ஆழியாறு - ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்?

ஆழியாறு
படக்குறிப்பு, ஆழியாறு - கோப்புப்படம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்லும் புதிய திட்டம் ஒன்று தயாராகிவந்தது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒருபுறம் போராடி வருகிற நிலையில் கேரளாவிலும் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜூலை 1-ம் தேதி ஆழியாறு மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை அதிகாரிகளைச் சந்தித்து இந்த திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

ஆழியாறு - பரம்பிக்குளம் திட்டம் என்பது என்ன?

இந்த திட்டம் 1958-ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு இடையே கையெழுத்தானது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 50 டி.எம்.சி தண்ணீர் பெறப்படுகிறது. அதில் கேரளாவுக்கு 19.5 டிஎம்சி தமிழ்நாட்டுக்கு 30.5 டிஎம்சி தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு மாவட்டத்திற்கும் கேரளாவில் பாலக்காடு, மலப்புரம் மாவட்டத்திற்கும் இந்த திட்டம் பயன் தருகிறது.

புதிய அறிவிப்பு என்ன?

இந்த நிலையில், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்லும் புதிய திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.930 கோடி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தை கைவிட கோரி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டக் கூட்டம் ஜூலை 13-ம் தேதி நடைபெற்றது.

பாஜக போராட்டம்

ஜூலை 11-ம் தேதி பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரச்னை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி முதலமைச்சர் நல்லதொரு முடிவு எடுப்பார்" என்று தெரிவித்திருந்தார்.

செந்தில் பாலாஜி
படக்குறிப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி

"இரு மாநிலங்கள் இடையேயான நட்பு முறியும்"

இந்த திட்டத்தை எதிர்த்து ஜூலை 13-ம் தேதியன்று பரம்பிக்குளம் - ஆழியாறு நதிநீர் பாதுகாப்பு குழு சார்பில் பாலக்காடு சித்தூர் அணக்கோடு சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒருங்கிணைப்பாளர் முதலாம்தோடு மணி பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஒட்டன்சத்திரம் காவிரி நதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. ஒரு நதிக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்றுமொரு நதிக்கு உட்பட்ட பகுதிக்கு தண்ணீர் எடுத்துச் செல்வது விதிமீறல். ஆழியாறுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து காவிரிக்கு உட்பட்ட பகுதிக்கு ஏன் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் காவிரியிலிருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலாம்தோடு மணி

பட மூலாதாரம், Muthalamthod Mani

படக்குறிப்பு, கேரள விவசாயிகள் போராட்டம்

பாலக்காடு மாவட்டத்தின் சித்தூர் பகுதி பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக முழுமையாக ஆழியாறை நம்பிதான் உள்ளது. இந்த திட்டம் இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தங்களின் விதிகளை மீறுவதாக அமையும்.

ஏற்கெனவே ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு முறையாக தண்ணீர் கிடைப்பதில்லை. இது தொடர்பாக 2012-ல் உம்மன்சான்டி முதல்வராக இருந்தபோது கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது.

கேரள அரசின் அனுமதியில்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. கேரள அரசு உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும். இதனால் இரு மாநிலங்கள் இடையான நட்பு முறியும். இதற்கு இணக்கமாக தீர்வு காணப்பட வேண்டும்" என்றார்.

ஆழியாறு திட்டமே கேரளாவுக்கு பாதகமானது - கேரள காங்கிரஸ்

தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு எதிர்வினை ஆற்றாத கேரள அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாலக்காட்டில் ஜூன் 14 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள காங்கிரசார் போராட்டம்

பட மூலாதாரம், Sumesh Achuthan

படக்குறிப்பு, கேரள காங்கிரசார் போராட்டம்

இது தொடர்பாக கேரள இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த சுமேஷ் அச்சுதன் பிபிசி தமிழிடம் பேசினார். அவர், "ஆழியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு தண்ணீர் வருகின்ற பகுதியிலிருந்து தான் ஒட்டன்சத்திரம் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். பாரதபுழா என்கிற பகுதியிலிருந்து கிடைக்கும் தண்ணீர் தான் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டத்திற்கு முக்கியமான ஆதாரமான விளங்குகிறது.

இந்த திட்டத்தால் கேரளாவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் உள்ள திருமூர்த்தி, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் எடுக்காமல் 120 கி.மீ. தொலைவில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து ஏன் எடுக்க வேண்டும். கேரள அரசும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கின்றது. கேரள அரசை எதிர்த்து தான் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம்.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமே கேரளாவுக்கு பாதகமாக தான் அமைந்துள்ளது. அதனால் தான் அந்த திட்டம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

கேரள முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சருடன் ஒப்பந்த நிலையிலே ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும். இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தை மேற்கொள்வோம்" என்றார்.

கிருஷ்ணன்குட்டி

பட மூலாதாரம், Krishnankutty

படக்குறிப்பு, கிருஷ்ணன்குட்டி

இது தொடர்பாக சித்துர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கேரள மின்சார துறை அமைச்சருமான கிருஷ்ணன்குட்டி பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்தை நிறைவேற்றக்கூடாது. கேரளாவுக்கு பாதகமான எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கூட்டு தண்ணீர் ஒழுங்குமுறை வாரியத்தில் பொறியாளர்கள் மட்டத்தில் கேரளாவின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். தேவை ஏற்பட்டால் முதல்வர் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம்" என்றார்.

காணொளிக் குறிப்பு, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் இயந்திரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :