குருவாயூர் கோவில் குளத்தில் பிக் பாஸ் பெண் பிரபலம் என்ன செய்தார்? ரீல்ஸால் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images & Insta/Jasmin Jaffar
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
குருவாயூர் கோவில் குளத்தில் இறங்கி பிக் பாஸ் பிரபலம் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் அசுத்தப்பட்டுவிட்டதாகக்கூறி சுத்தீகரணச் சடங்குகளைச் செய்திருக்கிறது கோவில் நிர்வாகம்.
இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?
என்ன நடந்தது?
சமூக வலைதள பிரபலமான ஜாஸ்மின் ஜாஃபர் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலின் திருக்குளமான ருத்ர தீர்த்தத்தில் தனது கால்களைக் கழுவுவதைப் போல வீடியோ எடுத்து அதனை ரீல்ஸாக வெளியிட்டார். இது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. இந்த ரீல்ஸ் மிக வேகமாக வைரல் ஆனதும், பக்தர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்குக் கண்டனங்களைப் பதிவுசெய்ய ஆரம்பித்தனர்.
இதையடுத்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியதாகவும் குருவாயூர் கோவில் தேவஸ்தானம் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்தது. ஏற்கனவே கோவிலுக்குள் வீடியோ எடுக்கக் கூடாது என கேரள உயர்நீதிமன்றத்தின் ஆணை இருக்கும் நிலையில், ஜாஸ்மின் இதனை மீறியிருப்பதாகவும் நிர்வாகம் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையானதையடுத்து ஜாஸ்மின் ஜாஃபர் அந்த வீடியோவை நீக்கியதுடன் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
இந்த நிலையில், இந்து அல்லாத, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் கோவில் குளத்தில் இறங்கிவிட்டதாகக் கூறி, ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் ஆறு நாட்கள் நீடிக்கக்கூடிய புண்யாகம் எனப்படும் சுத்தீகரணச் சடங்குகள் தொடங்கியுள்ளன. இந்தச் சடங்குகள் தந்திரியின் வழிகாட்டுதல்களின் படி நடைபெற்றன. இந்த சுத்தீகரணச் சடங்குகளின்போது, கடவுளின் திருவுருவத்தை கோவிலைச் சுற்றிவரச் செய்யும் சீவளி எனப்படும் சடங்கும் செய்யப்பட்டது. ஆறு நாட்களுக்கு நீடிக்கக்கூடிய இந்தச் சடங்குகளில் 18 பூஜைகளும் 18 சீவளிகளும் மேற்கொள்ளப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஜாஸ்மின் ஜாஃபர் யார்?
ஜாஸ்மின் ஜாஃபர் கேரளவின் பிரபலமான இன்ஸ்டாகிராம் பிரபலங்களில் ஒருவர். 24 வயதாகும் இவருக்கு பல்வேறு சமூக வலைதளங்களில் மில்லியன்கணக்கான பின்தொடர்வோர் இருக்கின்றனர். அழகு, லைஃப் ஸ்டைல், ஃபேஷன் ஆகியவை குறித்து வீடியோக்களை வெளியிட்டுவரும் இவருக்கு யு டியூபில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்வோர் இருக்கின்றனர். கோவிட் - 19 பெருந்தொற்று காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்ததன் மூலம் இவர் பிரபலமானார். இதற்குப் பிறகு, 2024ஆம் ஆண்டில் மலையாள பிக் பாஸின் ஆறாவது சீஸனிலும் இவர் கலந்து கொண்டார்.
பிக் பாஸிலும் இவரது செயல்பாடுகள் சலசலப்பை ஏற்படுத்தின. இவருக்கு ஏற்கனவே அஃப்ஸல் அமீர் என்பவரோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நேரத்தில் பிக் பாஸில் தன்னுடன் கலந்துகொண்ட காப்ரி ஜோசுடன் இவர் பழகியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், அமீருடனான நிச்சயம் முறிவுக்கு வந்தது.

பட மூலாதாரம், INSTA/Jasmine Jaffar
குருவாயூரப்பன் கோவில் பற்றிய விவரம்
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் குருவாயூர் கோவில், விஷ்ணுவின் ஒரு அவதாரமாகக் கருதப்படும் குருவாயூரப்பனுக்கான கோவில். 14ஆம் நூற்றாண்டிலிருந்தே குருவாயூர் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் குருவாயூர் கோவில் கேரளாவின் முக்கியமான கோவில்களில் ஒன்றாக உருவெடுத்தது. இதற்குப் பிறகு நடந்த சில போர்களில் இந்தக் கோவில் சேதமடைந்த நிலையில், 19ஆம் நூற்றாண்டில் இருந்து உள்ளநாட்டு பணிக்கர்கள் கோவிலை மீட்டு நிர்வகிக்க ஆரம்பித்தார்கள்.
இந்தக் கோவிலின் திருக்குளம்தான் ருத்ர தீர்த்தம் எனக் குறிப்பிடப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக ருத்ரன் (சிவன்) இந்தக் குளத்தில் குளித்ததாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாகவே இந்தக் குளம் ருத்ரதீர்த்தம் எனக் குறிப்பிடப்படுகிறது.
20ஆம் நூற்றாண்டில் மிகப் பிரபலமான கோவிலாக உருவெடுத்த இந்தக் கோவிலில் வழிபாடு செய்ய ஆடைக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆண்கள் வேஷ்டி அணிந்து வர வேண்டும். சட்டை அணிய அனுமதியில்லை. பெண்கள் சேலை அணிந்தே வர வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












