பரந்தூர் விமான நிலையம்: வெளியேற்றப்படும் மக்கள், அழிக்கப்படும் நீர்நிலைகள் - கள நிலவரம்

- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
பரந்த பசுமையான நெல் வயல், நடுவே அவ்வப்போது வாகனங்கள் வந்து செல்லும் சாலை, வயல்வெளி சூழ வீடுகள், அருகிலேயே எப்போதும் நீர் நிறைந்திருக்கும் ஏரிகள், 1940-களில் கட்டப்பட்ட ஒரு தொடக்கப் பள்ளிக்கூடம் இவையெல்லாம் கொண்ட அந்தக் கிராமத்தின் பெயர் நெல்வாய். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக முற்றிலுமாக அழியப் போகும் கிராமங்களுள் இதுவும் ஒன்று.
சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 13 ஊர்களில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. அவற்றில் 4 கிராமங்கள் மொத்தமாக அழியப் போகின்றன. குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள், கால்வாய், பள்ளிக்கூடங்கள், கோயில்கள் போன்றவை இவற்றில் அடங்கியிருக்கின்றன.
சந்தை மதிப்பைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாக தமிழ்நாடு அரசு வாக்குறுதி அளித்த நிலையிலும், வாழ்வாதாரம் பறிபோவதாகக் கூறி கிராம மக்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
நீர் நிலைகள் அழிக்கப்பட்டால் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும், சென்னை வரை வெள்ள அபாயம் ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள்.
மக்களின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துகின்றன. தொடர்புடைய 13 கிராமங்களிலும் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பரந்தூர் பகுதி கிராமங்களில் என்ன நடக்கிறது?
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னை நகருக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. விமான நிலையத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து 4,500-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது.
இதில் சுமார் 3,200 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு தனிநபர்களுக்குச் சொந்தமான பட்டா நிலங்களாகவும், சுமார் 1,300 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலமாகவும் இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில், திட்டமிடப்பட்டிருக்கும் சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையை ஒட்டியும் இது அமைந்திருக்கிறது.

இந்தத் திட்டத்துக்காக சுமார் ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற நேரிடும் என இந்தக் கிராமங்களில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, மகாதேவி மங்கலம் ஆகிய நான்கு கிராமங்களும் முற்றிலுமாகக் கையகப்படுத்தப்பட இருக்கின்றன.
ஏரிகள், குளங்கள், வயல்வெளிகள், குடியிருப்புகள், பள்ளிக் கூடங்கள், கோயில்கள் போன்றவை இந்தத் திட்டத்துக்காக அழிக்கப்பட இருக்கின்றன. "அரசுப் புறம்போக்கு என்று கூறப்படும் இடங்கள் அனைத்தும் நீர்நிலைகள்தான்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
இந்தத் திட்டத்துக்காக நிலத்தைக் கொடுப்போருக்கு பல வகையில் இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. இழப்பீட்டின்போது வழிகாட்டி மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சந்தை மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அரசு முடிவு செய்திருக்கிறது.
"வழிகாட்டி மதிப்பு என்பது வேறு, சந்தை மதிப்பு என்பது வேறு. சந்தை மதிப்பைப் போல மூன்றரை மடங்கு இழப்பீடு. வீட்டில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை. விமான நிலையத்துக்கு அருகிலேயே நிலமும், வீடு கட்டுவதற்கு பணமும் தருகிறோம்" என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியிருக்கிறார்.
தவிக்கும் மக்கள்
விமானம் நிலையம் அமைக்கப்பட இருக்கும் பகுதி ஒரு பெரிய சாலை தவிர பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றைத்தான் பார்க்க முடிகிறது. இதில் அதிகமாக மக்கள் வசிக்கும் கிராமம் ஏகனாபுரம். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாள்தோறும் மக்கள் இங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி கணவரை இழந்தவர். அவருக்கு மூன்று குழந்தைகள். விவசாயக் கூலி வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

"எனக்குச் சொந்தமாக வீடு மட்டும்தான் இருக்கிறது. கணவரின் நினைவாக அதை பராமரித்துக் கொண்டிருக்கிறேன். ஆடுமாடு மேய்ப்பது, களைபறிப்பது போன்ற வேலைகளுக்குச் சென்று சம்பாதிக்கிறோம். இந்த ஊரில் இருந்தால்தான் எங்களுக்கு பிழைப்பு. என்னைப்போன்று நிறையப் பேர் கூலி வேலை செய்துதான் பிழைத்து வருகிறோம். எங்களை வேறு எங்காவது அனுப்பினால் வேலையும் கிடைக்காது" என்கிறார் அவர்.
"இங்கு இருக்கும் ஏரிகள் எல்லாம் புறம்போக்கு கிடையாது. அவைதான் இங்குள்ள விவசாயத்துக்கு உதவுகின்றன. அவை விவசாயத்துக்கு தாய், தந்தை போல. அதுதான் விவசாயத்துக்கான ஆணி வேர்," என்றார் ராஜேஸ்வரி.
ஏகனாபுரம் கிராமத்தில் 98 ஆண்டுகளுக்கு முந்தைய அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 110 பேர் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியை ஒட்டியே வயல் வெளியும், தாமரைப் பூக்கள் மிதக்கும் ஏரி ஒன்றும் இருக்கிறது. பழமையான ஆலமரங்கள், சிறு குளங்கள், தாங்கல்கள் போன்றவற்றையும் இங்கு பார்க்கலாம்.
ஏகனாபுரத்தில் சுமார் 2,500 பேர் வசிக்கிறார்கள். வசதியான பெரிய வீடுகள், கார்கள் சென்று வரும் அகலமான தெருக்கள் இந்த ஊரில் இருக்கின்றன. பல வீடுகள் கடந்த சில ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவை என்று இந்த ஊரில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.

ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரோஜாவுக்கு சுமார் 40 சென்ட் அளவுக்கு நிலம் இருக்கிறது. தன் நிலையைப் பற்றிப் பேசும்போது அவர் கண்கலங்குகிறார். என்ன கொடுத்தாலும் ஊரைவிட்டு வெளியேறப் போவதில்லை என்று அவர் கூறுகிறார்.
"30 ஆண்டுகளாக விவசாய வேலை செய்துதான் எனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறேன். எங்களுக்கு விவசாய வேலை மட்டும்தான் தெரியும். வேறு வேலை எதுவும் தெரியாது. இதை வைத்துதான் எனது பிள்ளைகளுக்கு வருங்காலத்தை அமைக்க முடியும். குடிசையில் வசித்த நான் இப்போதுதான் ஒரு வீடு கட்டியிருக்கிறேன். இதற்கு விவசாயம்தான் உதவியிருக்கிறது. கொரோனா காலத்தில்கூட எங்களுக்கு விவசாயத்தில் இருந்து கிடைத்ததைத்தான் சாப்பிட்டு வாழ்ந்தோம். வெளியே யாரிடமும் எதையும் கேட்கவில்லை " என்கிறார் சரோஜா.
நிலமற்ற விவசாயக் கூலிகளின் நிலைமை
வீடு, வயல், ஆகியவற்றை சொந்தமாக வைத்திருப்போரின் நிலைமை இப்படியென்றால், வீடு, நிலம் ஏதும் இல்லாத விவசாயக் கூலிகளாக இருப்போர் தங்களது நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று கூறுகிறார்கள்.
பரந்தூர் விமான நிலையத்துக்காக முற்றிலுமாகக் கையகப்படுத்தப்பட இருக்கும் நெல்வாய் கிராமத்தில் வீடற்ற, நிலமற்ற பலர் வசிப்பதாக இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். அவர்களுள் ஒருவரான 63 வயது வேணுகோபால் தன்னை கிராமத்தை விட்டு வெளியேற்றினால் வாழ்வதற்கு வழியில்லை என்கிறார்.

"எங்களுக்கு நிலம் எதுவும் கிடையாது. கூலி வேலைக்குச் செல்லாவிட்டால் பட்டினிதான் கிடக்க வேண்டும். மழைபெய்தால் ஒழுகும் குடிசை வீடு என்னுடையது. எங்களை நெல்வாயை விட்டு வெளியேற்றக்கூடாது. எங்களைப் போன்றோரை வெளியேற்றினால் உயிருடன் இருக்க முடியாது" என்கிறார்.
"விவசாயத்தை அழித்துவிட்டு விமான நிலையம் எதற்கு?"
நெல்வாயில் சுமார் சுமார் 500 பேர் வசிக்கிறார்கள். பெயரே இந்த ஊரைப் பற்றிச் சொல்லும் என்ற அளவுக்கு, பசுமையாக இருக்கும் நெல் வயல்வெளிகள் இங்குண்டு. ஊரைச் சுற்றிலும் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளைக் காண முடிகிறது.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன், "எங்களது விவசாயத்தை அழித்துவிட்டு விமான நிலையம் எதற்கு?" என்று கேள்வி எழுப்புகிறார்.
"காலம்காலமாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். பெரிய லாபம் கிடைக்காது. சில நேரங்களில் நஷ்டம் கூட வரலாம். ஆனால் ஆத்ம திருப்தி விவசாயத்தில்தான் இருக்கிறது. எங்கள் ஊர் முற்றிலுமாக ஏரியால் சூழப்பட்டிருக்கிறது. எந்நேரமும் தண்ணீர் இருக்கும். இங்கு படித்தவர்கள்கூட விவசாயம் பார்க்கிறார்கள். நாங்கள் இதுவரை அரசிடம் எந்தக் கோரிக்கையும் வைத்ததில்லை. இப்போது வெளியேற வேண்டும் என்று கேட்கிறார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். இழப்பீடு தருகிறோம், இடம் தருகிறோம் என்கிறார்கள். ஊரை இழந்துவிட்டு எப்படி வாழ்வது. எங்கள் பாட்டன் பூட்டன் காலத்தில் சொந்தமாக இருக்கும் மனையில் இப்போது வீடு கட்டியிருக்கிறோம். எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அதில் வாழ வேண் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதை அழித்துவிட்டு வேறு இடத்துக்குப் போங்கள் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்"

"கம்பவர்மன் என்ற மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கால்வாய் இந்த வழியாகச் செல்கிறது. அது மழைவடிகாலாகச் செயல்பட்டு வருகிறது. 2105-இல் பெரிய மழை வெள்ளம் வந்தபோதுகூட நீர்நிலைகள்தான் எங்களைக் காப்பாற்றியது." என்கிறார் குணசேகரன்.
"அரசு தரும் வேலையும் வேண்டாம் இடமும் வேண்டாம். எங்கள் விவசாயத்தை விட்டுவிடுங்கள். விவசாயம்தான் எங்களுக்கு கடவுள். ஊரைவிட்டு நாங்கள் போகமாட்டோம்," என்கிறார் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்மணி.
ஏகனாபுரம் போராட்டமும் காவல்துறையின் கண்காணிப்பும்
தொடர்புடைய 13 கிராமங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தங்களை அச்சுறுத்துவது போல இருப்பதாக கிராம மக்களில் சிலர் கூறினார்கள். ஆனால் அது "சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கை" என்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சுதாகரும், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்கள்.
விமான நிலையத் திட்டத்துக்கான எதிர்ப்பு ஏகனாபுரம் கிராமத்தில்தான் அதிகமாக இருக்கிறது. இரவு 7 மணிக்கு ஏரியின் கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கோயிலின் முன்பாக கிராமத்து மக்கள் திரள்கிறார்கள். பெண்களும், பள்ளிக் குழந்தைகளும் இவர்களில் அடங்குவார்கள். விமான நிலையத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை இவர்கள் பதிவு செய்கிறார்கள்.

"எங்களது விளைநிலங்கள் பறிபோகின்றன. புறம்போக்கு நிலம் என்று அரசு கூறும் நிலத்தில் 950 ஏக்கர் நீர்நிலைகள்தான் இருக்கின்றன. வண்டிப்பாதைகள் உள்ளிட்ட 350 ஏக்கர் பரப்புதான் அரசு நிலமாக இருக்கிறது. எங்களது ஊரில் உள்ள இரண்டு ஏரிகளை அழித்தால்தான் முதல் ரன்வே அமைக்க முடிகிறது. இரண்டாவது ரன்வே சுமார் 300 ஏக்கர் நன்செய் நிலம், இரண்டு ஏரிகள் ஆகியவற்றை அழித்தால்தான் அமைக்க முடிகிறது." என்கிறார் ஏகனாபுரத்தைச் சேர்ந்த இளங்கோ.
முதல்வர் தங்கள் வீட்டைக் காட்டி பெருமைப்பட்டுக் கொள்கிறாரே...
"இருபோகம் விவசாயம் செய்கிறோம். எங்களுக்குத் தேவையான அரிசியை நாங்களை உற்பத்தி செய்கிறோம். பரம்பரை பரம்பரையாக இங்கு குடியிருக்கிறோம். முதலமைச்சர் (தன்னுடைய பூர்வீக வீட்டைக் காட்டி) என்னுடைய வீடு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார். எங்களுக்குப் பெருமைப்பட்டுக் கொள்ள எங்கள் கிராமம் இருக்கத் தேவையில்லையா?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
"எந்தச் சலுகைகள் கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்." என்று இளங்கோ கூறும்போது உடன் இருக்கும் பலரும் அதை உறுதியாக மற்றொருமுறை கூறுகிறார்கள்.
சுற்றுச்சூழல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
"எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தினாலும் அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். சென்னையில் ஐடி காரிடார் அமைக்கும்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பெருமளவு அழிக்கப்பட்டது. 135 ஏரிகளின் உபரிநீர் வந்து உருவானதுதான் இந்தச் சதுப்பு நிலம். இது உருவாக குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இப்படி ஒவ்வொரு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் முதலில் நீர்நிலைகளைத்தான் அழிக்கிறோம். அதனால் பரந்தூர் விமான நிலையம் மட்டும் இதில் விதிவிலக்கல்ல." என்கிறார் நீரியல் வல்லுநரான ஜனகராஜன்.

"திட்டமிடப்பட்டிருக்கும் இடத்தில் 11 நீர்நிலைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் அழிப்பார்கள். விமான நிலையம் தரை மட்டத்தில் அமைக்கப்படுவதில்லை. உயர்த்தப்படும். அதனால் நீர் வழித்தடங்கள் பாதிக்கப்படும். ஒருபக்கம் செல்ல வேண்டிய நீர் வேறொரு பக்கத்துக்குச் செல்லும். நீரியல் முழுமையாகப் பாதிக்கப்படும்."
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு நீர்நிலைகளை எப்படி அழிக்கிறார்கள் என்று தெரியவில்லை. தொடக்க காலத்தில் நீர்நிலைகள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானதாகத்தான் இருந்தன. இப்போது அதை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.
"அரசு இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கிறது. ஆனால் என்ன கொடுத்தாலும் சொந்த ஊரை மக்கள் விட்டுத்தர மாட்டார்கள்." என்கிறார் ஜனகராஜன்.
"மேற்குப்பக்க நீர்நிலைகளை அழித்தால் சென்னைக்கு ஆபத்து"
சென்னைக்கு மேற்கேயுள்ள நீர்நிலைகளை அழித்தால் அது சென்னையை வறட்சியிலும் வெள்ளத்திலும் தள்ளும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலரான பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் கூறுகிறார்.
"பரந்தூர் விமான நிலையத்துக்காகக் கையகப்படுத்தப்படும் நிலம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் நிலம்தான். நீர்நிலைகள் தவிர மூன்றாம் நிலை ஓடை அங்கு இருக்கிறது. முதல்நிலை, இரண்டாம் நிலை ஓடைகளில் நீர் பெருகி மூன்றாம் நிலை ஓடைக்கு வரும். அதன் பிறகு அவை ஆறாகப் பெருக்கெடுக்கும். உலகத்தில் 80 சதவிகித நீர் இது போன்ற மூன்றாம் நிலை ஓடைகளில்தான் கிடைக்கிறது. இதுதான் பல நீர்நிலைகளை நிரப்புகிறது. பரந்தூர் பகுதியில் இருக்கும் மூன்றாம் நிலை ஓடை செம்பரம்பாக்கம் வரை நீரைக் கொண்டு வருகிறது. சென்னைக்கு மேற்குப் பக்கம் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என சென்னை வெள்ளத் தடுப்பு நிபுணர் குழு கூறி வருகிறது. இப்போது மேற்குப்பக்க நீர்நிலைகளை அழித்தால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும்." என்கிறார் சுந்தர்ராஜன்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று என்ன?
பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையம் "மாநில வளர்ச்சியின் படிக்கட்டு" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகிறார். தற்போது இருக்கும் சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் மேற்கொண்ட பிறகும் ஏழே ஆண்டுகளில் அதிகபட்ச பயணிகள் கையாளும் அளவை எட்டிவிடும் என்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகிறார். அதாவது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளைக் கையாள முடியாது என்று பொருள்.

நீர்நிலைகளையும் விவசாய நிலங்களையும் பாதிக்காமல் விமான நிலைய திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற முடியுமா என்று கேட்டபோது, "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கு நிலத்தைக் கையகப்படுத்தினாலும் நீர்நிலைகள் நிச்சயமாகப் பாதிக்கப்படும். இந்த மாவட்டங்களில் 3600 ஏரிகள் இருக்கின்றன." என்றார் ஜனகராஜன்.
எனினும் "நீர் வழித் தடங்களை பாதிக்காத வகையில் முன்னேற்பாடு செய்துவிட்டு விமான நிலையம் கட்டலாம்." என்று கூறும் அவர், "அப்படிச் செய்யாவிட்டால் அது பேரழிவாக இருக்கும். அங்குள்ள நீர் சென்னைக்குத்தான் வரும்" என்கிறார்.
"தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் 80 சதவிகிதம் பேர் சென்னையைச் சாராதவர்கள். கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களை தரம் உயர்த்தினாலே சென்னையில் நெருக்கடி குறையும் " என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













