சிங்கத்தின் ராஜதந்திரங்கள் அதன் கோட்டையிலேயே தகர்ந்தது ஏன்? புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே எங்கே?

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐபிஎல் போட்டி நடக்கும் அனைத்து மைதானங்களிலும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய மைதானத்தில் முதலிடமாக இருப்பது சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ரசிகர்கள்தான். அதிலும் குறிப்பாக சிஎஸ்கே ஆட்டமாக இருந்தால், அதிலும் தோனி களமிறங்கினால், ரசிகர்களின் விசில் சத்தம், கரவொலி செவிப்பறையை கிழித்துவிடும் அளவுக்கு இருக்கும்.

ஆனால், இவை எல்லாமே நேற்றைய போட்டியின்போது கடைசி சில ஓவர்களில் காணாமல் போய்விட்டன.

ஏனென்றால், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் பேட்டர் ஸ்டாய்னிஸ் ஒட்டுமொத்த சேப்பாக்கம் ரசிகர்களையும் தனது ஆட்டத்தால் மவுனமாக்கிவிட்டார்.

லக்னெளவில் வைத்து மட்டுமல்ல, சிங்கத்தை அதன் கோட்டையிலேயே சந்தித்து, வீழ்த்துவோம் என்று சொல்லாமல் சொல்லி சிஎஸ்கே அணியை வீழ்த்தி கடினமான வெற்றியை பெற்றுள்ளது லக்னெள அணி.

சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே அணியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இங்கு வந்து சிஎஸ்கே அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்பது கடந்த கால போட்டியின் புள்ளிவிவரங்கள் மூலம் அறியலாம். இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் சந்தித்த முதல் தோல்வியாகும். அது மட்டுமல்லாமல் கடந்த 5 நாட்களுக்குள் லக்னெள அணியிடம் 2வது முறையாக சிஎஸ்கே அணி தோற்றுள்ளது.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம், Getty Images

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 39-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்தது. 211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னௌ அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் லக்னெள அணியின் அதிகபட்ச சேஸிங் என்ற சாதனைய பதிவு செய்தது.

புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே சரிவு

இந்த வெற்றியின் மூலம் லக்னெள அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட் 0.148ஆக உயர்ந்துள்ளது.

இந்தத் தோல்வியால் 4வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி 5வது இடத்துக்கு சரிந்துள்ளது. 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் சிஎஸ்கே, உள்ளது. தோற்றாலும், அதன் நிகரரன்ரேட் பெரிதாகக் குறையாமல், 0.415 என்ற ரீதியில் இருக்கிறது.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம், Getty Images

ஸ்டாய்னிஸின் அதிரடி

லக்னெள அணியின் வெற்றிக்கு முதல் முக்கியக் காரணம் ஸ்டாய்னிஸின் அற்புதமான பேட்டிங் மட்டும்தான். 63 பந்துகளைச்சந்தித்த ஸ்டாய்னிஷ் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை நிறைவு செய்து 124 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் 56 பந்துகளில் சதம் அடித்ததற்குப் போட்டியாக ஸ்டாய்னிஸும் 56 பந்துகளில் சதம் கண்டார்.

எந்த ராஜதந்திரமும் பலிக்கவில்லை

இந்த சீசனில் லக்னெள அணிக்காக 3வது வீரராகக் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்யத் தொடங்கி அதன்பின் களத்தில் நங்கூரமிட்டு, சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக மாறிவிட்டார். ஸ்டாய்னிஸை வெளியேற்ற பல உத்திகளை கேப்டன் கெய்க்வாட்டும், தோனியும் பயன்படுத்தியும் அவரை அசைக்கக் கூட முடியவில்லை.

கடைசி 5 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 74 ரன்கள் தேவைப்பட்டது. சிஎஸ்கே போன்ற வலிமையான பந்துவீச்சு வைத்திருக்கும் அணிகள், தோனியை அணியில் வைத்திருக்கும்போது, பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எதிரணியை வீழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது, எளிதாக டிபெண்ட் செய்துவிடும் எனக் கணிக்கப்பட்டது.

ஆனால், சிஎஸ்கேயின் அனைத்து திட்டங்களையும் நிகோலஸ் பூரன் மற்றும் தீபக் ஹூடாவின் உதவியால் ஸ்டாய்னிஸ் உடைத்து எறிந்து சேப்பாக்கத்தை நிசப்தமாக்கிவிட்டார். பூரனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 70 ரன்களும், ஹூடாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 65 ரன்களும் சேர்த்து ஸ்டாய்னிஷ் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம், Getty Images

ஆட்டம் எங்கு திரும்பியது?

ஷர்துல் தாக்கூர் வீசிய 16-வது ஓவரில் இருந்துதான் ஆட்டம் லக்னெள அணி கரங்களுக்குத் திரும்பியது. அதுவரை சிஎஸ்கே அணி களத்தில் ஆதிக்கம் செய்து, தங்களுக்குத்தான் வெற்றி என மிதந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்த ஓவரில் இருந்துதான் ஆட்டம் மெல்ல சிஎஸ்கே கரங்களில் இருந்து நழுவியது.

கடைசி 5ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 74 ரன்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாக்கூர் 16-வது ஓவரை வீசினார். களத்தில் ஸ்டாய்னிஷ், பூரன் இருந்தனர். ஸ்ட்ரைக்கில் இருந்த பூரன், ஷர்துல் ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார்.

பதிரணா வீசிய 17-வது ஓவரில் பூரன் க்ளீன் போல்டாகி 34 ரன்களில் வெளியேற ஆட்டம் பரபரப்பானது. அந்த ஓவரில் லக்னெள அணிக்கு 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி 3 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது.

முஸ்தபிசுர் வீசிய 18-வது ஓவரில் ஹூடா ஒரு சிக்ஸரும், ஸ்டாய்னிஸ் ஒரு பவுண்டரி உள்பட 15 ரன்களை லக்னெள அணி சேர்த்தது. கடைசி 12 பந்துகளில் லக்னெள வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. 19-ஆவது ஓவரை பதிரணா வீசிய நிலையில் அந்த ஓவரில் ஹூடா 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம், Getty Images

3 பந்துகளில் 15 ரன்கள்

கடைசி 6 பந்துகளில் லக்னெள வெற்றிக்கு 17ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை முஸ்தபிசுர் வீச, ஸ்ட்ரைக்கில் ஸ்டாய்னிஷ் இருந்தார். முஸ்தபிசுர் வீசிய முதல் பந்தில் லாங்ஆன் திசையில் ஸ்டாய்னிஷ் சிக்ஸர் விளாசி ரசிகர்களை அமைதியாக்கினார். 2வது பந்தில் ஸ்டாய்னிஸ் பவுண்டரி அடிக்க சேப்பாக்கமே அதிர்ச்சியில் உறைந்தது.

கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 3-ஆவது பந்து ஸ்டாய்னிஷ் பேட்டில் பட்டு தேர்டுமேன் திசையில் பவுண்டரியானது. அந்த பந்தையும் முஸ்தபிசுர் நோபாலாக வீசவே 5 ரன்கள் லக்னெளவுக்கு கிடைத்தது. கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு லக்னெள வெற்றிக்கு 2 ரன்கள் தேவை. ஸ்டாய்னிஷ் பைன்லெக் திசையில் பவுண்டரி அடித்து லக்னெள அணிக்கு நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை பரிசளித்தார்.

சிஎஸ்கே அணிக்கு எதிராக சேஸிங்கில் கடைசி ஓவரில் 17 ரன்களை அடித்த செய்த 2ஆவது அணியாக லக்னெள மாறியது. இதற்கு முன் 2020ம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் கடைசி ஓவரில் 17 ரன்களை சேஸிங் செய்திருந்தது.

லக்னோ அணி கடைசி 8 ஓவர்களில் மட்டும 113 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கின்போது 13 முதல் 20 ஓவர்களில் 113 ரன்களை இதற்குமுன் மும்பை அணி மட்டும்தான் 2021ல் சிஎஸ்கே அணிக்கு எதிராகச் சேர்த்திருந்தது. அதன்பின் தற்போது லக்னெள அணி சேர்த்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கு எதிராக சேஸிங்கில் ஸ்டாய்னிஸ் அடித்த 124 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் தனிநபர் பேட்டரின் அதிகபட்ச ஸ்கோராகும்.இதற்கு முன் 2011ல் மொஹாலில் பஞ்சாப் வீரர் பால் வால்தாட்டி 120 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 211 ரன்கள் சேஸிங்தான் அதிகபட்சமாகும். இதற்கு முன் 2012ல் ஆர்சிபிக்கு எதிராக 206 ரன்களை சிஎஸ்கே சேஸ் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை லக்னெள முறியடித்துவிட்டது.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம், Getty Images

ஸ்டாய்னிஸ் வெற்றியை சாத்தியமாக்கியது எப்படி?

லக்னெள அணி ஐபிஎல் தொடர் முழுவதும் 3-ஆவது இடத்தில் சரியான பேட்டர் கிடைக்காமல் தடுமாறி வந்தது. பலமுறை தீபக் ஹூடாவை களமிறக்கியும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இந்த ஆட்டத்தில் டீகாக் விரைவாக ஆட்டமிழக்கவே, ஆங்கர் ரோலுக்காக 3வது இடத்தில் ஸ்டாய்னிஷை களமிறக்கியது லக்னெள அணி.

இந்தப் போட்டிக்கு முன்புவரை லக்னெள அணியின் 3வது வரிசை பேட்டரின் சராசரி ரன் 9.33, ஸ்ட்ரைக் ரேட் 101 ஆக மட்டுமே ஐபிஎல் தொடரில் இருந்தது. ஆனால், ஸ்டாய்னிஷ் 3வது வீரராகக் களமிறங்கினாலும், டீகாக் விரைவாக ஆட்டமிழந்ததால், தொடக்க ஆட்டக்காரர் போல் மாறி செயல்பட வேண்டியதிருந்தது.

லக்னெள அணிக்காக 3வது வரிசை பேட்டராக ஸ்டாய்னிஷ் முதல்முறைாயக இந்த ஆட்டத்தில் களமிறங்கினார். இந்த வரிசையில் ஸ்டாய்னிஸ் களமிறங்கி சற்றுகூட தடுமாறாமல், மிகவும் நேர்த்தியாக ஷாட்களை ஆடினார். நிதானமான ஆட்டத்தை கையில் எடுத்து, நேரம் செல்லச் செல்ல அதிரடிக்கு மாறினார்.

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணிக்காக ஸ்டாய்னிஷ் பலமுறை 3-ஆவது வீரராகக் களமிறங்கி விளையாடிய அனுபவம், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்தபோது, 3வது வீரராகக் களமிறங்கிய அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ஸ்டாய்னிஷ் 16 பந்துகளில் 11 ரன்கள் என்றுதான் இருந்தார்.

ஆனால், அணியின் ஸ்கோர், ரன்ரேட்டைப் பார்த்து, அதிரடியாக ஆடிய ஸ்டாய்னிஷ் 26 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 30 பந்துகளில் 50 ரன்கள் என 56 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்.

இந்தப் போட்டிக்கு முன்புவரை பதிரணா ஓவரை ஒருமுறை மட்டுமே ஸ்டாய்னிஸ் எதிர்கொண்டிருந்தார். இதனால் பதிரணாவின் பந்துவீச்சு ஆக்சன், பந்து ரிலீஸ் ஆகும் ஸ்டெயில் ஆகியவற்றை கணித்து ஆடுவதில் ஸ்டாய்னிஸுக்கு தொடக்கத்தில் சற்று குழப்பம் இருந்தது. ஆனால் பதீராணா ஓவரை பின்னர் சமாளித்து ஆடி 12 பந்துகளில் 15 ரன்களை ஸ்டாய்னிஷ் சேர்த்தார்.

தோல்விக்குப் பிறகு கெய்க்வாட் கூறியது என்ன?

தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ இந்த தோல்வியை ஜீரணிக்கவே கடினமாக இருக்கிறது. லக்னெள அணியினர் கடைசியில் சிறப்பாக ஆடினர். 13-ஆவது ஓவர்வரை எங்கள் கரங்களில் ஆட்டம் இருந்தது, ஆனால் ஸ்டாய்னிஷ் அதை பறித்துக்கொண்டார். பனிப்பொழிவும் சேர்ந்து எங்களுக்கு பாதகமாக மாறியது. கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

சிஎஸ்கே - லக்னௌ

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே சறுக்கியது எங்கே?

சிஎஸ்கே அணியின் 210 ரன்கள் ஸ்கோர் உயர்வுக்கு இரு பேட்டர்கள் மட்டும்தான் காரணம். முதலாவதாக கேப்டன் கெய்க்வாட் அடித்த 60 பந்துகளில் (108), 2வதாக ஷிவம் துபேயின் 66 ரன்கள்(27பந்துகள்) ஆகியவைதான். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரும் ஜோடி சேர்ந்த பின்புதான் சிஎஸ்கே ஸ்கோர் உயரத் தொடங்கியது.

மற்ற பேட்டர்களான ரஹானே(1), டேரல் மிட்ஷெல்(11), ஜடேஜா(16) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கெய்க்வாட் இதுவரை சதம் அடித்த 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ஜடேஜாவை மீண்டும் 4-ஆவது வரிசையில் களமிறக்கி சிஎஸ்கே கையை சுட்டுக்கொண்டது. ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல் இதுவரை ஒரு போட்டியில்கூட பெரிதாக ஸ்கோர் செய்யாதது சிஎஸ்கேவுக்கு பெரிய ஷாக்.

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிதாக நெருக்கடி தரும் வகையில் பந்துவீசவில்லை. தீபக் சஹர் 2 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட் வீழ்த்தினார். அதன்பின் அவருக்கு ஓவர்கள் வழங்கப்படவில்லை. மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும், ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளனர். அதிகபட்சமாக முஸ்தபிசுர், ஷர்துல் இருவரும் ஓவருக்கு 14 ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்துவீச்சிலும் ஜடேஜா, மொயின் அலி ஓரளவுக்குபந்துவீசிய நிலையிலும் அவர்களுக்கு 2 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

சேஸிங்கின்போது, பனிப்பொழிவு லேசாக இருந்தது ஆடுகளத்தை லக்னெள பேட்டர்களுக்கு இன்னும் இலகுவாக மாற்றியது. பந்துகள் பேட்டர்களின் பேட்டுக்கு எளிதாக வரத் தொடங்கியது சேஸிங்கை எளிதாக்கியது. அது மட்டுமல்லாமல் பனிப்பொழிவால் பந்துவீச்சாளர்கள் பந்தை இறுக்கமாகப் பிடித்து பந்துவீசுவதும் கடினமாக இருந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)