயிரக்கணக்கான மக்களின் மனதில் இந்த எண்ணங்கள்தான் இப்போது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








