கோவையில் புதிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் - காரணம் என்ன?

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டின் திண்டுக்கலில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண்.209 விரிவாக்கப் பணிகளுக்கு கோவை மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அங்கு என்ன நடக்கிறது?
கோவை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் இந்த நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் அதை கைவிட வேண்டும் என்றும் ஏற்கெனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
எதிர்ப்பு ஏன்?
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கொங்கு மண்டல விவசாயிகள் நலச் சங்கத்தைச் சேர்ந்த தனபால், "தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திண்டுக்கல் பெங்களூரு நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கெனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்யாமல் கோவில்பாளையம் தொடங்கி அன்னூர் வரை 19 கி.மீ நீளத்துக்கு புதியதாக சாலை அமைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது," என்கிறார்.
மேலும் அவர், "இதே போல் சத்தியமங்கலம் வரை பல்வேறு இடங்களில் புதிதாக சாலை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வரை ஏற்கெனவே நெடுஞ்சாலை உள்ள நிலையில் அதே பாதையில் புதிதாக தனி சாலை ஏன் அமைக்க வேண்டும்.
மாற்று பரிந்துரைகள் என்ன?
இந்தத் திட்டத்தால் கோவில்பாளையம் தொடங்கி சத்தியமங்கலம் வரை 800 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்பட உள்ளன. இந்த புதிய திட்டத்தைக் கைவிட்டு ஏற்கெனவே உள்ள சாலையை தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்யலாம். வளைவுகள் உள்ள இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் பொருட்செலவு அதிகமாகும் என்பதால் விவசாய நிலங்களைப் பழி கொடுக்கப் பார்க்கிறார்கள்."
"புதிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு Feedback Infra என்கிற நிறுவனம் தான் வரைபடம் தயாரித்துள்ளது. களத்தில் ஆய்வு செய்யாமல் செயற்கைக்கோள் படத்தை வைத்து மட்டும் இதற்கான வரைபடத்தைத் தயாரித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகளை விட்டுவிட்டு குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மீது மட்டும் புதிய சாலைக்கான உத்தேச பாதையை வடிவமைத்துள்ளனர்."

"இந்த நிறுவனம் தான் சேலம் - சென்னை எட்டுவழி சாலைக்கு திட்ட அறிக்கை தயாரித்தது. அந்த திட்ட அறிக்கை மிகவும் பிழையானது என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. சேலம் - சென்னை எட்டு வழி சாலைக்காக இவர்கள் தயாரித்த திட்ட அறிக்கையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு திட்ட அறிக்கையை காப்பி அடித்து சமர்ப்பித்தது நீதிமன்றத்தில் அம்பலமானது. அத்தகைய நிறுவனம் தான் இதற்கான அறிக்கையைத் தயாரித்துக் கொடுக்கிறது. நெடுஞ்சாலைத் துறையும் அதை அமல்படுத்தப் பார்க்கிறது."
3 ஏ நோட்டீஸ், கிராம சபை தீர்மானம்

"இந்த திட்டத்திற்கு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் ஆம்போதி, அன்னூர், அன்னூர் மேட்டுப்பாளையம், கனுவக்கரை, காரேகவுண்டர் பாளையம், கரியாம்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், ஓட்டர்பாளையம், பசூர் உள்ளிட்ட பத்து கிராமங்களுக்கு மட்டும் முதல்கட்டமாக நெடுஞ்சாலை துறை நிலம் கையகப்படுத்துவதற்கு முந்தைய கட்டமான 3ஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆட்சேபம் தெரிவித்து பதிலளித்துள்ளனர். மேலும் கிராம சபை கூட்டங்களிலும் இந்த திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது."
"விவசாயிகள் ஒன்றுபட்டு இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது நிலத்தைக் கையகப்படுத்த ஒப்புதல் வழங்கும் ஆவணத்தில் கையெழுத்திடுமாறும் வற்புறுத்துகின்றனர். ஆனால் விவசாயிகள் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்,` என்றார்.

விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய காரேகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, `இந்த பகுதியில் விவசாயத்தைத் தவிர வேறு தொழில் கிடையாது. நான் மூன்று தலைமுறையாக தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். வேளாண் நிலங்களை எடுத்துவிட்டால் இங்கு வேறு தொழிலும் இல்லை. மக்களுக்கு வாழ்வாதாரமும் இல்லை. இந்தத் திட்டம் நிறைவேறினால் விவசாயிகள் மட்டுமல்லாது இதை நம்பியுள்ள விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் என்ன ஆனாலும் எங்கள் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். நெடுஞ்சாலை திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்` என்கிறார்.
நெடுஞ்சாலைத் துறையின் பதில் என்ன?
நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த பெயரை வெளியிட விரும்பாத அதிகாரியொருவர் இது குறித்து நம்மிடையே பேசியபோது, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான திட்டம் தயாராகி விட்டது. ஏற்கெனவே உள்ள நெடுஞ்சாலையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் நிறைய கட்டடங்களை இடிக்க வேண்டியுள்ளது. அதனால் தான் கட்டடங்களைப் பாதிக்காதவாறு திட்டத்தை வடிவமைத்தோம்.
மேலும் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையில் அதிகமான வளைவுகள் உள்ளன. அதில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது கடினம். பொருட்செலவு மட்டும் காரணம் அல்ல. இதற்காக மூன்று வகையான திட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.
அதில் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியங்களை ஆலோசித்தோம். ஆனால் அது சாத்தியப்படாததால் தான் இன்னொரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. நிலம் கையப்படுத்த மாநில அரசு மற்றும் வருவாய் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் அந்தப் பணிகளை மேற்கொள்வார்கள்," என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













