"அரசு செவி சாய்க்கவில்லை; கடவுளிடம் முறையிட வந்தோம்" - தொழிற்பூங்காவால் பாதிக்கப்படும் விவசாயிகள்

அன்னூர் தொழிற்பூங்கா, விவசாயிகள் எதிர்ப்பு
படக்குறிப்பு, அன்னூர் தொழிற்பூங்காவுக்கு எதிராக விவசாயிகள் பேரணி
    • எழுதியவர்,  மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை மாவட்டம் அன்னூர் அருகே தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்காக 3,864 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அன்னூர் பகுதி விவசாயிகள் வேளாண் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். `நமது நிலம் நமதே` என்கிற பெயரில் போராட்டக் குழுவை அமைத்து போராடி வருகின்றனர். தொழிற்சாலை பொருளாதாரத்திற்கான விலையாக வேளாண் பொருளாதாரத்தைக் கொடுக்க வேண்டுமா எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அன்னூர் தொழிற்பூங்கா, விவசாயிகள் எதிர்ப்பு
படக்குறிப்பு, அன்னூர் பகுதி விவசாய நிலம்

அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கின. அதிமுக, பாஜக ஆகியவை அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கோரி வருகின்றன. கடந்த மாதம் அன்னூரில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், ‘அன்னூரில் சிட்கோ தொழில்பூங்கா அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்’ என்றார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் நவம்பர் 30ஆம் தேதியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு தொழிற்பூங்காவுக்கு எதிராக மனு அளித்தனர். 

இந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது நிலம் கையப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தொழிற்பூங்காவை அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

கடவுளிடம் முறையிட்ட போராட்டக்காரர்கள்

’எங்கள் குறைகளை அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தெரிவித்தோம். ஆனால் யாரும் செவி சாய்க்கவில்லை. அதனால் தான் கடவுளிடம் முறையிட வந்துள்ளோம்’ என்றார் அன்னூர் போராட்ட குழுவைச் சேர்ந்த வேணுகோபால். 

100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அன்னூரிலிருந்து 40 கிலோ மீட்டர் நடைபயணமாக கோவை மாநகர் புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோயில் வரை சென்று தொழிற்பூங்காவுக்கு எதிரான மனு ஒன்றை கடவுளிடம் வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

அன்னூர் தொழிற்பூங்கா, விவசாயிகள் எதிர்ப்பு
படக்குறிப்பு, கோவை முந்தி விநாயகர் கோயிலில் போராட்டக்காரர்கள் மனு

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நமது நிலம் நமதே போராட்டக் குழு தலைவர் குமார ரவிக்குமார், `நாங்கள் ஆட்சியர், அமைச்சர், முதல்வர் என அனைவரையும் சந்தித்து எந்தப் பலனும் இல்லாததால் தான் கடவுளிடம் முறையிட வந்துள்ளோம். அந்த நிலையில் தான் எங்களின் கோரிக்கைகள் உள்ளன.

நாங்கள் யாருமே தொழிற்பூங்கா கேட்கவில்லை. விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப் பெறவேண்டும். நிலத்தை விட்டு நாங்கள் வேறு எங்கும் செல்ல முடியாது. அமைதியான முறையில் போராடி வருகிறோம். அரசு எங்களுடைய பொறுமையைச் சோதிக்க வேண்டாம்` என்றார்.

தொழிற்பூங்காவுக்கான திட்டம் என்ன? 

அன்னூர் தொழிற்பூங்கா
படக்குறிப்பு, அன்னூர் தொழிற்பூங்கா அமையவுள்ள இடம்

கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்துக்கு உட்பட்ட குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் மற்றும் பொகலூர் கிராமங்களிலும் மேட்டுபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட இலுப்பநத்தம் மற்றும் பெள்ளேபாளையம் ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தொழிற்பூங்கா அமைக்க 3,864 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் அன்னூர் வட்டத்திற்கு உட்பட்டு வரும் குப்பனூர் (2091 ஏக்கர்), அக்கரை செங்கப்பள்ளி (1136 ஏக்கர்) கிராமங்களில் தான் அதிகபட்சமாக மொத்தம் 3,225 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இதில் 3,731 ஏக்கர் தனியார் நிலங்களாகவும் 132 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களாகவும் உள்ளன. தொழிற்பூங்காவுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தவும் உரிமை மாற்றம் செய்யவும் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

தொழிற்பூங்காவுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான இழப்பீடு மற்றும் நிர்வாக செலவுகளுக்காக அரசு ரூ.903 கோடி ஒதுக்கியுள்ளது.

எதிர்க்கும் அதிமுக, பாஜக:

அன்னூரில் நடைபெற்ற விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அன்னூர் தொழிற்பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், `திமுக அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல். இதன் மூலம் தமிழ்நாட்டில் நடப்பது `விவசாய விரோத மாடல்` ஆட்சி என்பது தெள்ளத் தெளிவாகிறது` என்று தெரிவித்திருந்தார்.

கோவை மாநகரில் டிசம்பர் 2ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, `அன்னூர் தொழில் பூங்கா அமைக்க 3,800 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

ஆயிரக்கணக்கான விவசாயிகளைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு அதிமுகவின் ஆதரவு உண்டு` என்றார். 

அன்னூர் தொழிற்பூங்கா, விவசாயிகள் எதிர்ப்பு
படக்குறிப்பு, டிச.2-ம் தேதி கோவையில் அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

டிசம்பர் 7ஆம் தேதி பாஜக சார்பில் அன்னூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டால் பாஜக சார்பில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்’ என்றார். 

ஆட்சேபனையை மீறி அரசாணை: போராட்டக்குழு அதிர்ச்சி

அன்னூர் தொழிற்பூங்கா தொடர்பான செய்தி வெளியானதிலிருந்தே அதற்கு வலுவான எதிர்ப்பு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாளிதழ்களில் வந்த செய்தியைப் பார்த்துதான் அன்னூரில் இப்படி ஒரு தொழிற்பூங்கா அமைக்க திட்டம் இருப்பதே எங்களுக்குத் தெரிய வந்தது என்கிறார் போராட்ட குழுவைச் சேர்ந்த ஓதிசாமி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், `அரசு தரப்பிலிருந்தோ அதிகாரிகள் தரப்பிலிருந்தோ இது தொடர்பாக யாரும் எங்களிடம் பேசவில்லை. செய்தி வந்த பிறகு நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். மாவட்ட நிர்வாகத்திடம் மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தொழிற்பூங்கா அமைக்க நாங்கள் ஒத்துக்கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டோம். அதற்குப் பிறகும் அரசாணை வெளியிடப்பட்டிருப்பது தான் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது` என்றார். 

திட்டம் எந்த நிலையில் உள்ளது?

ஆனால் வழிமுறைகளை சரியாகப் பின்பற்றியதாக சொல்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அன்னூர் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டபோதே மக்களிடம் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போதைக்கு அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன் பின்னர் தான் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அதற்கான பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார். 

அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை பாதிக்கிறதா?

மேற்கு மாவட்டங்களின் நீண்ட நாள் கனவு திட்டமாக இருப்பது அவினாசி - அத்திக்கடவு திட்டம். தற்போது முடிவுறும் தருவாயில் இருக்கும் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அன்னூரில் தொழிற்பூங்கா வந்தால் அவினாசி - அத்திக்கடவு திட்டம் பயனற்றுப் போகும் என்கிறார்கள் விவசாயிகள்.

‘அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் 95% பணிகள் முடிவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என விவசாயிகள் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில் தொழிற்பூங்கா வரும் என்று சொன்னால் திட்டமே பயனற்றுப் போகும்` என்கிறார் ஓதிசாமி. 

தொழிற்பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தப்பட இருக்கும் கிராமங்களைச் சென்று பார்வையிட்டோம். அன்னூரிலிருந்து ஓதிமலை செல்லும் வழியில் அமைந்துள்ளது அக்கரைச்செங்கப்பள்ளி. வாழை, மஞ்சள், தென்னை பிரதான சாகுபடியாக உள்ளது. விவசாயம் போக கால்நடை வளர்ப்பும் இந்த கிராமங்களில் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளிடமும் கால்நடைகள் உள்ளன.

முதல்வர் தந்த வாக்குறுதி

இது தொடர்பாக முதல்வரையும் நேரில் சந்தித்து முறையிட்டோம் என்கிறார் போராட்டக் குழுவின் செயலாளர் ராஜா. அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "முதல்வரை நேரில் சந்தித்து பேசியபோது விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்" என்றார்.

அன்னூர் தொழிற்பூங்கா, விவசாயிகள் எதிர்ப்பு
படக்குறிப்பு, விவசாயி ராஜா

மேலும் அவர், "ஆனால் முதல்வரின் வாக்குறுதிக்கு எதிராக அரசாணை வந்திருக்கிறது. அதிக நிலம் எடுக்கப்படும் அக்கரைச்செங்கப்பள்ளி, குப்பனூர் பஞ்சாயத்துகளில் பத்திரப்பதிவு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அன்னூர் நீர்வளம் மிக்க பகுதி. ஓராண்டில் மூன்று போக சாகுபடி இங்கு நடைபெறும். 70 அடி ஆழத்திலேயே கிணறுகளில் தண்ணீர் வரும். நேரடியாக விவசாயத்தை நம்பி மட்டும் 20,000 மக்கள் இங்கு உள்ளார்கள். இங்கிருந்து அண்டை ஊர்களுக்கு மட்டுமில்லாமல் கேரளா வரை விவசாயப் பொருட்கள் செல்கின்றன," என்றார். 20 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்கோஸ் தொழிற்சாலை மூடப்பட்டது. அந்த தொழிற்சாலையின் பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருந்தது. இந்தத் தொழிற்சாலை வந்தால் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் மக்களுக்கு வேறு வாழ்வாதாரம் கிடையாது. வேளாண் உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கும். நாங்கள் தொழிற்சாலைகளைக் கேட்கவில்லை. எங்களுக்கு வேண்டாம். அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை. எங்கள் உயிரை விடுவோமே தவிர நிலத்தைக் கைவிட மாட்டோம்’ என்றும் ராஜா உறுதிபடக் கூறினார்.

பால் உற்பத்தி பாதிக்கும்:

கிராமத்தின் பெரும்பாலான இடங்களில் மேய்ச்சல் நிலங்களில் மாடுகள் மேய்வதைப் பார்க்க முடிந்தது. வேளாண் பொருளாதாரத்தில் ஆடு வளர்ப்பும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆடு, மாடுகளை மேய்த்துப் பராமரிக்கும் பணிகளைப் பெரும்பாலும் பெண்களே கவனித்து வருகின்றனர். பல கூட்டுறவு பால் சங்கங்களும் இயங்கி வருகின்றன. அக்கரை செங்கப்பள்ளி கிராமத்திலிருந்து மட்டும் ஒரு நாளைக்கு 15,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்கிறார் விவசாயி லோகுமூர்த்தி.

அன்னூர் தொழிற்பூங்கா, விவசாயிகள் எதிர்ப்பு
படக்குறிப்பு, விவசாயி லோகுமூர்த்தி

பிபிசி தமிழிடம் அவர் பேசியபோது, ‘என்னுடைய தோட்டத்தில் மட்டும் பருத்தி, வாழை, மஞ்சள், தென்னை, வெங்காயம், கடலை எனப் பல வகையான சாகுபடி நடக்கிறது. இங்குள்ள நீர்வளம் தான் இதற்கு முக்கியமான காரணம். பெண்கள் கால்நடைகளைக் கவனித்து வருகின்றனர். மாடுகள் இல்லாத விவசாயியே கிடையாது. இங்கு விளையும் பொருட்கள் மேட்டுப்பாளையம், புளியம்பட்டி, சத்தியமங்கலம் சந்தைக்கும், உழவர் சந்தைக்கும், இங்கிருந்து காய்கறிகள் கேரளா வரையிலும் செல்கின்றன.

விவசாயிகள் மட்டுமில்லாமல் விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்களும் இருக்கின்றனர். தொழிற்சாலைகள் வந்தால் விவசாயத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியுள்ள ஒரு லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்’ என்றார். 

அன்னூர் தொழிற்பூங்கா, விவசாயிகள் எதிர்ப்பு
படக்குறிப்பு, ஆத்திக்குட்டை

நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமில்லாமல் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் அதிக அளவில் உள்ளனர். ஆத்திக்குட்டை என்கிற ஊரில் வேளாண் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

ஆதி திராவிடர் உள்ளிட்ட வெவ்வேறு சமூக மக்களின் குடியிருப்புகள் உள்ளன. ஆத்திக்குட்டை பகுதிக்கு நாம் சென்றபோது நிலம் அளவை பணிகளுக்கு வந்ததாக முதலில் நினைத்துக் கொண்டு மக்கள் நம்மிடம் பேசினார்கள். 

மாரக்கா (பச்சை நிற புடைவை)
படக்குறிப்பு, மாரக்கா (பச்சை நிற புடைவை)

’இந்தப் பகுதியில் சுமார் 150 வேளாண் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. விவசாய பணி தான் எங்களுக்குத் தெரியும். நிலங்களில் வேலை இல்லாத நாட்களில் கிடைக்கின்ற கூலி வேலைகளைச் செய்வோம்.

தற்போது இந்த இடத்தை தொழிற்சாலைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறுகிறீர்கள். இங்கிருந்து விரட்டினால் எங்களுக்கு வேறு இடமும் கிடையாது, வேறு வேலையும் தெரியாது. இவர்கள் கொடுக்கும் இழப்பீட்டுப் பணத்தை வைத்து அன்னூரில் ஒரு செண்ட் நிலம் கூட வாங்க முடியாது. எங்களுக்கு தொழிற்சாலை வேண்டாம்’ என்கிறார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மாரக்கா. இதே கருத்தைத்தான் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் எதிரொலிக்கிறார். ‘என் அப்பா இதே ஊரில் கூலித் தொழிலாளி தான். நான் டிரைவர் வேலைக்குச் செல்கிறேன். ஆனால் 90 சதவிகிதமான குடும்பங்கள் தற்போது விவசாய கூலித் தொழிலை நம்பித்தான் இருக்கிறார்கள்.

இந்த தலைமுறை குழந்தைகள்தான் கல்வி பெற பள்ளிக்குச் செல்கிறார்கள். இதுதான் எங்களுக்கு சொந்த ஊர். இங்கிருந்து வெளியேற்றினால் எங்களுக்கு வாழ்வாதாரம் மட்டுமில்லாது குழந்தைகளின் கல்வியும் பாதிக்கும்’ என்றார். 

அன்னூர் தொழிற்பூங்கா, விவசாயிகள் எதிர்ப்பு
படக்குறிப்பு, ஜெயபால்

விவசாயத்தை பாதிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யலாம் - கொடிசியா 

கோவை தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள மாவட்டம். எனவே புதிய தொழிற்சாலைகளுக்கு ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா வேண்டும் என்கிற கோரிக்கையை தொழில் கூட்டமைப்பினர் நீண்ட காலமாக வைத்து வருகின்றனர். அதேநேரம் விவசாயிகளின் குரலையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் கொடிசியா கூட்டமைப்பின் தலைவர் திருமுருகன். பிபிசி தமிழிடம் அவர் பேசியபோது, ‘கோவை விமான நிலைய விரிவாக்கம் அடைகிற நிலையில் நிறைய தொழில் வாய்ப்புகள் கோவையை நோக்கி வருகின்றன.

ஏற்கெனவே கோவையில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது உற்பத்தி, பொறியியல், பாதுகாப்புத் துறை, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல நிறுவனங்கள் கோவைக்கு வருவதால் இடத் தேவை அதிகமாக உள்ளது.

அதனால் ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா வேண்டும் எனக் கேட்கிறோம். அதேநேரம் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் விவசாயத்தை அழித்து தொழிற்சாலைகள் அமைக்கக்கூடாது. அன்னூரில்தான் தொழிற்பூங்கா வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி யாருக்கும் பாதிப்பில்லாமல் செயல்படுத்த வேண்டும். வேறு இடத்தில் அமைக்கும் சாத்தியங்களையும் ஆராயலாம்’ என்றார். 

அமைச்சர் என்ன சொல்கிறார்?

கோவை மாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, `கோவை ஏற்கெனவே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாவட்டம். கோவையின் தொழில் வளர்ச்சி, எதிர்காலத் தேவை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் திட்டங்கள் அரசால் அறிவிக்கப்படுகின்றன` என்றார். விவசாயிகள் எழுப்பும் பிரச்னைகளைப் பற்றி அரசாங்கம் என்ன கருதுகிறது எனத் தெரிந்து சொல்லவேண்டும் என்று, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை தொடர்பு கொள்ள பிபிசி தமிழ் முயன்றது. இந்தச் செய்தி வெளியாகும் வரை இது தொடர்பாக அமைச்சரிடம் பேச முடியவில்லை. அமைச்சர் தமது கருத்தைப் பகிர்ந்துகொண்டால் அது இங்கே சேர்க்கப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: