திருநெல்வேலி: கல் குவாரியால் வீடுகளில் விரிசல், அச்சத்தில் வாழ்வதாக தெரிவிக்கும் மக்கள் - கள ஆய்வு

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்துள்ள அணைந்தநாடார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கல் குவாரியால் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக அதே கிராமத்தில் உள்ள இந்திரா நகர் குடியிருப்பில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், குவாரியில் இருந்து வரும் வெடி சத்தத்தால் அப்பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் அச்சப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அணைந்தநாடார் பட்டி கிராம மக்களின் பிரச்னை குறித்து கள ஆய்வு செய்தது பிபிசி.
பிபிசி நடத்திய கள ஆய்வில் கிடைத்த தகவல்கள், மக்கள் முன் வைக்கும் புகார்களுக்கு குவாரி உரிமையாளர் கொடுத்த விளக்கம், மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் ஆலங்குளம் செல்லும் வழியில் உள்ளது அணைந்தநாடார்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் விவசாயம் மற்றும் பெண்கள் பீடி சுற்றும் தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள இந்திரா நகர் குடியிருப்பில் 50 வீடுகள், ஒரு அங்கன்வாடி மற்றும் சமுதாய நலக்கூடம் ஒன்றுள்ளது.
இந்த குடியிருப்புக்கு அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.
வெடி சத்தத்தால் மிரளும் அங்கன்வாடி குழந்தைகள்
கல்குவாரியில் பாறைகள் வெட்டி எடுக்க பயன்படுத்தப்படும் வெடி பொருட்களால் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் அதிக சத்தத்தால் குடியிருப்பில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அக்கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடியில் மதிய நேரம் குழந்தைகள் தூங்க முடியாமல், குழந்தைகள் பதற்றமடைவதால் உடனடியாக குவாரியை மூட வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் .
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் கல்குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளும் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பிபிசி நேரடியாக அணைந்தநாடார் பட்டியில் உள்ள இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் சென்று பார்க்கும் போது ஒரு சில வீடுகளில் உள்ளேயும், வெளியேயும் விரிசல் ஏற்பட்டிருந்தது.
குவாரியில் வெடி வைக்கும் போது குவாரியில் இருந்து விழும் சிறு பாறைகள், கற்கள் குவாரியை சுற்றியுள்ள விளை நிலங்களில் சிதறிக் கிடந்தது டன், விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படும் கிணறு, மின் மோட்டார் அறைகள் இடிந்த நிலையில் இருப்பதையும் காண முடிந்தது.
உயிர் பயத்தில் வாழ்ந்து வரும் கிராம மக்கள்
இது குறித்து இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் முப்பிடாதி பிபிசியிடம் பேசுகையில், "எங்கள் கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளதால் பசுமையாக இருந்தது.

ஆனால் எங்கள் ஊருக்கு அருகே கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட கல்குவாரியால் ஊரை சுற்றி இருந்த விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு தற்போது தரிசு நிலங்களாக உள்ளது.
கல் குவாரியால் ஏற்படும் அதிர்வு காரணமாக நாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குவாரி துவங்குவதற்கு முன் வீடுகளில் விரிசல் ஏற்படவில்லை.
விரிசல் காரணமாக கடன் வாங்கி கட்டிய வீடு எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் வசித்து வருகிறோம். இரவு நேரங்களில் குவாரியில் இருந்து வரும் அதிர்வால் வீட்டின் மேற்கூரை விழுந்து விடுமோ என்று பலரும் இரவை அச்சத்துடன் கடக்கின்றனர்.
சிறுக சிறுக சேமித்த பணத்தில் கட்டிய வீட்டை விட்டு போக மனமில்லாமல் இங்கே உயிர் பயத்துடன் வசித்து வருகிறோம். மக்களுக்கு பிரச்னையாக உள்ள கல்குவாரியை மூட வேண்டும் என கிராம மக்கள் சார்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் சேரன்மகாதேவி சார் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

நாங்கள் கொடுத்த மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் அடங்கிய குழு நேரடியாக வந்து எங்கள் வீடுகளை ஆய்வு செய்து சென்றுள்ளனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட குவாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார் முப்பிடாதி.
விவசாயிகள் வேதனை
கல்குவாரி இயங்கி வரும் இடத்தை சுற்றியுள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி காளிமுத்துவுடன் பேசினோம், 'எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்து நான் இங்கு விவசாயம் செய்து வருகிறேன். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்குவாரியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குவாரியில் பகல் நேரங்களில் வெடி வைப்பதால் பாறைகள் வெடித்து சிதறி விளை நிலங்களுக்குள் விழுகிறது. சில நேரங்களில் விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகளின் மேல் விழுந்து காயம் ஏற்படுகிறது.
இதனால் பகல் நேரத்தில் விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே இந்த பகுதியில் பலரும் விவசாயத்தை விட்டு விட்டு சென்று விட்டனர். இந்த குவாரியில் இருந்து வரும் அதிர்வு காரணமாக நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின் மோட்டார்கள் அமைந்துள்ள அறைகள் இடிந்து விழுகிறது.

கற்கள் டிரான்ஸ்பார்மரில் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் இப்பகுதியில் விவசாயம் அழிந்து விடும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த குவாரியை மூடி இப்பகுதியில் விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயி காளிமுத்து தெரிவித்தார்.
'சோலை வனம் இப்போது பாலை வனமாகியுள்ளது'
அவரைத் தொடர்ந்து அணைந்த நாடார் பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவிடம் கல் குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து கேட்ட போது,
"எங்கள் ஊரில் புது வீடு கட்டி குடியேற மக்கள் அச்சப்படுகின்றனர். புதிதாக கட்டும் வீடுகளில் சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகள் இடிந்து விழுந்து விடுகிறது.
எங்கள் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளதால் மான்கள், மயில்கள் உள்ளிட்டவைகள் விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்கு வந்து செல்லும். ஆனால் இந்த கல்குவாரி தொடங்கப்பட்டதில் இருந்து மான்கள், மயில்கள் காண முடியவில்லை.
ஆடு, மாடு, விவசாயம் உள்ளதால் என்னால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் உயிர் பயத்துடன் வசித்து வருகிறோம்," என முத்து பிபிசியிடம் தெரிவித்தார்.
கல்குவாரியை மூட வேண்டாம் என மற்றொரு தரப்பு மனு
கிராம மக்கள் அளித்த புகார் மனுக்களின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷாப் பிபிசியிடம் பேசுகையில், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் மற்றும் கனிமவளத் துறை அதிகாரி கொண்ட குழுவை நேரடியாக சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம்.

அதே கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்,"இந்த கல்குவாரியால் எந்த பிரச்னையும் இல்லை, குவாரியை மூடினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்," என மனு அளித்துள்ளனர்.
எனவே இரு தரப்பினர் மற்றும் குவாரி உரிமையாளர் என மூன்று தரப்பினரையும் அழைத்து கருத்துக்களை கேட்டு பின்னர் அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து அதிகாரிகள் அளிக்கும் ஆய்வு முடிவின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சம்பந்தப்பட்ட குவாரியில் விதி மீறல் இருப்பது கண்டறியப்பட்டால் குவாரி மீதும், உரிமையாளர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் அந்த பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர் எனவே வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்படும் என்றார் சார் ஆட்சியர் ரிஷாப்.
அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம்
குவாரி நிர்வாக தரப்பு விளக்கத்தை தெரிந்து கொள்ள குவாரி உரிமையாளரிடம் கேட்டபோது முதலில் பதில் அளிக்க மறுத்த நிலையில் பின் குவாரி உரிமையாளர் சீதாபதி பிபிசியிடம் பேச முன் வந்தார்.

"கடந்த இரண்டு ஆண்டுகளாக அணைந்தநாடார் பெட்டியில் குவாரி செயல்பட்டு வருகிறது. நாங்கள் அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு குவாரியை இயக்கி வருகிறோம்.
எங்கள் கல்குவாரியில் அதே கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். ஆனால் அக்கிராமத்தில் சிலர் குழுவாக சேர்ந்து கொண்டு குவாரியில் இருந்து வரும் அதிர்வு காரணமாக வீடுகள் சேதம் அடைவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
கல்குவாரிக்கு வழங்கப்படும் வெடிபொருட்கள் அனைத்தும் அரசின் வழிகாட்டுதலின்படி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் விதிமுறைகளை மீறி வெடிபொருள் பயன்படுத்தினால் அந்த பகுதியில் அதிர்வுகள் அதிகரிக்கும் ஆனால் நாங்கள் அதை செய்வதில்லை.
மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குவாரி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் எங்களுடைய கல்குவாரியில் விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்," என தெரிவித்தார் உரிமையாளர் சீதாபதி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












