சேலம் எட்டு வழிச்சாலை சர்ச்சை: 'இந்த நிலத்தில் எங்களின் ரத்தம் இருக்கிறது' - விவசாயிகளின் குரல்

போராட்டம்
படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

"இந்த நிலம் எங்களின் பூர்வீக உயிர். எங்கள் வியர்வையை ரத்தமாக இந்த நிலத்தில் கொடுத்திருக்கிறோம். சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் வந்தால் இந்த பூர்வீக உயிரை பறிகொடுத்தது போல் உணர்வோம்".

சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை குறித்து அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு எதிர்வினையாக பெண் விவசாயி ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு குறித்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் எ.வ.வேலு, "திமுக சாலை போடுவதற்கு எதிரியல்ல. விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களுக்கு என்ன தேவை எனப் புரிந்துகொண்டு பிரச்னையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள், அல்லது மாற்று வழி காணுங்கள் என்பதைத்தான் திமுகவின் கொள்கையாக வைத்திருந்தோமே ஒழிய எட்டு வழிச்சாலையைப் போடக்கூடாது என்று திமுக எந்தக் காலத்திலும் சொல்லவே இல்லை" என்று பேசியுள்ளார்.

எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டதை ஏற்கெனவே சட்டமன்றத்தில் அமைச்சர் பதிவு செய்துள்ளார். இருப்பினும், முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக இதை முழுமையாக எதிர்த்ததா இல்லையா என்ற விவாதத்தை அவருடைய இந்தப் பேச்சு தொடங்கி வைத்துள்ளது.

திமுகவின் முரசொலி நாளிதழில் குறிப்பிட்டுள்ளதன்படி, 2018, ஜூலை மாதம் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவுகள், சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை சரிபார்த்ததன் அடிப்படையில், திமுக இத்திட்டத்தை எதிர்த்ததும், ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் நிறைவேற்றப்படாது என வாக்குறுதி அளித்ததும் உண்மை என நிரூபணமாகியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு, 2018-ம் ஆண்டில் இத்திட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாய மக்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இத்திட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடிய சில விவசாயிகளிடம் பிபிசி தமிழ் பேசியது. திமுக இத்திட்டத்தைக் கொண்டு வர முயற்சி எடுத்தால் போராட்டம் முன்பிருந்ததைவிட தீவிரமாக இருக்கும் என்கின்றனர் இவர்கள்.

"இந்த நிலம் எங்களின் பூர்வீக உயிர்"

சேலம் மாவட்டம் சின்னகவுண்டாபுரம் பஞ்சாயத்தில் உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவகாமி என்பவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "விவசாயம்தான் எங்களின் பிரதான வாழ்வாதாரம். இந்த திட்டம் வந்தால் எங்களின் இரண்டு ஏக்கர் பரம்பரை நிலம் பறிபோய்விடும். நான்கு தலைமுறைகளாக எங்கள் நிலத்தில் விவசாயம் செய்தியிருக்கிறோம். நானே 20 ஆண்டுகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்திருக்கிறேன். விவசாயம் மூலம் தான் எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறோம்.

இத்திட்டம் வந்தால் எங்களின் ஊரில் பாதி அழிந்துவிடும். எங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையே இதனால் பாதிக்கப்படும். இனி நாங்கள் வேறு எந்த வேலைக்காவது எங்களால் செல்ல முடியுமா?" என்கிறார் சிவகாமி.

ஆடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சிவகாமியின் கணவருக்கு விபத்து ஏற்பட்டு காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவிக்கும் சிவகாமி, தங்கள் குடும்பத்தினர் அனைவருடைய பிரதான தொழிலாக விவசாயமே இருப்பதாக தெரிவிக்கிறார்.

சேலம் எட்டு வழிச்சாலை
படக்குறிப்பு, விவசாயி கவிதா

"எங்கள் நிலத்தில் சோளம், வேர்க்கடலை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகிறோம். நாங்கள் விவசாயத்தை நம்பி பிழைப்பவர்கள். இதில் 10 பேருக்கு வேலையும் தருகிறோம். இத்திட்டம் வந்தால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்" என தெரிவித்தார் சிவகாமி.

மேலும், "எங்களின் நிலம் சாலையோரத்தில் வருவதால் அதன் மதிப்பு குறைந்துவிடும். 2018இல் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் இன்னும் போகவில்லை. எங்களைவிட இத்திட்டத்தால் வீடுகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். இத்திட்டத்தால் வீடுகள் போய்விட்டால் என்ன செய்வதென்று தெரியாத பலரின் குடும்பங்களில் பேசி முடிக்கப்பட்ட திருமணங்கள் பல நின்று போயிருக்கின்றன" என கூறுகிறார் சிவகாமி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தெளிவுபட விளக்கம் சொல்லாதது இன்னும் மன உளைச்சலாக இருப்பதாக சிவகாமி கூறுகிறார்.

"இந்த நிலத்தை எங்களின் பூர்வீகமான உயிராக நினைக்கிறோம். என் மாமனார், மாமியாருக்கு 75-80 வயதாகிறது. இன்னும் இந்நிலத்தில்தான் உழைக்கிறார்கள். எல்லோரும் எங்கள் வியர்வையை ரத்தமாக இந்த நிலத்தில் கொடுத்திருக்கிறோம். எங்கள் ஒவ்வொருவரின் ரத்தமும் அந்த நிலத்தில் இருக்கிறது. தேவையான சாலையாக இருந்தால் நாங்களே ஒத்துழைப்போம். சாலைகளை அகலப்படுத்தும்போது நாங்கள் எதிர்க்கவில்லை. தேவையில்லாத சாலை என்பதால் தான் இவ்வளவு போராட்டங்கள் நடத்துகிறோம்" என முடிக்கிறார், சிவகாமி.

"சிட்டிசன் அத்திப்பட்டி போன்று ஆகிவிடும்"

சேலம் எட்டு வழிச்சாலை
படக்குறிப்பு, குடும்பத்தினருடன் கவிதா (வலது ஓரம் இருப்பவர்)

ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த கவிதா என்ற விவசாயி கூறுகையில், "எங்களின் ஏழரை ஏக்கர் நிலம் இத்திட்டம் வந்தால் பறிபோய்விடும் ஆபத்து உள்ளது. இதில்தான், எங்கள் மாமனாரின் உடன் பிறந்த 4 சகோதரர் குடும்பங்களும் சேர்த்து விவசாயம் செய்துவருகிறோம்.

எங்கள் ஊரில் 250 வீடுகள் இருக்கின்றன. இந்த திட்டம் வந்தால் 'சிட்டிசன்' படத்தில் அத்திப்பட்டி என்ற ஊர் காணாமல் போனது போன்று ராமலிங்கபுரம் என்கிற எங்கள் ஊர் காணாமல் போய்விடும்.

அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்தை ஆதரித்து முதலமைச்சர் எதுவும் சொல்லாததால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். இத்திட்டத்தைக் கையிலெடுத்தால் முன்பு நடைபெற்ற போராட்டங்களைவிட தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்போம்" என தெரிவித்தார் கவிதா.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

"தள்ளிப்போகும் திருமணங்கள்"

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரான சேலம் பூலாவரி கிராமத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் கூறுகையில், ""இத்திட்டத்திற்கு எதிராக திமுகவே முந்தைய ஆட்சியில் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. சேலத்தில் திமுக துணைச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். சேலம் முதல் காஞ்சிபுரம் வரை எட்டுவழிச்சாலை வரும் மாவட்டங்களில் உள்ள எம்.பிக்களை வைத்து கூட்டம் நடத்தினோம். அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.இதனால்தான் திமுக வெற்றி பெற நாங்கள் பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு அதற்காக விவசாயிகள் நாங்கள் பணியாற்றினோம்.

திட்டம் வந்துவிட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டு கட்டுமான வேலைகளை பாதியில் நிறுத்திவைத்திருக்கிறேன். பல விவசாயிகள், அவர்களின் குடும்பங்களில் உள்ள ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண்ணே கிடைப்பதில்லை. நிலம் போய்விட்டால் என்ன செய்வார்கள் என்று பெண் வீட்டார் யோசிக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு விவசாயியும் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறோம்" என்றார்.

சேலம் ஆச்சங்குட்டப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் என்ற விவசாயி கூறுகையில், "நானும் திமுககாரன் தான். ஆனால், இத்திட்டத்தை திமுக அரசு முன்னெடுத்தால் நிச்சயம் எதிர்ப்போம். போராட்டங்கள் கடுமையானதாக இருக்கும்" என்றார்.

காணொளிக் குறிப்பு, தேனீக்களின் எண்ணிக்கை குறைவால் சூரியகாந்திக்கு கைமுறை மகரந்த சேர்க்கை: விவசாயிகள் மகிழ்ச்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: