இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸுக்கு 'உரிமையாளர்' யார்? என்ன பிரச்னை?

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பட மூலாதாரம், NCBH

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புத்தக நிறுவனமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் பெரும்பான்மைப் பங்குகளை யார் வைத்திருப்பது என்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், புத்தக நிறுவனம் கட்சிக்கு கட்டுப்பட்டதல்ல என்கிறார்கள் நிர்வாகத்தினர். இந்த விவகாரத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகப் பிரிவாக அறியப்படும் நிறுவனம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சென்னையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 20 கிளைகள் உள்ளன. இதன் துணை நிறுவனமாக பாவை பிரிண்டர்ஸ் செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான புத்தகங்களை இந்த நிறுவனம் இதுவரை வெளியிட்டிருக்கிறது.

தற்போது இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பாகவும் யார் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது குறித்தும்தான் பிரச்சனை எழுந்துள்ளது. அரசியல் கட்சிகள் பதிப்பகங்களை நடத்தும்போது, அந்தக் கட்சியின் ஒரு பிரிவாகவே அந்தப் பதிப்பகம் நடத்தப்படும். அல்லது கட்சித் தலைவர்களை அறங்காவலர்களாகக் கொண்ட அறக்கட்டளைகள் மூலம் அந்த பதிப்பகம் நடத்தப்படும்.

திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ், தி.மு.கவின் முரசொலி, சி.பி.எம்மின் பாரதி புத்தகாலயம் ஆகியவை இந்த பாணியிலேயே நடத்தப்படுகின்றன.

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் எனப்படும் என்சிபிஎச், துவங்கும்போதே ஒரு பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமாகத் துவங்கப்பட்டது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற இந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகள், தற்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள சண்முக சரவணன் வசம் உள்ளன.

ஆனால், தனி நபர் ஒருவரிடம் பெரும்பான்மைப் பங்குகள் இருப்பதை விரும்பாத கட்சி அமைப்பு, அந்தப் பங்குகளை கட்சி நிர்வாகிகளுக்கு மாற்றித் தரச் சொல்லிக் கேட்கிறது. அதற்கு சண்முக சரவணன் மறுக்கவே விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சரவணன்

பட மூலாதாரம், NCBH

நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் பின்னணி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான பத்திரிகையாக 1937 முதல் ஜனசக்தி வெளியான நிலையில், அந்தப் பெயரிலேயே புத்தகங்களும் வெளிவந்துகொண்டிருந்தன. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, கட்சிக்கென வெற்றிகரமாகச் செயல்படக்கூடிய பதிப்பகம் தேவை என்பது உணரப்பட்டது. இதையடுத்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்ற பெயரில் ஒரு பதிப்பகம் உருவாக்கப்பட்டது. ஆனால், அதனை கட்சியின் ஒரு அங்கமாக அல்லாமல், பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமாகவே நடத்துவதுதான் சிறப்பானதாக இருக்கும் என முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 1951ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி இந்த நிறுவனம் பதிவுசெய்யப்பட்டது.

நிறுவனம் துவங்கப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜீவா, பி. ராமமூர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் பங்குதாரர்களாகவும் இயக்குநர்களாகவும் இருந்தனர். ராமகிருஷ்ண மூர்த்தி என்பவர் முழுநேர நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவருக்கும் பங்குகள் ஒதுக்கப்பட்டன. நிர்வாக இயக்குநரின் தலைமையில் ஒரு தனியார் நிறுவனமாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் செயல்பட ஆரம்பத்தது.

சோவியத் யூனியன் காலகட்டத்தில், கட்சிக் கொள்கைகளைப் பரப்ப புத்தகங்களை தமிழிலேயே ரஷ்யாவில் அச்சடித்து தமிழகத்தில் விற்பனை செய்ய விரும்பியபோது, விநியோகப் பொறுப்பு என்சிபிஎச்சுக்கு வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் என்சிபிஎச் தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான புத்தக நிறுவனமாக உருவெடுத்தது.

சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்த வண்ண மயமான குழந்தைகள் நூல்களும் அறிவியல் புத்தகங்களும் என்சிபிஎச்சின் பெயரை வீடு தோறும் கொண்டு சேர்த்தன. சோவியத் யூனியன் நொறுங்கி, அங்கிருந்து புத்தகங்கள் வெளிவருவது நின்றுபோன நிலையில், பாடப் புத்தகங்களின் திசையில் கவனம் செலுத்த ஆரம்பித்தது என்சிபிஎச்.

தற்போது பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் தேவையான புத்தகங்களை அச்சிடுவது, வெளியிடுவது என ஆண்டுதோறும் 20 கோடி ரூபாய் அளவுக்கு விற்றுமுதல் செய்கிறது இந்த நிறுவனம். பொதுவுடமை சார்ந்த நூல்களும் பொது நூல்களும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வெளியிடப்படுகின்றன.

ராஜா

பட மூலாதாரம், NCBH

இந்த நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள யாராவது ஒருவர் இறந்தாலோ, கட்சியை விட்டு விலகினாலோ அந்தப் பங்குகள் மற்றொருவருக்கு மாற்றிக்கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

தற்போது என்சிபிஎச்சின் இயக்குநர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, அக்கட்சியின் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயலாளர் வீரசேனன், கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கல்விப் பிரிவின் பொறுப்பாளரும் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான கா. சந்தானம், எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன், நிர்வாக இயக்குநராக சண்முக சரவணன் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், நல்லகண்ணு ஆகியோர் வசம் உள்ள பங்குகள் சண்முக சரவணன் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்படி மாற்றப்பட்டது முறையல்ல எனக் கருதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், சண்முக சரவணன் தன்வசம் உள்ள பங்குகளை கட்சி கூறும் நபருக்கு மாற்றிக்கொடுக்க வேண்டுமென கூறுவதாக சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்தன.

இதையடுத்து சண்முக சரவணன் தரப்பின் சார்பில் பலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. அந்த மின்னஞ்சலில் "நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஒரு பிரைவேட் லிமிடட் நிறுவனமாக இயங்குவதுதான் அதன் தன்மைக்கு உகந்தது என்ற ஓர்மை உணர்வோடும் தொலைநோக்கோடும் அதனைக் கட்டி எழுப்பியவர்கள் அவ்வாறு அதனைப் பதிவு செய்தனர்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பங்குகளை வைத்து சுயலாபம் பெறவோ, மற்றவர்களுக்கு விற்கவோ, வாரிசுதாரர்கள் அடையவோ முடியாத அளவிற்கு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல கட்டங்களில் அடுத்தடுத்து வந்த இயக்குநர்கள், நிர்வாகிகள் பெயரில் பங்குகள் மாற்றிக் கையளிக்கப்படுவதும் நிர்வாகமும் இயக்கமும் தொடர்ச்சி அறாமல் மக்கள் பணியாற்றியதுமே வரலாறு. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டபோதும் கூட இந்த நடைமுறையும் தொடர்ச்சியும் பிரச்சினையில்லாமல் தொடர்ந்தது.

அந்த அளவிற்கு நிறுவனத்தின் கூட்டமைப்பு ஷரத்துகளும் (Articles of Association) புரிந்துணர்வு ஒப்பந்தமும் (Memorandum of Understanding) வரையப்பட்டு, இந்த மரபு தொடர்ந்துள்ளது. கட்சித் தலைவர்களாகவும், நிர்வாக வாரிய உறுப்பினர்களாகவும், பிரைவேட் லிமிடெட் என்பதற்கான இலக்கணப்படி பங்குதாரர்களாகவும் இருப்பவர்களும் இதுவரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் தினசரி நிர்வாக செயல்பாடுகளில் தலையிட்டதில்லை.

நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமோ, பணியாளர்களோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஒருபோதும் செயல்பட்டதில்லை. இன்றைக்கும் செயல்படவில்லை; அதற்கான அவசியமும் இல்லை.

75 வயதிற்கு மேல் கட்சி பொறுப்புக்கு வர முடியாது என்ற முடிவு அண்மையில் தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்டது. அப்படி ஓய்வு பெறுவதற்கு விருப்பம் இல்லாத சிலர் ஓய்வுகால சரணாலயமாக நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது தான் தற்போதைய பிரச்சனை.

பங்குகளை சிலரின் பெயருக்கு மாற்றவும் இயக்குநராக நியமிக்கவும் தற்போது உள்ள நிர்வாகிகள் மிரட்டப்படுகின்றனர். காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. பொய் வழக்கு போடப்படுகிறது. பொறுப்புக்கு வர ஆசைப்படுகின்றவர்கள் நிறுவனத்தின் தொடர்ச்சியான இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதவர்கள். அவர்கள் சுயநலத்தின் காரணமாகத்தான் நிறுவனத்தில் அதிகாரம் செலுத்த முயல்கின்றனர் என்பதால் தா. பாண்டியன், ஆர் நல்லகண்ணு ஆகியோர் தங்கள் பெயரிலுள்ள பங்குகளை மேலாண்மை இயக்குனர் சண்முக சரவணன் பெயருக்கு மனமுவந்து எழுதி கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களை ஏமாற்றி சதி செய்து வாங்கியதாக தரம் தாழ்ந்து குற்றம் சாட்டப்படுகிறது," என்று கூறப்பட்டிருந்தது.

இந்தப் பிரச்சனை முற்றிய நிலையில், சென்னை அம்பத்தூரில் உள்ள அந்தப் பதிப்பகத்தின் அலுவலகத்தில், கட்சியைச் சேர்ந்த சிலர் சென்று பங்குகளை மாற்றித்தர வேண்டுமென சத்தம்போட்டதாக சண்முக சரவணன் தரப்பினர் கூறுகின்றனர். மேலும் காவல் துறையிலும் சண்முக சரவணன் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது சண்முகம் சரவணன் தலைமறைவாகியிருக்கும் நிலையில், அவரது சார்பில் பேசியவர்கள், "தற்போது நியூ செஞ்சுரி புக் ஹவுசில் 300 பேர் பணியாற்றுகின்றனர். அதன் மற்றொரு நிறுவனமான பாவை பிரிண்டர்ஸில் 100 பேர் வரை பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை, நிறுவனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை பங்குதாரர்கள் எடுத்துக்கொள்ள முடியாது. அது மீண்டும் முதலீடுதான் செய்யப்படும். இதில் பணியாற்றுபவர்கள் மூலம் கட்சிக்கு லெவியாக ஒரு தொகை அனுப்பப்படும்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பட மூலாதாரம், TNDIPR

கட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் என்சிபிஎச் இருப்பதில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பதிப்பகத்திற்கு ஆணையிட முடியாது. என்சிபிஎச் மீது கட்சியின் சித்தாந்தரீதியான பிடியை வைத்துக்கொள்ளலாம். இது கட்சிக்கு கடமைப்பட்டுள்ள நிறுவனமே தவிர, கட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மூத்த தலைவர்களிடமிருந்து மிரட்டி எழுதி வாங்கியதாக புகார் சொல்கிறார்கள். அப்படிச் செய்ய முடியுமா? மேலும், அப்படி எழுதிக் கொடுத்த பிறகும் நல்லகண்ணு பல முறை நிறுவனத்திற்கு வந்திருக்கிறார். அதன் செயல்பாட்டை புகழ்ந்திருக்கிறார். மிரட்டி எழுதி வாங்கியிருந்தால் அப்படிச் செய்திருப்பாரா?" என்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து, என்சிபிஎச்சின் இயக்குநர்களில் ஒருவரும் இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கா. சந்தானத்திடம் கேட்டபோது, "நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சண்முக சரவணன், அந்த நிறுவனத்தை கம்பனி சட்டப்படி நடத்த நினைக்கிறார். ஆனால், நாங்கள் அது கட்சியின் ஸ்தாபனம் எனக் கருதுகிறோம். அவர் இதனை ஒப்புக்கொண்டு, வந்துவிடுவார் எனக் கருதுகிறோம். இதைத் தவிர இந்த சந்தர்ப்பத்தில் வேறு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை," என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாரன முத்தரசனிடம் கேட்டபோது, "இந்தப் பிரச்சனையைப் பேசித் தீர்த்துவிடலாம் என்று கருதுகிறோம். இதனை மேலும் மேலும் பெரிதாக்கத் தேவையில்லை," என்று மட்டும் குறிப்பிட்டார்.

தற்போது இந்த விவகாரம் குறித்து இரு தரப்பும் இந்த வார இறுதியில் பேசவுள்ளதாகத் தெரிகிறது. ஒரு சுமூக முடிவு எட்டப்படும் என பதிப்பக பொறுப்பில் உள்ளவர்களும் கட்சியின் மூத்த தலைவர்களும் நம்புகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: