அமெரிக்காவின் 50% வரியை எதிர்கொள்ள இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் 5 விஷயங்கள்

பட மூலாதாரம், Getty Images
"இன்று உலகம் முழுவதும் சொந்த பொருளாதார நலன் சார்ந்த அரசியல் நிறைந்துள்ளது. அனைவரும் தங்களின் சொந்த விஷயங்களைச் செய்வதில் கவனமாக உள்ளனர். நாம் இதை நன்றாக கவனித்து வருகிறோம். நம் மீதான அழுத்தம் அதிகரிக்கலாம், ஆனால் நம்மால் சமாளிக்க முடியும்"
குஜராத் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி இந்த கருத்தை தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் 25% வரிகளை விதித்தார் டிரம்ப். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இந்த வரிகள் இன்று (ஆகஸ்ட் 27, புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன. இன்று இந்திய நேரப்படி காலை 9.30 மணி (அமெரிக்க நேரப்படி நள்ளிரவு 12 மணி) முதல் அமெரிக்காவுக்கு கொண்டு வரப்படும் இந்திய தயாரிப்புகளுக்கு இந்த வரிகள் பொருந்தும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு இந்திய அரசுக்கும் பொருளாதாரத்துக்கும் பெரிய அடியாக இருக்கும் என கருதப்படுகிறது. இத்தகைய அதிர்ச்சிகளை சமாளிப்பதற்கான நிரந்தர ஏற்பாடு இருக்க வேண்டும் எனக் கூறிய மோதி இந்திய பொருளாதாரத்திற்கு அந்த பலம் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த தன்னம்பிக்கைக்குக் காரணம் என்ன? இந்தியப் பொருளாதாரம் உண்மையில் 'வெளிப்புற அதிர்ச்சிகளை' தாங்கும் திறன் கொண்டதா? 'தன்னம்பிக்கை மற்றும் சுதேசி' மீதான இந்த நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள 5 காரணங்கள் என்ன?
1. பொருளாதார வளர்ச்சி மீதான நம்பிக்கை

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில வருடங்களாக இந்தியா மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியின் பாதையிலே உள்ளது.
வரிகள் என்கிற எதிர்மறை செய்திகளுக்கு மத்தியில் தர மதிப்பீட்டு நிறுவனங்களான எஸ்&பி மற்றும் ஃபிட்ச் ஆகியவை இந்திய பொருளாதாரம் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளன.
ஃபிட்ச் நிறுவனத்தின் கணிப்பின்படி இந்திய உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) அதிகரித்த அமெரிக்க வரிகளின் தாக்கம் சொற்பமாகவே இருக்கும், ஏனென்றால் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி அதன் ஒட்டுமொத்த ஜிடிபியில் 2% மட்டுமே உள்ளது.
"2025-26 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6 ஆக இருக்கும் என நாங்கள் கணித்துள்ளோம்" என ஃபிட்ச் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்&பி குளோபல் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீதான அதன் தர மதிப்பீட்டை அதிகரித்துள்ளது. உலகில் சிறப்பாக செயல்பட்டு வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக உள்ளதாக அதன் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. மிகப்பெரிய உள்நாட்டு சந்தை உள்ளது

பட மூலாதாரம், Getty Images
மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் இந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், 2050 வாக்கில் உலகின் ஒட்டுமொத்த நுகர்வில் இந்தியாவின் பங்கு 16% ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023-இல் 9% ஆக இருந்தது.
2050 ஆம் ஆண்டில் வட அமெரிக்கா மட்டுமே 17% பங்களிப்புடன் இந்தியாவை விட முன்னணியில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடு, மக்களின் வாங்கும் திறன் (Purchasing power parity) அடிப்படையிலானது.
உலகளவில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதற்கு இங்குள்ள மிகப்பெரிய இளைஞர் மக்கள்தொகையே காரணம்.
3. ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசு தனது கருவூலத்தை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மூலம் நிரப்பி வருகிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இந்த ஆண்டு மே மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 16.4% உயர்ந்து 2,01,050 கோடி ரூபாயாக உள்ளது. 2024 மே மாதத்தில் இது 1,72,739 கோடி ரூபாயாக இருந்தது.
முன்னர் ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடியாக இருந்தது. இதுநாள் வரையிலான அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் இது தான். ஜிஎஸ்டி வசூலால் அரசின் கருவூலம் நிரம்பி வருவது இந்திய பொருளாதாரம் உள்ளூர் சந்தையில் சிறப்பாக செயல்பட்டு வருவதை காட்டுகிறது.
4. விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது

பட மூலாதாரம், Getty Images
ஜூலை மாதம் வெளியான ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) அறிக்கையின்படி, வலுவான உள்ளூர் தேவை, சிறப்பான பருவமழை மற்றும் வட்டி விகிதங்கள் குறைப்பு போன்ற காரணங்களால் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 6.5% ஆக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டும் வலுவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் பணவீக்கம் 3.8% என்றும் அடுத்த ஆண்டு 4% என்றும் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்ணயித்த இலக்கிற்குள் தான் வருகிறது. ஏடிபி அறிக்கையின்படி உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டில் உள்ளது.
ஜூலையில் சில்லறை பணவீக்க விகிதம் 1.55% வரை குறைந்தது. கடந்த எட்டு வருடங்களில் மிக குறைந்த அளவு இது தான். ஜூன் மாதம் சில்லறை பணவீக்க விகிதம் 2.1 சதவீதமாக இருந்தது.
5. உள்கட்டமைப்பு மீதான கவனம்

பட மூலாதாரம், Getty Images
சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க வேண்டுமென்றால் இந்தியா உலக தரத்திலான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
நிலம், நீர் மற்றும் மின்சாரத்தில் சீர்திருத்தங்களுக்கான தேவையை வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் (பட்ஜெட்) உள்கட்டமைப்பிற்கு அதிக நிதி செலவிடப்படுவது பற்றி மத்திய அரசு கூறி வருகிறது. பிப்ரவரி 1, 2025 பட்ஜெட் உரையில். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறைகளுக்கு சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக வழங்கப்படும் ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடனும் அடங்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












