மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம்: தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?

- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
"மதுரை கூட்டு குடிநீர் திட்டம் நல்லதொரு திட்டம் அல்ல, இத்திட்டத்தால் தேனி மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவும்" என்கிறார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன். ஆனால், இந்த திட்டத்தை அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
உலக அளவில் தொன்மையான நகரங்களில் முக்கியமானது மதுரை மாநகரம். 'வைகை நதி' மதுரைக்கு ஜீவநதியாக அதன் இரு கரைகளையும் பற்றிப் படர்ந்து விரிந்து செல்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவைக்கு அடுத்த பெரிய நகரான மதுரை மாநகராட்சியில் இருக்கும் 100 வார்டுகளில் சுமார் 15 லட்சம் மக்கள் (2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) வசிக்கின்றனர்.
நாளொன்றுக்கு 7 கோடி லிட்டர் பற்றாக்குறை
சுமார் 6 லட்சம் குடியிருப்புகளைக் கொண்ட மதுரை மாநகரின் இன்றைய ஒருநாள் குடிநீர்த் தேவை 268 மில்லியன் லிட்டர். ஆனால், தற்போது கிடைப்பதோ 192 மில்லியன் லிட்டர்தான்.
குறிப்பாக வைகை அணையிலிருந்து தினமும் 115 மில்லியன் லிட்டா், வைகை ஆற்றுப்படுகையிலிருந்து 47 மில்லியன் லிட்டர், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் லிட்டர், ஆக மொத்தம் 192 மில்லியன் லிட்டா் குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே, நாளொன்றுக்கு நிலவும் பற்றாக்குறை 7 கோடி லிட்டர் என கூறுகிறது மாநகராட்சி நிர்வாகம்.
எதிர்காலப் பற்றாக்குறைநாளொன்றுக்கு 125 மில்லியன் லிட்டர்
மதுரையின் எதிர்கால குடிநீர் தேவையை 2018-ல் மதிப்பீடு செய்த மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு (CPHEEO), "மதுரையில் 2034-ல் நகரின் மக்கள்தொகை சுமார் 19.23 லட்சமாக இருக்கும்.
இதையடுத்து, 2049இல் நகரின் மக்கள்தொகை சுமார் 22.77 லட்சமாக இருக்கும். எனவே, 2034-ல் நகரின் தினசரி 317 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படும். அதேபோல், 2049இல் நகரின் தினசரி 374 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படும்" என மதிப்பீடு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளது.
எனவே எதிர்கால பற்றாக்குறை நாளொன்றுக்கு 125 மில்லியன் லிட்டர் அதாவது ஆண்டுக்கு சுமார் 1630 மில்லியன் கனஅடி நீர் தேவை.

மதுரை மாநகராட்சியும், முல்லைப் பெரியாறு திட்டமும்
மதுரை மாநகரில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப தடையின்றி குடிநீா் வழங்கும் வகையில் முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப்பிலிருந்து மதுரை நகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டா் குடிநீர் கொண்டு வருவதற்கு சுமார் 1295.76 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு, மாநில அரசு, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய மூன்று வழிகளில் இதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது.
இதைத் தவிர நகர்ப்புற வளர்ச்சி மற்றும் புத்தாக்கத் திட்டம் (AMRUT), ஸ்வச் பாரத், ஸ்மார்ட் சிட்டி, ஆகிய திட்டங்கள் மூலம் மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. மேலும் இத்திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் அரசு கடன் வாங்கியுள்ளது.
154 கிலோ மீட்டருக்கு ராட்சச குழாய்கள்
முல்லை பெரியாறு நீரை நேரடியாக மதுரைக்கு கொண்டு செல்லும் வகையில் லோயர்கேம்ப் கிராமத்தில் சுமார் 14.78 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் நீர்வளத்துறை மூலம் ஆண்டு முழுவதும் நீர் தேங்கும் வகையில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இதன் அருகே நான்கு உறை கிணறுகளும், ஒரு நீர் தேக்கத் தொட்டியும் நிறுவப்படுகிறது. 280HP திறனுள்ள 6 பம்புகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு பம்பும் நிமிடத்திற்கு 26,000 லிட்டர் நீர் உறிஞ்சப்பட இருக்கிறது. இதன் மூலம் தினசரி 125 மில்லியன் லிட்டர் நீர் சேகரிக்கப்பட்டு, தடுப்பணை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில், நிலக்கோட்டை தாலுக்காவிலுள்ள பண்ணைப்பட்டியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கு தினமும் 125 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும்.
அதன்பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீரானது மீண்டும் அங்கிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்திற்கு ராட்சச குழாய்கள் மூலம் மதுரை மாநகராட்சியின் குடிநீர் விநியோகதிற்காக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய குழாய்களில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், தினசரி 125 மில்லியன் லிட்டர் குடிநீர் மதுரை மாநகருக்கு கூடுதலாக எதிர்காலத்தில் விநியோகம் செய்யப்படும்.

விவசாயிகள் கடும்எதிர்ப்பு
முல்லை பெரியாறு-மதுரை கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்பட்டால் தேனி மாவட்டத்தில் உள்ள 30 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாயம் பாதிக்கும். நிலத்தடி நீா்மட்டம் குறையும். கிணற்றுப் பாசனம் பாதிக்கும். தேனி மாவட்டமே பாலைவனமாக மாறும் என விவசாயிகள் இத்திட்டம் அறிவித்த நாளில் இருந்தே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
"ஏற்கெனவே தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டமானது சிவப்பு அபாய எச்சரிக்கை உள்ள நிலையில், முல்லை பெரியாறு- மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீரை ஆற்றின் வழியே கொண்டு செல்லாமல், குழாய்கள் வழியே கொண்டு செல்வதால் தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, பாலைவனமாக மாறக்கூடும்," என்கிறார் பாரதிய கிசான் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் சதீஷ் பாபு.
இது குறித்து பிபிசி தமிழிடம் அவர் விரிவாகப் பேசினார்.
"மதுரை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பதில் தேனி மாவட்ட மக்களுக்கு எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை அதே சமயத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் விதம் தேனி மாவட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது என்ற காரணத்தால்தான் இத்திட்டத்திற்கு தேனி மாவட்ட மக்களிடம் பலத்த எதிர்ப்பு உருவாகி உள்ளது."

"ஒரு போகம் விவசாயம் கூட செய்ய முடியாமல் போய்விடும்"
"லோயர் கேம்பில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பகுதிக்கு கீழ் பகுதியில் தான் கம்பம் பள்ளத்தாக்கின் நகராட்சி பகுதிகள், ஊராட்சி பகுதிகள் உள்ளன. கோடைகாலங்களில் நாளொன்றுக்கு 12 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் மதுரைக்கு எடுத்துச் செல்வதால், தேனி மாவட்டத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும். அதோடு தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாற்றின் ஆயக்கட்டு பாசனத்தில் மூலம் சுமார் 15,000 ஏக்கர் விவசாய நிலங்கள் ஒரு போகம் விவசாயம் கூட செய்ய முடியாமல் போய்விடும். மேலும் இப்பகுதியில் உள்ள கிணறுகளும் ஆழ்துளை கிணறுகளில் வாய்க்கால்களும் குளங்களும் குட்டைகளும் நீரின்றி வறண்டு விடுவதோடு, கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இருக்காது" என்கிறார் சதீஷ் பாபு.
அணைகள் தூர்வாருவது எப்போது?
மேலும், "விவசாயத்திற்கு பெரிதும் கை கொடுக்கும் மிக முக்கியமான அணைகளான மஞ்சளாறு அணை, சண்முகாநதி அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை உள்ளிட்டவை எப்போது தூர்வாரப்படும் என விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்? குறிப்பாக 1958 —ம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள வைகை அணை சுமார் 65 ஆண்டுகளாய் தற்போது வரை தூர்வாரப்படாமல் உள்ளது. பசுமை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தில் தற்போது இரண்டு போக சாகுபடி செய்வதற்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூழலில், ராட்சச குழாய் மூலம் நாள் ஒன்றுக்கு 125 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு சென்றால், தேனி மாவட்டம் முழுவதும் வறட்சியாக மாறும். இதனைக் கருத்தில் கொண்டு மதுரைக்கு தேவையான குடிநீரை வைகை அணைக்கு திறந்தவெளி கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். மேலும் வைகை அணையில் உள்ள 30 அடி உயரமுள்ள சகதி, கழிவுகளை அகற்றித் தூர்வார வேண்டும். ஆதலால் அதிகாரிகள் கொண்டுவந்த இந்தத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்கிறார் சதீஷ் பாபு.

"8,000 சலவை தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதிக்கப்படும்"
தேனி மாவட்டத்தில் தோராயமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது மதுரை மாநகருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக லோயர் கேம்பில் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் இத்திட்டத்திற்கு தடுப்பணை கட்ட உள்ள இடமானது லோயர் கேம்பில் சுரங்கனாறு காப்புக்காடு பகுதியில் அமைய இருந்தது.
இதற்காக பொதுப்பணித் துறையினரால் வனத்துறையினர் ஒப்புதல் பெற வேண்டி விண்ணப்பித்து ஆண்டுகள் கடந்தும் தற்போதுவரை அந்த விண்ணப்பம் நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக தற்போது அவசர அவசரமாக இடத்தை மாற்றி அமைத்து நுாறு ஆண்டுகளுக்கு மேல் சலவைக்கூடம் செயல்பட்டு இடத்தில் தடுப்பணை அமைக்கும் பணியை தற்போது மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கூட்டுக்குடிநீர் திட்டத்தை வைகை அணையில் இருந்து செயல்படுத்த வேண்டும் எங்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க வேண்டாமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்கிறார் சலவை தொழிலாளி முருகன்.
மதுரை மாநகராட்சி முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தினால் தேனி மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவும் என்கிறார் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மகாராஜன். அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தேனி மாவட்டத்திற்கு உண்டான மொத்த நீர் ஆதாரமும் இது மட்டும்தான். கோடை காலத்தில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை அமல்படுத்த முயல்கிறார்கள். தற்போது மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து நீரை எடுத்துச் செல்கிறார்கள். அதேபோல் இன்னும் கூடுதலாக வைகை அணையில் இருந்து தேவைக்கேற்ப நீரை எடுத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தினால் தேனி மாவட்டம் முழுவதும் குடிநீர் மட்டுமின்றி அனைத்து தேவைகளுக்கும் பாதிப்படையும். இது நல்லதொரு திட்டம் கிடையாது தற்போது ஆளும் கட்சி என்பதனால் எங்களால் எதுவும் பேச முடியவில்லை," என்கிறார்.

விளக்கம் தரும் அரசுப்பொறியாளர்
இந்தத் திட்டத்தால் நிச்சயம் நிலத்தடி நீர் பாதிப்போ அல்லது விவசாயிகளுக்கு ஏதேனும் பாதிப்போ ஏற்படாது என்கிறார் தேனி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பு செல்வன். அது எப்படி என அவரிடம் கேட்டோம்.
"ஆண்டு முழுவதும் திட்டம் செயல்பட இருக்கக்கூடிய பகுதியில் நீரானது சென்று கொண்டேதான் இருக்கும் இதனால் தேனி மாவட்டத்திற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது. மேலும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து வைகை அணை யானது சுமார் 68 கிலோ மீட்டர் நீளம் செல்கிறது அதேபோல் நீர்வழிப் பாதை 300 மீட்டர் அகலம் கொண்டது. குழாய் வழியாக நீரை கொண்டு செல்லாமல் நீர் வழி பாதையில் நீரை திறந்துவிடும் பட்சத்தில் பாதி வழியிலேயே நீர் ஆவியாகி விடும். இதன் காரணமாகவே குழாய் மூலம் நீரை கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறோம் இதனால் நீர் எந்தவிதத்திலும் வீணாகாது. ஒரு நகரம் வளர்ச்சி அடையும் பொழுது அதனுடைய வளர்ச்சி திட்டமும் சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு தொலைநோக்கு பார்வையில்தான் இருக்கும். மேலும் தற்பொழுது போராடிவரும் போராட்டக்காரர்கள் யாரும் விவசாயிகள் கிடையாது. இவர்கள் தங்களுடைய சுய விளம்பரத்திற்காக நல்லதொரு திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள் என்கிறார் அன்புச்செல்வன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













