விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு - நடவடிக்கை எடுக்க முடியுமா?

மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.
படக்குறிப்பு, மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் பாதுகாவலர்களால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆகஸ்ட் 26 அன்று நடிகர் விஜய் உள்பட 10 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்தவித விசாரணையும் இல்லாமல் அழுத்தம் காரணமாக தவெக தலைவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துவிட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இதனை காவல்துறை மறுத்துள்ளது.

நடிகர் விஜய் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையால் என்ன நடக்கும்?

மதுரை மாவட்டம் பாரபத்தியில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடந்து வருவதற்கான நடைபாதை (Ramp walk) ஒன்று அமைக்கப்பட்டது.

குன்னம் தாலுகாவில் சந்தோஷம் என்பவர் தனியார் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
படக்குறிப்பு, குன்னம் தாலுகாவில் சந்தோஷம் என்பவர் தனியார் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

மாநாட்டு மேடையில் இருந்து சுமார் அரை கி.மீ தொலைவு அமைக்கப்பட்ட இந்தப் பாதையில் தவெக தலைவர் விஜய் நடந்து வந்தார். அவரின் பாதுகாப்புக்கு பத்துக்கும் மேற்பட்ட பவுன்சர்கள் உடன் வந்தனர்.

விஜய் நடந்து செல்லும் பாதையில் தொண்டர்கள் ஏறிவிடாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் அதையும் மீறி, விஜய்க்கு அருகே செல்வதற்காக சில தொண்டர்கள் தாவிக் குதித்து ஓடிச் சென்றனர். அப்போது ஒருசிலரை மேடையில் இருந்து பாதுகாவலர்கள் தூக்கி எறிந்த காட்சிகள், இணையத்தில் பரவியது.

'அவ்வாறு தூக்கி வீசப்படும் நபர் என்னுடைய மகன் தான்' எனக் கூறி, குன்னம் தாலுகாவில் பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷம் என்பவர், தனியார் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

மாநாட்டில் தனது மகனுக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பாக சில குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்திருந்தார். ஆனால், இதனை சந்தோஷத்தின் மகன் சரத்குமார் மறுத்தார். அது நான் இல்லை என்றும் தனது தாயாரை சிலர் வற்புறுத்திப் பேச வைப்பதாகவும் தெரிவித்தார்.

புகார் மனுவில் என்ன உள்ளது?

பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த சந்தோஷம் மற்றும் அவரது மகன் சரத்குமார் .
படக்குறிப்பு, பெரம்பலூர் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் புகார் அளித்த சந்தோஷம் மற்றும் அவரது மகன் சரத்குமார்.

இந்தநிலையில், செவ்வாய்க் கிழமையன்று (ஆகஸ்ட் 26) பெரம்பலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தோஷம் மற்றும் அவரது மகன் சரத்குமார் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ' மாநாட்டின் முன்வரிசையில் விஜய் நடந்து வரும் பாதையில் அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது விஜய் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஆர்வத்தில் நடைமேடையின் மீது ஏறினேன்' எனக் கூறியுள்ளார்.

அப்போது தன்னை பவுன்சர்கள் சிலர் தூக்கி எறிந்ததாகக் கூறியுள்ள சரத்குமார், 'இதனால் எனது மார்பு மற்றும் வலது விலா எலும்பில் அடிபட்டு வலி அதிகமாகிவிட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

'தற்போது வரை தவெக நிர்வாகிகள் யாரும் உதவிக்கு வராததால் விஜய் மீதும் பாதுகாப்புக்கு வந்த பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் தனது மனுவில் கூறியிருந்தார்.

'தூக்கி வீசப்பட்டது நான் தான்'

புகார் கொடுத்த பிறகு வெளியே வந்த சரத்குமாரிடம், 'தூக்கி வீசப்பட்ட நபர் தான் அல்ல' என மறுத்துப் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்தேன். உடல் வலி அதிகமாகிவிட்டதால் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது நான் தான்" எனக் கூறினார்.

என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்றார் சரத்குமார்
படக்குறிப்பு, என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்றார் சரத்குமார்

சிலரின் தூண்டுதல் காரணமாக புகார் மனு அளிக்க வந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்துப் பதில் அளித்த சரத்குமார், "என்னை யாரும் வற்புறுத்தவில்லை. நான் சுயநினைவுடன் தான் புகார் அளிக்க வந்தேன்" என்றார்.

சரத்குமார் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல்நிலையத்தில் தவெக தலைவர் விஜய், அடையாளம் தெரியாத பவுன்சர்கள் என பத்து பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மீது பிஎன்எஸ் சட்டப் பிரிவு 296(B), 182(2), 115(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடத்தில் திட்டுதல், தாக்குதல் நடத்துவது ஆகியவற்றை இப்பிரிவுகள் குறிக்கின்றன.

அதேநேரம், சம்பவம் நடந்த இடம் மதுரை மாவட்ட எல்லைக்குள் வருவதால் மாநாடு நடைபெற்ற இடத்தின் எல்லைக்குள் வரும் கூடகோவில் காவல்நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுவிட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார், குன்னம் காவல்நிலைய ஆய்வாளர் கண்ணன்.

'இரவெல்லாம் செல்போன் அழைப்புகள்'

விஜய் நடந்து வருவதற்கான நடைபாதை (Ramp walk) ஒன்று அமைக்கப்பட்டது.
படக்குறிப்பு, விஜய் நடந்து வருவதற்கான நடைபாதை (Ramp walk) ஒன்று அமைக்கப்பட்டது.

விஜய் மீது புகார் அளித்த சரத்குமாரிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. "மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்" எனக் கூறிய அவரது சகோதரி சரண்யா, "புகார் கொடுத்த பிறகு இரவெல்லாம் செல்போனில் அழைப்புகள் வந்து கொண்டே உள்ளன. கடுமையாக அச்சுறுத்துகின்றனர்" எனக் கூறுகிறார்.

தாக்குதலுக்கு ஆளானதாக புகார் மனுவில் கூறியுள்ள சரத்குமார், சமீபத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். "மதுரையில் வேலைக்கான இண்டர்வியூ நடப்பதாகக் கூறிவிட்டு சென்றார். ஆனால், மாநாட்டுக்கு விஜயைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்" என்கிறார், சரண்யா.

"மாநாட்டுக்கு போய் வந்த பிறகு இரண்டு நாள்களாக எனது தம்பியால் எழுந்திருக்க முடியவில்லை" எனக் கூறும் சரண்யா, "எங்களிடம் சொல்லாமல் மருந்துக் கடையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்" என்கிறார்.

சரத்குமார் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர் உள்ளனர். "அப்பா இல்லாததால் அம்மா தான் விவசாய வேலை பார்த்து வளர்த்து வருகிறார். மாநாட்டை நடத்துகிறவர்கள், தங்களின் பாதுகாப்பில் உறுதியாக உள்ளனர். ஆனால், தொண்டர்களை சக மனிதர்களாக நினைக்கவில்லை" எனவும் சரண்யா தெரிவித்தார்.

காவல்துறையில் புகார் அளித்த பிறகு தனது தாயை சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் பலரும் அவதூறாக விமர்சிப்பதாகக் கூறும் சரண்யா, "என் தம்பியை கண் முன்னால் தூக்கி வீசுவதைப் பார்த்து ஆதங்கப்பட்டு என் அம்மா பேசினார். இதனை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை" என்கிறார்.

"நானும் விஜய் ரசிகை தான். என் தம்பியின் உயிர் எங்களுக்கு மிகவும் முக்கியம். எங்களை விமர்சித்துப் பதிவிடுவதை தவெக நிர்வாகிகள் நிறுத்துமாறு அக்கட்சித் தலைமை அறிவுறுத்த வேண்டும்" எனவும் சரண்யா குறிப்பிட்டார்.

'அழுத்தத்தில் வழக்குப் பதிவு' - சி.டி.ஆர்.நிர்மல்குமார்

தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

பட மூலாதாரம், CTR Nirmalkumar

படக்குறிப்பு, தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

தவெக தலைவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"எங்களுக்கு இன்னமும் முதல் தகவல் அறிக்கையின் நகல் வரவில்லை. 'பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபராக புகார் கூறுபவர் இல்லை' என ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். எங்களுக்கும் அந்தக் குழப்பம் உள்ளது" எனக் கூறுகிறார்.

ஏதோ ஒரு அழுத்தத்தில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துவிட்டதாகக் கூறும் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "சம்பவம் நடந்த இடத்தில் புகார் கொடுக்காமல் வேறு ஓர் எல்லையில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் விரைவாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை சட்டரீதியாகவே எதிர்கொள்வோம்" என்கிறார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை குன்னம் காவல்நிலைய ஆய்வாளர் கண்ணன் மறுக்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காவல்துறை கூறும் விளக்கம் என்ன?

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "புகார் மனுவின்படி, வழக்குப் பதிவு செய்வதற்கான குற்றம் (cognizable offence) உள்ளதாக அறியப்பட்டால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இதற்காக எதிர்த் தரப்பினரை அழைத்து விசாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்கிறார்.

"சம்பவம் நடந்த இடம் என்பது மதுரை மாவட்டத்தில் கூடகோவில் காவல்நிலையம் என்பதால் அங்கு வழக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்தச் சம்பவத்தில் நாங்கள் புலனாய்வை நடத்தவில்லை" என்கிறார், ஆய்வாளர் கண்ணன்.

"பாதுகாவலர்கள் தவறு செய்ததாகக் கூறப்படும் நிலையில் தவெக தலைவரை வழக்கில் தொடர்புபடுத்த முடியுமா?" எனக் கேட்டபோது, "மேடையில் நடந்த சம்பவத்தில் அக்கட்சியின் தலைவருக்கு தொடர்புள்ளதா என்பதை புலனாய்வு அதிகாரியே முடிவு செய்து நடவடிக்கை எடுப்பார்" என்று மட்டும் ஆய்வாளர் கண்ணன் பதில் அளித்தார்.

சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமா?

 வழக்கறிஞர் சுப.மனோகரன்
படக்குறிப்பு, வழக்கறிஞர் சுப.மனோகரன்

"தவெக தலைவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் பேரில் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?" என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுப.மனோகரனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"பிணையில் வரக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் 296(B)பிரிவின்படி மூன்று மாதம் சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்" என்கிறார்.

115(2) பிஎன்எஸ் பிரிவின்படி, தானாக காயம் (voluntarily causing hurt) ஏற்படுத்துதல் பிரிவில் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாகவும் சுப.மனோகரன் குறிப்பிட்டார்.

"மாநாட்டில் விஜயின் பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாமே தவிர, தவெக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது" என்கிறார், வழக்கறிஞர் சுப.மனோகரன்.

தொடர்ந்து பேசிய அவர், "மாநாட்டு நடைபாதை மீது யார் நடந்து வரவேண்டும் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. அதிக கூட்டம் திரளும்போது ஆர்வ மிகுதியில் தொண்டர்கள் ஏறி வந்தனர். அவர்களைத் தடுப்பதற்கு பாதுகாவலர்களுக்கு உரிமை உள்ளது. இந்த வழக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தப் போவதில்லை" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு